தெய்வங்களின் கதைகள்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – வாங்க

தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும்  குறிப்பாக  கிராமங்களுக்கு  சென்றாலும் பல  சிறு தெய்வங்களை  கடந்து தான்  நாம் போக வேண்டி இருக்கிறது .நான் முதலில் பணியாற்றிய தஞ்சை மாவட்டத்தில் கடைக்கோடி பகுதி கிராமங்களில் ஒரு தெருவுக்கு ஒரு சிறு பீடமோ அல்லது அய்யனார் குதிரைகளோ இருக்கும் . சில பகுதிகளில் முனியசாமி சிலைகள்  எங்கு பார்த்தாலும் கண்கள் உருட்டி நம்மை மிரட்டும் பாவனையில் இருக்கும் .

அப்போதெல்லாம் இவ்வளவு  சாமிகள் எப்படி வந்தனர்? என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் .பெருந்தெய்வங்கள் பற்றிய வரலாறு நமக்கு நிறைய படிக்க கிடைக்கிறது . தேவாரம் , நாலாயிர திவ்ய பிரபந்தம் என பெருந்தெய்வங்கள் பற்றி நமக்கு நிறையவே தெரியும் .ஆனால் சுடலை மாடன் பற்றியோ முனியன் பற்றியோ சிறு தகவலோ     தரவுகளோ  நமக்கு   ஏதும் பெரிதாக கிடையாது .ஒரு சில நட்டார் பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன .நான் அந்த நாட்டார் பாடல்களை கூட  படித்ததில்லை . அனால் இந்த சிறு தெய்வங்களுக்கு பின்னால் உள்ள வரலாறு என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தேன் .

“தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் ”   நேற்று படித்தேன் குமரி மாவட்டத்தை சுற்றியுள்ள சிறு தெய்வங்கள் பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது . லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரையில்  கோணங்கி அவரிடம்  ” உங்க ஊர்ல ரெண்டு கிலோமீட்டர் தாண்டுரதுக்குள்ள எட்டு சுடலைய தாண்ட வேண்டியிருக்கு ?” என்று சொன்னது இந்த புத்தகத்துக்கு சாலப்பொருத்தம். “இரண்டு கதையுலகங்கள்” தொடங்கி “வரலாறு அறியாத விழிகள் ” வரை பல கிராமிய தெய்வங்கள் பற்றியும் குல தெய்வங்கள் பற்றியும் பேசுகிறது இந்த புத்தகம் .

நமது வரலாறு புறவயமாக பிரிட்டிஷாரால் எழுதப்பட்டது ஆனால் அவர்கள் பார்வையில் சற்று இலக்கார தொனியில் . அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் உள்ள தெய்வங்களை பெரும்பாலும் பேய்களுக்கு நிகராகவே எழுதினர் .ஸ்ரீரங்கம் பெருமாளை கரிய சாத்தனை போல தான் அவர்கள் வருணித்தார்கள் .பிறகு சிறு தெய்வங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

நமது சிறு தெய்வங்கள் தான் நமது உண்மையான வரலாறை சொல்வன. நமது வரலாறு எங்கோ டெல்லியிலோ அல்லது வேறு எங்கோ இல்லை நமது அருகில் தான் உள்ளது என்பதை நமக்கு உணர்த்துபவை இந்த சிறு தெய்வங்கள் .நமது தேவதைகள் நமது எதிரிகளுக்கு சைத்தான்கள் இது போல அடுத்தவர் தெய்வங்கள் நமக்கு பேய்கள் அவ்வளவே .இது தான் உலகம் முழுதும்  உள்ள போது புத்தி . முதல் கட்டுரை வசதி படைத்தவர்களுக்கு காமதேனுவும் கர்ப்பக விருட்சமும் இருப்பது போல ஏழைகளுக்கு பனை மரமும் எருமையும் தெய்வங்களால் வழங்கப்பட்டதை உணர முடிகிறது.

எந்த கதைக்கும் ஒரு வெள்ளை  வடிவம் இருப்பது போல் கருப்பு வடிவம் உண்டு என அறிய முடியும் .ஜியேஷ்டை  என்ற வேர் சொல்லில் இருந்தே சேட்டை என்ற பதம் வந்ததாக சொல்லி பத்மநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில்  சேஷ்டை என்ற சிற்பத்தை பார்த்த போது அவலட்சணமாக செதுக்கப்பட்டதை இதனுடன் தொடர்புபடுத்தியது அருமை .ஒவ்வொரு கட்டுரையும் ஆழ்ந்த வரலாற்ற்று பின்னணியிலும் ஆய்வு நோக்கிலும் எழுதப்பட்டது அருமை . சிலர் எல்லா தவறுகள் செய்தாலும் கடைசியில்  அவர்களால் பாதிக்கப்பட்டவர்களால்  வழிபடப்படுவது ஒரு முரண் ஆனாலும்   அதுவும் ஒரு நீதி தான் .சிலர் தான் செய்த தவறுக்கு பரிகாரமாக தன்னால் பாதிக்கப்பட்டவர்களை தெய்வமாய் வணங்குவதும் எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம் அன்றி வேறில்லை .இதை எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெ

அன்புடன் செல்வா

பட்டுக்கோட்டை

முந்தைய கட்டுரைரிஷி சுனக்
அடுத்த கட்டுரைஒவைசி, கடிதம்