தற்கல்வியும் தத்துவமும்-2

பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவஞானிகள் தங்கள் தத்துவ தரிசனங்களுடன் அந்த தத்துவ தரிசனங்களை ஒட்டிய வாழ்வுமுறையையும் முன்வைத்தவர்கள். ஒரு கொள்கையுடன் அக்கொள்கைக்கு சென்று சேர்ந்த உசாவல் முறையையும் முன்வைத்தவர்கள். செயிண்ட் அகஸ்டின் அந்தப் போக்கின் இறுதிப்புள்ளி என்று சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் தத்துவம் ஒரு வகையான மாபெரும் அறிவுப்பயிற்சி ஆயிற்று. தத்துவஞானி என்பவர் தன்னுள் உசாவி, தன் அகப்பயிற்சிகளினூடாக வாழ்வு குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் அப்பால் உள்ளவை குறித்தும் ஓர் மெய்யுணர்வை அடைந்தவர் என்பதற்கு மாறாக; முன்பும் சமகாலத்திலுள்ள அறிவுத்தரப்புகள் அனைத்தையும் ஐயமறக் கற்ற மாபெரும் கல்வியாளர் மட்டுமே எனும் சித்திரம் உருவாகியது. அவர் தனக்கிணையான பிற தத்துவ ஞானிகளுடன் விவாதத்தில் இருப்பவர் என்றும், அதன் விளைவாக தனக்கான ஒரு பார்வையை முன்வைப்பவர் மட்டுமே என்றும் ஆகியது.

இன்று பார்க்கையில் ஹெகல் முதலிய ஐரோப்பிய தத்துவஞானிகள் எழுதிக்குவித்த பக்கங்கள் திகைப்பூட்டுகின்றன. அத்தனை பக்கங்களில் பெரும்பாலானவை பிற தத்துவ அறிஞர்களுக்கு அவர்கள் அளித்த மறுப்பும், அவர்களுடனான கருத்துப்பூசல்களும்தான். சாராம்சமாகத் திரட்டுகையில் இருநூறு பக்கங்களுக்குள் நிற்கும் அளவுக்குத்தான் அவர்களுடைய தத்துவ தரிசனம் அமைந்துள்ளது. எஞ்சியவை அக்காலகட்டத்தில் திகழ்ந்த அறிவுச்சூழலில் அவர்கள் தீவிரமாக செயல்பட்டதனால் உருவான வெளிப்பாடுகள்தான்.

எப்போது தத்துவம் என்பது ஒரு வகையான மொழிவெளிப்பாடு என்று ஆகிறதோ அப்போதே அந்த தத்துவம் தன் சாராம்சமான ஒன்றை இழந்துவிடுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. தத்துவத்தை மொழியில் இருந்து பிரிக்கமுடியாதென்றும், தத்துவம் என்பதும் தன்னை மொழியினூடாக வெளிப்படுத்தியாகவேண்டிய நிலையில் உள்ள ஒன்று என்றும் நான் அறிவேன். எனினும் தத்துவம் ஒருபோதும் ஒரு மொழி வெளிப்பாடு அல்ல. தத்துவம் மொழியைக் கொண்டு மொழியைக்கடந்து செல்வதற்குரிய ஒரு செயல்முறையை எப்போதும் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது.

பதினேழாம் நூற்றாண்டுமுதல் தத்துவக் கல்வி ஐரோப்பாவில் ஒரு விவாதக்கல்வியாக ஆகியது. தத்துவ நூல்கள் அவற்றின் உரையாடல் தன்மையை (dialogic) இழந்து, ஆசிரியரின் பேருரைகள் ஆக மாறின.  ஹெகல் முதல் இப்போது எழுதும் தத்துவ ஞானிகள் எழுத்துகள் வரைக்கும் எடுத்துப் பார்த்தால் அவை அனைத்துமே ஒரு தனி ஊசல் ஆடுவது போன்ற சித்திரத்தை அளிக்கின்றன. முன்னும் பின்னும் அசைந்தாடி, தன் தரப்பை முன்வைத்து, மறுதரப்பை மறுத்து ஆசிரியர் களமாடிக்கொண்டிருப்பதை அந்நூல்களில் காணமுடிகிறது. நம்மிடம் சீரான தீவிரமான குரலில் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் ஒருவராகவே அத்தத்துவவாதிகளை நம்மால் அறிய முடிகிறது.

