அண்மையில் விளாத்திக்குளம் சுவாமிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கருத்து எழுந்து வந்தது.விளாத்திக்குளம் சுவாமிகளை ஆதரித்த புரவலர்களின் பட்டியல் பெரிது. அப்படிப்பட்ட கலையிலக்கியப் புரவலர்கள் ஏன் இன்று இல்லை? இன்று உள்ளம் குறுகிவிட்டதா?
உள்ளம் குறுகிவிட்டது என்பது ஓர் உண்மை. ஏனென்றால், முன்பெல்லாம் பணம் என்பது அந்தஸ்தும் போகமும் மட்டும்தான். இன்று பணத்தின் அர்த்தமே வேறு. ஒரு பெரும்போட்டியில் வெற்றிப்புள்ளி அது. போகத்தின் அர்த்தமும் வேறு. நிறையப் பணம் இருந்தால் உயர்தர கார் வாங்கலாம். மேலும் பணமிருந்தால் தனி ஜெட் விமானம் வாங்கலாம். தனக்கான விமானநிலையமே வைத்துக்கொள்ளலாம். போட்டி, போகம் இரண்டுக்குமே அளவே இல்லை. அந்த வேகத்தில் இருப்பவருக்கு ஒவ்வொரு பைசாவும் மதிப்பு மிக்கது. ஒரு ரூபாய் கூட விட்டுக்கொடுக்க மனம் வருவதில்லை. ஆகவே இன்று வருமானவரிக் கணக்குக்காக காட்டப்படும் போலி கொடைகள் அல்லாமல் உண்மையில் அறக்கொடை என்பது அனேகமாக செல்வந்தர்களிடம் இல்லாமலேயே ஆகிவிட்டது.
சென்றகால ஜமீன்தார்களுடன் ஒப்பிட இன்றைய தமிழகத் தொழிலதிபர்கள் நூறுமடங்கு, ஆயிரம் மடங்கு செல்வந்தர்கள். ஆனால் நான் அறிந்தவரை சில ஆயிரம் ரூபாய்களை எதற்கேனும் அறக்கொடையாக அளிக்கும் செல்வந்தர்கள்கூட அரிதினும் அரிதானவர்கள். தமிழகத்திலுள்ள அறநிலைகள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தினரின் கொடைகளால்தான் இயங்குகின்றன. தமிழகத்திலுள்ள மாபெரும் தொழில்நிறுவனங்கள் எவையும் எந்த உண்மையான சேவையும், கொடையும் செய்வதில்லை. தமிழகத்தில் கலையிலக்கியத்திற்கான ஆதரவு என்பது கோவையில் மட்டுமே உள்ளது என பலரும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சென்ற காலத்தைய ஜமீன்தார்கள் அரசமரபு கொண்டவர்கள். ஆகவே இல்லத்திலேயே அவர்களுக்கு கலையிலக்கியம் கற்பிக்கப்பட்டது. அவர்களுக்கு ரசனையும் கல்வியும் இருந்தது. இன்று பெருஞ்செல்வந்தர்கள் இரண்டு வகையினர். ஒருவகையினர் பிறப்பால் உயர்குடியினர். அவர்களுக்கு தமிழ்ச்சமூகம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டு அறிதலே இருக்காது. முற்றிலும் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள். இன்னொருசாரார் சுய உருவாக்கச் செல்வந்தர்கள். அவர்கள் ஈவிரக்கமில்லாத போட்டி வழியாக சமரிட்டு மேலே வந்தவர்கள். அவர்களுக்கு சிக்கனம் குருதியில் ஊறி இருக்கும். தொழில் தவிர எதுவுமே தெரிந்திருக்காது.
இருதயாலய மருதப்ப தேவர் சென்றநூற்றாண்டின் மாபெரும் கலையிலக்கியப் புரவலர். அவருடைய நேரடி பங்களிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் அவரைப்போன்றவர்கள் இங்கே இருந்தனர் என்பது நம் நினைவில் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்