பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-1

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம், தாங்கள் நலம்தானே?

புத்தரின் மீதான ஆர்வம் இளமை காலங்களில் இருந்து எனக்கு உண்டு. பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து புத்தர் அன்னப்பறவையை காப்பாற்றும் நாடகம் போட்டிருக்கிறோம். ஆனால் அப்போது புத்தரைப் பற்றி ஓரிரு தகவல்கள் தவிர பெரிதாக வேறு ஒன்றும் தெரியாது. அன்று மிகப்பெரிய கேள்வி மனதில் இருந்தது. எவ்வாறு இந்தியாவில் தோன்றிய ஒரு மதம், இந்தியா தவிர்த்து பிற ஆசிய நாடுகளில் வலுவாக பரவி இன்று வரை வெகுஜன மதமாக இருக்கிறது என்று. இதனால் புத்தரையும், பெளத்த மதம் பற்றியும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

புத்தரை பற்றிய தொடக்க வாசிப்பு Thich Nhat Hanh-வினுடைய ‘Old path white clouds’ புத்தகத்தின் வாயிலாக அமைந்தது. பெளத்தம் சார்ந்து வேறு சில நூல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்தாலும் அதை என்னோடு கனடா கொண்டு வர இயலவில்லை. அதன் பின்னர் இங்கு ப்ராம்ப்டன் நூலகத்தில் ‘அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூலை வாசித்தேன். அவர் கூறியிருக்கும் ‘பூர்வ பெளத்தன்’ என்ற கருத்துரு முற்றிலும் புதிய சிந்தனையாக இருந்தது.(அப்புத்தகம் குறித்த தங்களின் காணொளி பயனுள்ள ஒன்று).

பெளத்தத்தின் ஆன்மீகம், மெய்மை/தரிசனம்,தர்க்க முறை என மட்டுமே தேடிக்கொண்டிருந்த எனக்கு அதன் சமூக பங்களிப்பு சார்ந்த பார்வையும் முக்கியமாகப்பட்டது. ஆம், நினைத்துப்பார்த்ததால் தோன்றுகிறது அதுவும் பெளத்தத்தின் அங்கம் தானே என. மேலும் புத்தர் காலம் முதலே அது இவ்வாறு தானே இருக்கிறது. இங்கு நிகழும் சாத்திக்கொடுமைகளை ஒழிப்பதற்கு அம்பேத்கர் தானும், தன் ஆதரவாளர்களும் சேர்ந்து பெளத்த மதத்திற்கு மாறியதை நாம் அறிவோம். மேலும் நிகழ்காலத்திலும் இந்து மதத்தில் நிலவும் சாதிப் பாகுபாடுகள் மீது விமர்சனம் வைப்போர் பெளத்தத்தை மாற்றாக முன்வைப்பதை பல சமயங்களில் காண முடிகிறது.

அயோத்திதாசர் தொடங்கி இன்று வரை, சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக, புத்தர் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறார். இந்தியாவிலுள்ள நாமறிந்த பெருமதங்கள் பழமைவாதிகளாலும், ஆசாரங்களினாலும், மத அடிப்படைவாதிகளாலும், பற்றாளர்களினாலும், அரசியல் சார்ந்தவர்களினாலும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பெருமதங்களுக்கு மாற்றாக முன் வைக்கப்படும் பெளத்தம் நிகழ்காலத்தில் சந்திக்கும் சிக்கல்களும், சவால்களும் என்ன.  அதைப்பற்றி தாங்கள் சற்று கூற இயலுமா?

இப்படிக்கு,

சூர்ய பிரகாஷ், ப்ராம்ப்டன்

ஆல்காட்

அன்புள்ள சூர்யப்பிரகாஷ்,

முதலில் பௌத்தத்தின் அண்மைக்கால வரலாற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு சுருக்கமான சித்திரத்தை அளிக்கிறேன்.

பௌத்தம் பற்றிய பொதுவான எளிய தகவல்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கீழைநாடுகளில் காலனியாதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ், பிரெஞ்சு அதிகாரிகளின் குறிப்புகள், கத்தோலிக்க மதப்பரப்புநர்களின் அறிக்கைகள் வழியாக ஐரோப்பாவுக்குச் சென்று சேர்ந்தன.  ஆனால் அவர்கள் கீழைநாடுகளில் வெவ்வேறு வகையில் புழங்கிய பௌத்த நம்பிக்கைகள் ஒரே மதத்தின் பிரிவுகள் என்று உணர்ந்திருக்கவில்லை. திபெத்திய பௌத்தமும் இலங்கை பௌத்தமும் அந்த அளவுக்கு பொதுக்கூறுகள் மிகமிகக்குறைவானவையாக இருந்தன.