இந்தத் தத்துவவாதிகளினால் எந்த களத்திலாவது தத்துவத்தெளிவை உருவாக்க இயன்றதா எனில் அதில் ஓர் ஐயத்தை எஞ்சவிடுவேன். ஆனால் அவர்கள் இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு மிகப்பெரிது. ஐரோப்பிய மாபெரும் தத்துவஞானிகளாகிய ஷோப்பனோவர், ஹெகல், மார்க்ஸ், நீட்சே ஆகியோர் இல்லை எனில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியம் அந்த தீவிரத்தை அடைந்திருக்காது. மொழியால் மட்டுமல்ல, வாழ்க்கைப்பார்வையாலும் பெருநாவல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக இருந்தவை இந்தத் தத்துவஞானிகள் உருவாக்கிய பார்வைக்கட்டுமானமும் மொழிக்கட்டுமானமுமே. அவர்களின் கொடை முதன்மையாக மொழிக்குத்தானே ஒழிய சிந்தனைக்கு அல்ல.

தத்துவம் ஒருவகையான மொழிவெளிப்பாடு அல்லது மொழியணி (Figurative Speech) என்னும் கருத்தை ரஸ்சல் வந்தடைந்தார். ஆச்சரியமான ஒரு சுருக்கிப்பார்த்தல் இது. திகைப்படைந்தாலும் அது உண்மை. குறிப்பாக ஐரோப்பிய தத்துவம் சார்ந்தவரை. ரஸ்ஸல் அதை விமர்சனமாக முன்வைக்கவில்லை, ஒரு சிறப்பாகத்தான் முன்வைக்கிறார்.

தத்துவம் அவ்வாறு ஒருவகை மொழிவெளிப்பாடாயாக மட்டும் மாறிய அப்பயணத்தின் அடுத்தகட்டத்தில் அது வரலாற்றுக்காலம் முதல் இன்றுவரை தத்துவம் தனது இலக்காகக் கொண்டிருந்த அனைத்தையும்  கைவிட்டது. உயர் அறங்கள், அவ்வறங்களின் சிக்கல்கள், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டிய அரசியல்-சமூக- ஆன்மிக அமைப்புகள், அவற்றுக்கும் தனிமனிதனுக்குமான உறவுகள் ஆகியவற்றைப் பற்றி பேசிவந்த தத்துவம் முற்றாக அக்கேள்விகளை கைவிட்டது.

எப்போது மேலைத்தத்துவம் தன் அறவியல் கேள்விகளைக் கைவிட்டதோ அப்போதே அதன் சாவு நிகழ்ந்துவிட்டது என்று ஹெரால்ட் ப்ளூம் ஒருகட்டுரையில் குறிப்பிடுகிறார். அத்துடன் தத்துவத்தில் இருந்து இலக்கியம் தன்னை விலக்கிக் கொண்டது. இலக்கியம் தன் அழுத்தத்தை இழந்தது. தத்துவம் அதன்பின் ஒரு பிரம்மாண்டமான மொழிவிளையாட்டாக மாறியது.

விளைவாக, பின்னாளைய தத்துவவாதிகள் வேண்டுமென்றே மொழிச் சிக்கல்களை உருவாக்கினார்கள். வேண்டுமென்றே மொழித் திரிபுகளினூடாக வெளிப்பட்டார்கள். மிகச்சிறந்த உதாரணம் விட்கென்ஸ்டைன். அதன் உச்சமே, சாரமே இல்லாமல் வெறும் மொழிவிளையாட்டுகளை மட்டுமே முன்வைத்த பின்நவீனத்துவ (எதிர்) தத்துவவாதிகள்.

