உரையாடும் காந்தி வாங்க
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சில நாட்களின் நினைவுகளை மனது எச்சிறு பிசிறுமின்றி துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ளும். அவ்வகையில், ‘இன்றைய காந்தி‘ கட்டுரைகள் தொடர்ந்து உங்களது இணையதளத்தில் வெளியாகியதும்; அவை தொகுக்கப்பட்டு உரிய தலைப்புகளுடன் நூலாகத் உருமாற்றம் பெற்றதுமான காலகட்டங்கள் எனக்கு நினைவிலுண்டு. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் காந்தியின் மீது என் தனிப்பட்ட உள்ளுணர்வு சார்ந்த ஆத்மார்த்தமான நேசிப்பு மட்டுந்தான் என்னுள்ளிருந்தது.
காந்தியை எதிர்மறையாக விமர்சிக்கும் தரப்புகளிடமிருந்து எழுகிற அவதூறுகளுக்கும், வரலாற்றுக் கேள்விகளுக்கும் எத்தகைய தெளிந்த பதில்களையும் முன்வைக்க முடியாமல் ஒருவகை அகச்சோர்வு உண்டாகியிருந்து காலம் அது. அந்நிலையில், ‘இன்றைய காந்தி‘ கட்டுரைகள் காந்தி எனும் வரலாற்று நிகழ்வின் வாழ்வியல் பின்புலத்தை, ஒவ்வொரு முடிவுகளின் பின்னார்ந்த தரவுகளை அகத்துக்கு அணுக்கமானதொரு மொழிநடையில் எனக்குணர்த்தியது. தேடித்தேடி கடைசியில் ஓர் உண்மையான பதிலைக் கண்டடைந்த நிறைவை அப்புத்தகம் எனக்கு வழங்கியது.
‘இன்றைய காந்தி‘ நூலின் கட்டுரைகளை வாசிக்கையில், பல நேரங்களில் வாசிப்பை நிறுத்திவிட்டு ஒருவித நடுக்கவுணர்வில் நான் தத்தளித்திருக்கிறேன். ஒரு மனிதன் எத்தனைச் சூழ்நிலைச் சவால்களைக் கடந்து எவ்வித அகந்தையுமின்றி ஆத்மப்பாதையின் சிற்றொளியோடு இத்தேசத்தின் அத்தனை உயிருக்காகவும் யோசித்திருக்க முடியும் என்பதே என்னை வியப்பில் ஆழ்த்தியது. வெறுமனே தரவுக்குறிப்புகளாக இல்லாமல் காந்தியின் அகம் அதனை எவ்வாறு அணுகியது என்கிற சூழ்நிலையையும் அதில் நீங்கள் விளக்கியிருந்தீர்கள்.
சமகால இளைய தலைமுறையினர் காந்தியை புரிந்துகொள்வதற்கும், இயன்றவர்கள் அவரின் தத்துவத்தைப் பின்தொடர்வதற்கும், தர்க்க வினாக்களைக் கடந்து ஆழ்ந்த ஏற்பை அடைவதற்கும் பெருங்காரணமாக உங்களது சொல் துணையமைந்தது. வசைகளின் குவியல்களில் காந்தியின் வரலாற்றுப் பங்களிப்பு அமிழ்ந்துவிடமால் உங்கள் கட்டுரைகள் அவரைத் துல்லியமாக நிலைநிறுத்தம் செய்தது எனலாம்.
அத்தகையக் கட்டுரைகளின் தொடர்ச்சியை அச்சில் நீட்சிக்கவே, ‘உரையாடும் காந்தி‘ நூலை தன்னறம் பதிப்பகம் வழியாக வெளியிட்டோம். இன்றைய காந்தி நூலுக்கு அடுத்தபடியாக உரையாடும் காந்தி நூலும் நிறைய கல்லூரி மாணவர்களின் காந்திசார்ந்த உரையாடல்களுக்கும் ஏற்புக்கும் காரணமாக அமைவதைக் கண்கூடாகக் காண்கிறோம். மாதத்திற்கு ஓரிரு கடிதங்களாவது காந்தியம் சார்ந்து இன்றளவும் தொடர்ச்சியாக உங்கள் தளத்தில் வெளியாகிறது. அறுபடுதலோ விடுபடலோ இல்லாத இந்த தொடர்ச்சிதான் இளையோர்களுக்கு காந்தியை மீளறிமுகம் செய்கிறது.
கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன் தம்பதி குறித்து நீங்கள் எழுதியிருந்த ‘இரு காந்தியர்கள்‘ கட்டுரையும் அதில் வெளிப்படுத்தியிருந்த ஆதங்கமுமே ‘சுதந்திரத்தின் நிறம்‘ நூலாக அதை நாங்கள் பதிப்பிக்கும் எண்ணத்தை உருவாக்கியது. அந்நூலின் உருவாக்கத்தையும், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த அதன் வெளியீட்டு விழாவில் அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனோடு நீங்களும் பங்கேற்று ஆற்றிய உரையும் எந்நாளும் நெஞ்சில் எஞ்சுபவை.
இன்று (20.10.2022) காலையிலிருந்து அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுடன் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் உடனிருக்கிறேன். ஏதோவொருவகையில், இந்நாளில் ஐந்தாறு முறையாவது உங்களைக் குறித்தும் உங்கள் படைப்புகள் குறித்தும் நீளுரையாடல் நிகழ்ந்தது. ‘சுதந்திரத்தின் நிறம்‘ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் நட்டமரம் அத்தனைப் பச்சையங்களோடு துளிர்த்து வளர்ந்தெழுந்து நிற்கிறது. அண்மையில், காந்தியின் பிறந்தநாளன்று எங்களுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிரவே இக்கடிதம்.
கடந்த அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று நண்பர்கள் மதுரையில் குழுமியிருந்தோம். அதிகாலையில் காந்தி அருங்காட்சியகம் செல்வதென முடிவுசெய்து அங்குசென்றோம். பொழுதுபுலர்ந்த தருணத்திலிருந்தே வயோதிகர்கள், அரசியல் தலைவர்கள், அரசதிகாரிகள், காந்தியவாதிகள் என எல்லாதரப்பு மக்களும் அங்குவந்து சிறுசிறு குழுக்களாக இணைந்திருந்தனர். அன்று காலை 8.30 மணியளவில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் அவர்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமத்துப் பள்ளிக்குழந்தைகளை காந்தி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்திருந்தார். நாடகம் மற்றும் கதைகள் வழியாகக் குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் மாற்றுச் சிந்தனையாளர் அவர்.
பறையிசைத்து வந்த அந்த குழந்தைகள் கூட்டம், காந்தி சிலைக்கு மாலையணிவித்து தங்கள் மரியாதையைத் செலுத்தினர். அக்கட்சியை நேரில் காண்பதற்கே மிகுந்த உயிர்ப்போடு இருந்தது. காரணம், காந்தி ஜெயந்தி அன்று குழந்தைகள் பறையிசைத்து வந்து அவரது சிலைக்கு மாலையிடும் காட்சியை இதுவரைக் கண்டதில்லை. சில மாதங்கள் முன்பு, ஆசிரியர் சரவணன் அவர்கள் முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். காந்தி சுடப்பட்டு இறந்தபோது அணிந்திருந்த, இரத்தக்கறை படிந்த வெண்துணி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிட்டு ஒரு பள்ளிச்சிறுமி தேம்பியழுத அனுபவத்தை அவர் தனது பதிவில் எழுதியிருந்தார்.
ஒரு ஆசிரியமனம், தனக்குக் கிடைக்கக்கூடிய காலத்தருணங்களை வாய்ப்பாக மாற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு காந்தியை அண்மைப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன. எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒருமுறை, இதே மதுரையில் ஒரு பள்ளிவளாகத்தில் தங்கியிருந்தபொழுது, அப்பள்ளிக்கூட தலைமையாசிரியர் காந்தி குறித்த எதிர்மறையான கருத்தை ஒரு பாடல் வடிவில் மாணவர்களுக்குச் சொல்லித்தருவதைக் கேட்டு அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்திருக்கிறார். இன்று, ஆசிரியர் சரவணனின் உள்ளம் குழந்தைகளுக்குள் நிகழ்த்தும் நல்லதிர்வுகள் நம்பிக்கைக்குரிய நகர்வென்றே எண்ணவைக்கிறது.
