கல்பொருசிறுநுரை

அன்புள்ள ஜெ,
கல்பொருசிறுநுரை, முதலாவிண் இரண்டு செம்பதிப்புக்களும் உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!
தபால் உறையைப் பிரிக்கும்போது ஒரு நூல் என்றே நினைத்தேன். ஆனால், யசோதையின் அருகில்  நிற்கும் சிறுவன் கண்ணனைப் போல, கல்பொருசிறுநுரை அருகில் மயில்பீலி அட்டை வண்ணப்படத்துடன் முதலாவிண் நாவலும் ஒட்டிக்கொண்டு வந்தது.
கல்பொருசிறுநுரையின் அட்டையில் திரண்ட தோள்களுடன் இறுகி அமர்ந்திருக்கும் கண்ணனின் வண்ணப்படம். நாம் பொதுவாகக் காணும் மென்மையும் நளினமும் கொண்ட ஆயர்பாடிக் காதலன் அல்ல. பொருகரியின் கொம்பொசித்த, மல்லர்களைப் பொருது வருகின்ற பெருவீரனின் படம்.
யாதவர்களின்  குடியழிவையும் கிருஷ்ணரின் மறைவையும் சொல்லும் கல்பொருசிறுநுரையை வாசிப்பது மனதில் துயரையும் வெறுமையையும் நிறைக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் முதலாவிண் ஒரு மீட்பாக அமைந்து, கண்ணன் பிள்ளைத்தமிழோடு  நிறைகிறது.
முதலாவிண் வெண்முரசுக்கு தமிழ் மண்ணோடு ஒரு இணைப்பைக் கொடுக்கிறது. முதலாவிண்ணை நினைக்கும்போதெல்லாம் தவறாமல் என் நினைவில் எழுவது, கொந்தளிக்கும் கடலில் பாண்டியன் செல்லும் காட்சி:
//நீரின் ஓலம் செவிகளை நிறைத்திருந்தது. அவர்களின் நோக்கும் நீரால் நிறைந்திருந்தது. உள்ளெழுந்த அச்சமும் நீரின் வடிவிலேயே அமைந்திருந்தது. அரசனை அங்கே கொண்டுவந்திருக்கலாகாதோ என்ற எண்ணத்தை அமைச்சர் அடைந்தார். ஆனால் பாண்டியன் தன் படகின் அமரமுனையில் நின்று கடலை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். படகு ஊசலாடியபோது அவன் கயிற்றில் கட்டி சுழற்றப்பட்டவனாக வானில் பறந்தலைந்தான். ஆனால் அவன் கால்கள் நிலைதடுமாறவில்லை. அவன் உடலின் நிகர்நிலை பெயரவுமில்லை.
அவன் தொன்மையான பரதவக் குடியினன் என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார். கடலை அவன் கால்கள் அறிந்திருக்கும். அவனுக்குள் நிறைந்துள்ள குருதி கடலின் நீருடன் ஒத்திசையக் கற்றிருக்கும். அவன் முன்னோர்களில் ஒருவன் கடலை அம்பெறிந்து வென்றான். அச்சினம் பொறாது கடல் எழுந்து பஃறுளி ஆற்றோடு பன்மலை அடுக்கத்து குமரிக்கோட்டையும் மாமதுரை நகரையும் உண்டது. அவன் கடலின் மைந்தன், கடலுடன் போரிட்டு எழுந்தவன்.//
இந்த நூல்களுடன், வெண்முரசு நூல்களின் செம்பதிப்பு வரிசை நிறைவுறுகிறது. இவற்றை வாசிப்பதனுடாகவே என்றும் உங்களை நன்றியுடனும் மகிழ்வுடனும் நினைத்துக்கொள்வேன். பெரியாழ்வாரின் வரிகளில் “நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினிலார் பெறுவார்” என்று மகிழ்கிறேன். உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
*
அன்புள்ள பாலகிருஷ்ணன்
எனக்கும் அவ்விரு நூல்களையும் பார்க்கையில் ஒரு மெல்லிய திகைப்பு எழுகிறது. கடந்துவந்துவிட்ட ஒரு காலகட்டம் என தோன்றுகிறது.
ஜெ
முந்தைய கட்டுரைதற்கல்வியும் தத்துவமும்-1
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி பங்களிப்பு, கடிதம்