கு.அழகிரிசாமி, ஆவணப்படம்

கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி

தமிழின் முன்னோடி எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு துவங்குவதன் நல்நீட்சியாக, அவரைப் பற்றிய ஆவணப்படம் ‘கொலாக்கால் திரிகை’ வெளியாகியுள்ளது. அவரது மகன் சாரங்கராஜன் அவர்கள் நீண்டகாலம் இதற்கென உழைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், அசோகமித்ரன், பூமணி, ஆ.மதாவன், தி.க.சிவசங்கரன், ஜெயமோகன், கோணங்கி, பிரபஞ்சன், நீல. பத்மநாபன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, ஞாநி, ம.ரா.போ.குருசாமி, திருப்பூர் கிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், உதய்சங்கர் மற்றும் வெளி ராங்கராஜன், ந.முத்துசாமி உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் அனுபவங்களும் மதிப்பீடுகளும் இப்படத்தில் பதிவாகியுள்ளன.

கு.அழகிரிசாமி அவர்களைப்பற்றிய தமிழ் விக்கி பதிவில் “அழகிரிசாமியின் குடும்பத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருக்கவில்லை. இளமையிலேயே தொழில் பயிற்றுவிப்பார்கள். ஆனால் சிறுவனாக இருந்தபோது வீட்டுமுன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தில் ஏறிவிளையாடியபோது அது சரிந்து விழுந்து அழகிரிசாமியின் கை ஒடிந்தது. அதற்கு சரியான கட்டு போடாமையால் ஒரு கை செயலிழந்தது. ஆகவே அவரால் தொழில்செய்ய முடியாது என பள்ளிக்கு அனுப்பினார்கள். பல்வேறு உதவிகளால் பள்ளி இறுதி வரை அழகிரிசாமி படித்தார். இடைச்செவல் ஊரில் முதலில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தவர் அவரே.” என்னும் செய்தியை முதன்முதலாக அறிகையில் என்னுள் எழுந்த அதே நெகிழ்வை இந்த ஆவணப்படம் அளிக்கிறது.

சமகால எழுத்தாளுமைகள் பலருடைய நினைவுகள் வழியாக கு.அழகிரிசாமி அவர்களைப்பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. காலஞ்சென்ற நிறைய எழுத்தாளர்களின் முகங்களும், குரல்களும் இணைந்து இப்படைப்பை ஆழப்படுத்தியுள்ளன. தமிழ்ச் சிறுகதைகளின் பெருவாசலைத் திறந்துவைத்த முன்னோடி ஆளுமையாக எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களை அகத்தில் இன்னும் அணுக்கமாகத் துலங்கச் செய்கிறது இந்த ஆவணப்படம். ஜெயமோகன் அவர்கள் ‘எளிமையின் மகத்துவம்’ என்னும் அடைமொழிச் சுட்டுதலை கு.அழகிரிசாமியின் படைப்புகளுக்கு வழங்குகிறார்; ‘எளிமையின் ஆழம்’ என்கிறார் கோணங்கி.

எளிய மனிதர்களின் வாழ்வுப்புலத்தை, அவர்கள் வாழும் நிலவெளியின் வெம்மையோடும் உள்ளீரத்தோடும் இலக்கியத்தரத்துடன் தமிழில் கதைப்படுத்தியதற்காக கு.அழகிரிசாமி அவர்களுக்கு இச்சமூகம் அளிக்கப்பட வேண்டியது நிச்சயம் ஓர் ஆசிரியபீடம்தான். தன்னளவில் ஓர் இசைஞராகவும், இலக்கியத்தில் ஓர் கதைசொல்லியாகவும் அவரது வாழ்வு இரட்டைச்சக்கர தடங்களாலானது. தமிழின் மூத்த எழுத்தாளர் குறித்து இத்தகைய ஆவணப்படம் வெளியாவது இலக்கிய மனங்களுக்கு மகிழ்வளிக்கும் நல்நிகழ்கை.

ஆவணப்பட இணைப்பு:

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைஓரு நல்நிகழ்வு- ராஜு
அடுத்த கட்டுரைபுழுக்கச்சோறு, தூவக்காளி, காந்தாரா -கடிதங்கள்