பின்னர் ஜெர்மானிய மெய்யியலாளர்கள், ருஷ்ய ஆய்வாளர்கள் இந்த மதப்பிரிவுகள் அனைத்துக்கும் மையம் புத்தர் என்பதை உணர்ந்தனர். அதன்பின் பௌத்தம் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் உருவானது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி தத்துவஞானிகள் பௌத்தத்தைக் கற்க ஆர்வம் கொண்டார்கள். ஏனென்றால் அன்று அவர்கள் நிறுவனப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான சுதந்திர மெய்யியல் மேல் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மனிதன், இயற்கை, பிரபஞ்சம், மீட்பு ஆகியவை பற்றிய வெவ்வேறு புதிய தத்துவக்கொள்கைகள் முன்வைக்கப்பட்ட காலம் அது.

பால் காரஸ்

அவ்வாறுதான் இந்தியவியலாளர்கள் பௌத்தம் பற்றிய செய்திகளை தொகுக்கலாயினர். மெல்ல மெல்ல பௌத்ததின் முகம் துலங்கி வந்தது. அதை ஐரோப்பிய அறிஞர்களிடமிருந்துதான் கீழைநாடுகள் முழுக்க பரவியிருந்த பௌத்தர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஜென் பௌத்தமும் இலங்கையின் தேரவாதமும் திபெத்திய வஜ்ராயனமும் ஒன்றே என்னும் எண்ணம் உருவாகியது. அதன்பின்னர்தான் நாம் இன்று உருவகிக்கும் ‘பௌத்த மதம்’ என்னும் கருத்துருவமே உருவாகியது. பௌத்த மதநூல்கள் ஆங்கிலம் வழியாகவே ஒரு பௌத்தத் தரப்பில் இருந்து இன்னொரு பௌத்தத் தரப்புக்குச் சென்று சேர்ந்தன. இந்தியவியலே இன்றைய பௌத்தத்தைக் கட்டமைத்தது. அதாவது பலவாறாக பிரிந்து உலகமெங்கும் கிடந்த பௌத்த ‘தர்மம்’ என்னும் மெய்யியலை ஒரு மதமாக உருவாக்கியது.

அதை உருவாக்கியவர்கள் என மூவரைச் சொல்லலாம். பால் காரஸ், தாமஸ் வில்லியம் ரய்ஸ் டேவிட்ஸ், ஹென்றி ஸ்டீல் ஆல்காட். புத்தரின் சுவிசேஷம் என்னும் நூலில் புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் புதிய ஏற்பாடு பைபிளின் வடிவில் எளிமையாக தொகுத்தார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரும்புகழ்பெற்ற நூல் அது. ரைஸ் வில்லியம்ஸ் பௌத்த மூலநூல்களை ஒப்புநோக்கி ஆங்கிலத்தில் ஆய்வுரைகளுடன் பதிப்பித்தார். அவருக்குப்பின் பலர் அவ்வகையில் பெரும்பங்களிப்புகளை ஆற்றினர். ஆல்காட் இந்தியாவிலும் இலங்கையிலும் பர்மாவிலும் தாய்லாந்திலும் பௌத்தம் நவீனத்தன்மை பெற காரணமாக அமைந்தார்.

ஆல்காட்டின் மாணவர் என்று சொல்லத்தக்கவர் அநகாரிக தம்மபாலா. இலங்கை பௌத்தம் அக்காலகட்டத்தில் கெட்டிப்பட்டு மடாலயங்களின் சடங்குகளில் நின்றுவிட்டிருந்தது. ஒரு ‘மக்கள் பௌத்தத்தை’ உருவாக்க தம்மபாலா வாழ்நாளெல்லாம் முயன்றார். அதை ஆய்வாளர்கள் ‘செயல்படும் பௌத்தம்’ என்றனர். அதை ஒரு புரட்டஸ்டாண்ட் பௌத்தம் என்றும் சொல்லலாம். அநகாரிக தம்மபாலாவின் பங்களிப்பு பௌத்தத்தை பல மரபான சடங்குகளில் இருந்து விடுவித்தது. பௌத்த தத்துவ இயல் மேல் மேலும் கவனம்  உருவாகச் செய்தது. மூலநூல்கள் சார்ந்து பௌத்தம் மறுவாசிப்புக்கு உள்ளாகியது. ஆனால் பௌத்தத்தில் அடிப்படைவாதம் உருவாகவும் அவரே காரணம்.

