இந்து மதம், இந்திய தேசியம்

இந்து மதம் என ஒன்று உண்டா? – 1

இந்து மதம் என ஒன்று உண்டா? – 2

இந்து மதம் என ஒன்று உண்டா? -3

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களின் “இந்து மதம் என ஒன்று உண்டா?” பதிவை வாசித்தேன்.

இரண்டுவகை மதங்கள்

1) இயற்கைமதங்கள் : இயற்கையாக வரலாற்றுப்போக்கில் திரண்டு வந்த மதங்கள்

2) தீர்க்கதரிசன மதங்கள் : ஏதேனும் தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளிடமிருந்து தோன்றிய மதங்கள்.

உங்கள் பதிவு, மதங்கள் குறித்த தெளிவான விளக்கம் எனக்கு கொடுத்தது.

இந்து மதம் குரு வழிபாட்டையும் ஏற்று கொண்டிருக்கிறது. ஆகையால் ஒரு இந்து தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளையும் ஏற்று கொள்ள தடை இல்லை என்று நினைக்கிறன். இது சரியா ?

எளிய இந்து மக்கள், அவ்வாறு ஏற்று கொண்டு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும், நாகூர் தர்காவிற்கும் சென்று வருகின்றனர்.

மதம் (religion) குறித்து உண்மையான புரிதல் இல்லாமல் அரசியல் ஒன்று திரட்டலுக்காக மற்ற மதத்தினர் மீது வன்மம் வளர்ப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

’ஐரோப்பியர் சொல்லும் religion என்பது நவீனக்கருத்து’ என்கிறீர்கள்.

மதம் (religion) போலவே இந்தியாவில் ஐரோப்பியர் சொன்ன தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறேன். ஐரோப்பியர்களே தற்போது தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) விட்டு ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர்ந்து விட்டனர். அது போல வருங்காலத்தில் ஒரு சர்வதேச ஒன்றியம் உருவாகலாம்.

தயவு செய்து தாங்கள் தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

மிக்க நன்றி

அன்புடன்

சந்தானம்

***

அன்புள்ள சந்தானம்,

இக்கேள்விகளுக்கான பதில்கலையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விரிவாகச் சொல்லியிருப்பேன் என நினைக்கிறேன். ஆயினும் இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக மீண்டும் சொல்கிறேன்.

இந்துமதத்தின் இரண்டு அம்சங்கள் பிற தரிசனங்களையும், பிற வழிபாட்டு முறைகளையும் ஏற்க உதவும் அடிப்படைகளாக உள்ளன. ஒன்று, பிரம்மம் என்னும் தத்துவ வடிவமான தெய்வ உருவகம். இரண்டு குருவழிபாடு.

பிரம்மம் என்னும் உருவற்ற, விளக்கத்த்திற்கெல்லாம் அப்பாற்பட்ட, எந்த வகையிலும் வகுத்துரைக்க முடியாத ஒரு கருத்துருவ தெய்வமே இந்து மரபின் மையம். அது இப்பிரபஞ்சமாக ஆகி நிற்பது, இப்பிரபஞ்சத்தின் முதல்வடிவமாக நிலைகொள்வது, இப்பிரபஞ்சத்தின் சாரமாகவும் இருப்பது. அது எந்த மதத்திற்கும், எந்த ஞானிக்கும், எந்த நிலத்திற்கும், எந்த சமூகத்திற்கும் உரிமையானது அல்ல. எல்லா ஞானியரும் பிரபஞ்ச சாரமாக உணர்வது அதையே. எல்லா சாமானியரும் ஏதேனும் ஒரு கணத்திலேனும் அதை உணர்ந்திருப்பார்கள்.

ஆகவே, எல்லாவகையான பிரபஞ்ச சாரம் பற்றிய தரிசனங்களும் பிரம்மத்தை உணர்வதுதான். எல்லா தெய்வங்களும் பிரம்மத்தின் வடிவங்களே. ஆறுகள் எல்லாமே கடலில் சென்றே சேரவேண்டும் என்பதைப்போல எல்லா அறிதல்களும் அதைப்பற்றிய அறிதல்களே என சாந்தோக்ய உபநிடதம் சொல்கிறது.

ஆகவே ஓர் இந்துவுக்கு கிறிஸ்து, அல்லா என எந்த தெய்வத்தை ஏற்பதும் பிழையல்ல. எதற்கும் தடையோ விலக்கோ இல்லை. அப்படிச் சொல்ல இங்கே எந்த அதிகார மேலிடமும் இல்லை. இந்து என உணர்பவர் சென்றகாலத்தில் பௌத்த, சமண ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான நூலாதாரங்கள் உள்ளன. (சிலப்பதிகாரம் உட்பட)

இந்து என உணர்பவர் மாதாகோயிலுக்குச் செல்லலாம். மசூதிக்கும் செல்லலாம். நான் செல்வதுண்டு, வழிபடுவதும் உண்டு. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக. நாராயண குருகுலம், ராமகிருஷ்ண மடம் போன்ற வேதாந்த குருகுலங்களில் எல்லா மதப்பிரார்த்தனைகளும் ஒலிப்பதுண்டு.

