ஒரு நாளின் முகங்கள்

நேற்று ஒரே நாளில் பல சந்திப்புகள். தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்புயை அவர் அலுவலகத்தில் சந்தித்தேன். தினமலர் இதழில் நான் ஒரு தொடர் எழுதக்கூடும். அவருடைய தாத்தாவும் புகழ்பெற்ற நாணயவியலாளருமான கிருஷ்ணமூர்த்தியை 1996-ல் சந்தித்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு உற்சாகமான, வரலாற்றார்வம் கொண்ட இளைஞராக இருந்தார். தினமலரில் பணிபுரிபவரும், பழைய நண்பருமான எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷை சந்தித்தேன்.

இன்னொரு சந்திப்பு ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலையின் தலைவர், வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்  தயாரிப்பாளர். நான் எழுதி அவர் தயாரித்த வெந்து தணிந்தத்து காடு வரும் நவம்பர் 9 அன்று ஐம்பதாவது நாளை கொண்டாடவிருக்கிறது. ஐசரி கணேஷ் வீட்டில் அவருடைய உறவினரும் என் தர்மபுரி வாழ்க்கையில் இலக்கிய நண்பராகவும், இலக்கிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தவருமான ஆர்.சிவக்குமாரைச் சந்தித்தேன்.

ஐசரி கணேஷ்

ஆர்.சிவக்குமார் முதன்மையாக மொழிபெயர்ப்பாளராகவே அறியப்பட்டார். தர்மபுரி கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவருடைய இலக்கிய சகா அன்று தர்மபுரியில் கல்லூரிப்பேராசிரியராக பணியாற்றிய பிரம்மராஜன். மீட்சி இதழிலும் ஆர். சிவக்குமாரின் பங்களிப்பு உண்டு. அவர் அங்கே பணியாற்றுவதைச் சொல்லி என்னை அவரிடம் அறிமுகம் செய்தவர் தர்மபுரிக்கு வந்த கோணங்கி. ‘அழுத்தமான ஆளுடா. ஒண்ணும்தெரியாதவரு மாதிரி இருப்பார்’ என எச்சரித்து கூட்டிச்சென்றார்.

ஆர்.சிவக்குமார் எழுதிய நாவல்  தருநிழல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  நான் இனிமேல்தான் படிக்கவேண்டும். சிவக்குமார் தன் கல்லூரி ஆசிரியர் காலகட்டத்து வாழ்க்கையைப் பற்றி ஒரு நாவல் எழுதவிருக்கிறார். 

ஆர் சிவக்குமார்

இரண்டு சந்திப்புகள் தற்செயலானவை. ஒரு பெருந்தொழிலதிபரை நான் தங்கியிருந்த விடுதியின் மின்தூக்கியில் சந்தித்தேன். அவரே அறிமுகம்செய்துகொண்டார். கொஞ்சம் பேசினேன். அவர் பொன்னியின் செல்வன் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசினார்.

இன்னொரு சந்திப்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். நான் எண்ணியதைவிட மிக இளமையாக இருந்தார். அவரைப் பற்றி கொரோனா காலகட்டத்தில் நான் எழுதிய குறிப்பைப் பற்றிச் சொன்னேன். தமிழக பொதுச்சுகாதார அமைப்பின் வெற்றியை பற்றி இன்னமும் எனக்கு பெருமிதம்தான். விஜயபாஸ்கரும் பொன்னியின் செல்வன் பார்த்திருந்தார்.

பொன்னியின் செல்வன் அலை தொடர்கிறது, தீபாவளிப் படங்களுக்குப் பின்னரும். இப்போதுள்ள போக்கின்படி பார்த்தால் நவம்பர் பாதிவரைக்கும்கூட இதே அளவு தீவிரத்துடன் நீடிக்கவே வாய்ப்பு. மணி ரத்னம் பொன்னியின் செல்வன் 2 ஐ முடித்து அதன் காட்சிவிரிவாக்க பணிகளையும் முடித்துவிட்டார். படம் கிட்டத்தட்ட முடிந்து ஏப்ரல் 2023 இறுதிக்காக காத்திருக்கிறது.