கவனிக்கவேண்டிய விஷயம் இது. மதப்பழமைவாதம் வேறு  மத அடிப்படைவாதம் வாதம் வேறு. மதப்பழமைவாதம் காலப்போக்கில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும், பிறவற்றுடன் ஒத்துச்செல்வதாகவும் ஆகிவிட்டிருக்கும். அது வரலாற்றுக் கட்டாயம். மத அடிப்படைவாதம் எப்போதுமே மதச்சீர்திருத்த இயக்கங்களில் இருந்தே தொடங்கும். மதச்சீர்திருத்தவாதம் ‘மூலநூல்களுக்கு திரும்புவோம்’ என்னும் கோஷத்தையே முன்வைக்கும். விளைவாக மூலநூலை மறுக்கமுடியாத ஒன்றாக ஆக்கும். அந்த மையப்படுத்தல் வழியாக ‘நாம் – பிறர்’ என கட்டமைக்கும். விளைவாக அடிப்படைவாதம் உருவாகும். மூலநூல்வாதம், தூய்மைவாதம் இரண்டுமே அடிப்படைவாதத்தின் ஆதாரநம்பிக்கைகள்.

மதச்சீர்திருத்தம் எப்போதுமே அதிகார அரசியலுடன் தொடர்புள்ளது. ஆகவே விரைவிலேயே அது மதஅரசியலாக மாறும். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாமே அவ்வாறுதான் அடிப்படைவாதத்தைச் சென்றடைந்தன. இந்து மதத்தில் அந்த அம்சம் உள்ள மதச்சீர்திருத்த இயக்கம் தயானந்த சரஸ்வதியின் ஆரியசமாஜம் மட்டுமே. அதுவே மூலநூல்வாதம், தூய்மைவாதம் ஆகியவற்றை முன்வைத்தது. ஆனால் அது மிக வெற்றிகரமாக ராமகிருஷ்ண பரமஹம்சரின் நெகிழ்வான ஆன்மிகப்பேரியக்கத்தால், அதைத்தொடர்ந்த அத்வைத இயக்கங்களால் முறியடிக்கப்பட்டது.

தாமஸ் வில்லியம் ரய்ஸ் டேவிட்ஸ்

நாராயண குரு வரை இந்துமதச் சீர்திருத்தத்தைப் பேசியவர்கள் கூடவே மூலநூல்வாதம், தூய்மைவாதம் ஆகியவற்றை எதிர்த்து பன்மையை, நெகிழ்வை முன்வைத்தவர்கள் என்பது இந்துமதத்தை இன்றுவரை அடிப்படைவாதத்தில் இருந்து காப்பாற்றி வருகிறது. அவர்களுடையதே நாளை உருவாகச்சாத்தியமான அடிப்படைவாதத்தில் இருந்தும் நம்மைக் காக்கும் வழி.

அநகாரிக தம்மபாலா கயாவில் இடிந்து கிடந்த புத்தரின் தூபியை மீட்டுக் கட்ட முன்முயற்சி எடுத்தார். பௌத்த வரலாற்றில் அது முக்கியமான நிகழ்வு. அம்முயற்சிக்காக தம்மபாலா மதப்பிரிவுகளின் எல்லைகளைக் கடந்து எல்லா பௌத்த மடங்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களை ஒருங்கிணைத்தார். அதன் வழியாகவே உலகளாவிய பௌத்தம் என்னும் பொதுவான புரிதல் உருவாகியது. உலகம் முழுக்க இருந்து பௌத்தர்கள் வந்து வழிபடும் ஒரு பொது வழிபாட்டிடம் உருவாகியது. அதாவது பௌத்தத்திற்கு ஒரு கண்கூடான மையம் உருவானது.

தமிழகத்தில் அயோத்திதாசர் முதலியவர்கள் முன்வைத்த பௌத்தம் சார்ந்த பார்வை ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டால் கட்டமைக்கப்பட்டது. அயோத்திதாசர் ஆல்காட்டின் நேரடி மாணவர். அவர் வழிகாட்டலில் இலங்கை சென்று அநகாரிக தம்மபாலவிடம் தொடர்புகொண்டு அங்கே பௌத்த தீக்கை பெற்றுக்கொண்டவர். சென்னையிலும் கோலாரிலும் உருவான மகாபோதி சங்கங்கள் எல்லாமே தியோசஃபிக்கல் சொசைட்டியின் பின்புல ஆதரவுகொண்டவையாக இருந்தன. அதேபோல அம்பேத்கரையும் அநகாரிக தம்மபாலாவின் வழியைச் சேர்ந்தவர் என்று சொல்லலாம். அம்பேத்கர் முன்வைத்த நவயான (புதியவழி) பௌத்தமும் ஒரு சீர்திருத்த பௌத்தமே. அம்பேத்கர் பௌத்த மரபில் இருந்து அடிப்படைத் தத்துவக்கொள்கைகளையும் சமகாலத்திற்குரிய ஆசாரங்களையும் மட்டும் தொகுத்து உருவாக்கியது அது

