பொன்னி, சில குரல்கள்

பொன்னியின் செல்வன் -சுசித்ரா

பொன்னியின் செல்வன் – நோயல் நடேசன்

அன்பு மிகு ஜெ

சென்ற செவ்வாய்க்கிழமை பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டு ஐந்தாம் நாள் திரைப்படத்தைப்  பார்த்தோம். திரை அரங்கு என் வீட்டில் இருந்து எட்டு  நிமிட காரோட்டும் தூரத்தில் இருக்கிறது. 150 இருக்கைகள் கொண்ட சின்ன அரங்கு.  பிற்பகல் காட்சிக்கு  பதிவு செய்திருந்தேன்.

ஐம்பது வருடங்களுக்கு முன் ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும்  அம்மம்மாவின் கிராமத்துக்குப் போகும்போது வாசித்த நாவல்.. அப்பா கல்கியில் தொடராக வந்த அத்தியாயங்களை சேர்த்துத் தானே கட்டி நூல்களாக்கி பாதுகாத்து வைத்த்திருந்தார். சோம்பலான மதிய நேரங்களின் கனவுலகு அது.

எக்காலத்திலும் திரையில் பார்ப்பேன் என்று எண்ணியிருக்கவில்லை. படம் ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில் உள்ளிழுத்துக் கொண்டது. நடிகர்களின் தேர்வும், நிலப்பரப்புகளின் அழகும், வண்ணங்களும், ,காட்சிகளின் வேகமும்  கற்பனைக்குள் அடங்காத பிரமிப்பு. படம் முடிந்தபோது ஒரு முழுமையான திருப்தி ஏற்பட்டது.. It is an amazing visual treat and highly entertaining.

‘உதாரணமாக, நான் பொன்னியின் செல்வன் சினிமாவில் எந்த விமர்சகராவது அதிலுள்ள நகைகளின் வடிவமைப்பில் இருந்த மிகப்பெரிய கற்பனை, உழைப்பு பற்றி ஒரு வரி சொல்கிறார்களா என்று பார்த்தேன்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

அத்தனை அணிகலன்களையும் மிக ஆர்வமாக நான் கவனித்தேன். வெண்முரசில் நீங்கள் விரிவாக எழுதும் அணிசூடல்களை மிக விரும்பி வாசிப்பேன். பொன்னும், மணியும், முத்தும்,  சிறகுகளும், கல் அணிகளும், மலர்களும் என உங்களின் அந்த விபரிப்பைத் தனியாகத் தொகுக்கலாம். ஆயினும் இத்திரைப்படத்தின் அத்தனை அம்சங்களையும்  முழுமையாக உள்வாங்குவது என்பது ஓரிரு தரம் பார்த்தது இயல்வது அல்ல.

திரையரங்குக்கு வந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள்.  அவர்கள் தங்கள் வீட்டு முதியவர்களை  அழைத்து வந்திருந்தார்கள். அவர்களில் பலர் கைத்தடியுடன், walker உடன் நடந்து வந்தார்கள். இளையவர்கள் அவர்களின் கை பற்றி நடத்திக் கூட்டிக் கொண்டு வந்து இருக்கைகளில் அமர்த்தினார்கள். வெறெந்தப் படத்திலும் இத்தனை முதியவர்களை பார்க்க முடிவதில்லை. இடைவேளை இல்லாத 170 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தை  அவர்கள் அசையாது அமர்ந்து பார்க்கிறார்கள்.

பலரிடம் பேசினேன். எனது நகரில் இருந்து இரண்டு – மூன்று மணி நேரக் கார்ப்பிரயாண தூரத்தில் இருக்கும் நகர்களில் இருந்து கூட வருகிறார்கள்.  பலர் பல வருடங்களுக்குப் பிறகு தியேட்டருக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

இதோ இரண்டாவது வாரம். வார இறுதிக் காட்சிகளும் மாலைக்காட்சிகளும் முன் பதிவிலேயே நிறைந்து விடுகின்றன. நாள் ஒன்றுக்கு ஆறு – ஏழு காட்சிகள். பகல் காட்சிகளில் முன் இரண்டு வரிசை இருக்கைகள்தான் எஞ்சி இருக்கின்றன. ஒருநாள் ஒரு தரமாவது online booking இல் எத்தனை டிக்கட்கள் விற்கப் படுகின்றன என்று பார்ப்பது ஒரு பொழுதுபோக்காகவே ஆகி விட்டிருக்கிறது. “Sold Out”  பார்க்கிறபோதெல்லாம் இது எத்தனை பேரின் உழைப்பின் வெற்றி என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது.

