தீயரி எசமாரி- கடிதம்

அன்பு ஜெ.மோ.,

கடந்த ஞாயிறு காலை… வரிசையாக இரண்டு நாள் விடுமுறை என்பதால் தூக்கம் கலைந்தாலும் சோம்பலுடன் படுக்கையிலே இருந்தேன். எப்பொழுதும் நான்தான் என் ஐந்து வயது மகனை துயிலில் இருந்து  எழுப்புவேன். அன்று அவன் எழுந்து தூக்கமும் விழிப்புமாக உள்ள என்னுடன் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தான். திடீர் என்று ‘தீயாரி எசமாரி’ என்று பாட ஆரம்பித்து விட்டான். எனக்கு தூக்கம் போயே போச்சு… அவனை அள்ளி சேர்த்துக்கொண்டு  ‘இந்த பாட்ட எங்கடா கேட்ட? என்றேன்.

‘தமிழ் படத்துலதான்… நாம போனோமே!’ என்றான்.
‘அந்த படம் உனக்கு ஞாபகம் இருக்கா…?’
‘அதெல்லாம்… ஞாபகம் இருக்கும்’ என்றான்.
நாங்கள் ஹைதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பார்த்து அப்போதைக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகின்றன. படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே என்னுடைய 11 வயது பெண் ‘சோ… அப்பா’ என்று அலுத்துக்கொண்டு இருந்தாள். வெளியில் வந்த பிறகு என்ன வென்று கேட்டால்… ‘படம் புரியல அப்பா’ என்றாள் ‘உனக்கு தமிழ் புரியும்தானே!’ என்றேன். ‘மொழி இல்லப்பா… அந்த கேரக்டர்ஸ்…’ என்று சொன்னாள்.

என் மனைவியுடன் கேட்டேன்… ‘படம் நல்லாதான் இருக்கு’ என்று சொன்னாள். அவள் ஏ.ஆர். ரகுமானுக்கு மிகப்பெரிய விசிறி. அவள் வாழ்க்கையின் ஆதர்ஷ ஆண் அவர்தான். நான் ஏதாவது கோபப்பட்டாலோ, பெண்களை பற்றி ஒரு மாதிரி பேசினாலோ ‘ரகுமான் இப்படி பேசுவாரா… எல்லாரும் அவர் மாதிரி ஜென்டில் மேனா வரமுடியாது!’ என்பாள்.  அவரின் இசை இருந்தால் எல்லா படமுமே நல்ல படம் தான் அவளுக்கு… ‘எல்லாம் பார்த்துதான் அவர் பண்ணுவாரு!’ என்பாள்.

அன்று இந்த படத்தை பற்றி எதுவும் பேசாமல் வந்தது என் பையன் மட்டும்தான். அவனின் ஐந்துவயது மூளையில் பதிவானவை இப்பொழுதுதான் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. எங்களுக்கு அவனின் வளர்ச்சிமீது ஏதோ ஒரு சிறிய சந்தேகம் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. மூன்று வயதில் அவனுக்கு பேச்சு வரவில்லை. ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணரிடம் சென்றோம். ‘ஆட்டிசம் இருக்கலாம்’ என்று சொன்னார். அப்படியே ஆடிப்போய் விட்டோம். இரண்டு நாள்… கண்ணீருடன்தான் கடந்தோம். மூன்றாவது நாள்… ஆட்டிசம், வளர்ச்சிக்கான பரிட்சைகளுக்கு சென்றோம். அவனை பார்த்த உடனேயே ‘இவனுக்கு ஆட்டிசம் எல்லாம் இல்லீங்க’ என்றார் அங்குள்ள நிபுணர். இருந்தும் பல்வேறு தரவுகளுடனும், பெற்றோராக  எங்கள் இருவரின் அந்யோனியத்தையும் கருத்தில் கொண்டு ’26 பாய்ண்ட்ஸ்’ போட்டார். அந்த  பாயிண்ட்ஸ் 30 தாண்டினால் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பதாக சொல்வார்கள். இவன் அதில் இல்லை என்றாலும்… ஸ்பீச் தெரபி, occupational therapy  கொடுக்க சொன்னார். அப்படியே செய்தொம். ஆறு மாதத்துக்குள் பேச்சு வந்தது. இப்பொழுது நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருக்கின்றான். கடந்த வருடம் முதல் பள்ளியிலும் சேர்த்து விட்டோம். இப்பொழுது யூகேஜீ.  அவ்வப்போது தெரபி-க்கு செல்கிறான். இதை பற்றி மீண்டும் உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன் ஜெ.

எங்களின் இந்த அனுபவங்களினால், அவனை எப்பொழுதும் சிறிய பதற்றத்துடன் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அவனின் சிறிய ‘அறிவுத்திறன்’ வெளிப்படும்  எந்த தருணங்களும் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும். அன்று காலையில் அவன் ‘தீயாரி எசமாரி’ பாடிய பிறகு எனக்கு ஏற்பட்டதும் அவ்வாறான மகிழ்ச்சியே. இத்தனைக்கும் அவன் படத்தை பார்த்த பிறகு மீண்டும் அந்த பாடலை கேட்கவே இல்லை!

அன்று காலை,  நானும் அவனும் கடைக்கு சென்று வந்து கொண்டு இருந்தோம்.
‘அப்பா… படத்தில் அவரை கொலை செய்வாரே யாரு. பெரிய கத்தியோட… ரத்தம் எல்லாம் வருமே’  என்றான். ‘ஆதித்த கரிகாலன் என்று சொன்னால் அவனுக்கு உச்சரிப்பு வராதோ என்று நினைத்து ‘விக்ரம்’ என்றேன்.

குதிரையில் போவாரெ… தீயாரி எசமாரி பாட்டுல அவரு?’

‘வந்திய தேவன்’ என்றேன்.

‘அவரை தெலுங்கில என்ன சொல்லுவாங்க’ என்றான்.

‘தெலுங்கிலும் வந்திய தேவன் தான்’ என்று சொன்னதும்… ஏனோ சிரித்து விட்டான்.

இப்பொழுதெல்லாம்… ஞாயிறுகளில் ‘ராட்சச மாமனே’ பாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

மொழி புரியாத போதும்… இசையுடனேயே இந்த படம் உலகத்தில் உள்ள சிறுவர்களுக்கு ரகுமான் சேர்த்து விட்டார் என்று நீங்கள் சொன்னதை பார்த்த பிறகு… இதை பகிரலாம் என்று தோன்றியது.

அன்புடன்,
ராஜு

முந்தைய கட்டுரைஏழாம் உலகத்து மக்கள்
அடுத்த கட்டுரைகர்ணன்