இந்நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருந்த அதே வளாகத்தில், இடதுசாரித் தோழமையினர் சிலர்கூடி ஒரு கூட்டம் நிகழ்த்தினர். அங்கு தோழர் அருணன் அவர்கள் உரையாற்றினார். எல்லாதரப்பு சித்தாந்த மக்களும் இச்சமகாலத்தில் காந்தியைப் புரிந்துகொள்ள அகம்திறப்பதும், தவறான அடிப்படைவாதிகளால் காந்தி அபகரிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதற்காக ஒன்றுகூடுவதும் குறிப்பிடத்தகுந்த வரலாற்று அசைவுகள் எனலாம். ஓர் ஒப்பற்ற நாளாக இவ்வாண்டின் காந்தி ஜெயந்தி நினைவில் எஞ்சிவிட்டது. காலையிலிருந்து மாலைவரை எத்தனையோ இசுலாமியப் பெண்கள் காந்தி அருங்காட்சியகத்திற்குள் வந்துசெல்வதை கண்ணுற்றிருந்தோம். இந்த தேசம் அதன் உள்நாளமாக இன்றளவும் ஒற்றுமையை மட்டும்தான் தக்கவைத்திருக்கிறது.
நிகழ்வுகளனைத்தும் முடிந்து புறப்புடுகையில், காந்தி வேடமிட்ட ஒரு மனிதர் நின்றிருந்தார். சுற்றியிருந்த மனிதர்களில் பலர் அவர் காலில் விருந்தனர்; சிலர் அவர் கைகளைப் பிடித்து கண்ணீர் சிந்தினர்; காந்தியை காண்கையில் வருகிற நெகிழ்ச்சியை அங்கு அவர்கள் வெளிப்படுத்தினர். அண்மையில் ஒரு நேர்காணல் காணொளியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள், “எனது கதை ஒன்று மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ஆகவே, கதையில் வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுநடிக்கும் நாயகனை முதல்நாள் சந்தித்து அவருடன் அமர்ந்து இயல்பாக உரையாடினேன்.
ஆனால், மூன்று நாட்கள் கழித்து கதாபாத்திரத்தின் தன்மையை முழுதும் உள்வாங்கி, அதற்குரிய வேடமிட்டு அமர்ந்திருந்த அந்த நடிகரின் முன்னால் என்னால் அமர இயலவில்லை. காரணம், அந்தக் கதாபாத்திரம் என் தந்தை. அந்தக் கலைஞர் என் தந்தையின் உடல்மொழியாகவே வெளிப்படத் துவங்கிவிட்டார்“. காந்தி வேடமிட்ட யாரைக் கண்டாலும் நம் அகம் உண்மையான காந்தியையே சென்றடைகிறது.
காந்தயின் இரத்தக்கறை படிந்த ஆடையை இன்னொரு முறை பார்த்துவர எண்ணம்தோன்றி மீண்டும் காந்தி அருங்காட்சியகத்தின் முதல்தளத்திற்குச் சென்றோம். அங்கு அந்தக் கண்ணாடிப் பேழையைத் தொட்டு, வெகுநேரம் உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள் ஒரு பள்ளிச்சிறுமி. நிலைக்குத்தி நின்றிருந்த அவள் பார்வை, காந்தியக் காலத்திற்குள் அவளுடைய அகம் சென்றிருப்பதை உணர்த்தியது.
மேலும், புதுக்கோட்டையிலிருந்து ஐம்பதுக்கும் அதிகமான முதியவர்கள் வந்து காந்தியின் அஸ்தி பீடத்தை வணங்கியமர்ந்து தங்களுடைய அறச்செயல்பாடுகள் சார்ந்த செயற்திட்டங்களுக்கு உறுதிமொழி ஏற்றார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காந்தியால் ஓர் ஆத்மத்தொடர்பை வழங்கிவிட முடிகிறது, இறப்படைந்த பின்னும்.
இந்த ஒளிப்படங்கள் அனைத்தும் ஒளிப்படக்கலைஞர் மோகன் தனிஷ்க் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டவை. நெகிழ்வும் நிறைவும் தருகிற இவைகளை கண்களுக்கு அண்மைப்படுத்திய படைப்புமனதிற்கு அறங்கூர்ந்த நன்றிகள்!
இத்தனை வருடங்கள் கழித்து ஓர் இந்தியா ஆன்மாவின் கதை நம்மை கரங்கூப்பச் செய்கிறதென்றால் எப்பேர்ப்பட்ட இறைநிகழ்கை அப்பிறப்பு!செயலையே ஊழ்கமென சிந்தைசெலுத்தி வாழ்ந்திட்ட நம் தந்தையின் எஞ்சிய சுவடுகளால், இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளாயினும் இத்தேசம் அறத்தொடு நிமிர்ந்தெழும்! ஆம், அவ்வாறே ஆகும்!
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்