அன்பு ஜெ.மோ,
நலம்தானே! இந்த செய்தியை பார்த்த பிறகு உங்களிடம் பகிரலாம் என்று தோன்றியது.
இது இந்திய ஜனநாயகத்தின் மேல் ஒரு நம்பிக்கையை வார்க்கக்கூடியது. சற்று தாமதமானாலும் சரி, ஜனநாயகம் தன்னிடம் முரண்டு பிடிக்கும் ஆட்களுடனும் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்கு இது சான்று. 1950 களில், ஐதராபாத்தில் நிகழ்ந்த அந்த சம்பவங்களை பார்த்தவர்களுக்கு… அன்றைய எம்.ஐ.எம் அட்டூழியங்களுடன் புண்பட்டவர்களுக்கு… வெறும் 70 வருடங்களில் அந்த கட்சியின் இன்றைய தலைவர்கள் இப்படி பேசக்கூடும் என்று சொன்னால் நம்பியே இருக்கமாட்டார்கள். ஜனநாயகம் அதை நிகழ்த்தி காட்டுகிறது.
இன்றைய எம்.ஐ.எம்-ன் நோக்கு இந்த காலத்திற்கு மிகவும் உகந்தது. துருவப்படுத்தல்களுக்கு எதிராக இன்றைய இஸ்லாமியர்கள் செல்ல வேண்டிய பாதையை சுட்டுகிறது. அந்த விஷயத்தில் இது முன்னோடி என்றே நினைக்கிறேன். இது போன்ற நிலை அறிக்கை தான் ஜனநாயக விரும்பிகளுக்கு இஸ்லாமியர்களுடன் பெரும் மரியாதை-யை பெற்று தரும்.
எம்.ஐ.எம்- இடம் எத்தனையோ பிசகுகள் இல்லாமல் இல்லை. ‘பழைய ஐதராபாத்தில்’ அவர்களின் அடாவிடிகளுக்கும், ஊழலுக்கும் குறைவில்லை. ஏன், அந்த பகுதி இன்றும் கூட மிக பின்தங்கி இருப்பதற்கு காரணமும் அவர்கள்தான் என்றால் தவறே இல்லை. இன்றும் ஒரு குடும்ப ஆட்சியின் கட்சிதான் அது. இத்தனை இருந்தாலும், அவர்களுக்கு இந்துக்களின் மேல் ஒரு அந்நிய மனப்பான்மை இல்லை. ‘நாம் வேறு அவர்கள் வேறு’ என்ற எண்ணம் அவர்களிடம் காண்பதில்லை. அது அவர்களின், tactics என்று சொல்பவர் உண்டு. அது, ‘வாழ்விற்க்கான சூழ்ச்சியாக'(survival tactics) ஆக இருந்திட்டு போகட்டுமே… அது இந்தியாவிற்கு நன்மைதானே.
பாஜகா மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல், ஐதராபாத் இந்தியாவில் ஐக்கியமான செப்டம்பர் – 17 ஆம் நாளை ‘விடுதலை தினமாக’ அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. அதாவது, முஸ்லீம் ஆட்சியிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் என்று. அப்படி சொல்லி, அன்றைய காசிம் ரிஜ்வியின் எம்.ஐ.எம். ‘இந்துக்கள்’ மீது செய்த கொடுமைகளை சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறது. அநேக திரிபுகள் கொண்ட வாதம் இது. அந்த கட்சியின் தேசிய தலைவர்களும் வந்து மிகவும் ஆக்ரோஷமாக இதை கூவிக்கொண்டு இருக்கிறார்கள்.
மறுப்பக்கம், அப்படி சொல்வது இங்கு இருக்கும்(மாநில அளவில் 20 சதவிதம், ஹைதராபாதில் மட்டும் 43 சதவீதம்) முஸ்லிம்களை அந்நிய படுத்திவிடும் என்பது ஆளும் கட்சியான ‘தெ.ரா.ச’ வின் நிலைப்பாடு. காங்கிரஸ்ஸின் நிலையும் அதுவே. அவர்கள் மட்டும் அல்ல, இங்கு முன்பு ஆட்சி செய்த தெலுங்கு தேசம், இன்றும் இங்கு பலமாக இருக்கும் கம்யூனிஸ்டுகளின் நிலையும் கூட இதுதான். வரலாற்றின் பழைய காயங்களை ஏன் பிராண்டவேண்டும் என்ற நிலை அது. அதை ஒரு பண்பாகத்தான் அனைவரும் கடைபிடித்து வந்தார்கள். 1947-1950 மத்தியில் இந்த மாநிலத்தில் பாதிக்க பட்டவர்கள் இந்துக்கள் மற்றும் அல்ல முஸ்லிம்களும் கூடத்தான். அசோகமித்திரனின் ’18-வது அட்சக்கோடு’ சொல்லும் விஷயம் கூட அதுதானே.
பா.ஜா.காவும் 2014 வரையில் அப்படிதான் இருந்தது. மத்தியில் கோலோச்சியதுமே… ‘விடுதலை தினத்தை’ முன்னெடுத்தது. அதற்க்கு போட்டியாக (வேறு வழியில்லாமல்) இந்த வருடத்தில் இருந்து செப்டம்பர் 17-ஐ ‘தெலங்கானா ஒற்றுமை தினமாக’ கொண்டாட துவங்கியது ஆளும் கட்சி. நேற்று அவர்களும் இவர்களும் வேறுவேறாகா அமளி துமளி செய்து இருக்கிறார்கள். இந்த பின்னணியில் தான் அஸதுத்தீன் பேச்சு முக்கியமாக படுகிறது.
15 வருடங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் பயிற்சியில் ஒரு அங்கமாக எங்களை அன்றைய ஆந்திர மாநில சட்ட சபைக்கு அழைத்து சென்றார்கள். அதுவரை நான் தமிழ்நாட்டு சட்ட சபைக்கும் சென்று உள்ளேன். அங்கு போலவே இங்கும்… எனக்கு அந்த பேச்சுகள் பெரிய சுவாரசியத்தை உண்டுபண்ணவில்லை. தூங்கு மூஞ்சியாகத்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்… அதெல்லாம் அஸதுத்தீன் பேசும் வரைக்கும்! மிகவும் மிகவும் தர்க்கபூர்வமான அவரின் பேச்சு, அவர் சொல்லும் தரவுகள், அதில் ஊடாடிய அங்கதம், பேச்சில் தொனிக்கும் நேர்மை… எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எம்ஐஎம்- மேல் அதுவரை எனக்கு இருந்த ‘மதவாத கட்சி’ என்ற எண்ணம் சற்று மாறியது. அன்று முதல் அவரின் பேச்சை கேட்க தொடங்கினேன். அன்று முதல், தேசிய அளவில் இஸ்லாமியர்களின் நிலையை ஒழிப்பதற்கு சரியான குரல் இவருடையதுதான் என்ற எண்ணம் இன்றளவுக்கும் வலுவடைந்துக்கொண்டுதான் இருக்கிறது.
அன்புடன்,
ராஜு
ஹைதராபாத்