எழுதுக, கடிதம்

எழுதுக நூல் வாங்க 

அன்புள்ள ஜெ,

எழுதுக என்னும் புத்தகம் வாசித்த எனது அனுபவத்தை தங்களிடம் பகிரும் பொருட்டு அனுப்பும் மின்னஞ்சல்

ஒரு மனிதன் தான் அவதானித்ததை இந்த உலகுக்கு எழுத்து மூலம் கடத்திக்கொண்டிருக்கும் பணியை செய்யும் பொழுது, இந்த எழுத்துக்களின் ஊடே உள்ள ரகசியங்களை தன்னுள் அடக்கி வைப்பதுண்டு. காரணம் நிலைகொள்ளாமை என்னும் அந்த அச்சம், எழுதுவதில் இருக்கும் அந்த வித்தையை மற்றவர்களும் அறிந்தால் மற்றவர்களும் அவர்களுக்கு ஈடாக வரும் பொருட்டு தான் இத்தனை நாள் மற்றவர்களை விட ஒரு படி மேல் என்ற அந்த மிதப்பு நிலைக்காது. ஆனால் அடுத்த தலைமுறையினர் அவர்களில் உள்ள வாசர்களையும் எழுத்தாளர்களையும் கண்டடைவது தமிழ் இலக்கிய சூழலுக்கு இன்றியமையாதது என்ற ஒரு அறிதல் ஜெயமோகன் அவர்களை வாசகரிடம் உரையாடல் ஊடாக வாசித்தல் மற்றும் எழுதுதல் குறித்த தெளிவான தீர்க்கமான கருத்துக்களை பகிரச் செய்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த பதில்கள் ஒரு வாசகரையும் எழுத்தாளரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

எனக்கு சற்றும் ஒவ்வாத கதை உலகத்தில், நான் கேட்டிராத மொழிநடையில் உள்ள செவ்வியல் இலக்கிய படைப்புகளான ஒரு புளிய மரத்தின் கதை, கொற்றவை, புயலிலே ஒரு தோணி என்ற புத்தகங்கள் பாதியிலியே கிடப்பதை நினைவு கூர்கிறேன். என்னை போன்ற வாசகர்களுக்கும் இந்த எழுதுக என்ற புத்தகத்தில் ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். விடுபட்ட இந்த புத்தகங்களின் வாசிப்பை தொடரலாம் என்ற எண்ணம் மலர்கிறது.

எது இலக்கியம்?, உலகியல் வாழ்வில் காலூன்றி நிற்பதன் அவசியம், தொடர்புத்திறனின் இன்றைய போக்கு என அனைத்து பதில்களும் அசாத்தியமான முறையில் பகுப்பாய்வுத் தன்மையோடு ஆழச் சென்று உதாரணங்களோடு விளக்கியிருப்பதனால் இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தின் அறிவுக்கனம் புத்தகத்தின் ஸ்தூல கனத்தை விட அதிகமாக உள்ளது. இதைச் சுமையாக இல்லாமல் மிக இலகுவாக நம்மில் செலுத்திருப்பதே இந்த படைப்பின் வெற்றி

லோகி – சில நினைவுகளும் சில மதிப்பீடுகளும் என்ற இவரின் புத்தகத்திலும் இந்த பகுப்பாய்வுத் தன்மையை நான் உணர்ந்தித்திருக்கிறேன் . உதாரணத்திற்கு மலையாள திரைக்கதைகளில் இரண்டு விதமான கதைகள் இருப்பதை நிறுவியிருப்பார் , எம் டி வாசுதேவன் நாயர் அவர்களின் கதைகளில் சிக்கல்களை தன் புத்திசாலித்தனத்தால் அவிழ்த்து மீண்டு வரும் கதாநாயகன் மற்றும் லோகி போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் உள்ள மீள முடியாத சிக்கல்களில் அகப்பட்டு வாழவைத் தொலைக்கும் கதாநாயகன் . இப்படி பல தருணங்களில் என்னை அசர வைத்த படைப்பு லோகி என்ற அந்த புத்தகம் . அந்த படைப்புக்கு சற்றும் குறையாத படைப்பாக இந்த எழுதுக என்னும் இந்த கடித இலக்கியத்தை பார்க்கிறேன்.
கடைசியில் வரும் தீவிரவாதம் பற்றியான கட்டுரை இளைஞர்களை நல்வழிப்படுத்தவதற்காகவே தன் முனைப்போடு தர்க்க அடிப்படையில் உளமாற சொல்லிருப்பது கச்சிதம்.

ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என்ற ஜெயமோகனின் கூற்றிற்கேற்ப இந்த படைப்பிலும் இதை காணமுடிகிறது.

இதில் வியப்பு என்ன என்றால் இந்த அறிய மெய்மையை சுழல்நிலையில் நிலை கொள்ளச் செய்து அந்த அரிய மெய்மையையின் தேவையை வலியுறுத்தி அதன் ஊடாக அரிய மெய்ம்மையே இன்னொரு அடுக்காக மருவுருவம் பெற்றிருப்பது தான்.

இவை அனைத்தையும் எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த குறைவான பக்கங்கள் கொண்ட ஒரு அறிவு களஞ்சியத்தை எல்லோரும் பருக வேண்டும். எழுதுக என்னும் நூலை ஜெயமோகன் அவர்களின் 60ஆம் அகவையை முன்னிட்டு விலையில்லா பிரசுரமாக பெற்ற 500 இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதனை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். தன்னலம் இல்லாமல் இந்த அறிய செயல்பாட்டை செய்த தன்னறம் நூல்வெளிக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகள்.

அன்புடன்
அன்பு

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

முந்தைய கட்டுரைபுறப்பாடு, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமு.மு.இஸ்மாயில்