புழுக்கச்சோறு, தூவக்காளி, காந்தாரா -கடிதங்கள்

பேரன்பும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இது என்னுடைய முதல் கடிதம். உங்களுடைய படைப்புகள் எனும் சிகரத்தில் ஒரு சிறு கல்லையாவது பற்றிய பிறகு தான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எனக்கு நானே வரையறையை வகுத்துக்கொண்டேன். அதன்படியே ஒவ்வொரு நாளும் உங்களது படைப்புகளின் வழியே என்னை நான் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றேன்.

உங்களுக்கு கடிதம் எழுத நினைத்த தருணத்தை ஒரு வாசகனாக அடைந்துவிட்டேனா என்பது தெரியவில்லை. ஆனால், நான் இன்று பார்த்த திரைப்படத்தின் மூலம் அந்த தருணத்தை நானே உருவாக்கிக் கொண்டு உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அதே தருணத்தில் கன்னட திரையுலகில் “காந்தாரா” எனும் திரைப்படமும் வெளியானது. நீங்கள் திரைப்பட எழுத்து வேலைகளிலும், தமிழ் விக்கி சார்ந்த பணிகளிலும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால் அதை கவனித்திருப்பீர்களா என்பது தெரியவில்லை.

இன்று நான் “காந்தாரா” திரைப்படத்தினை திரையரங்கில் பார்த்தேன். இப்படத்தின் மையம் பூமியைக் கைப்பற்றி கடலுக்கடியில் எடுத்து சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனை அழித்த விஷ்ணுவின் வராக அவதாரத்தை மையப்படுத்தி இருந்தாலும், படத்தில் கையாளப்பட்ட மற்ற தொன்மவியல் விஷயங்கள் ஒவ்வொன்றும் உங்களது படைப்புகளின் படிமங்களை தான் என்னுடைய கண்ணின் முன் நிறுத்தியது. குறிப்பாக முதலாமன், தூவக்காளி சிறுகதை. இத்திரைப்படத்தின் திரைக்கதைக்கும் முதலாமன் சிறுகதைக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளது.

மேலும் புனைவுக் களியாட்டு சிறுகதையில் என்னை மிகவும் பாதித்த பல கதைகளில் புழுக்கச்சோறு சிறுகதையும் ஒன்று. தொடக்கத்தில் அந்த கதையை பசியின் வீரியம் என்றளவில் மட்டுமே புரிந்துகொண்டு இருந்தேன். ஆனால், கதையை படித்தமுடித்த சில நாட்கள் அந்த சிறுகதையின் படிமங்கள், குறிப்பாக கடைசியாக வரும் பன்றிமாடனின் படிமம் என்னுடைய கனவுகளில் பிரவேசிக்க தொடங்கியது. அதற்கான காரணம் அப்போது புரியவில்லை. நீங்கள் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அந்த சிறுகதையில் வைத்திருக்கலாம். ஏன் பன்றிமாடன் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான பதில் இன்று தான் எனக்கு கிடைத்தது.

அந்த கதை குறித்த என்னுடைய பார்வையை காந்தாரா திரைப்படத்திற்கு முன், பின் என இரண்டாக பிரிக்கலாம். இந்த திரைப்படம் பார்த்ததன் பிறகு புழுக்கசோறு சிறுகதையை மறு வாசிப்பு செய்தேன்.

வராகர் தான் பன்றிமாடன் என்பதை அறிந்துகொண்டேன். அந்த சிறுகதையின் ஆதியை கண்டுபிடித்த உணர்வை எனக்குள் உணர்ந்தேன்.

புனைவுக் களியாட்டில் தொன்மம் சார்ந்த சிறுகதைகளின் எண்ணிகை தான் நான் அறிந்த வரையில் அதிகம். தொன்மங்கள் சார்ந்த உங்களது படைப்புகள் ஒவ்வொன்றையும் படிக்கும் பொழுது நான் அடையும் மனவெழுச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது கிட்டத்தட்ட நீங்கள் கதையெழுதும் பொழுது அடையும் சாமியாடியின் நிலையை ஒத்தது.

நான் அறியாத பல்வேறு இந்திய தொன்மங்களை, குறிப்பாக தென்னிந்திய தொன்மங்களை உங்களது படைப்புகளின் வழியாக ஒவ்வொரு நாளும் அறிந்தவண்ணம் தான் இருக்கின்றேன்.

ஆனால், தென்னிந்திய திரையுலகில் “காந்தாரா” போன்ற தொன்மங்கள் சார்ந்த படைப்புகள் வெளியாவது குறிஞ்சிப் பூ மலர்வதற்கு ஒப்பாகவே உள்ளது. இந்திய திரையுலகில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் கையாளப்பட்ட தொன்மவியல் கூறுகள் குறித்து உங்கள் மூலம் அறிந்துகொள்ள விழைகின்றேன்.

சந்தோஷ் மருது

*

அன்புள்ள ஜெ

காந்தாரா என்னும் சினிமா இன்று சக்கைப்போடு போடுகிறது. அதே படத்தை கொண்டாடும் பலரிடம் நான் தூவக்காளி, புழுக்கச்சோறு போன்ற நாட்டார்தெய்வங்கள் வரும் உங்கள் கதைகளைப் பற்றிச் சொன்னேன். பலருக்கு அக்கதைகளின் நுட்பங்கள் புரியவில்லை. விளக்கும்போது புரிகிறது. நமக்கு அந்தக்கலைகளின் கிராண்ட்யூர் மட்டும்தான் புரிகிறது என நினைக்கிறேன்

ராஜேந்திரன் அருணாச்சலம்

மலை பூத்தபோது வாங்க

முந்தைய கட்டுரைகு.அழகிரிசாமி, ஆவணப்படம்
அடுத்த கட்டுரைபுஷ்பா தங்கத்துரை