நமக்கு வாசிக்கக்கிடைக்கும் புகழ்பெற்ற பல சமகால ஆன்மிகத் தத்துவஞானிகள் அல்லது மெய்யியலாளர்கள் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் உருவான ஐரோப்பிய தத்துவவிவாதச் சூழலில் இருந்து பயிற்சி பெற்றவர்கள், அக்களத்திற்குள்  நின்று பேசுபவர்கள் என்பதை சற்று கூர்ந்து நோக்கினால் அறியலாம். அந்த தத்துவக்களத்தில் இருந்து அவர்கள் முதன்மையாகப் பெற்றுக்கொண்டிருப்பது அது உருவாக்கியிருக்கும் தத்துவத்திற்கான தனிமொழியைத்தான்.

உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஜே.கிருஷ்ணமூர்த்தியை பயில்பவர்கள், பெரும்பாலும் அவரை மட்டுமே படிப்பவர்கள் , அவர் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் கூறும் ஒன்று உண்டு. அவர் தனக்கு முன்னிருந்த எத்தொடர்ச்சியையும் மேற்கொள்ளாத ஒருவர், அவ்வகையில் தனித்துவமானவர் என்று. அவர்களில் சிலர் ஒருபடி மேலே சென்று, ஜே.கிருஷ்ணமூர்த்தி தனக்குப் பின்னரும் எத்தொடர்ச்சியும் இல்லாத தனி நிகழ்வு என்பார்கள்.

தத்துவத்தில் அப்படி ஒரு தனி நிகழ்வு இயல்வதல்ல என்றும்; ஒருவேளை அப்படி ஒரு தனிநிகழ்வு நிகழும் எனில், அதற்கும் மானுட சிந்தனைக்கும் எத்தொடர்பும் இல்லை எனில், அதனால் எந்தப்பயனும் இல்லை என்றும் சொல்லவேண்டியிருக்கிறது.

ஆனால் உண்மையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி நின்றிருக்கும் தளம் முதன்மையாக ஷோப்பனோவரிலிருந்து நீட்சே வரைக்குமான ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் உருவாக்கிய ஒரு விவாதப்பரப்புதான். அதனுடன் உரையாடிய நவீன வேதாந்த மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள் உருவாக்கிய இன்னொரு விவாதப்பரப்பு. அத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாக உலகெங்கும் அறியப்பட்ட மாற்று மறைஞான இயலை முன்வைத்த குர்ஜீஃப் போன்றவர்களுடைய விவாதத்தரப்பு. இவற்றில் இருந்து பெற்றுக்கொண்டவற்றை தனக்குரிய மொழியில் மறு உருவாக்கம் செய்து முன்வைத்தவர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஜே.கிருஷ்ணமூர்த்திக்கும் ஐரோப்பிய இயற்கைவாதிகளுக்குமான ஒற்றுமைகளெல்லாம் இன்னமும் கூட பேசப்படவே இல்லை.

ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிப்படையில் ஓர் ஆன்மீக தத்துவச் சொற்பொழிவாளரே ஒழிய மெய்ஞானி அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தத்துவ ஞானிகளை பயில்பவர்கள் தன்னியல்பாகவே அந்த தத்துவஞானிகள் எதை தங்களுடைய பின்புலமாகக் கொண்டிருக்கிறார்களோ அந்த சிந்தனைகளின் களத்திற்குள் சென்று சேர்கிறார்கள். அந்த களம் உருவாக்கிய பொதுவான நம்பிக்கைகள் பொதுவான கொள்கைகள் ஆகியவற்றை தானும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அசலான அரிய வரிகளென அவருடைய தீவிர ஆதரவாளர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் இணையாக பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவ சிந்தனையாளர்களால் முன்னரே சொல்லப்பட்ட வரிகளை சுட்டிக்காட்ட முடியும். விடுதலையை முற்றிலும் அகம் சார்ந்ததாக்குவது, விடுதலையை ஒரு மனிதன் தன்னுள்ளேயே கண்டடையவேண்டும் என்பது, தனிமனிதனை அலகாக்கி ஆன்மீகத்தை மெய்யியலை மதிப்பிட முயல்வது, விடுதலை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று- தீர்வுகளும் வழிகளும் ஒவ்வொருவருக்கும் உரியது என்பது, காலத்தொடர்ச்சி மரபுத்தொடர்ச்சி என்பதை மறுத்து அந்தந்த கணங்களில் அறிதலையும் அறியப்படுபவனவற்றையும் வகுப்பது என்று ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் ஏறத்தாழ எல்லா கருத்துகளுமே இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக தத்துவ ஞானிகளினூடாக உருவாகி வந்து அவருக்கு முன்னரே ஏறத்தாழ ஐரோப்பியச் சூழலில் நிலைபெற்றுவிட்டவை. அதனால் தான் ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொன்னவை உடனடியாக ஐரோப்பாவில் ஏற்பு பெற்றன. இந்தியாவிலும் ஐரோப்பிய கல்வி கொண்டவர்களுக்கு சரியானவையாகவும் உவப்பானவையாகவு தோன்றின.