மணி ரத்னம் அலுவலகத்திற்கு சென்றேன். அந்த அலுவலகத்திற்கு 2013 பிப்ரவரி பத்தாம்தேதி சென்றதை நினைவுகூர்கிறேன். கடல் தோல்வியடைந்திருந்தது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகம் காலியாக இருந்தது. வாசலில் இரு போலீஸ்காரர்கள் காவலிருந்தனர். படத்தை பல கைமாற்றங்களுக்கு பின் வாங்கி இழப்பு அடைந்த ஓர் விநியோகஸ்தர் இழப்பீடை மணி ரத்னம் தரவேண்டும் என பிரச்சினை செய்துகொண்டிருந்த காலகட்டம். அலுவலகத்தில் எவருமே இல்லை. எப்போதுமே இருபதுபேர் வேலைசெய்யும் அலுவலகம் அமைதியாக இருந்தது

மாடி ஏற என்னால் முடியவில்லை. ஐம்பது கிலோ எடையை தூக்குவதுபோல் இருந்தது. ஒவ்வொரு படியிலும் நின்று நின்று சென்றேன். படத்தின் தோல்விச்செய்தி வரும்போது மலையாளப்படம் ஒன் பை டூ எழுதுவதற்காக திருவனந்தபுரத்தில் இருந்தேன். அங்கேதான் கடல் பார்த்தேன். இணையவெளியில் காழ்ப்பு கொண்ட கும்பல் நையாண்டி, எக்காளம் என அதை கொண்டாடிக்கொண்டிருந்தனர். அதை என் ‘நண்பரே போன்ற’வர்கள் எனக்கு நகலெடுத்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அதெல்லாம் என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. ஏனென்றால் கடல் தோல்வி என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்காத நிலை அன்றிருந்தது. நான்கு மலையாளப்படங்களும் வசந்தபாலனின் ஒருபடமும் தொடங்கவிருந்தன. மணி ரத்னத்தைச் சந்திப்பதுதான் எனக்குப் பெருஞ்சுமையாக தோன்றியது.

மணி ரத்னத்தின் அறைக்குள் சென்றேன். தணிந்த குரலில் ‘ஹாய்’ என்றேன். அவர் சிரித்தபடி ‘ஹாய்’ என்று சொல்லி அமரும்படி கைகாட்டினார். கணிப்பொறியை மூடி வைத்தார். ‘வருத்தமா இருக்கு’ என நான் தொடங்கியதும் ‘அது முடிஞ்சுபோன கதை.நான் சினிமாவிலே அது மாதிரி நிறையவே பாத்தாச்சு….பழகியாச்சு. All in the game…இனி நாம அதைப்பத்திப் பேசவே வேண்டாம்’ என்றார். அதே சிரிப்பு. நான் “சரி” என்றேன். அடுத்த படம் பற்றி பேசலானோம்.

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு

இம்முறை மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமே விழாக்கோலமாக இருந்தது. மேலே சென்றபோது இறகுபோல் எடையின்மையை உணர்ந்தேன். உள்ளே சென்றதும் ‘இப்பதான் கடல் படம் முடிஞ்சு பாத்ததுபோல இருக்கு…vindicated” என்றேன். சிரித்தபடி “இப்பவும் அதையே சொல்றேன். இதுவும் முடிஞ்ச கதை. பொன்னியின் செல்வனிலே இருந்து வெளியே போவோம். இனி அதைப்பத்தி பேச்சு தேவையில்லை. அடுத்த படம் பத்தி யோசிப்போம்” என்றார். பேசி முடிவுசெய்து கரு, களம், ஒருவரிக் கதைக்கட்டமைப்பு ஆகியவற்றை முடிவுசெய்துவிட்டோம்.இனி மூளை முழுக்க அதுதான்.

கடந்துசெல்லுதல் என்பதே வாழ்தலுக்கான ரகசியம். தோல்விகளை எளிதாகக் கடந்துசெல்வோம். பலசமயம் வெற்றிகளில் தேங்கிவிடுவோம். மாபெரும் வெற்றியிலும் கடந்துசென்றுவிடுவதென்பது செயல்மேல் பெரும் பற்று கொண்டவர்களால் மட்டுமே இயல்வது.

ஆர்.விஜயபாஸ்கர்

இந்த உரையாடல்களில் நாலைந்து முறை எழுந்து வந்த ஒரு கேள்வி, ஏ.ஆர். ரஹ்மானின் இசை சோழர்காலத்துக்கு பொருந்துகிறதா என்பது. நான் ஏற்கனவே அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். ‘இப்படத்தின் இசை எப்படி இருக்கவேண்டும்?’ என்று கேட்டபோது பலர் சொன்னது இதுதான், ‘கர்ணன் படத்தின் இசை அல்லது ராஜராஜசோழன் படத்தின் இசைபோல் இருக்கவேண்டும்’. 