இந்தியாவில் பௌத்தம் மறைந்தமைக்கான காரணங்கள் பல உண்டு. மேலைநாட்டு ஆய்வாளர்கள் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் நாட்டில் நிகழ்ந்ததுபோல ஒரு மதப்போரையும், மத அழித்தொழிப்பையும் கற்பனைசெய்து சொல்ல இங்குள்ள வழித்தோன்றல்கள் அதை ஏற்றுச்சொன்னார்கள். இன்று அரசியல்நோக்குடன் அதைச் சொல்லிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால் வரலாற்றுச் சித்திரம் எப்போதுமே சிக்கலானது. அதை உணர ஒரு நிதானமும் கவனமும் தேவை. அரசியல் களத்தின் எகிறிக்குதித்தல்கள், காழ்ப்புகள், எதிர்க்கருத்துக்களை எல்லாம் எள்ளிநகையாடும் முதிர்வின்மைகளை கடந்து சென்று பார்க்கும் உளநிலை அதற்கு இன்றியமையாதது.

*

பௌத்தம் இந்தியாவில் மறைய அகக்காரணங்களும் புறக்காரணங்களும் உள்ளன.

அகக்காரணங்களில் முதலாவது அது பல கிளைகளாகப் பிரிந்ததுதான். பௌத்தம் தெளிவான நிர்வாக அமைப்பு கொண்ட மதம். ’சங்கம்’ என்னும் அந்த அமைப்பு அவர்களுக்கு முக்கியமானது. அதுவே அவர்களின் பலம். ஆனால் அதுவே பலவீனமும் ஆகியது. பல சங்கங்கள் உருவானபோது ஒன்று இன்னொன்றுடன் மோதத் தொடங்கியது. அத்துடன் சங்கம் என்னும் அமைப்பு ஆதிக்கம் அடைந்தபோது அரசுக்கு நிகரான ஆற்றல் கொண்டதாக ஆகியது. (இன்று பௌத்தம் எஞ்சியிருக்கும் நாடுகளிலெல்லாம் அது இணையரசாகவே உள்ளது) அதை அரசர்கள் விரும்பவில்லை.

இரண்டாவதாக, பௌத்தம் தனிநபர் சார்ந்த நிர்வாணத்தை (வீடுபேறு) முன்வைக்கும் மதம். அம்மதத்தின் அடிப்படைக் கோட்பாட்டின்படி விரக்தி (துறவு) கொள்பவருக்கே வீடுபேறு கைகூடும். அதுவும் பல படிகளாக. பல பிறவிகளாக. உலகியலில் இருப்பவர்களுக்கு நேரடியாக வீடுபேறு அமையாது. இது காலப்போக்கில் மக்களிடமிருந்து பௌத்தத்தை விலக்கியது. இந்தியாவில் துறவுக்கு முதன்மையிடம் கொடுத்த இரு மதங்களான சமணமும் பௌத்தமும் பின்னர் வந்த பக்தி இயக்கத்தால் பின்னடைவுக்குள்ளாயின. அத்துடன், இந்தியாவில் பின்னர் உருவான வஜ்ராயனம் (இடிமின்னலின் வழி) என்னும் பௌத்தப்பிரிவு மறைஞானச் சடங்குகளுக்கும், ரகசிய யோகமுறைகளுக்கும் அதிக இடமளித்தது. விளைவாக பௌத்த பிட்சுக்கள் மக்களிடமிருந்து மேலும் அயலவராக ஆயினர்.

புறக்காரணங்களில் முதன்மையானது பக்தி இயக்கம். பக்தி இயக்கம் என பொதுவாகச் சொல்லப்படும் ஆன்மிக- பண்பாட்டுப் பேரியக்கமே இன்றைய இந்தியாவின் பெரும்பாலான பண்பாட்டுவெற்றிகளுக்கு காரணம். அதன் தொடக்கப்புள்ளிகள் பலர். ஆறுமதங்களையும் அடிப்படையான பிரம்மதத்துவத்தின் அடிப்படையில் ஒருங்கிணைத்த சங்கரர் முதன்மையானவர். முதல் ஆழ்வார்கள், தொடக்ககால நாயன்மார்கள். அதன்பின் அது இந்தியாவெங்கும் பரவியது.

