அதனுடன் “சுபமங்களா” இதழில் தாங்கள் இவ்வாறு எழுதியிருந்தீர்கள்.
”சுபமங்களாவில் புழங்கும் மொழி எழுபதுகளில் சிறு பத்திரிக்கை சூழலில் உருவானது. அன்று அது சிக்கலானதாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இன்று ஒவ்வொரு சிந்தனைத் துறைகளும், அதற்கே உரிய மொழியை, சொற்றொடர்களை, கலைச் சொற்களை தேவையாக ஆக்கியது.
இதற்கான முயற்சிகள் தொடர்ந்து சிறு பத்திரிகைகளில் நடந்து வருகின்றன. இதை உணராத, இதற்காக தங்களை தயார்படுத்தாத எவரும் சிறு பத்திரிகை உலகில் நுழைய வேண்டிய தேவை இல்லை.
எந்த அறிவுத்துறையிலும் அதற்கான குறைந்தபட்ச பயிற்சி இல்லாத ஒருவனை அனுமதிப்பதில்லை.
கருத்து நிலையின் மையத்திலேயே தீவிர விவாதங்கள் நிகழ்கின்றன. அங்குதான் உயர்ந்த அழகியலும் முன் வைக்கப்படுகிறது. அவற்றின் சாராம்சமே பல்வேறு ஸ்தாபனங்கள் – கட்சி, தொழிற்சங்கம் முதலானவை மூலம் கீழிறங்கி மனத் தயாரிப்பு குறைந்த ஜன கோடிகளை அடைகின்றன. ஆரோக்கியமான சமூகத்தின் கவனம் முழுக்க அதன் கருத்து நிலை மையம் நோக்கி குவிந்திருக்கும். அங்கு நிகழும் மாற்றங்கள் அது பல்வேறு தளத்தில் ஏற்று தானும் மாறிக் கொண்டிருக்கும். சமூகத்தின் சகல ஸ்தானபனங்களும் இப்படி மையத்திலிருந்து வெளி வட்டம் நோக்கி பிரியக் கூடியவையே.
இங்கு நம் சூழலில் அதன் நகர்வு கருத்துநிலை நோக்கி இல்லை காரணம் அதன் கவனம் கேளிக்கை நோக்கி திருப்பப்பட்டிருக்கிறது
(1992 சுபமங்களா இதழ்)
மைய ஓட்டமும் மாற்று ஓட்டமும் இந்த கட்டுரையை ஜுலை 2010-ல் எழுதியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகு 2014-லில் “அன்றைய எழுத்தாளர்களும், இன்றைய விவாதங்களும்” என்கிற தங்களின் கட்டுரை.
அதில் கடந்த பதிற்றாண்டுகளில் எஸ்.ரா. முதற்கொண்டு பலருடைய முக்கியமான ஆக்கங்களை தொகுத்து தந்திருந்தீர்கள். இந்த தளத்தின் வழியாக நாள்தோறும் வந்துக் கொண்டிருக்கும் இலக்கிய. சமூக கவனஈர்ப்புகள் நம்பிக்கையளிக்கும் வகையிலேயே உள்ளன. சலிப்பும், சோர்வும் இல்லாத ஒரு நூறு இளைஞர்கள் தமிழகம், உலகின் வெவ்வேறு ஊர்களிலிருந்து கொண்டு பெரும் விசையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலமாக – வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத ஒரு இலக்கிய இயக்கம் இங்கு, இந்த நிகழ்கணத்தில் இருப்பதை காண்கிறேன். ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு, அதீத நம்பிக்கையின் மிகை மதிப்பீடா, உண்மையிலேயே களநிலவரம் எல்லா (இலக்கிய) போக்குகளையும் கொண்டிருக்கிறதா, போதாமை ஏதேனும் இருக்கிறதா, திடீரென்று இப்படித் தோன்றியது,
”வலி” என்கிற கட்டுரை. கோமல் சுவாமிநாதன் அவர்களை, நினைவுகூர்ந்த போது, சுபமங்களா இதழ் தொகுப்பை ஒரே மூச்சாக காலையிலிருந்து புரட்டிக் கொண்டிருக்கிறேன். அவர் மறைந்தும் முப்பதாண்டுகள் ஆக உள்ளன. அதில் நித்யாவின் கட்டுரை ஒன்றை நிர்மால்யா மொழிபெயர்த்திருந்தார். ஜகன் மித்யை, மண் எல்லாம் அங்கு படித்தது நினைவுக்கு வந்தது. வலியுடன் இயங்கிய கோமல் நினைவுக்கு வந்தார்.