இந்து மதம் என நாம் இன்று அழைக்கும் இந்த மரபுக்குள் பல சம்பிரதாயங்கள் உண்டு. வைணவர்களின் ஸ்ரீசம்பிரதாயம் போல. அவர்கள் அந்தச் சம்பிரதாயத்திற்குரிய நெறிகளை, விலக்குகளை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆசாரியார்கள் எனப்படும் தலைமைக்குருநாதர்களும், நிர்வாக அமைப்புகளும் உள்ளன. அவர்களின் வழி இதற்குள் தனி. ஆனால் அப்படி ஏதேனும் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இந்துக்களில் அரைசதவீதம்பேர்கூட இருக்க வாய்ப்பில்லை.

எல்லா மெய்ஞானமும் பிரம்மஞானமே என்றால் எல்லா ஞானியரும் மெய்யாசிரியர்களே. ஆகவே குருவழிபாடு இந்துக்களுக்கு முக்கியமானது. கபீரும் ஷிர்டி சாய்பாபாவும் குருதெய்வங்களாக ஆனது அப்படித்தான். ஆகவே ஓர் இந்து சூஃபிகளை வணங்கலாம். நான் சவேரியார் ஆலயத்திற்கும் செல்வதுண்டு. சூஃபி தர்காக்களுக்கும் செல்வதுண்டு.

இவற்றை கட்டுப்படுத்தவும், தண்டிக்கவும் இன்றுவரை எந்த தலைமையமைப்பும் இல்லை. அவ்வாறு ஒன்றை உருவாக்கி கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பிக்கையில் இந்துமதம் அழியத் தொடங்கும். நாம் – பிறர் என்னும் பேதம் இந்துக்களுக்கு சமூகவாழ்க்கையில் இருக்கலாம், அது மனித சுபாவம், அதை தவிர்ப்பது கடினம். ஆனால் அதைக் கடக்காமல் இந்துமெய்மையை இந்துக்கள் சென்றடைய முடியாது.

நாம் – பிறர் என்னும் இரட்டைநிலையை, அதன் விளைவான காழ்ப்பை உருவாக்கிக் கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் இந்துக்களின் ஆன்மிகப்பயணத்திற்கு தடையானவர்கள். இந்துக்கள் இன்று கடந்தேயாகவேண்டிய ஆன்மிகப்பெருந்தடை இந்த பிளவரசியலும் காழ்ப்புகளும்தான்.

ஆனால் இன்று இதை இந்து அரசியல்நோக்கிச் செல்லும் பெரும்பான்மையிடமும் சொல்லமுடியாது. மறுபக்கம் இந்துமெய்மையை ஒட்டுமொத்தமாகத் துறக்காதவர்கள் அனைவருமே இந்துத்துவர்கள் என்று கூச்சலிடும் இங்குள்ள அரைவேக்காட்டு முற்போக்காளர்களிடமும்

சொல்லமுடியாது. இந்துக்களை இந்துத்துவர்களாக ஆக்க பெரும்பாடுபடுபவர்கள் இரண்டாம் வகையினரே.

என் குரல் சிலரையே சென்றடைகிறது. இங்குள்ள இருமுனைப்பட்ட காழ்ப்புகளால் அது திரிக்கப்படுகிறது. ஆயினும் இங்கே ஒருவன் இதை நா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தான் என்றாவது இருக்கட்டும் என்றே இதை பதிவுசெய்கிறேன்.

*

மதம் என்பதைப் போலவே நவீனத் தேசம் என்னும் கருத்தும் ஐரோப்பிய வருகையே. ஆனால் ஐரோப்பியக் கருத்துக்களை வடிகட்டி விலக்கிவிட்டு நாம் இன்று சிந்திக்க முடியாது. நாம் இன்று புழங்கும் கருத்துக்களில் கணிசமானவை ஐரோப்பா நமக்களித்தவை.

இக்கருத்துக்களை நாம் பயன்படுத்தும்போது இரண்டு விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும்

அ. அக்கருத்தின் ஐரோப்பிய அர்த்தத்தில் அக்கருத்து உருவாவதற்கு முன்பிருருந்த சிந்தனைகளையும், வரலாற்றையும் வகுத்துவிடக்கூடாது. உதாரணமாக மதம் என்னும் சொல் மேலைநாட்டுப்பொருளில் religion என்ற வகையில் இங்கே வந்து முந்நூறாண்டுகளே ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே எவையெல்லாம் மதம் என்று சொல்லப்பட்டனவோ அவற்றை எல்லாம் இன்றையபொருளில் religion என்று அர்த்தம்கொள்வது பிழையானது. அந்த எச்சரிக்கை நமக்கு வேண்டும்.

