அரையர் சேவை, கடிதம்

அரையர் சேவை

அன்புள்ள ஜெ

தங்களின் “அரையர் சேவை” தமிழ் விக்கி பதிவைக் கண்டேன். அதற்கு தங்கள் எழுதிய குறிப்புரையில் உள்ள அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.அதன் காரணமாகவே தொடர்ந்து அரையர் சேவை காண ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருக்கிறேன். பகல்பத்து, இராப்பத்து காலங்களில் அபிநயம் வியாக்யானத்துடன் நடைபெறும் அரையர் சேவை மற்ற உற்சவ காலங்களில் அபிநயம் வியாக்கியானம் இன்றி தாளத்துடன் பிரபந்த பாடல்களை நிறுத்தி நிதானமாக பாடுவதாய் அமையும். சித்திரை மாதம் நடைபெறும் உள்கோடை உற்சவத்தின் 5 நாட்களும் தினம் இருபது பாடல்கள் வீதம் பெருமாள் திருமொழி பாசுரங்களை இசைப்பார்கள். அவ்வுற்சவம் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது. அப்பிரகாரம் குலசேகரன் திருச்சுற்று என குலசேகராழ்வார் பெயரில் வழங்கப்பெறுவதால் அவர் இயற்றிய பாசுரங்கள் இசைக்கப்படுகின்றன

இதே போல் ஊஞ்சல் உற்சவத்தின் போது தாலாட்டு வடிவில் உள்ள பெரியாழ்வாரின் “மாணிக்கங்கட்டி” பாசுரங்களும் குலசேகராழ்வாரின் “மன்னு புகழ் கௌசலைதன்” பாசுரங்களும், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருமஞ்சனத்தின் போது கண்ணனின் பிறப்பு முதல் அனைத்தையும் பேசும் பெரியாழ்வார் திருமொழியும் ரேவதி திருமஞ்சனங்களின் போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலையும் அரையர்களால் தாளத்துடன் உற்சவ மூர்த்தியின் முன் இசைக்கப்படுகிறது.

முதலில் ஸ்தானிகரால் “கோயிலுடைய பெருமாளரையர் ” என்றோ, வரந்தரும் பெருமாளரையர்” என்றோ, “மதியாத தெய்வங்கள் மணவாளப் பெருமாளரையர் என்றோ அல்லது “நாத வினோத அரையர்” என்றோ வெகு கம்பீரமாக அருளப்பாடு ஆகும். அரையர் “நாயிந்தே! நாயிந்தே!!” என்றபடி உற்சவ மூர்த்தியிடம் சென்று இறைவன் சூடிக்களைந்த ஆடையை பரிவட்டமாக கட்டி மாலையை ஏற்றுக்கொண்டு தீர்த்தம் சடாரி ஆனவுடன் தன்னுடைய இடத்தில் வந்து நிற்பார். மீண்டும் “அருளப்பாடு விண்ணப்பம் செய்வார்” என ஸ்தானிகர் முழங்கியதும் தாளமிசைத்து கொண்டாட்டம் சொல்ல ஆரம்பிப்பபார்.

இந்த அரையர் கொண்டாட்டம் என்பது ஒரு மன்னரை கட்டியக்காரன் புகழ்ந்து சொல்வதைப்போல ஸ்ரீரங்கநாதரின் பெருமைகளை அரையர்கள் நீண்டி முழக்கி சொல்வதாகும்.

உதாரணமாக பகல்பத்தின் முந்தைய தினம் திருநெடுந்தாண்டகத்துடன் உற்சவம் ஆரம்பமாகும்போது அரையர் கொண்டாட்டத்துடன் இவ்வாறு ஆரம்பிப்பார்

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”

“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”

இதில் முதலாவதாக குறிக்கப்படுபவர் ஸ்ரீவசனபூஷணம் என்ற நூலை இயற்றிய பிள்ளைலோகாச்சாரியர். தனது முதுமை வயதைப் பொருட்படுத்தாமல் படையெடுப்பின்போது உற்சவர் விக்ரகத்தை காப்பாற்றி அழகர் கோவில்வரை கொண்டு சென்றதால் முதன்மையாக ஆரம்பிக்கும்போதே நினைகூறப்படுகிறார். ஒருவருடம் அனைத்து உற்சவங்களையும் நிறுத்திவைத்து மணவாளமாமுனிகள் திருவாய்மொழிக்கு பொருள் சொன்னதை உற்சவர் பூரித்து கேட்ட வைபவம் இரண்டாவது கொண்டாட்டத்தால் சுட்டப்படுகிறது

ஏராளமான ராமாயண மகாபாரத நிகழ்வுகள்,ஆழ்வார் ஆச்சார்யர்களின் பெருமைகள், திருவரங்கத்து பெருமைகள் இந்த அரையர் கொண்டாட்டத்தின் போது கூறப்படுகின்றன.