இவற்றை வாசிக்கும் ஒரு வாசகன் இன்று அடைவதென்ன என்பது தான் நான் விவாதிக்கத் தொடங்கிய புள்ளி. அவன் ஒரு இலக்கியவாதியாக இருப்பானெனில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினூடாக தன்னை அறியாமலேயே அவன் ஐரோப்பிய தத்துவ சிந்தனையின் பொற்காலத்தை நோக்கிச் செல்வான். அப்பொற்காலத்திலிருந்து எழுந்து வந்த மாபெரும் நாவலாசிரியர்களாகிய டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ்ஸே, நிகாஸ் கசந்த்சகீஸ் போன்றவர்களின் வேர்ப்பரப்பை சென்றடைவான். அது இலக்கியவாதியாக அவனுக்குச் சிறப்பு. அவனது மொழி கூர்மை பெறும். அது மேலும் அவனுக்கு நலம் பயக்கும். ஆனால் மெய்யியல் விடுதலையின் பொருட்டு, ஆன்மீக விடுதலையின் பொருட்டு ஒருவன் இக்கல்வியைப் பெறுவான் எனில் அதனால் என்ன லாபம், உண்மையில் அது இயலுமா என்பது தான் விவாதிக்கத்தக்க கேள்வி.

இத்தகைய நூல்களை தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் பயில்பவர்களை எனக்குத் தெரியும். நான் தத்துவ அறிமுக வகுப்புகளை தொடங்கும்போது இத்தகைய நூல்களை பல ஆண்டுகளாகப் பயில்பவர்கள் அதற்கு எவ்வகையிலும் பயனற்றவர்கள் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் ஒரு மாபெரும் கல்வி அழிப்பு நிகழாமல் அவர்களால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அவர்களது உள்ளம் சொற்களால் நிரம்பியிருக்கும். எந்த ஒரு கருத்தையும் அவர்கள் ஏற்கனவே கற்ற ஒரு கருத்தாகவே கூறுவார்கள். ஒரு கருத்து உண்மை எனில் ஏற்கனவே அவர்கள் கற்ற நூலில் அது எங்கோ இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அதுவே அவர்கள் உழலும் மாயை. அதனுடன் அவர்கள் தங்களை கூரியவாசகர் என எண்ணும் ஆணவமும் கலந்துள்ளமையால் அவர்கள் வெளிவருவது அனேகமாக இயலாது.

அவர்கள் ஒரு கருத்தைக்கூறிய உடனே அதற்கு இணையான ஒரு தத்துவ ஞானி அதற்கு நேர்மாறான ஒரு கருத்தை கூறியிருப்பதை சுட்டிக்காட்டலாம்.  உதாரணமாக ஓர் உரையாடலில் ‘துக்கங்கள் என்பவை முற்றிலும் தனித்தனியானவை ஒரு துக்கம் இன்னொரு துக்கம் என்று அல்ல’ என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருப்பதை ஒரு நண்பர் சுட்டிக்காட்டியபோது ‘துக்கமென்பது ஒன்றுதான் தனித்தனி துயரங்கள் என்று ஒன்றில்லை’ என்று குர்ஜீஃப் சொல்லியிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். இந்த முடிவில்லா விவாதங்களுக்கு தான் ஒருவர் சென்று சேர முடியும். இது எவ்வகையிலேனும் ஆன்மிகமாக பயனளிக்குமா? பயனளிக்காதெனில் எவ்வகையில் ஒருவர் தத்துவத்தைக் கற்றுக்கொள்ள முடியும்?