ஆனால் அப்படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அந்த இசைகள் அப்படங்களுக்கு பொருந்தவில்லை என்றே விமர்சனம் இருந்தது. குறிப்பாக கர்ணன் படத்தில் உள்ள ‘இரவும் நிலவும்’ என்னும் பாடல் மகாபாரத மனநிலைக்கே எதிரானது என்னும் கடும் கண்டனம் எழுந்தது.  அப்பாடலின் காட்சியமைப்பு, ஆடைகள், பேலூர் ஹளபீடு பின்னணி எல்லாமே எள்ளிநகையாடப்பட்டது. படம் அரங்கத்தோல்வி அடையவும் நேரிட்டது. 

அதேதான் ராஜராஜ சோழனுக்கும் நிகழ்ந்தது. அதிலுள்ள நாதனைக் கண்டேனடி பாட்டு கேலிக்குரியதாகியது. சோழத்து இளவரசி அரங்கில் நாட்டியம் ஆடியதும், அவள் அணிந்திருந்த தாசிகளுக்குரிய உடையும் கடுமையாக ஏளனம் செய்யப்பட்டது. அப்படமும் அரங்கத்தோல்வி. அதை அன்று சிறுவர்களாக இருந்து பார்த்தவர்கள், பின்னர் தொலைக்காட்சியில் ரசித்தவர்கள் சிலர் இன்று அதே இசையை இப்படத்தில் கோருகிறார்கள்.

அப்படி அன்று கர்ணன் படத்தைக் கண்டித்தவர்கள் அதன் இசை சம்பூர்ண ராமாயணம் படத்தின் இசை போல் இருந்திருக்கவேண்டும் என்றனர். ஆனால் அந்த இசையே புராண நாடகங்களின் இசை போல் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. அதிலுள்ள சங்கீத சௌபாக்யமே என்னும் பாடல் ஏளனத்துக்கு ஆளாகியது.

காலந்தோறும் இசையில் இரு முனைகள் உள்ளன. மூத்தவர்கள் கடந்தகால ஏக்கத்துடன் இசை கேட்கிறார்கள். எல்லா இசையும் அவர்களின் இளமையில் கேட்ட இசைபோல இசை இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். இசை அவர்களில் உருவாக்குவது இசையனுபவம் அல்ல, நினைவுகள் கிளரும் ஏக்கம் மட்டுமே. இன்னொரு பக்கம், இளைய தலைமுறை இசையில் புதியது என்ன என்று மட்டுமே பார்க்கிறது. மரபிலுள்ளவற்றை விரும்புவதில்லை. சினிமா இசையமைப்பாளர் இரு எல்லையையும் நிறைவுறச் செய்யவேண்டும். வெற்றிகரமான இசையமைப்பாளர்கள் எல்லாருமே அதைச் செய்தவர்கள். 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பொன்னியின் செல்வனில் அதைச் சாதித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதன்மையாக இன்றைய குழந்தைகளுக்கான படம். அவர்களுக்கு நம் மரபிசை, மெல்லிசை இரண்டுமே அன்னியமானவை. ஆனால் உலகளாவிய புதிய ‘பாப்’ இசைமரபுகள் அறிமுகமானவை. ஆகவே பொன்னியின் செல்வனின் இசை புதிய இசைமரபுக்குள், ஆனால் மரபிசை மற்றும் நாட்டார் இசையின் கூறுகளுடன் அமைந்துள்ளது.

அது ‘சரியா?’ என்பதற்கு ஒரே பதில்தான். ‘வெற்றியா?’ என்னும் பதில் வினா. மாபெரும் வெற்றி என்பது கண்கூடு. பொன்னியின் செல்வனை உலகமெங்குமுள்ள சிறுவர், இளைஞர்களிடம் கொண்டுசென்றது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். அது மாபெரும் வெற்றி என்பதனால்தான் அது சரியா என்ற கேள்வியே எழுகிறது. அது இவர்கள் எண்ணியபடியே பழையமாதிரி அமைந்து, தோல்வியடைந்திருந்தால் ‘ஏன் மக்களைக் கவரவில்லை?’ என்னும் விவாதம் எழுந்திருக்கும்.

ஒரு திரையரங்கில் முழுக்கமுழுக்க சிறுவர்கள் பொன்னியின்செல்வன் பார்க்கும் காட்சியைக் கண்டேன். படம் ஓடும்போதே அவர்கள் தீயரி எசமாரி’ என பாடுகிறார்கள். அந்த தலைமுறைக்கான, அந்த கொண்டாட்டத்துக்கான இசை இது. 

முந்தைய கட்டுரைஎம்.ஏ.இளஞ்செல்வன்
அடுத்த கட்டுரைஇந்து மதம் என ஒன்று உண்டா?- 2