படத்தைப் பற்றி நூல் வாசித்தவர்கள் யாருடனாவது பேச  வேண்டும் என்ற ஆர்வத்தில்  காலம் செல்வத்துடனும் திரு முத்துலிங்கம் அவர்களுடனும் பேசினேன். “சான்ஸே இல்லை” வகை உரையாடல்கள்தான்.

12.10.2022 குமுதம் இதழில் திரு மாலன் அவர்கள் என் ஜன்னலுக்கு வெளியே கட்டுரையில் ‘மணி படமாக எடுத்திருக்கும் இக்கால கட்டமும்  மக்கள் மத்தியில் ஓர் மனஎழுச்சி ஏற்படும் காலம்தான், அது தமிழர்களின் தொன்மை குறித்த பெருமிதம் காரணமாக ஏற்படும் மன எழுச்சி’ என்று கூறுகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இரு வாரங்களில் இங்கும் நான் உரையாடியவர்கள் பலர் அதைக் கூறுகிறார்கள்.

‘Goosebumps moments’ என்றெல்லாம் இல்லை  ஆனால்  ஐந்து வயதிலேயே பாடப்புத்தகங்களுக்கு  அப்பாற்படட வாசிப்பை  ஊக்குவித்த என் அம்மாவையும், புத்தகங்கள் சேர்க்கும் பழக்கம் கொண்டிருந்த அப்பாவையும் நினைத்துக் கொண்டபோது கண்கள் கலங்கின.   என் அம்மாவின் வழிநடத்தல்தான் உங்கள் எழுத்துகளிடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. திரையில் உங்களைக் கண்டு கொண்ட சந்தர்ப்பங்களில்  உணர்ச்சிவசப் பட்டேன்.

ஒரு பெரும் நிறைவு மனதில் உள்ளது. இது சாத்தியப் படக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும். உங்கள் பங்களிப்பினால் இத்திரைப்படம் என் மனதுக்கு இன்னும் கூடுதல் நெருக்கம்.

ரவிச்சந்திரிகா

 Oakville, Ontario, Canada

*

அன்பு ஜெ,

நேற்று தான் பொன்னியின் செல்வன் படம் பாரத்தேன். மிக பரபரப்பாக பேசப்பட்டு பல்வகையான விமர்சனங்களால் சூழப்பட்டு முண்டியடித்து பார்த்துக் கொண்டிருக்கும் எந்தப்படத்தையும் பொறுமையாகவே பார்ப்பதுண்டு. மதுரையில் அனைத்து திரையரங்குகளும் நிரம்பியிருந்தது. படம் வந்து ஒரு வரத்திற்கு மேலாகியும் ராஜபளையத்திலும் சீலுத்தூரிலும் சிறு அரங்குகள் முதற்கொண்டு அனைத்தும் நிரம்பி வழிகிறது. நீண்ட நாள் கழித்து எங்கள் ஊரிலுள்ள திரையரங்குகளில் எல்லா காட்சிகளுக்கும் இத்தனை கூட்டமாக மக்கள் செல்கிறார்கள் என வீட்டில் பேசிக் கொண்டார்கள்.

கடந்த ஒரு வருடங்களாக என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் வேறொரு காலத்தில் வாழ்ந்து மீளும் ஒரு பயணத்தை வெண்முரசு அளித்து வருகிறது. உங்கள் செறிவான மொழி, காட்சி சித்தரிப்புகள், அணிகலன்கள், போர்க்காட்சிகள், உணர்வுகள், பொருட்கள், அரண்மனைகள் என அனைத்தையும் கொண்டு நான் உருவாக்கிக் கொண்ட புனைவுக் காட்சிகளும், மனிதர்களும் என் புனைவுலகில் இருக்கிறார்கள். அவர்களை அவர்களின் அகத்தை பொன்னியின் செல்வனில் பார்த்தேன்.

உங்களுடைய திரைக்கதைப்படி, வசனப்படி நந்தினியின் வஞ்சமோ, குந்தவையின் சூழ்ச்சியோ பிரதானமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் திரையில் அனைத்தையும் தகர்க்கும்படி விக்ரம் தன் நடிப்பினால் காதல் பிரிவின் வலியை கடத்தியிருந்தார். ஆதித்த கரிகாலனில் நான் துரியனின், கர்ணனின் வலியையே பார்த்தேன். பிரிவில் பித்தாகி செயல் செயல் என தன்னை மாய்த்து கரைந்து போவதை அவர் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்க்கும்படியாக படம் அமைந்திருந்தது. அது பார்த்தனின் அலைக்கழிதல் போல உக்கிரமாக இருந்தது. ஆதித்தன் இரண்டாம் முறை நந்தினியைக் கண்டபோது கூட வீரபாண்டியனை கொல்லாமல் அவளை பெரு நஞ்சாக மாற்றாமல் இருந்திருக்கலாம் என்பதை பின்பு தான் உணர்கிறான். ஆனாலும் பிரிவின் வலியும், செயலின் வெறியும் அவனை மிருகமாக மாற்றிவிட்டதாகக் கூறுகிறான். ”எல்லாமும் அவளை மறக்கத்தான்” என அவன் மூர்க்கமாகக் கத்தும்போது உணர்ச்சிகரமாகி அழுகை வந்துவிட்டது. கணகணமும் அந்த வலியைக் கைக்கொண்டவன் போல ஆதித்தனின் முகம் நெஞ்சில் பதிந்துவிட்டது.

ஆதித்தனின் பிரிவின் வலிக்கு அடுத்தபடியாக நந்தினியின் நஞ்சு மிக அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஐஸ்வர்யாவின் தோற்றமும், அதன் வழியான அவரின் நடிப்பும், வசனங்களுமென அந்த நஞ்சை, வலியை மிக அழகாக காண்பித்திருக்கிறார். ஒரே சமயத்தில் அவரால் விக்ரமின் மேலான காதலையும் பெரு வஞ்சத்தையும் காண்பித்துவிட முடியுமளவான கண்களையும் உடல்மொழியையும் கொண்டிருக்கிறார். ஆண்டாளாக ஆழ்வார்க்கடியானால் வளர்க்கப்பட்டவள், ஆதித்தனை காதலித்து, குந்தவையின் சூழ்ச்சியால் துரத்தப்பட்டு, வீரபாண்டியனை திருமணம் செய்து, அவனையும் இழந்து, கிழவரை மணந்து தன் அழகையும் காதலையும் முழுமையாக வெளிப்படுத்தவியலாத ஒரு நிறைவின்மையைக் கொண்டிருக்கிறாள். அந்த நிறைவின்மை படம் முழுவதும் அவள் வரும் அனைத்து இடங்களிலும் காட்சியின் வாயிலாகவும், நடிப்பின் வாயிலாகவும் கடத்தப்பட்டுள்ளது. ஒரு நொடி அந்த அரியணையில் அவள் தன் உருவத்தை கற்பனை செய்து பார்த்த கணம் ஐஸ்வர்யாவின் அந்த உணர்வுகள் வழியாக நான் தரிசித்தது காந்தாரியை, குந்தியை, திரெளபதியைத் தான்.

மூன்றாவதாக என்னைக் கவர்ந்தது ஜெயம்ரவியின் நடிப்பு. தர்மத்தின் தலைவன், வீரன், சமன் குலையாத தன்மை, அரசன், யாவற்றிற்கும் மேலாக பொன்னியின் செல்வன். விண்மீன் உதிப்பதற்கான பொருளாகப் போகிறவன், ஊமைராணி என்ற விளக்கவியலாத ஒரு சக்தியால் ஒவ்வொரு மரணத் தருவாயிலும் காப்பற்றப்படக் கூடியவன். ஒரு செயலுக்காக இந்த பிரபஞ்சம் அவனை வைத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்தவனாக, ஒரு போதும் தர்மத்தை மீறாதவனாக அவன் எனக்கு தர்மனையும், பார்த்தனையும் நினைவு படுத்தினான். தர்மனில் இல்லாத செயலையும், பார்த்தனில் இல்லாத சமநிலைத்தன்மையையும் ஒருங்கே கொண்டவன்.