ஆ. ஒர் ஐரோப்பியக் கருத்தை நாம் கையாளும்போது அதன் ஐரோப்பிய வரலாற்றுப்பின்னணியை, தத்துவப்பின்னணியை விலக்கி இந்தியச் சூழலில் அது தனக்கென உருவாக்கிக்கொண்ட அர்த்தங்களுடன் கையாளலாம். அந்த பிரக்ஞை இருந்தால்போதுமானது. மதம், தேசம், தெய்வம், தனிமனிதன் என நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான கலைச்சொற்களுக்கான அர்த்தங்களை இப்படித்தான் நாம் வகுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த அடிப்படையில் மதம் என்னும் சொல்லை நாம் இன்று பயன்படுத்தலாம். இந்து மதம் என்று சொல்லலாம். ஆனால் ஐரோப்பியப்பொருளில் அல்ல. ஐரோப்பியப்பொருளில் மதம் என்பது

அ. தெளிவாக வரையறை செய்யப்பட்ட தெய்வங்கள்

ஆ. மையப்படுத்தப்பட்ட தத்துவம்

இ. மூலநூல், அல்லது மூலநூல் தொகை

ஈ. மத அதிகாரம் கொண்ட அமைப்பு

உ. தெளிவாக வரையறை செய்யப்பட்ட வழிபாட்டுமுறைகள் மற்றும் ஆசாரங்கள்

ஆகியவை கொண்டதாக இருக்கும். அந்த நான்குமே இந்துமதம் என நாம் சொல்லும் அமைப்புக்கு இல்லை. நாம் இன்று இது மதம் என்று சொல்வது நேற்றுவரை தர்மம் என்று சொல்லப்பட்ட ஒரு மெய்ஞானப் பரப்பு. அதற்குள் பல மெய்ஞான வழிகள் உண்டு என்னும் புரிதல் நமக்கிருக்கவேண்டும்.

அதேதான் தேசம் என்னும் கருத்துருவிற்கும். நான் ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டுமுதல் உருவாக்கி வந்த ‘பண்பாட்டு அடிப்படையிலான தேசியம்’ என்னும் கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதை முப்பதாண்டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். பண்பாடு என்னும்போது மதம், மொழி, இனம் ஆகிய அனைத்தையும்தான் குறிப்பிடுகிறேன்.

பண்பாட்டுத் தேசியம் ஒரு குறிப்பிட்ட மக்களை ஒரு நிலத்தின்மேல் அறுதி உரிமை கொண்டவர்கள் ஆக்குகிறது. எஞ்சியவர்களை சிறுபான்மையினர் ஆக்குகிறது. எந்நிலையிலும் நிலமற்றவர்களாக அவர்களை மாற்றுகிறது. அதுவே ஃபாஸிசம்.

அதாவது நான் தேசம் என்பது ‘உயிருள்ள’ ஓர் அமைப்பு இயல்பான ஓர் அமைப்பு (organic) என நம்பவில்லை. இந்தியா ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்றோ தமிழகம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்றோ நினைக்கவில்லை. தேசம் என்பது ஒரு நிலப்பகுதியின் மக்கள் ஒரே நிர்வாகத்தின்கீழ் இருக்கலாம் என அவர்களே முடிவெடுத்து உருவாக்கிக்கொள்ளும் ஓர் அமைப்பு மட்டுமே.

அவ்வாறு அவர்கள் முடிவெடுக்க காரணமாக அமைவது நிலப்பகுதியின் வாய்ப்புகளாக இருக்கலாம். வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். பொருளியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த தேச அமைப்பின் கீழ் அதன் ஒவ்வொரு கூறும் வளர்ச்சிபெறவேண்டும். எதுவும் அழுத்தி அழிக்கப்படலாகாது.

இந்தியா ஏன் ஒன்றாக இருக்கவேண்டும்? அதற்கான வரலாற்றுக்காரணம் ஒன்றை பலகாலமாகச் சொல்லிவருகிறேன். இந்த நாடு வணிகத்தாலும், போராலும் நிகழ்ந்த மக்கள்பெயர்வுகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகக் கலக்கப்பட்டுவிட்டது. இங்கே எல்லா நிலப்பகுதிகளிலும் எல்லாரும் வாழ்கிறார்கள். மொழி, இன, மத அடிப்படையிலான மக்கள்திரள் கலந்து வாழ்கிறது இங்கே.

ஆகவே இந்த தேசம் ஒன்றகாவே திகழமுடியும். இதில் எந்தப் பிரிவினைவாதமும் பேரழிவையே உருவாக்கும். அதற்குச் சமகாலத்தில் பெரிய சான்று கஷ்மீரும் வடகிழக்கும்தான். தனித்தேசியம் பேசுபவர்கள் அனைவருமே குறுகிய மொழித்தேசியமோ, இனத்தேசியமோதான் கொண்டிருக்கிறார்கள். அவை எல்லாமே முதிரா ஃபாசிசங்கள்தான்.

ஆனால், இந்தியதேசம் என்பது அதுவே ஒரு மூர்க்கமான ஃபாஸிச அமைப்பாக ஆகி, அதன் உட்கூறுகளை எல்லாம் சிதைக்கும்தன்மை கொண்டிருக்கும் என்றால் இந்தியதேசியம் என்பதை மறுப்பதும் இயல்பானது என்றே கருதுவேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகு.ப.ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைஒரிசா, பெண்களின் பயணம். ஓர் அறிவிப்பு