இப்படி ஒரு பயிற்சி தேவை என்பது வாசகர்களின் கோரிக்கை. இது சாத்தியம் என்பது போகன் சங்கரின் நெல்லை புத்தக விழா உரை காட்டியது.
கடந்த அக் 1,2 தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த 50 பேர் கொண்ட வாசிப்பு பயிற்சி முகாம் திட்டமிட்ட படி ஈரோடு மலை கிராமத்தில் நிகழ்ந்தது. எம்.கோபால கிருஷ்ணன், மோகனரங்கன், போகன் சங்கர், ராஜகோபாலன் மற்றும் அனீஷ் கிருஷ்ணன் நாயர் ஆகியோர் இதை நடத்தினார்கள். இந்த முகாமுக்கு கீழ்க்காணும் இலக்குகள் இருந்தன.
வாசகர் சந்திக்கும் சவால்கள் :
1. எப்படி கவனத்துடன் படிப்பது
2. எவ்வாறு குறிப்புகள் எடுப்பது
3. எவ்வாறு நினைவில் கொள்வது
4. எவ்வாறு பிற புத்தகங்கள், சங்கதிகள் உடன் தொடர்பு படுத்துவது
5. எவ்வாறு ஒரு சிந்தனையாக ஆக்கிக் கொள்வது.
வாசகர் அறிய விரும்பும் புனைவு கருவிகள் :
1. படிமம்
2. உருவகம்
3. குறியீடு
4. வாசகர் இடைவெளி
5. மறை பிரதி
6. ஊடு பிரதி
7. மறு ஆக்கம்
8. பகடி
போன்றவை
வாசகர் அறிய விரும்பும் புனைவு வகை :
1. யதார்த்தம், இயல்புவதம்
2. அதி புனைவு
3. மீ புனைவு
4. மாய யதார்த்தம்
5. அபுணவு தன்மை கொண்ட புனைவு
போன்றவை
வாசகர் அறிய விரும்பும் கோட்பாடுகள் :
1. முற்போக்கு
2. தலித்தியம்
3. பெண்ணியம்
4. நவீனத்துவம்
5. பின் நவீனத்துவம்
போன்றவை
நவீன இலக்கியத்தின் இயல்புகள் :
1. முடிவு என்ன
2. நீதி என்ன
3. பெரிய தரிசனம் மட்டுமே கதை அல்ல
4. பொருள் மயக்கம்
போன்றவை
வாசகரின் சஞ்சலங்கள் :
1. பிரதியின் போதாமை
2. நமது போதாமை
3. கூட்டு வாசிப்பின் அனுகூலம், பின்னடைவு
இரண்டு நாள் பாடத்திட்டத்தை கீழே கொடுத்துள்ளேன். பங்கேற்பார் இதை படித்துவிட்டு வர வேண்டும் என்பது நிபந்தனை.
https://readingworkshopblog.blogspot.com/?m=1
இந்த நிகழ்ச்சி நிரல் படி முகாம் நடைபெற்றது :
Day 1:
1. 10:30 – 11.15 am : Tools/kinds of Reading – Rajagopalan
2. 12 to 1 pm : Short Stories Reading M. Gopalakrishnan
3. 4 to 5 pm : Poetry reading, essay reading Mohanarangan/Bogan
4. 7 to 8 pm : Critical Reading – Aneesh Nair
…..
Day 2:
5. 9:30- 10:30 am : Critical Reading – Aneesh Nair
6. 10.30 – 11.30 am : Classic and Modern Literature Rajagopalan
7. 12.00 – 1.30 pm: Q & A, – Full Panel
…..
ஆக ஒரு விரிவான திட்டமிடலுடன், முன் தயாரிப்புடன் வாசிப்பு பயிற்சி முகாம் நிகழ்ந்தது.
