அறுபது -சிவராஜ் கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களது அறுபது வயது நிறைவையொட்டி ‘சியமந்தகம்’ வலைத்தளத்தில் விஷ்ணுபுரம் நண்பர்கள் பகிர்ந்த கட்டுரையை துவக்க நாளிலிருந்து ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினேன். ஓர் எழுத்தாளரை இத்தனைவிதமான கோணங்களில் சக எழுத்தாளர்களும், நண்பர்களும், வாசகமனங்களும் நீர்த்தெளிவின் மொழியில் எழுதியிருந்தது மிகப்பெரும் உளயெழுச்சியை அளித்தது. உங்கள் படைப்புகளில் கண்டெடுத்த உச்சதருணங்களும், உங்களது ஆசிரியத்துணையால் பெற்றடைந்த உணர்தல்களுமாக எல்லா கட்டுரைகளும் ஒருவித அணுக்கம் கொண்டது. அதிலும் குறிப்பாக, எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள் எழுதியிருந்த கட்டுரை அவ்வளவு உணர்வுப்பூர்வமாய் என்னை நெகிழச்செய்தது. அவரது கட்டுரையின் பல இடங்களில் என்னையறியாமல் கலங்கிவிட்டேன். அன்பின் நெருக்கத்திலிருந்த பிறந்த அரவணைப்புச் சொற்களாகவே அவை இருந்தன.

நன்னெறிக் கழகம் சார்பில் கோவையில் உங்களுக்கு மணிவிழா நிகழப்போவதை அறிவித்தவுடன் நிறைவுணர்வும் மகிழ்ச்சியும் தோன்றியது. நிகழ்வில் நான் பங்கேற்கவில்லை எனினும், ஸ்டாலின் பாலுச்சாமி மணிவிழா அந்நிகழ்வில் பங்கேற்று வந்ததுகுறித்து நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தான். உங்கள் மணிவிழா நாளானது எனக்கு இன்னொரு வகையிலும் மனதுக்கு மிக நெருக்கமானது. காரணம், அதேநாளில் இங்கு புளியானூர் கிராமத்தில் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் மூலமாக ஒரு பழங்கிணற்றை மஞ்சரி புனரமைத்து முடித்திருந்தாள். அந்த கிராமம் உருவானபோது தோண்டப்பட்ட கிணறு  அது. பாழடைந்த கிணறு முழுவதும் மீட்டெடுக்கப்பட்டு நீர்சுரக்கும் பொதுக்கிணறாக மீள்பயன்பாட்டுக்கு வந்தது.

அக்கிணற்றின் சுற்றுச்சுவர் தரையில் ஓர் அகல்தீபமிட்டு தன்மீட்சி புத்தகத்தை வைத்து உங்களுக்கான இறைப்பிரார்த்தனையை மஞ்சரி வைத்தாள். நிலம்விழுந்து அவள் நீரைவணங்கிய அந்தக்காட்சி என் அகத்திரைக்குள் மீளமீள தோன்றிக்கொண்டே இருக்கிறது. உங்களது மணிவிழாவிற்கு கலை, இலக்கியம் சார்ந்து மட்டுமில்லாமல் சமூகச்செயற்பாட்டாளர்கள் உட்பட எல்லா மட்டங்களிலிருந்தும் மனிதர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து கிளம்பிவந்து பெருந்திரளாகக் கூடிய அக்கூட்டம், நிகழ்வின் தன்மையைப் பன்மடங்கு ஒளியூட்டினர்.


எத்தனையோ அழகிய தருணங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அய்யா வண்ணதாசனும், எழுத்தாளர் கோபால கிருஷ்ணனும் உங்களுடனிருக்கும் இந்தப் புகைப்படம் என் நெஞ்சுக்கு மிக அணுக்கமானது. அவருடைய முகமலர்ச்சி வணங்கத்தக்க ஒன்றாக என்னை கரங்கூப்ப வைக்கிறது. அதுமட்டுமின்றி, தொடர்வண்டிப் பெட்டிக்குள் அமர்ந்து நீங்களிருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றிக்கொள்ளும் புகைப்படத்தையும் விஜய் சூரியன் அண்ணன் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். அந்த ஒளிப்படத்தை எடுத்து அச்சாக்கி சட்டகமிட்டு மதுரை தும்பி தன்னறம் அலுவலகத்தில் வைத்திருக்கிறோம். அதைப் பார்க்கும்பொழுது எல்லாம் ‘நிபந்தனையற்ற அன்பில் சரணடைதல்’ என்ற வார்த்தைகளை எண்ணிக்கொள்கிறோம்.

எழுத்தாளர் திருச்செந்தாழை அவர்களுக்குப் புதியதலைமுறை தமிழன் விருதளிப்பு நிகழ்வில், “ஒரு மளிகைக்கடையில் வேலைசெய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த என்னை, இந்த எழுத்து உலகத்திற்குள் அழைத்துவந்தது வண்ணதாசனின் படைப்புகள்தாம்” எனச்சொல்லும் காணொளியைக் கண்டேன். அய்யா வண்ணதாசன் அவர்களின் இருப்பும் படைப்புகளும் எத்தனை மனங்களுக்கான அகப்பிணிமருந்து! தன்னுடைய உடல் பலகீனமான சூழ்நிலையிலும்கூட அவர் மணிவிழா நிகழ்வுக்கு வந்துசேர்ந்து உங்களை வாழ்த்திச் சென்றிருக்கிறார். இலக்கியவாதி என்பவர் ஆசிரியநிலையை அடையும் அகத்தருணங்களாக இவைகள் எப்பொழுதும் என்னுள் பதிவதுண்டு.

பள்ளிச்சிறுமிகள் மகிழ்வுடன் வந்து உங்களிடம் கையெழுத்துப் பெற்றுச் செல்லும் காட்சி எனக்குள் ஓர் நீட்சியைத் தோற்றுவிக்கிறது. இன்றைய தலைமுறைகளைக் கடந்தும் அடுத்த தலைமுறைக்கான சொல்லையும் நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள் என்பதை நெஞ்சுணர்கிறது. உச்சங்களில் மட்டுமே உங்கள் உள்ளம் நிலைகொண்டு வாழ்கிறது.

“இது
என்சொல் அல்ல,
என்றுமுள சொல்!”

என்றுரைக்கும் உங்கள் காவிய வார்த்தைகளின் பேருண்மை முன்பாக நாங்கள் பணிந்து வணங்குகிறோம். நிறைவுபெறாத உங்கள் படைப்புகளும் கனவுகளும் விரைவில் நிறைவேற இறைப்பெருங்கருணையை அகவல்பாடி பிரார்த்திக்கிறோம்.

நன்றிகளுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைதற்கல்வியும் தத்துவமும்-3
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி, கிறிஸ்தவர்கள்,ஆபிரகாம் பண்டிதர் -கடிதம்