1992- 2022 முப்பதாண்டுகள். இந்த தீவிர சிற்றிலக்கியத்தில் இடைவெளியின்றி தொடர்ந்து வாசகனாக இருந்தது என் கொடுப்பினை என்றே கருதுகிறேன். மரணத்தை “இடைவெளி” என்பார் சம்பத். இதற்கிடையில் இங்கு போட்ட(?) / கண்ட சண்டைகளெல்லாம் வேடிக்கையாக உள்ளது, வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருந்ததாகவே படுகிறது. இங்கு படைப்பாளி கேளிக்கை களியாட்டம் ஆடவில்லை, பிரதி நுகர்வுப் பண்டமும் அல்ல, வாசகனும் நுகர்வாளன் அல்ல. இந்த முக்கோணம் இங்கு தமிழ்ச் சூழலில் நம்பிக்கையளிக்கும் அளவுக்கு முன் நகர்ந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன் – நேரமிருக்கும் போது இதைக் குறித்து சிறிதாக ஏதேனும் கூறுங்கள், ஜெ!
கொள்ளு நதீம்
ஆம்பூர்
அன்புள்ள கொள்ளு நதீம்,
இன்றைய சூழலை பார்க்கும் போது ஒருவருக்கு சலிப்பு உருவாகலாம். இன்று சுபமங்களா காலகட்டத்தில் இல்லாத ஒரு புதுச்சூழல் உருவாகியிருக்கிறது. ஊடகப்பெருக்கமும் சமூக ஊடகமும். சுபமங்களா கட்டுரையை எழுதும்போது சமூகத்தின் கவனம் முழுக்க கேளிக்கையை நோக்கி திரும்பியிருப்பதைப் பற்றி சொல்லியிருந்தேன். இன்று சமூகம் கவனிப்பது அது வெளிப்படும் சமூக ஊடகங்களை மட்டுமே. தானே பேசி தானே கேட்டுக்கொள்கிறது. சமூக ஊடகங்களை ஆள்பவர்களையே அது செவிகொடுக்கிறது. கருத்துநிலை நோக்கி அதன் கவனம் இன்றும் இல்லை. இன்றும் தமிழகத்தில் அறிவியக்கத்திற்கு எந்த இடமும் இல்லை. நேற்று வலுவான கேளிக்கையாளர்கள் கவனிக்கப்பட்டனர். இன்று சமூக ஊடகங்களில் பாமரர்களை பாமரர்கள் கவனிக்கிறார்கள்.
ஆனால் சுபமங்களா வந்த காலகட்டத்தில் இருந்த கைவிடப்பட்ட தன்மை இன்று அறிவியக்கத்துக்கு இல்லை. இன்று அறிவியக்கச் செயல்பாடுகள் பலமடங்கு பெருகியிருக்கின்றன. வாசிப்பும் எழுத்தும் வலுவடைந்துள்ளது. அறிவியக்கம் ஓர் சமூகவிசையாகவே ஆகிவிட்டிருக்கிறது. அதில் ஒரு தொடக்கப்புள்ளியாக சுபமங்களா ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது.
நாம் அன்று அந்த தொடக்கத்துடன் இருந்திருக்கிறோம் என்பது நினைவில் இனிக்கிறது. கோமல் சுவாமிநாதனை எண்ணிக்கொள்கிறேன்
ஜெ