சிவசங்கரி

சிவசங்கரி ஒரு காலகட்டத்தில் தமிழில் கல்விக்கும் வேலைக்கும் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பும் பெண்களின் ஆதர்ச பிம்பமாக இருந்தார். தமிழ்ச்சூழல் உகக்கும்படி, குடும்பத்தைவிட்டு விலகாத ஒரு பெண்ணியத்தை முன்வைத்தார். உடலின் எல்லையை மீறாத ஒரு பாலியல் விடுதலையை பேசினார். அவை தமிழ்ச்சூழலின் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கின. அன்றைய பெண்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளித்தன. சிவசங்கரியை நம்பி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட நடுவயதுப் பெண்கள் பலரை இன்று சந்திக்கிறேன்.

அன்று வணிக எழுத்துக்கு எதிராக இலக்கியத்தை முன்வைத்தபோது சிவசங்கரி போன்றவர்கள் இலக்கியவாதிகளால் விமர்சிக்கப்பட்டனர். இன்று எழுத்தாளர்கள் பொதுச்சிந்தனையை உருவாக்கிய காலகட்டம் ஒரு பொற்காலம் என தோன்றத் தொடங்கிவிட்டது. வணிக ஊடகங்களில் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர்கள் என்றாலும் சிவசங்கரி போன்றவர்கள் கல்வி கற்றவர்கள், பண்பாட்டை அறிந்தவர்கள், முற்போக்கானவர்கள்.

இன்று சமூக ஊடகங்களைக் கைப்பற்றிக்கொண்ட அறிவிலிகளும் அரசியல்பிராணிகளும்  சமூகச்சூழலின் சிந்தனையை வடிவமைக்கிறார்கள். அவர்கள் பேசுவதுதான் பெரும்பான்மையினருக்கு புரிகிறது, பிடித்திருக்கிறது. தொடுசிகிழ்ச்சை முதலிய மோசடிகள். இலுமினாட்டி சதி போன்ற அசட்டுத்தனங்கள். வரலாற்றிலும் பண்பாட்டிலும் அடிப்படை அறிவே இல்லாதவர்கள் கொட்டும் ஆய்வுக்குப்பைகள் ஆகியவை எங்கும் பரவியிருக்கின்றன. நம் வார இதழ்கள் அவற்றின் மிகமிகக் கீழெல்லையில்கூட அவற்றை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.

இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது.

சிவசங்கரி

ஸ்ரீவேணுகோபாலன்
சிவசங்கரி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநீலி மின்னிதழ்
அடுத்த கட்டுரைதூக்கம், கவனம்