மூன்றாவதாக படம் நெடுகே வரும் வந்தியத்தேவன். பெண் விரும்பி, காதலன், தீராப்பயணி, புதிய அனுபவங்களை விளையாட்டாக ஏற்றுக் கொள்பவன், திறமைசாலி, சிறந்த தூதன், வீரன், நல்ல நண்பன், கொடுத்த பணியை வெற்றியோடு முடிப்பவன் என ஒரு பல்வகைத்திறன் கொண்டவனாக இருக்கிறான். கார்த்தி தன் இயல்பிலேயே இவற்றைக் கொண்டிருப்பவர் போல நடித்திருப்பது படத்தை விறுவிறுப்பாக வைத்துள்ளது. எல்லோராலும் விரும்பப்படும் ஒருவன். யாவற்றையும் மேலோட்டமாக கடந்துவிடுபவன் என துள்ளலான நடிப்பால் நடித்ததே தெரியாமல், துருத்தாமல் இருந்ததால் அவர் படம் நெடுக வந்தாலும் அதில் பொருந்தி அமைந்துவிடுகிறார். கார்த்தியில் நான் கண்டது தேடலின் நிமித்தம் பார்த்தனையும், நண்பன் எனும் இலக்கணத்திற்காக ஒரு பொழுது சாத்தியகியையும், ஒரு பொழுது பூரிவசிரஸையும் தான்.

அதன் பின் உள்ளத்தின் ஆழத்தில் தன் காதலை ஒளித்து வைத்திருக்கும் பூங்குழலி. எப்போதும் பொன்னியின் செல்வரின் நலம் விரும்புபவள், அவரை ஆபத்திலிருந்து காப்பாற்ற தன் உயிரையும் கொடுக்க தயாராயிருப்பவள், சுதந்திரமான பெண், அழகி என நின்றிருக்கிறாள். தன் நடிப்பில், உடல் மொழியில் என பொன்னியின் செல்வனின் மேலுள்ள காதலை, ஏக்கத்தை, வெளிப்படுத்திவிட்டார் பூங்குழலி. பூங்குழலியில் நான் பார்த்தது பார்த்தனின் சுபகையை. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உடனிருத்தல் கூட ஒரு பொருட்டாக அன்றி, பார்த்தனுக்கு நன்மையை மட்டுமே விளைந்தவள் சுபகை. காதலை அளிப்பவள் மட்டுமே. பெறுவதற்காக கூட எதிர்பார்க்காது நிற்பவள். பூங்குழலியின் அசைவுகள் சுபகையையே நினைவூட்டியது. அதயும் தாண்டி அவளின் வீரம் சுபகைக்கு மேலாக அவளை நிறுத்தியது.

குந்தவை மிக எளிய அரசியாக, அண்ணன்கள் மேலுள்ள பாசமுள்ளவளாக, காதலிக்க ஏதுவான அழகியாக மட்டுமே முதல் சந்திப்பில் பொருள் கொண்டாள். ஆனால் ஆதித்தன் மூலம் அவள் தான் நந்தினியை துரத்தி விட்டாள் என்று அறியும்போது மிக இயல்பாக மிகப்பெரிய உருவமாக மாறிவிடுகிறாள். அந்த இடத்திலிருந்து குந்தவை முன்பு தோன்றிய இடத்தில் அவள் செய்த அறிவார்ந்த சலனமற்ற சூழ்ச்சிகளின் பின்னுள்ள பிரம்மாண்டத்தை அது காட்டியது. எளிய பெண்ணாக இருந்து அரசியாக ஆசைப்படும் நந்தினிக்கும், இயல்பிலேயே, ரத்தத்திலேயே அரசியாக இருப்பவளிடத்திலுமுள்ள வேறுபாடு அந்த சமநிலைதான். அந்த மிடுக்கான நடையில் ஒரு சிறு துளி திரெளபதி குந்தவையில் மின்னி மறைந்தாள்.

