“சோழப்பதாகை”யும் அதன் நிகழ்காலமும்

எழுதும் அளவுக்கு மனது இன்னும் ஒருங்கு கூட வில்லை. தஞ்சைக்கு பயணம்  செய்தது குறித்து எழுதுவதை தள்ளிப்போட்டு கொண்டே வந்தேன் ஆயினும் உங்கள் தளத்தின் வீச்சு தெரியும் என்பதால், ஒருங்கமையா மனதுடன் இருப்பினும் எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னமே தஞ்சை எனது பயணத்திட்டங்களுக்குள்  இருந்தது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர்தான் எவ்வித முன் தயாரிப்புகளும் இன்றி  அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணத்தின் சில வாரங்கள் முன்புதான் குடவாயில் பாலசுப்ரமணியம் குறித்த உங்கள் உரையை கேட்டு இருந்தேன். பயண அனுபவங்களுக்கு பின் உங்கள் உரை குறித்து எழுதலாம். அது ஒரு தெளிவானநிகழ்கால நிலையை முன்னிறுத்தும் என்பதால்.

சூரியன் எழும் அதிகாலையில் அல்லது அந்தி சாயும் வேலைகளிலோ இத்தகைய இடங்களுக்கு செல்வது என் வழக்கம். அந்த பொன்னொளியில் கலை வடிவங்களின் அழகு கூடுவதாக என் எண்ணம். நான் பெரிய கோயிலுக்கு சென்றது பொன்னிற அந்தியில். கோயில் வளாகத்தில் நுழையும் முன்பே அதன் பிரம்மாண்டம் நம்மை கவருகிறது

கோயில் வளாக முகப்பில் இருக்கும் இரண்டு கோபுரங்களின் அழகையும், வடிவ நேர்த்தியையும், பிரமாண்டத்தையும்  முழுமையாக அனுபவித்து, அந்த நுழைவாயில்களில் விழவுகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும் என எனது கற்பனை குதிரையை தட்டி விட முயன்று கொண்டிருந்த போது, என்னை அணுகிய ஒருவர், ” ஏய் செருப்பு , அங்கஎன்றார். நான் திகைத்து அவரை பார்த்தபோது மீண்டும்செருப்பெல்லாம் அங்கஎன்று நுழைவாயிலின் வலப்பக்கத்தினை சுட்டிக்காட்டினார். நல்ல வேளை, நான் தனியாக வந்தேன். ஒரு வேளை குடும்பத்தோடு வந்திருந்தால்! “ஏய் செருப்புகளெல்லாம் அங்கஎன சொல்லி இருந்தால்!!! 

செருப்படிக்கு (அடுப்பு இருக்கும்  இடம் அடுப்படி என்றால் செருப்பு வைக்கும் இடம்) செல்லும் வழியில் பணத்தை பறிக்கும் கும்பல் வரிசையாக. ஒரு நூல் விற்பனையகம், குடவாயில் சுப்பிரமணியம் நூல் ஒன்று கூட இல்லை. ராஜராஜன் குறித்த வரலாற்று நாடக நூல்கள் அதிகம் கண்ணில் பட்டன.பின்னர் செருப்படியில் பத்து பேர் கொண்ட ஓர் குடும்பத்தலைவரை நோக்கி, அங்கி பணிபுரியும் ஒருவர்போடா மயிரே சில்லறை தர முடியாதுஎன்றார்

நான் வாய்த்த கண் வாங்காமல் திட்டியவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் திட்டுவதற்கு வாய் திறந்த அவர், ஏதோ கூச்ச உணர்வு ஏற்பட்டு, என்னை நோக்கி, “டோக்கன் வாங்கிட்டியா?” என்றார். இல்லை என்ற பின், எந்த விளையும் குறிப்பிடப்படாத தாள் ஒன்றை நீட்டி “4 ரூபா குடுஎன்றார். நீயே போய் உன் செருப்பை வச்சுட்டு, வெளிய போகும் போது எடுத்துக்கணும் சரியா என்றார். நான்ம்என்றேன். “போ, உள்ள போயி பாரு. நல்லா இருக்கும் என்றார்.