உதாரணமாக

“பாஞ்சாலி குழல் முடித்து பரிபவம் தீர்த்த பெருமாள்

தடிபெற்ற கீர்த்தியால் கொடி பெற்ற ராவணன் முடி பத்து அறுத்த பெருமாள்

நலங்கொண்ட தோள் அசுரர் குலங்கொண்டு மாய்ந்திட பலங்கொண்டு எழுந்த பெருமாள்

சாய்த்ததொடு மரத்தினொடு தோய்த்த நறு தயிருண்டு பசுமேய்த்து அவனிகாத்த பெருமாள்

பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்த பெருமாள்

ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்

ஏழு மதில் சூழ் கோவிலுடைய பெருமாள்

ஏழ்பிறவித் துயர் அறுக்கும் பெருமாள்

ஏழைக்கு இரங்கும் பெருமாள்

ஏழிசையின் பயனான பெருமாள் “

இவ்வாறு பிரபந்த பாசுரங்களை பாடுவதற்கு முன்னரும் பின்னரும் அரையர் கொண்டாட்டம் சொல்லப்படுகிறது

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் ஒருவொரு ஆழ்வார்களின் பாடல்களுக்கு முன்பும் தனியன் எனப்படும் சுலோகங்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அவற்றை அரையர்கள் பாடுவதில்லை. அதற்க்கு பதிலாக அரையர் கொண்டாட்டம் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் இக்கலை முழுக்க முழுக்க தமிழுக்கானது. தமிழ் பாசுரங்களை ஏற்றம் பெறச்செய்வதாக அமைந்தது. இப்பாசுரங்களை பாடும் அரையர்களுக்கு இராப்பத்து உற்சவ கடைசியில் பிரம்மரத மரியாதை அளிக்கப்படுகிறது

இந்த அரையர் சேவையைப்போன்றே ஸ்ரீரங்கம் கோவிலில் நடைமுறையில் உள்ள மற்றொரு இசையுடன் இணைந்த கலைவடிவம் ” வீணை ஏகாந்தம்”

வீணை ஏகாந்தம்

கொஞ்சம் கலையார்வம் உள்ளவர்கள் “அரையர் சேவை” பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒரு கோவில் சார்ந்த இசைமரபு ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வீணைஏகாந்தம்.

இது சித்திரையில் பூச்சாத்தி உற்சவத்தின் ஆறாம்நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரையிலும் (உள்கோடைதிருநாள்) வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஒன்பது நாட்களும் (இராப்பத்து) நடைபெறும். இந்நிகழ்ச்சியானது ஸ்ரீரங்கம்கோவில் உற்சவரான நம்பெருமாள் மண்டபத்திலிருந்து இரவு மூலஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது தங்கக் கொடிமரம் தாண்டி நாழிகை கேட்டான் வாசல் கடந்தவுடன் தொடங்கும்.

பெருமாள் வாசல்கடந்து மேற்குமுகமாக திரும்பியது வீணை வாசிப்பவர்கள் ஐந்துபேர் பெருமாளைப் பார்த்தபடி வந்து நின்றபடியே வாசிக்க ஆரம்பிப்பர்.ஆம் நாம் பார்த்த வீணைக்கலைஞர்கள் அனைவருமே அமர்ந்தபடிதான் வாசிப்பார்கள் அதுதான் வசதியும் கூட. ஆனால் இங்கே வீணையை நிறுத்திய வாக்கில் தோளில் கட்டிக்கொண்டு நின்றபடிதான் வாசிப்பார்கள்.