இன்று நமக்கு சந்தையில் சுவாரஸ்யமான, அழகிய, கூரிய மொழியில் எழுதப்பட்ட ஆன்மிக தத்துவ நூல்களின் பெரும் வரிசை உள்ளது. பெரும்பாலான விமான நிலையங்களில் ’பெஸ்ட் செல்லர்’ என்ற பட்டியலுக்குள் இருக்கும் நூல்களை நான் பார்க்கும்போது பொதுவாசிப்புக்கான பரபரப்புப் புனைவுகள், கற்பனாவாதப் புனைவுகள், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் பயனுறு நூல்கள், புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றுக்கு நிகராகவே இத்தகைய ஆன்மீக தத்துவ நூல்கள் இருப்பதைப் பார்க்கிறேன். விமானங்களில் பலர் இவற்றை ஆழ்ந்து படித்துக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு இந்த நூல்கள் மிகவும் தேவையாக இருக்கின்றன, அல்லது அவர்களால் விரும்பப்படுகின்றன என்பதை விமான நிலையங்கள் காட்டுகின்றன. ஆங்கிலக்கல்வி கற்றவர்கள், பொருளியல் சிக்கல் இல்லாதவர்கள், தங்களைப் பண்பட்டவர்கள் என்றும் நுண்மையானவர்கள் என்றும் எண்ணிக்கொள்பவர்கள், எளிமையான மதநம்பிக்கை மற்றும் ஆசாரங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை உருவகித்துக்கொள்பவர்கள், இயல்பிலேயே அறிவுஜீவிகளாக தங்களை மதிப்பிட்டுக்கொள்பவர்கள், இவற்றின் வாசகர்களாக இருக்கிறார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு தொடக்கமெனில் அவரைப்போன்றே எழுதக்கூடிய யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் இன்று இருக்கிறார்கள்.

இவர்களின் அடுத்த கட்டத்தில் இன்னும் எளிமையான முறையில் அவற்றை சொல்லும் சுகபோதானந்தா போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்த நூல்களில் ஒன்றை பயில்பவர்கள் உடனடியாக அடுத்த இன்னொரு நூலுக்கு செல்வதென்பதே அந்த நூலின் மறுப்புதான். ஐநூறு பக்க அளவுள்ள ஒரு ஆன்மீக மெய்யியல் நூல் ஒருவருக்கு சில வரிகளாக எஞ்சுகிறது எனில் அந்நூலின் மதிப்பென்ன? ஐநூறு பக்கம் அளவுக்கு எழுதிய பின்னரும் கூட ஒரு மெய்ஞ்ஞானி அந்த வாசகனுக்கு அளிப்பதென எதுவுமில்லை எனில் மேற்கொண்டு அவரிடம் எதை எதிர்பார்ப்பது?. ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்களுக்கு ஒரு மெய்ஞானி எழுதவேண்டியிருக்குமெனில் அவ்வளவையும் படித்தபிறகு ஒருவர் இன்னொன்றுக்கு செல்வாரெனில் உண்மையிலேயே அவர் மெய்ஞான விவாதத்தை நிகழ்த்துகிறாரா?

இவற்றை வாசிப்பவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜீஃப், கார்லோஸ் கஸ்டநாடா என்று என்று அனைவரையும் தான் படித்திருக்கிறோம் என்ற தன்னுணர்வை அடைகிறாரே ஒழிய சாராம்சமாக அவர் எதை கற்றுக்கொண்டிருக்கிறார்? இந்த நூல்கள் இலக்கிய படைப்புகள் என்னும் தகுதிக்கு அப்பால் மெய்யியல் வழிகாட்டிகளாகத் திகழ முடியுமா?

பொதுவாக நான் இவற்றை படிப்பவர்களிடம் விவாதிப்பதில்லை. ஒருமுறை நான் விவாதித்த நண்பர் அணுக்கமானவர் என்பதனால், எதிலும் பிடிப்பற்றவர் என்பதனால், அந்த விவாதத்தில் அவர் புண்படமாட்டார் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்த ஒரே காரணத்தினால் அந்த விவாதம் நிகழ்ந்தது. அதில் என் கருத்துக்களைச் சொன்னேன். என் ஐயங்களுக்கு என்ன பதில்கள் இருக்கும் என்னும் ஆவலினால். எனக்குக் கிடைத்த பதில் இந்த ஆன்மிகதத்துவ சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வரையில் தனித்தன்மை கொண்ட பார்வையை முன்வைப்பவர்கள், அவற்றை தெரிந்துகொள்ளலாம் என்பது மட்டுமே.

