வைணவங்கள் உரை -கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

புதுவை வெண்முரசு குழுவினரின் சார்பாக திரு. அரிகிருஷ்ணன் அவர்களின் அறுபதாவது அகவையின் மணிவிழாவை இலக்கிய விழாவாகவும் கொண்டாட எண்ணியதின் பேரில் தங்களின் உரையை இரண்டாவது முறையாக நேரில் கேட்க முடிந்தது.

முதன்முறையாக தங்களின் உரையை நான் கேட்பதற்கும் காரணமாக அமைந்தது அரிகிருஷ்ணன் அவர்கள் தான். புதுவை வெண்முரசு கூடுகையின் ஐம்பதாவது சிறப்பு நிகழ்வாக தங்கள் பங்கேற்று வெண்முரசு பற்றியும் வரலாறு பற்றியும் நீண்ட தெளிவான உரையை அளித்தீர்கள்.

சமீப காலங்களில் உங்களின் வருகையை தவிர்த்து நான் பெரிதும் உற்சாகமடைந்த தருணங்கள் மிகவும் குறைவு. குறுகிய காலத்திலேயே என்னை மீண்டும் மீண்டும் உற்சாகமடைய செய்த புதுவை வெண்முரசு கூடுகை நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கு முயன்று, பின் தோற்று இப்போது அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். முன்னதாக ஐம்பதாவது சிறப்பு கூடுகை நிகழ்ச்சியின் போது வரலாறு குறித்த தங்களின் உரை என்னை மீண்டும் ஒரு மாணவன் என்ற மனநிலையில் அங்கு இருக்க வைத்தது.

காலந்தோறும் பண்பாட்டுவரலாறு எப்படி தொகுத்துக் கொண்டே பலவற்றை சேர்த்துக் கொண்டே வருகிறது என்பதை அறிய முடிந்தது. அரசியல், பண்பாடு என அனைத்தையும் உள்ளடக்கிய தெளிவான உரை. ஆறு தரிசனங்கள் பற்றியும் அதனை எப்படி இந்திய தத்துவத்தில் அணுக வேண்டும் என்பதை பற்றியும் மாணவர்களுக்கு எப்படி போதிக்க முடியும் என்று தங்களின் உரை மூலமாக நான் கற்றுக் கொண்டேன். அதற்கு உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இரண்டாம் உலகப் போரின் போது பசிபிக் தீவுகளில் இருந்த அமெரிக்க -ஜப்பானிய படை வீரர்களுக்கு உணவு பொட்டலங்களும் வேண்டிய பொருட்களும் ஆகாய மார்க்கமாக கொடுக்கப்பட்டது. விமானிகள், வீரர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அமெரிக்க ஜப்பானிய கொடிகளும் பீரங்கிகளும் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் வீரர்களுக்கு வேண்டிய பொருட்கள் மேலே இருந்து கிடைத்துக் கொண்டிருந்தன.

பொருட்கள் மேலிருந்து கீழே விழுவதை கண்ட தீவு வாசிகள் அவர்களும் இதே போல கொடியை நிறுத்தி மேலே இருந்து பொருட்களை பெற்றுக் கொண்டிருந்தனர். போர் முடிந்து சொந்த ஊருக்கு வீரர்கள் திரும்பி விட்டதும் பொருட்கள் மேலே இருந்து கீழே போடுவதை நிறுத்திவிட்டார்கள்.

போர் பற்றிய விவரம் அறியாத தீவு வாசிகள் திரும்பவும் அதே போன்று கொடியை நிறுத்தி வைத்து பொருட்களை விழ வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு கோணத்தில் கொடியை நிறுத்தி வைத்து பொருட்களுக்காக அவர்களின் காத்திருப்பு தொடர்ந்தது. ஏதாவது ஒரு கோணத்தில் சரியாக வைக்கும் பொழுது நிச்சயம் பொருட்கள் மேலே இருந்து விழும் என்று நம்பி இருந்தனர். அதைப்பற்றிய விவரிப்புடன் நீங்கள் மதங்களைப் பற்றிய உரையை தொடங்கினீர்கள். (கார்கோ கல்ட்)

உலகில் உள்ள பெருவாரியான அல்லது அனைத்து நாடுகளிலுமே கடவுள் மேலே இருக்கிறார். கீழே இருந்து நாம் வேண்டிக் கொண்டால் நமக்கான பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதை சுட்டிக்காட்ட இரண்டாம் உலகப் போரின் கதையை தொட்டு சொல்லி இருந்தீர்கள்.

வைணவங்கள் உரைக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது அந்தக் கதை. வைணவமா?வைணவங்களா? என தலைப்பை அலசிச் சென்ற விதமும் அருமை.

உருவம் அருவம் பற்றிய விளக்கமும் என் நெடுநாளைய சந்தேகத்தைப் போக்கிற்று. ஒன்றைக் குறிக்க, உருவகப்படுத்த வேண்டி உள்ளது. ஆனால் அது அப்படியானது அல்ல என்று உரைத்தது எனக்கு நன்றாக உரைத்தது. இந்த சிலை கடவுள், ஆனால் இது கடவுள் இல்லை. உரையை நேரில் கேட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய வரி என்று நினைக்கிறேன்.

அறிவியலோடு ஆன்மீகத்தை தொடர்புபடுத்தி உரையை விளக்கியதும் எனக்கு மிகவும் பிடித்தது. குறிப்பிட்ட வேகத்தில் அலைவரிசையில் இயங்கும்போது ஒரு நிலையில் இருக்கும் ஒரு பொருள் தன் இயல்புகள் மாறினால் வேறொன்றாக மாறிவிடும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரு நிலையில் தற்காலிகமாக இருந்து வேறொன்றாக மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை கொண்டது என்பதை பொருத்திப் பார்க்க முடிகிறது.

நெடு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு ஒரே உரையில் விடை அளித்தது போன்ற ஒரு அற்புதம் நிகழ்ந்தது. எந்தக் கேள்வியையும் நான் நேரடியாக கேட்கவே இல்லை. ஆனால் சொன்ன அத்தனை பதில்களும் எனக்கானது போலவே என்னால் உணர முடிந்தது.

எல்லோரிடமும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கும் என்றால் அது உண்மையாகத்தான் இருக்கும். நான் வழிபடுவதும் கடவுள்தான். நீ வழிபடுவதும் கடவுள்தான். வடிவங்களும் வடிவங்கள் இல்லாமல் இருப்பதும் வெவ்வேறு தன்மை கொண்டதும் அனைத்தும் உண்மைதான்.

அடுத்த தரிசனத்திற்கு காத்திருக்கிறேன்..

மகிழ்ச்சியுடன்,
திருமுருகன்.சு

 

ஜெயமோகன் நூல்கள்

 

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

முந்தைய கட்டுரைஇந்து மதம் என ஒன்று உண்டா? – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி