தனிமையோகம்

தனிமையும் இருட்டும்

அன்புள்ள ஜெ

சற்றேறக்குறைய கடிதம் எழுதி ஒரு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று காலையில் தனிமையும் இருட்டும் பதிவை வாசித்த பின் தொடர்ந்து வரும் கேள்வி ஒன்றுள்ளது.

வெண்முரசை வாசித்து முடித்தவுடன் என்றோ ஒருநாள் அந்த யோகத்தனிமையில் சென்று அமர்வீர்கள் என நினைத்து கொண்டேன். இன்று அது எந்தவகையானது என்று எந்த அனுபவமும் எனக்கில்லை. ஆனால் இங்கிருக்கும் எதுவும் அல்ல அது என்பது தெளிவு. மானுட மொழியில் அமையும் இன்பமோ துன்பமோ தனிமையோ விரக்தியோ அருவருப்போ வன்முறையோ கருணையோ எதுவுமல்ல. நம் எல்லைகளுக்கு அப்பால் அமையும் பிறிதொன்றிலாமை. வெகு அரிதாக சிந்திக்கையில் சித்தம் சென்று ஸ்தம்பிப்பதை அணு துளியென்று அறிவதுண்டு. அந்த இடத்தை நீங்கள் சென்றடைவதை உணர்ந்தவுடன் இப்போதைக்கு இல்லை என்ற ஆசுவாசமும் ஏற்பட்டது. வாசக அற்பத்தனம் தான். இருந்தாலும் மறைப்பதற்கோ நாணுவதற்கோ தேவையில்லை என்று நினைக்கிறேன்:)

இந்த பதிவை வாசிக்கையில் ஜெ 60 மணிவிழாவில் நீங்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. உங்களது நெகிழ்ச்சி மிக்க உரைகளில் ஒன்று அது.

“நீ ஒரு எழுத்தாளன் மட்டும் தான். விழித்திருக்கும் கணம் முழுக்க எழுத்தாளனாக வாழ்வதே அவர் எனக்கு விதித்திருக்கும் கடமை. எழுத்தாளன் அன்றி பிறிதொன்றல்ல.” என்று அம்மாவின் சொற்களை நினைவு கூர்கிறீர்கள்.

எழுத்தாளன் தனிமையில் இருப்பவன். எனினும் உலகியலுக்கு அப்பால் சென்றவன் அல்ல. விண் அளாவும் பருந்தே காவிய கர்த்தன். ஆனால் அவன் பாடு பொருள்கள் மண்ணுக்குரியவை.

உங்களை எழுத்தாளராக செதுக்கி கொண்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இப்புவியில் பிறக்கையில் நம் மேல் விழும் அடையாளம் குடி அடையாளம் மாத்திரமே. நவீன யுகத்தில் அதை திமிரவே அத்தனை உள்ளங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஒருகட்டத்தில் பெரும்பாலானவர்கள் அத்தளையே இனியே கூடாக கதகதப்பை தருவதை உணர்கிறார்கள். அந்த உணர்வு தன் செயல்களால் அடையாளத்தை உருவாக்கி கொள்ள இயலாதவர்களின் மன ஆறுதல். நீங்கள் அவர்களில் ஒருவரல்ல. அன்னையின் கனவை செயலாக்கி தன் நிமிர்வுடன் எழுத்தாளன் என்று நிற்பவர்.

அதாவது நீங்கள் ஒரு எழுத்தாளராவது கருவில் முதிர்ந்த கனவு. ஆறுபது ஆண்டு காலத்தில் ஒவ்வொரு துளியும் அதன் பொருட்டே செலவிட்டும் இருக்கிறீர்கள். அண்ணன், தம்பி, தந்தை, மைந்தன், காதலன், கணவன் என்று அத்தனை வேடங்களும் எழுத்தாளன் என்ற தன்னுணர்வை தீட்டி கொள்ள பயன்படுத்தியிருக்கிறீர்கள். வெண்முரசு என்னும் அனல் தவத்திற்கு பின்னும் அன்னையின் சொற்கள் கூர் மழுங்காது நின்றிருப்பது அதன் வலிமைக்கு சான்று.

இந்நிலையில் எழுத்தாளன் என்ற அடையாளத்தையும் உரித்து போர்த்திய பின் தானே யோகாரூடனாக விற்றிருக்க இயலும் ? அல்லது எழுத்தாளன் சென்றடையும் யோகத்தனிமை என்பது ஒரு யோகியினுடையதில் இருந்து வேறானதா ?

அப்படி யோகத்தனிமையில் விற்றிருத்தல் என்பது விசாலாக்ஷி அம்மாவின் கனவில் இருந்து நிறைந்து வெளியேறுவது தானே ?

அன்புடன்

சக்திவேல்

பி.கு: ஒருவேளை இந்த கேள்விகளுக்கு சொல்லில் விடை இல்லையா ? சொல்லப்படுவதை தேடிச்சென்று உணர்ந்தால் தான் உண்டா ?

*

அன்புள்ள சக்திவேல்,

இக்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. இவை அகவயமான அனுபவங்கள். இவற்றை பொதுமைப்படுத்தி வரையறை செய்து சொல்லமுடியாது, சொல்லக்கூடாது.

சிலவற்றைச் சொல்லலாம், ஓர் அனுபவப் பகிர்வாக. அது வாசிப்பவர் சிலருக்கு அவர்களின் அகத்தை புரிந்துகொள்ள உதவமுடியும்.

