பெரும் தத்துவ மரபிற்குள் நுழைவதற்கான உற்சாகமான ஒரு துவக்கத்தை பெற்றோம். இந்திரனும் வருணனும் வாழ்த்தொலி வழங்கியதாகவே அந்த பெருமழை உணரச் செய்தது.
எத்தனை இடையூறு வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் தங்களின் செயலூக்கத்தை அருகிருந்து பார்க்க முடிந்தது. பரோக்ஷ வேள்வி பற்றி விளக்கும் போது, செய்யும் அனைத்தையும் முழுமை நோக்கியே ஆற்றும் தங்கள் வாழ்வே கண் முன் வந்தது.
அடுத்த வகுப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நன்றி ஜெ!
சதீஷ் ராமதுரை
*
அன்புள்ள ஜெயமோகன் – தத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டது குறித்து மிக மிக மகிழ்ச்சி!
இந்த மூன்று நாட்களில் எனக்கு கிடைத்த பெரும் திறப்பு, இந்திய தத்துவ/ஞான மரபுகளின் சாரத்தையும், கட்டமைப்பையும், வரலாற்றையும் பற்றி நீங்கள் கொடுத்த ஒட்டுமொத்த அறிமுகம். நம் மரபில் வரும் கிட்டத்தட்ட அனைத்து சொற்களையும் கேட்டு/படித்திருந்தாலும், அவை சுட்டுகின்ற தத்துவங்களின் சாரத்தையும், அவை ஒன்றோடுஒன்று கொண்டிருக்கும் தொடர்புகளையும் பற்றி முதலாவதாக ஒரு வெளிச்சத்தை உருவாக்கி கொடுத்ததற்கு நன்றி! இது ஒரு முதல்படி என்று உணர்கிறேன்… அதைவிட முக்கியமானது, அகலமும் ஆழமும் கொண்ட நமது அறிவுசூழலைப்பற்றி என்னுள் எழுந்த ஒரு உயிர்ப்பும் எழுச்சியும். அதற்கு என் வணக்கங்கள்!
இந்த வகுப்புகளில் இவ்வளவு இளைஞர்களை பார்த்தது மட்டற்ற நிறைவை அளிக்கிறது. இன்றைய சமூக சூழலில் இளைஞர்களை நீங்கள் வளர்த்தெடுக்கும் பணி அபாரமானது. வாழ்த்துக்கள்!
உங்களுடன் நேரடியாக பேச வாய்ப்பு அமையவில்லை – பின்னொரு சந்தர்பத்தில் கிடைக்குமென நம்புகிறேன்.
குமரன்.
*
திருமலை பச்சமுத்து