நாவலெனும் கலைவடிவம்

நாவல் கோட்பாடு வாங்க 

நாவல் கோட்பாடு என்ற இந்நூல் எழுதப்பட்ட பின்னணியை பெரும்பாலானவர்கள் இன்று அறிந்திருப்பார்கள். 1991-ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு வழங்கப்பட்டபோது அந்த மேடையில் நாவல் என்னும் வடிவம் பற்றிய என்னுடைய கருத்தைக் கூறினேன். நாவல் என்பது அடிப்படையான தரிசனம் அல்லது எதிர்தரிசனம் ஒன்றை  முன்வைக்கும், என்றும் வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் தொட்டு அதை விவாதிக்கும் என்றும். அதற்குரிய  தொகுப்பு தன்மையும் உள்விரிவும் அதற்கு இருக்கும் என்பதே  எனது பார்வை. என் உள்ளத்தில் இருந்தது  ‘great novel’ என்று ஐரோப்பிய விமர்சன மரபில் சொல்லப்படும் வகைமை.  

அன்று  தமிழில் எழுதப்பட்டுக்கொண்டிருந்தவை நவீனத்துவ மரபைச் சார்ந்த சிறிய நாவல்கள் அவற்றைக் குறுநாவல்கள் என்றும், வணிக இதழில் எழுதப்பட்ட தொடர்கதைகளை நீள்கதைகள் என்றும் நான் வரையறை செய்தேன். அந்த விமர்சனம் கடுமையான விவாதத்துக்கு உள்ளாகியது. தமிழில் அன்று எழுதிக்கொண்டிருந்த  பல எழுத்தாளர்களும் விமர்சகர்களும் தீவிரமாக அக்கருத்துக்கு எதிர்வினையாற்றினார்கள். வழக்கம் போல தமிழில் நாவலே இல்லை என்று நான் சொல்வதாக அது எடுத்துக்கொள்ளப்பட்டது. சிலர் அடுத்த கட்டத்துக்குச் சென்று தமிழில் இலக்கியமே இல்லை என்று நான் சொல்வதாக விளங்கிக்கொண்டனர்.

ஆகவே, என் கருத்துக்குப் பதிலாக  ‘மௌனி நல்ல படைப்பாளி அல்லவா? புதுமைப்பித்தனை போல எழுத யார் உண்டு? தி.ஜானகிராமனை எப்படி குறை சொல்லப்போயிற்று? சுந்தர ராமசாமியிடம் இலக்கியத்திறன் இல்லையா?’ என்றவகையில் கட்டுரைகள் எழுதித்தள்ளப்பட்டன. நான் மலையாளத்தில்தான் இலக்கியம் இருப்பதாகச் சொன்னேன் என்றும் ஒரு தரப்பு ஆவேசம் கொண்டது. 

ஆகவே என்னுடைய தரப்பைத் தெளிவுபடுத்தும் பொருட்டு நான் ’நாவல்’ என்னும் பேரில் ஒரு நூலை எழுதினேன். அந்நூல் எனது நண்பர் பெங்களூர் மகாலிங்கம் அவர்களால் 1992ல் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பெங்களூர் மகாலிங்கம் தொடக்ககால கணிப்பொறி நிபுணர். தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தவர். அவர் தானே உருவாக்கிய கணினி எழுத்துருவில் அந்நூலை அச்சிட்டு வெளியிட்டார். அக்காலத்தில் வெளிவந்த அழகிய நூல்களில் ஒன்றாக அது இருந்தது. பின்னர் ’நாவல் கோட்பாடு’ என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்யப்பட்டது. 

இந்நூல் உண்மையில் நாவல் சார்ந்த அந்த விவாதத்தை முடித்து வைத்தது என்று சொல்லலாம். நான் சொல்ல வருவதை கிட்டத்தட்ட முழுமையாகவே இந்த நூல் வரையறுத்தது. முந்தைய தலைமுறைப் படைப்பாளிகள் வழக்கம் போல அதைக்கடந்து சென்றாலும்கூட, உருவாகி வந்த அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் மிக ஆழ்ந்த செல்வாக்கை  ’நாவல் கோட்பாடு’ நூல் செலுத்தியது. இந்நூல் எழுதப்பட்ட பிறகு  தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் அனைத்திலுமே  வடிவரீதியான பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதை இலக்கிய வரலாற்றை அறிபவர்கள் கூற முடியும். இந்நூலுக்குப் பின் வெளிவந்த நாவல் மதிப்புரைகளிலேயே இந்நூலின் அளவுகோல்கள் கிட்டத்தட்ட அப்படியே வெளிப்பட்டன.

தமிழில் தொகுப்புத்தன்மையும் மையப்பார்வையும், அல்லது மையஎதிர்ப்புப்பார்வையும்  கொண்டவையும்;  கலைக்களஞ்சியத்தன்மை  கொண்டவையுமா நாவல்கள் அதன்பிறகு தான் வெளிவந்தன. அவ்வகை நாவல்களை புரிந்துகொள்வதற்கான வழிகாட்டலாகவும் இந்நூல் அமைந்தது. அவ்வகை நாவல்களின் பெரிய பட்டியலே இன்று போட முடியும். அவ்வாறு பார்த்தால் தமிழ் இலக்கியத்தில் அழுத்தமான ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆற்றல் மிகுந்த படைப்பென்று இன்று இந்தக்கோட்பாட்டு நூலைச் சொல்வேன். 

மிக இளம் வயதில் நான் எழுதியது ஆகவே என் விமர்சன மொழி எந்த அளவுக்கு உள்ளது என்று இன்று எனக்கு ஐயமாகவே உள்ளது. முழுமையாக அதனுடைய விவாதங்களை முன்வைத்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இதை மீள்எழுத்து செய்யலாம். ஆனால் அந்த மனநிலையைக் கடந்து வந்துவிட்டதனால் அவ்வாறு செய்வது சரியுமல்ல. இது ஒரு வரலாற்று ஆவணமாகவே நிலைகொள்ளட்டும் என்று தோன்றியது. தமிழில் இலக்கிய விவாதத்தின் விளைவாக உருவான இலக்கிய விமர்சன நூல்கள் என்று பாரதி மகாகவியா விவாதத்தின் முடிவில் கு.ப.ராஜகோபாலன் சிட்டி எழுதிய ‘கண்ணனின் கவி’ என்ற நூலையும் இந்நூலையும்தான் குறிப்பிட முடியும் என்று தோன்றுகிறது. 

இந்நூலை முதல் பதிப்பு வெளியிட்ட பெங்களூர் மகாலிங்கம் அவர்களுக்கும் மறுபதிப்புகளை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் இப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஜெ

14.07.2022

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

முந்தைய கட்டுரைகூத்தபிரான்
அடுத்த கட்டுரைஅறிவியல், ரஸல் – கடிதம்