இந்தப் புவியில் உள்ள எல்லா உயிர்ப்பிரக்ஞைகளும் ஒன்றாக, ஒட்டுமொத்தமாகவே உள்ளன. தாவரங்கள், சிற்றுயிர்கள், பேருயிர்கள் எல்லாமே. இந்தப் புவியில் உள்ள எல்லா தனிப்பிரக்ஞைகளும் தனிமையிலேயே உள்ளன. எவற்றுக்கெல்லாம் அப்பிரக்ஞை உள்ளதோ அவையெல்லாமே.

தனிப்பிரக்ஞையையே ஆணவமலம் என்றனர். அணுவாக இருக்கையிலேயே உயிர் உணரும் ‘நான் இருக்கிறேன்’ என்னும் உணர்வு அது. ‘நான் வளர்க’ என எண்ணுவது அதன் அடுத்த படிநிலை.

கைக்குழந்தைக்குக் கூட அந்த தன்னுணர்வு உண்டு. (மேலைநாட்டு உளவியலாளர் 18 மாதம் வரை அதெல்லாம் இல்லை என்பார்கள். அதெல்லாம் அவர்களின் அறிவின்மை) கைக்குழந்தைகூட தன்முனைப்பு கொண்டிருக்கும். அவமதிப்பை உணரும், சீண்டப்படும், சீற்றம் கொள்ளும். முலைக்கண்ணில் இருந்து அதன் வாயை கொஞ்சம் விலக்கிப் பார்த்தால் தெரியும்.

அங்கிருந்து தொடங்கும் அந்தத் தனிமை கடைசிவரை நீடிக்கும். ஒவ்வொரு உயிரிலும். அந்த தனிமையை ஈடுகட்ட ஒரே வழி தனிப்பிரக்ஞையை விரித்து விரித்து உயிர்ப்பிரக்ஞை என ஆக்கிக்கொள்ளுதலே. ‘வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ என்னும் உளநிலை. இங்குள்ள அனைத்துமே நான் என்னும் மனவிரிவு.

நாம் இயற்கையில் இருக்கையில் உணரும் பெருநிலை என்பது அதுவே. இசை கேட்கையில், கலையனுபவங்களில், மாபெரும் அறிதலனுபவங்களில் அடைவது அதையே. சேவையில், அறிவுச்செயல்பாட்டில் அடைவதும் அதுவே. உறவுகளில், நட்புகளில் மகிழ்கையிலும் அதையே அனுபவிக்கிறோம். பெருந்திருவிழாக்களில் கூட்டங்களில் கரைகையிலும் அவ்வுணர்வை அடைகிறோம்.

நாம் வாழ்வது இவ்விரு புள்ளிகள் நடுவே. தனிப்பிரக்ஞையால் தனிமையை அடைந்து உடனே உயிர்ப்பிரக்ஞையால் அத்தனிமையை வென்று மீண்டும் தனிப்பிரக்ஞை நோக்கி வருகிறோம். அனைவருமே இவ்விரு புள்ளிகள் நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் கலைநிகழ்கையில் அந்த ஊசலாட்டத்தை மிகப்பெரிய அளவில், மிகத்தீவிரமாக அடைகிறார்கள்.எல்லா கலைப்படைப்புகளும் கலைஞனின் அகத்தனிமையில் இருந்து தொடங்குகின்றன. அவன் அதை வென்று இயற்கையென்றே, பிரபஞ்சமென்றே தன்னை உணர்கையில் நிறைவடைகின்றன. மீண்டும் தனிமை.

அந்த தனிமையை கலைஞன், எழுத்தாளன் எழுதித்தான் கடக்கமுடியும். எளிமையாக மற்றவர்கள் போல உறவுகளிலோ பிறவற்றிலோ ஈடுபட்டு கடக்கமுடியாது. நான் எழுதும்போது தனியன். முடிக்கையில் பேருருவன். மீண்டும் அதிதனியன்.

யோகிகள் அந்த தனிமையை தவிர்க்கும் பயணங்களை கைவிட்டுவிட்டவர்கள். அந்த தனிமையை மேலும் மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டே செல்வர்கள். யோகத்தன்மை, யோக இருள் என அது சொல்லப்படுகிறது. பிறர் தனிமையை தவிர்க்க சென்றடையும் உயிர்ப்பிரக்ஞையை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

அந்நிலையில், அதன் உச்சியில் பிரபஞ்சப்பிரக்ஞை ஒன்று அவர்களுக்கு வாய்க்கிறது. அவர்கள் பிரபஞ்சமென்றாகி அமர்ந்திருக்கிறார்கள். அதுவே சமாதி எனப்படுகிறது. அது வேறொரு தளம்.

’பிரக்ஞையே பிரம்மம்’ என்னும் நிலையில் இருந்து ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ என்று செல்லும் ஓர் ஊசலாட்டத்தையே சொன்னேன். அவை இரண்டையும் கடப்பவன் ‘இறையே நான்’ என அமர்கிறான்.

அவ்வளவுதான், அதற்குமேல் விளக்க முடியாது. விளக்க விளக்கக் குழப்பமே மிகும். உணரமுடிந்தால் நன்று. இல்லையேல் காத்திருங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் எங்கள் உயிர்நிதி
அடுத்த கட்டுரைஸ்வீடன் வானொலி, நூலகம்