அன்புள்ள ஜெ
நலம்தானே?
குமரித்துறைவி நாவலை வாசித்து முடித்தேன். ஒரு பேருந்துப் பயணத்தில் நின்றுகொண்டே வாசித்து முடித்த நாவல். நாவலில் உணர்ச்சிகரமே இல்லை. நாடகீயக் காட்சிகளே அனேகமாக இல்லை. வெறும் விழாச்சித்தரிப்புகள். ஆனால் என் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தன. நான் பலமுறை விம்மிவிட்டேன். பஸ்ஸில் யார் என்ன நினைத்தாலென்ன என்று தோன்றிவிட்டது. எனக்கு இப்படித் தோன்றுகிறது, பாஸிட்டிவான உணர்ச்சிகளால் கண்ணீர்வரவழைப்பதே மகத்தான கலை. இதே உணர்ச்சியை முதன்முதலாக நான் அறிந்தது க.நா.சு மொழியாக்கம் செய்த அன்புவழி நாவலில். வணக்கம்
செல்வ திருக்குமரன்
*
அன்புள்ள ஜெ
குமரித்துறைவி அற்புதமான ஓர் அனுபவம். நெகிழ்ந்து கண்ணீர் மல்க பார்வை மறைத்துக்கொள்ள அவ்வப்போது வாசிப்பை விட்டுவிட்டு அமர்ந்திருந்தேன். மகத்தான நாவல். சின்ன நாவல். ஆனால் ஒவ்வொரு வரியிலும் அற்புதமான கவித்துவம் நிகழ்ந்த நாவல். அந்த குட்டிப்பிள்ளையாரை எண்ணி எண்ணி புன்னகைக்கிறேன்.
தெய்வங்களுடன் மண்ணில் வாழ்வது ஒரு பெரிய பேறு ஜெ.
சிவா ராஜ்மோகன்