அங்கு முதலில் வீணையில் நீலாம்பரி,நாட்டை,கௌளை,ஆரபி,ஸ்ரீ ஆகிய ராகங்களில் ராகமாலிகையாக தானம் வாசிப்பார்கள்.அதைத்தொடர்ந்து பெருமாள் ஓர் நான்கு அடி முன்னேறுவார். அங்கு ஒரு கீர்த்தனை பாடியபடியே வாசிக்கப்படும். அந்த கீர்த்தனை கன்னடத்தில் புரந்தரதாசருடையதாகவோ, தெலுங்கில் தியாகராஜர் அல்லது ராமதாசருடையதாகவோ இருக்கும். அல்லது சமஸ்கிருதத்தில் முத்துஸ்வாமி தீட்ஷிதருடையது அல்லது ஆதிசங்கரர் இயற்றிய ரங்கநாதஷ்டகமாக இருக்கும்.அல்லது தமிழ் பாடலாக இருக்கும். இதில்குறிப்பிடத்தகுந்த விசயம் எந்த கீர்த்தனையாக இருந்தாலும் முழுமையாக பாடியபடியே வாசிப்பார்கள்.

மேடைக்கச்சேரிகளில் பெரும்பாலும் பெரியகீர்த்னைகளில் முதல் மற்றும் கடைசி சரணங்களைத்தான் பாடுவார்கள். ஆனால் இங்கு முழுமையாக வாசித்து பாடுவார்கள்.”ஏன் பள்ளி கொண்டீரைய்யா “என்ற அருணாச்சல கவிராயரின் பாடல் ,அது மேடைக்கச்சேரிகளில் முதல் பத்தி மட்டும்தான் பாடுவார்கள். அருணா சாய்ராம் மட்டும் இரண்டு பத்திகள் பாடுவார் ஆனால் பாடல் மூன்று பத்திகளை கொண்டபெரியபாடல். அவை அனைத்தையும் முழுமையாக இங்கு பாடக்கேட்டிருக்கிறேன்.

இந்த கீர்த்தனை முடிந்தவுடன் பெருமாள் வடக்குப்புறமாக திரும்பி நான்கு அடி முன்னேறுவார். அங்கு திவ்யபிரபந்தத்திலிருந்து பாரங்களை வீணை இசைத்துக்கொண்டே பாடுவார்கள். பெரும்பாலும் தொண்டரடிப்பொடியாழ்வார்,திருப்பாணாழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார்,குலசேகராழ்வார்,ஆண்டாள் பாசுரங்களாக இருக்கும். குறைந்தது பத்துமுதல் பதினைந்து பாசுரங்கள் வீணை இசையுடன் பாடப்படும்.

இதைத்தொடந்து சிறிது முன்னகர்ந்து மூலஸ்த்தானம் செல்லும் படிகளை நோக்கி கிழக்குப்பக்கமாக திரும்பிநிற்பார். இதுவரை பெருமாளுக்கு நேராக எதிர்ப்புறம் நின்று வாசித்த வீணைக்கலைஞர்கள் தெற்கு நோக்கி படிக்கு ஒருவராக பக்கவாற்றில் நின்றவாறு  யதுகுல காம்போதி ராகத்தில் “எச்சரிக சதன” என்ற கீர்த்தனையை பாடிக்கொண்டே வாசிப்பார்கள். அப்போது பெருமாளை தோளில்தாங்கிய ஸ்ரீபாதம்தாங்கிகள் தோளுக்கினியானை(பெருமாள் உள்ள சப்பரம்) வலப்புறமும் இடப்புறமும் ஊஞ்சல் போல் அசைத்துக்கொண்டே ஒவ்வொருபடியாக முன்னேறுவார்கள்

அவ்வாறு முன்னேறும் போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர் நம்பெருமாள் மீது பச்சைக்கற்பூரம் கலந்த மலர்களை மூன்று முறை தூவுவார். சரியாக வீணையுடன் பாடல் நிறைவுபெறும்போது பெருமாள் மூலஸ்தானத்திற்குள் சென்றிருப்பார்.இந்த இரு உற்சவங்களின் கடைசிநாளன்று வீணைக் கலைஞர்களுக்கு பெருமாள் மரியாதை செய்வார். இந்த வீணை ஏகாந்தத்தை நம்பெருமாளுக்கு மிக அருகிருந்து பொதுமக்களும் காணலாம் என்பது கூடுதல் சிறப்பு

கோவில் சார்ந்த இக்கலை வடிவங்களை பற்றி தங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்க்கு நன்றி

அன்புடன்

பார்த்திபன்

முந்தைய கட்டுரைகாந்தியை கண்டடைதல் – சிவராஜ்
அடுத்த கட்டுரைகு.ப.ராஜகோபாலன்