ஆழ்வார்க்கடியான் வரும் தருணங்களை விஷ்ணுபுரத்தின் வைஷ்ணவர்களின் படையல் தருணத்தை நினைவூட்டியது. அவருக்கு கொடுக்கப்பட்ட அத்தனை வசனங்களும் பகடியாக அமைத்திருந்தீர்கள். வெண்முரசிலும் அத்தகைய தருணங்கள் அதிகம் உண்டு. சைவ, வைஷ்ணவர்களின் சண்டைகள் வழியாக இருவரையும் பகடி செய்வது, “ஏண்டா புத்தனும் விஷ்ணு என்ன” என கார்த்தி பகடி செய்வதும் என ஆழ்வார்க்கடியான் வழியாக அந்த காலகட்டத்தைய சமயப்பூசல்கள் அருமையாக காட்டப்பட்டுள்ளது.

பதவிக்கு வர ஆசைப்படும் மதுராந்தகனின் நியாயத்தையும் கூட எடுத்துரைத்த விதம் பிடித்திருந்தது. ஒரு கணம் துரியனின் நியாயம் மதுராந்தகன் தன் ருத்ராட்ச மாலைகளை பிய்த்து தன் தாயின் முன் எறியும் போது மின்னி மறைந்தது. ஆதித்தனால் புண்பட்ட இலங்கை அரசன் சொல்லும் வசனம் அருமை. அந்த நஞ்சு துருபதனின் நஞ்சுக்கு இணையாக வைக்கத்தக்கது.

எல்லாவருக்கும் அவரவர் தரப்பு நியாயங்களை சொல்லியிருக்கிறீர்கள். பழுவேட்டரையர், சிற்றரசர்கள் தரப்பு என யாவருக்கும் அவரவர் நியாயம் உள்ளது. நிலமாக, காட்சியாக “என் மண்” என்று பெருமிதம் கொள்ளும் ஒரு உணர்வு படம் முழுக்கவே வெளிப்படுமளவு ஆடைகளில், அணிகலன்களில், மோர்ப்பந்தலில், செம்பியன் மாதேவி என்ற பெயரில், பாண்டியன் என்ற சொல்லில், கொற்றவை தெய்வத்தில், தேவராளன் ஆட்டத்தில், குருதிப்பலியில் என உணர்வுப்பெருக்காகவே அமைந்திருந்தது. இங்கிருந்து கிளைவிரித்து செல்லக்கூடிய பல கதைகளுக்கு வாயிலாக படம் அமைந்துள்ளது. வெறும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படமாக நான் இதைக்கருதவில்லை. படத்தின் வழி ஒவ்வொரு மனிதரின் அகத்தின் வழி பயணம் செய்யக்கூடிய அனுபவத்தை  வசனமும், திரைக்கதையும் அளித்துள்ளது. ஆதித்தகரிகாலனின் காதல் பிரிவும், செயல்வன்மையும், நந்தினியின் வஞ்சமும், குந்தவையின் சூழ்ச்சியும், பொன்னியின் செல்வரின் அறம் வழுவாமையும், வந்தியத்தேவனின் துள்ளலும், நட்பும், இளமையும், பூங்குழலியின் தூய அன்பும் என எந்த மானுடனும் பொருத்திப் பார்க்க வல்ல உணர்வுகளால் படம் நிரம்பியுள்ளது. பிற வரலாற்றுப்படங்களில் ஒரு அந்நியத்தன்மையைக் கண்டிருக்கிறேன். ஒரு போதும் அவர்களை நம்மோடு பொருத்தி பார்த்துக் கொள்ள முடியாதபடி எங்கோ அமர்ந்திருப்பார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் வழியாக செய்யும் அகப்பயணத்தின் வழி அவை நம் அகத்தின் ஆழத்தை தீண்டக்கூடியது. வசனத்தின் ஒவ்வொரு (ச்)சொல்லையும் ரசித்தேன் ஜெ. மிக அருமையாக படமாக்கியுள்ளார்கள். அதன் தொழில்நுட்பம் பற்றி மதிப்பிட இயலும் அளவு எனக்கு நுட்பமில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாக ரசிகனாக இதன் செவ்வியல் தன்மையை உணரமுடிந்தது. உங்களுடைய பெயரை பெரிய திரையில் மிகப்பெரிய எழுத்தில் கண்டது பெருமிதமாக இருந்தது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு உங்களுக்கும், குழுவுக்கும் வாழ்த்துக்கள்.

ரம்யா.

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசுக்கூடுகை 53
அடுத்த கட்டுரைஎழுத்தறிவித்தல், கடிதம்