ஒரு ஐஸ் கிரீம் கடை. வெண்ணிலா ப்லேவர் மனம் நிரம்பி அடித்ததுஅது தவிர சில நினைவு பரிசுகள் வாங்கும் கடைகள்.

பின்னர் நந்தி மண்டபத்தில், நந்திக்கு தனது புட்டத்தை காட்டியபடியும், தனது நாக்கினை பக்கவாட்டில் வெளித்தொங்க விட்ட கொற்றவை போலவும், தன இரு கண்களை தாங்களே குத்த முழுவது போலவும்  “selfie”க்களை  எடுத்துக்கொண்டு இருந்தனர் என் வயதையொத்த யுவன் யுவதிகள். நான் எங்கள் ஊர் சிவன் கோவிலுக்கு செல்லும்போது, நந்தி முன்னால் நிற்கக்கூடாது என்றும், நந்தியான அவருக்கும் சிவலிங்கத்திற்கு இடையில் அற்பமான மனிதராகிய நாம் சென்று நந்திக்கு தரிசனத்தினை மறைக்கக்கூடாது என்றும் எனது பாட்டி சொல்லித்தந்ததை எண்ணி சிரிக்காமலில்லை.”2K kids” பொன்னியின் செல்வன் பாடல்களைக்கொண்டும், 90s Kids ஆயிரத்தில் ஒருவன் பாடல்களைக்கொண்டு REELSம் எனும் காணொளிகளை பதிவு செய்துகொண்டிருந்தனர்.

நடைபாதைகளை தவிர அனைத்து இடங்களிலிலும் மக்கள். புல்வெளிகளில் படுத்துக்கொண்டும், சிற்பங்களை தழுவிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொள்வததில் மும்முரமாக திரிந்தலைத்தனர். ஒப்பீட்டளவில் வட இந்தியர்கள் தேவலாம் ராகம். ஒழுங்கின்றி ஓடிய தனது குழந்தையைச்சுப்! மந்திர் ஹே! க்யா கர் ரஹா ஹே துஎன அரட்டினார். மஹாராஷ்டிரத்தை  சேர்த்த ஒரு குடும்பம் அவர்களின் பாரம்பரிய உடை அனைத்து கோபுரத்தை தெளிவாக காணும் தொலைவில் அமர்ந்து கொண்டு, எதுவும் பேசாமல் கோபுரத்தையே நோக்கி கொண்டு இருந்தனர்

முழுமையாக தன்னை மறைத்துக்கொண்டு கண்கள் மட்டும் வெளித்தெரிய புர்கா அணிந்த பெண்மணி, கோயில் குறித்து தன் குழந்தைக்கு சொல்லிக்கொண்டிருந்தார். நான் தனியனாக அமர்ந்து கோயில் குறித்து நான் அறிதவற்றையும், உங்கள் உரையையும் நினைவில் இருந்து மீது கொண்டு இருந்தேன்.

நிகழ்காலம்

கோவில் விற்பனைக்கான இடம் அல்ல. அதுவும் உணவு பண்டங்கள். மிகக்கறாராக இருக்க வேண்டிய தளம். ஐஸ் கிரீம் கடையில் இருந்து உருவாகும்  ஐஸ் கிரீம் குப்பைகளும் அருகே, கோயில் வளாகத்திற்கு உள்ளேயே.இது மாபெரும் இழிவு. கோயில் வளாகத்திற்குள் உணவுப்பண்டங்கள். இது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதங்கள் கூட தவிர்க்கப்படலாம். அங்கு வருவோர் அதற்காக வருவதில்லை. கோவிலை முழுசுற்று சுற்றி முடிக்கும் வேளையில், அறநிலையத்துறையும் வியாபாரம் செய்து கொண்டு இருந்தது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் அம்மனுக்கு சாற்றப்பட்ட புடவைகளைசகாயவிலையில் ஒலிபெருக்கி மூலம் கூவி விற்றுக் கொண்டிருந்தனர். இழி நிலையின் உச்சம்