இவ்வுலக மகிழ்ச்சிகளில் தலையாயது அறிதலின் மகிழ்ச்சி தான். இந்த நிகழ்வில் பங்கேற்றோர் இதை குறைவின்றி பெற்றனர். ஒவ்வொரு அமர்விலும் வாசகர்களின் ஈடுபாடு தெரிந்தது, வண்டி நின்ற பின்னும் சக்கரம் நில்லாமல் அமர்வு முடிந்த பின்னும் சிறு குழுக்களாக ஆங்காங்கே இரவு பகல் பாராமல் உரையாடிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தனர். ஒரு முகாமின் வெற்றி அங்கேயே முடிவாகி விடுகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களிலும் யாரும் ஓய்வே கொள்ளவில்லை. இது போன்ற தீவிரம் மிக்க பொழுதுகள் நமக்கு அரிதாகவே வாய்க்கும் என பிற்காலத்தில் தான் நாம் உணர்வோம்.
அமர்வு நடத்திய ஆசிரியர்கள் தேவையானவற்றை அளிக்க போதுமானதை கைக்கொண்டு இருந்தனர். முகாமில் ஆச்சர்யம் ஊட்டும் வகுப்பு என்பது அனீஷ் கிருஷ்ணன் நாயர் எடுத்தது. இரண்டு அமர்வுகளிலும் தேர்வுகள் நடத்தினார், கண் முன்னே தேற்றியும் காட்டினார். மனிதனுக்கு மொழி சார் நுண்உணர்வு இயல்பில் உள்ளது சற்று முயன்றால் பிற மொழியை கூட புரிந்து கொள்ள முடியும் என்பது ஒரு மொழிக் கோட்பாடு. தமிழ், ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதம், ஸ்பானிஷ் மற்றும் லத்தீனில் உள்ள பத்திகளை எங்களையே வாசிக்க செய்துவிட்டார். தூரத்தில் அறியாத நபர் அருகில் சென்று நண்பர் எனக் கண்டதும் வரும் நட்புணர்வு போன்றது இவ்வனுபவம்.
பேருந்தில் மகளிர் என்கிற சொல்லில் மேற்புள்ளி இல்லை என்கிறான் ஒரு கல்லூரி மாணவன். இன்னொருவன் அப் பெண் இன்று பொட்டு வைக்கவில்ல என்கிறான், இவன் கவிதை வாசிப்புக்குள் வர சாத்தியம் உண்டு. மற்றொருவன் அவள் ஒரு கைம்பெண் அதனால் தான் வெள்ளை எழுத்துக்களில் எழுதியுள்ளார்கள் என்கிறான் இவன் கவிதை வாசகன். குறைவானதைக் கொண்டு தொலைவானதை கற்பனை செய்வது கவிதை வாசிப்புக்கு முக்கியம் என துவங்கிய மோகனரங்கனின் கவிதை அறிமுக வகுப்பு ஒரு ரசனை பரிசு.
விக்கிரமாதித்தன் எழுதிய “பொருள்வயின் பிரிவு” கவிதையை முன்வைத்து இந்த நவீன கவிதையில் ஒரு ஆண் அடையும் உணர்வாக இப்போது வெளிப்பட்டது நம் சங்கப் பாடல்களில் பெண்ணின் குரலாக மட்டுமே ஒலிக்கும் என ராஜகோபாலன் சுட்டிக் காட்டிய போது அரங்கு ஒரு இணைப்பு கிட்டிய மகிழ்ச்சிக்கு சென்றது.
வகுப்புகளில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் சுமார் 50 இருக்கும் இது ஒரு புது வாசகனுக்கு பெரும் அறிமுகம். இவ்வளவு கற்பித்தும் இவ்வளவு கற்றும் மேலும் மேலும் எனவும் போதாது போதாது எனவும் பேராசை கொள்ளப்பட்டு விடை கொடுக்கப்பட்டனர் வாசகர்கள். இது அணையாதாகுக.
கிருஷ்ணன்,
ஈரோடு.