அன்புள்ள ஜெ
என் ஆயாவின் ஆயா தெய்வானை தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவரது மகள் எமரோஸ் அவர் கண் முன்னாலேயே தனது ஐம்பத்தேழாம் அகவையில் மறைந்து விட்டார். என் ஆயா தன் ஆயா தெய்வானையால் வளர்க்கப்பட்டதால் ஆயாவையும் அம்மா என்று அழைப்பதே வழக்கம். மேலும் தனது மாமாவையே மணந்து கொண்டதால் மருமகளும் கூட. தன் மகள் இறந்து ஆறு ஆண்டுகள் கழித்து இறக்கும் தறுவாயில் தெய்வானை, “அம்மா வந்துட்டாளா ?” என்று என் ஆயாவை பார்த்து வினவுகையில், ” மா, அதான் அம்மா செத்து ஆறு வருஷமாச்சே, இப்ப வந்து கேக்குறியே மா! ” என்று சொன்னதாக சொல்வார். அந்த தருணம் அவர் மனதில் வியப்பாக நின்றிருப்பதால் தன் ஆயாவின் இறப்பை நினைவுகூர்கையில் எல்லாம் இச்சம்பவத்தை சொல்வார்.
அப்போதெல்லாம் நினைத்து கொள்வேன், எத்தனை பெருந்துயர் அது. ஆறு ஆண்டுகள் கழித்தும் மரணத்தை ஏற்று கொள்ள முடியாதா என்று ? அம்மாவின் பேனா (https://www.jeyamohan.in/2277/) என்ற இந்த பதிவில் ஒரு அம்மாவுக்கு தன் மகள் எப்படி இறக்க முடியும் என்று முடிக்கையில் இந்நினைவுகள் இணைந்து கொண்டன. காலம் எல்லாவற்றையும் கரைக்கும் என்பது பொது வழக்கு. அந்த துயர் ஆறாது நிலைத்திருப்பதன் அர்த்தம் என்ன ? ஆறாத காயமெனில் எத்தனை ஆழமானது அத்துயர். அவரது ஆளுமையாக என் ஆயாவின் சொற்களில் இருந்து உருவகித்ததை சேர்க்கையில் அதன் வீரியம் மனதில் உறுத்தும். தெய்வானை ஆறடி அளவுக்கு உயரமும் வெண்ணிறமும் திடமான உடலும் கொண்டவர். அவரது மகள் இறந்த சமயங்களில் எல்லாம் நன்றாகவே இருந்திருக்கிறார். கடைசி ஆறு மாதத்தில் நடப்பதை விட்டு தவழ்ந்தப்படியே வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். சாவதற்கு ஒரு வாரம் முன்பு தான் படுக்கையில் விழுந்திருக்கிறார். இறுதி மூன்று நாளில் நினைவு மாறாட்டம். அதில் தான் அந்த சம்பவம். அந்த துயரம் ஆழத்தில் புதைந்த நஞ்சென்று அவரை தின்றிருக்கிறது ! மாலதிகள் மறைவதில்லை.
அன்புடன்
சக்திவேல்
*
அன்புள்ள சக்திவேல்
உங்கள் குறிப்புகள் வழியாக சென்று பார்த்தபோது ஒன்று தெரிந்தது திண்ணை இணையதளம் நம்பமுடியாத ஓர் அசட்டுத்தனத்தைச் செய்துள்ளது. அந்த இணைப்புகள் எவையும் செல்லுபடியாவதில்லை. தொடுப்பு மாற்றப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான இணைப்புகள் பொருளிழந்துவிட்டன. அதை நடத்துபவர்கள் கணினி நிபுணர்கள். ஏன் அதைச் செய்தனர்? அவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிகிறது, அறிவியக்கம் பற்றிய அறிதலே இல்லை.
இதேதான் ஆர்கைவ் இணையதளம், இணையநூலகம் போன்றவற்றிலும் நடக்கிறது. ஏதாவது ஒரு தொழில்நுட்ப நிபுணர்வருவார். ஒரு சின்ன வசதியை சேர்ப்பார், அல்லது ஒரு சிறு பிழையைச் சரிசெய்வார். பல்லாயிரம் பல்லாயிரம் இணைப்புகள் இல்லாமலாகிவிடும். சுட்டிகள் வழியாக அவற்றை அணுகவே முடியாது. அந்த தொடுப்புகள் மிகப்பெரிய செல்வம். ஆனால் தொழில்நுட்பர்களுக்கு அது புரியவே புரியாது.
அடிப்படை அறிவியக்கப்புரிதலை நாம் அடைய இன்னும் இருநூறு ஆண்டுகளாவது ஆகும்
ஜெ