தஞ்சை பெரிய கோயிலின் மாதிரி ஒன்று கழிப்பறைக்கு அருகில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் கேட்பாரற்று கிடந்தது. இது அவலம். அவலத்தின் உச்சம். நம் நாட்டின் கலைஉச்சங்களுள் ஒன்றின் மாதிரி, கழிவறைக்கு அருகில், புழுதிக்கூட்டின் மத்தியில் இருக்கிறது. அதுவும் ஒரு நாளில், பல நாடுகளில் இருந்து வரும் பல்லாயிரம் பேர் கூடும் இடத்தில். வெளிநாட்டினர் எப்போதும் ஏளனம் செய்ய நமே வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது போல் ஆகாதாமேலும், இச்செயல்பாடு நம் கலையின் உருவக மதிப்பை நாமே நசுக்குவது. இது உடனடியாக  தக்க இடத்தில் காட்சிக்கு (பேருந்து நிலையம் , சாலை சந்திப்புகள். ரயில் நிலையங்கள்) வைக்கப்பட வேண்டும்.

புகைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று எல்லை மீறும் பொது மக்கள், சிலைகளில் தொங்கிக்கொண்டு, குழந்தைகளை அதன் மீது அமர வைத்தும் இழிவு செய்யும் அவலம். அரசாங்கமே புகைப்படம் எடுப்பதற்கென, “vantage point” களை கண்டறிந்து கோவிலின் அமைப்பிலோ அல்லது கட்டிட கலையிலோகை”  வைக்காமல், புகைப்படங்கள் எடுக்க வசதிகள் ஏற்படுத்தித் தரலாம்.

குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைத்தல். அவர் படைப்புக்களை ஒப்பந்த அடிப்படையில் தயார் நிறுவனங்கள் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனை செய்யலாம். அங்கு கூடும் வெளிநாட்டோர் மற்றும் தமிழ் தெரியாத நம் நாட்டவர்க்கும் சேர்த்து நம் பெருமைகளை எடுத்துச் சொல்லஅரசாங்கம் மொழி பெயர்த்தால்   கண்டிப்பாகமொழிபெயர்க்கப்பட்டு விடும் அவலம் உள்ளது. சிறந்த உதாரணம்: சாஹித்ய அகாடமி மொழிபெயர்ப்புகள்.

இன்னும் சில சொல்ல முடியாத நிகழ்வுகளும் உள்ளன. அலட்சிய போக்கு மட்டுமே இதன் வேர். ஏதேனும் ஒரு IAS அதிகாரி நினைத்தால் எளிய விதிகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வர இயலும் தவறுகளே. இத்தவறுகளை சில காலத்திற்கு தொடர் கண்காணிப்பு மூலமும், எளிய அறிவிப்புகள் மூலமுமே வழிக்கு கொண்டு வரலாம். உடனடியாக இல்லாவிடிலும், நீண்ட கால அளவில் இவை பயன்  தரும்விதிகளை மதிக்கும் எதிர்கால சந்ததிக்காக நமது அதிகாரிகள் இதனை முன்னெடுக்கலாம்.

பயண முடிவில் பாண்டிய நாட்டின் வம்சக்கொடியான ரீமாசென், ஒளிந்து வாழும் சோழ அரசனை பார்த்து

இது நின்ன சோழ நாட?”

நின்ன சோழ மக்களா?”

என சொல்லும் வரிகள் நினைவில் எழுந்தன

லெட்சுமி நாராயணன்
கீழநத்தம்
திருநெல்வேலி 

அன்புள்ள லெட்சுமிநாராயணன்,

தமிழகத்தில்சோழர்களை இழிவுசெய்துவிட்டார்கள்என எதற்கெடுத்தாலும் கொதிக்கும் பலர் உள்ளனர். அரசியலாளர்கள், யூடியூப்வாயர்கள். ஆனால் உண்மையில் நம்மை நாமே இழிவுசெய்துகொண்டே இருக்கிறோம். அதைப்பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. எந்த அரசியலாளரும் பேசுவதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஅரூ சிறுகதைப் போட்டி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்