பௌத்தமும் சமணமும் துறவை முன்வைத்தபோது பக்தி இயக்கம் ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்னும் கருத்தை முன்வைத்தது. சோமாஸ்கந்தர், கல்யாணசுந்தரர், திருமகள் உடனுறையும் பெருமாள், ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வ உருவங்கள் வழியாக இல்லறவாழ்க்கையை முதன்மைப்படுத்தியது. வீடுபேறு என்பது நேரடியான தூய பக்தியால் மட்டுமே கிடைக்கும் என்றது. அந்த பக்தியைச் செலுத்த ஆலயவழிபாடும், நோன்புகளும் மட்டுமே போதும் என்றது. அந்த வழிபாடுகளையும் நோன்புகளையும் எல்லா சமூகமக்களின் வழிபாடுகள், நோன்புகளில் இருந்தும் உருவாக்கிக் கொண்டது. இசை, நடனம் ஆகிய கலைகள் வழியாக பக்தியை முன்னெடுத்தது. புராணங்கள் வழியாக வெவ்வேறு தனிவழிபாடுகளை ஒருங்கிணைத்துக் கொண்டது. விளைவாக அது ஓர் மக்களியக்கமாக ஆகியது.

பக்தி இயக்கம் பௌத்தத்தையும் சமணத்தையும் எதிர்க்கவில்லை. சில இடங்களில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அரிதாகச் சில சிறு மோதல்களும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பக்தி இயக்கம் பௌத்த சமண மதங்களின் நோன்புமுறைகள், வழிபாட்டுமுறைகளை உள்ளிழுத்துக்கொண்டது. தெய்வங்களைக்கூட ஏற்றுக்கொண்டது. பல சமண யட்சிகளும், பௌத்த போதிசத்வர்களும் இந்து தெய்வங்களாயினர். புத்தரே விஷ்ணுவின் அவதாரமாக சோழர் காலத்திலேயே கருதப்படலானார். இன்று இந்தியாவின் பல வைணவ ஆலயங்களில் பெருமாளின் பத்தாவது அவதாரமாக, கருவறை மூலச்சிலையிலேயே புத்தர் இருக்கிறார் (உதாரணம், பெலவாடி)

புறக்காரணிகளில் முக்கியமானது படையெடுப்பு. இந்தியாவின் பௌத்தக் கல்வியின் மையமாக இருந்த நாளந்தா பல்கலையை பக்தியார் கில்ஜி ல் சூறையாடி அங்கிருந்த ஆசிரியர்களான பிட்சுக்களை முழுமையாகக் கொன்றழித்தார். பௌத்தமதம் அமைப்பு சார்ந்தது, மதக்கல்வி அதன் அடிப்ப்டை. அமைப்பு அழிந்து மதக்கல்வியும் நின்றுவிட்டபோது பௌத்தம் மெல்ல அழிவை நோக்கிச் சென்றது. மேலும் நூறாண்டுகளில் மறைந்தது.

(இதெல்லாம் ஏராளமான நூல்களில் விரிவாக பேசப்பட்ட செய்திகள். நான் ஆய்வுக்கட்டுரை எழுதவில்லை, தொகுத்துச் சொல்கிறேன். நீங்கள் சற்று தேடல்கொண்டவர் என்றால் இவற்றை முழுமையாக அறிந்துகொள்ளலாம். இந்த அடிப்படை வரலாறு அரசியல் உள்நோக்கத்துடன் பலவாறாக திரிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. ஆகவே இச்செய்திகளை தகுதிவாய்ந்த ஆய்வாளர்களின் நூல்கள் வழியாக அறியமுயலுங்கள். முகநூலர்கள் யூடியூப் வாயர்கள் உருவாக்கும் சொற்குப்பைகளை பொருட்படுத்தவேண்டாம்)

இனி பௌத்தம் மீளவேண்டுமென்றால் என்ன வழி? இன்று பௌத்தமீட்பு உலகமெங்கும் எவ்வண்ணம் நிகழ்கிறது என்பதைக் கருத்தில்கொண்டே அதைப்பற்றி யோசிக்கவேண்டும்

(மேலும்)

 

ஜெயமோகன் நூல்கள்

 

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

முந்தைய கட்டுரைநான்காம் தமிழ்ச்சங்கம்
அடுத்த கட்டுரைமயிலாடுதுறை பிரபு – ஒரு போராட்டம்