மாறாக பெரும்பற்றுடன் அவற்றை படிப்பவர்கள் விவாதங்களால் திசை திருப்பக்கூடியவர்கள் அல்ல. ஏனெனில் இந்த நூல்கள் அனைத்துமே விவாதத்தன்மை கொண்டவை. பல ஆண்டுகளாக இவற்றை பயின்று பயின்று அவர்கள் விவாதிக்கும் திறனை மேம்படுத்திக்கொண்டிருப்பார்கள். எவரிடமும் ஓர் அடிப்படையான கருத்துமாற்றத்தை விவாதத்தால் உருவாக்கிவிட முடியாதென்பது என்னுடைய எண்ணம். விவாதம் அதற்கிணையான மறுதரப்பைத்தான் உருவாக்கும். விவாதிப்பவர்கள் இருவர் தங்கள் தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே செய்வார்கள்.

மேலும் இந்த நூல்களைப் படிப்பவர்கள் தங்களை நுண்ணுணர்வுள்ளவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள், ஆன்மீகமாகச் சிலவற்றை அறிந்துகொண்டவர்கள் என்று நம்புவதனால் அவற்றை அவர்கள் கற்ற எதையும் கைவிடுவதில்லை. அவர்களால் நீண்ட நீண்ட பதில்களை சொல்லமுடியும். அப்பதில்களுக்கு நாமும் மறுபடியும் பதில்களைச் சொல்லத்தொடங்கினால் நாம் இன்னொரு ’விவாதிப்பவர்’ ஆகிவிடுவோம்.

நான் உறுதியாகத் தெரிந்திருக்கும் ஓர் உண்மை, தத்துவத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே விவாதத்திற்கு இடம் உள்ளது என்பதுதான். அது தத்துவக் கல்வியின் நடுப்பகுதியில் என்று சொல்லலாம். தொடக்க நிலையில் விவாதம் என்பது வெறும் குழப்பங்களை மட்டுமே உருவாக்கும். நாம் அறியாத ஒன்றைப்பற்றி ஆணித்தரமான நிலைபாடுகளை எடுத்து, நாம் அவற்றை எடுத்ததனாலேயே அவற்றை நாமே நிறுவியாகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி ,நிறுவிக்கொண்டமையினாலேயே அவற்றை சுமந்தலைய வேண்டியவர்களாகவும் ஆகிவிட்வோம்.

ஆன்மிகத்தின் இறுதிநிலையில் விவாதங்கள் அற்ற தெளிவு இருக்கும். தொடக்க நிலையில் முழுத்தெளிவின்மை இருக்கும். கற்று தெளிந்தவற்றை அவற்றின் மறுதரப்புகளின் வழியாக மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளும் இரண்டாம் நிலையில் மட்டுமே விவாதத்திற்கு இடமுள்ளது. அதுவும் சரியான ஆசிரியர்கள் முன்னிலையில், சரியான நபர்களுடன் ,சரியான முறையில் நிகழ்த்தப்படும் விவாதங்கள் மட்டுமே பயனுள்ளவை. பொதுப்போக்கு விவாதங்கள், அரட்டைத் தளத்தில் நிகழக்கூடிய விவாதங்கள், உணர்ச்சிகலந்த விவாதங்களால் பயனை விட பயனின்மையே அதிகம். அல்லது தீங்கு கூட நிகழலாம்.

ஆகவே இத்தரப்பை நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏற்கனவே நான் கூறும் இவற்றை ஓரளவேனும் தாங்களும் உணர்ந்து அவற்றில்மேலும் தெளிவடைய விரும்புபவர்களுக்காக மட்டுமே இவற்றை கூற விரும்புகிறேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைபா.தாவூத் ஷா
அடுத்த கட்டுரைமனநோய்களும் திருமணங்களும்- நோயல் நடேசன்