சுந்தர ராமசாமி ப.ஜீவானந்தம் பற்றி எழுதிய நினைவோடை வரிசை படைப்பை ஒரு நூல் என்பதைவிட சற்று பெரிய கட்டுரை என்றே கூற வேண்டும். அரவிந்தன் அவரை உரையாட வைத்து பதிவு செய்து எழுத்துவடிவமாக்கியது. இந்த நூலில் உள்ள ஜீவாவின் சித்திரம் ஏற்கனவே ’காற்றில் கலந்த பேரோசை’ என்ற பெயரில் அவரால் ஜீவா மறைந்தபோது ஓர் அஞ்சலிக் கட்டுரையாக எழுதப்பட்டது தான். சுந்தர ராமசாமி கட்டுரைகள் என்னும் அழகிய தொகுப்பு. 1984-ல் வெளிவந்தபோது அதிலிருந்த குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளில் ஒன்று அது.
ஆளுமைகளைப்பற்றி அந்த ஆளுமைகளுடன் மிக நெருக்கமாக நெடுங்காலம் வாழ்ந்தவர்களால் பதிவு செய்ய முடியாது போனதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் பற்றி இன்று வரைக்கும் கூட ஒரு முழுமையான நல்ல அனுபவப்பகிர்வு கிடையாது. அவருடன் ஏராளமான நண்பர்கள் பல்லாண்டுகள் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பெரும் பரவசத்துடன் அவரைப்பற்றி பதிவு செய்திருக்கிறார்கள். அவை உதிரி நினைவுக்குறிப்புகளாகவே எஞ்சுகின்றன.
ஓர் எழுத்தாளன் மட்டுமே ஒருவரை முழுமையாக பதிவு செய்ய முடியும். ஏனெனில் எழுத்துக்கு உண்மைநிகழ்வுகளின் நினைவுகள் மட்டும் போதாது. நிகழ்வுகளின் நுண்தகவல்கள் வேண்டும். அவை அனைத்தையும் கண்முன் காட்சியென ஒருங்கிணைக்கும் புனைவுத்திறனும் தேவை. புனைவு கலக்காத உண்மை ஒரு படி குறைவான உண்மை. அது மெய்யென நம் உள்ளத்தில் நிகழ்வதில்லை. வெறும் தரவுகளாக நம்மை வந்தடைகிறது. நாம் வாழ்ந்து அறியாத தரவுகளை உடனடியாக மறந்துவிடுகிறோம். புனைவெழுத்தாளன் உருவாக்கும் ஆளுமைச்சித்திரங்கள் மட்டுமே நீடிக்கின்றன. நல்ல புனைவெழுத்தாளனால் எழுதப்படாதவர்கள் எவராயினும் காலப்போக்கில் வெறும் பெயர்களாகவும் அடையாளங்களாகவும் மட்டுமே எஞ்சுவார்கள்.
சான்று, புதுமைப்பித்தன் வரலாறு. தொ.மு.சி.ரகுநாதன் மொண்ணையான எழுத்தாளர். அவருடைய நூல் அளிக்கும் சித்திரம் புதுமைப்பித்தனை நமக்குக் காட்டுவதில்லை. ஆனால் க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன் கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் வேகமான தீற்றலாக வரும் புதுமைப்பித்தனின் ஆளுமைச்சித்திரம் நினைவிலிருந்து அழியாதது. கற்பனையில் வளர்வது. ‘உங்க கதைகள் படிச்சேன், நல்லா இருந்தது’ என்று சொல்லும் வாசகனிடம் ‘நம்ம கதை எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்’ என்று சொல்லிச் சிரிக்கும் புதுமைப்பித்தன் நான் நேரில்பழகியறிந்தவர் போல் இருக்கிறார்.
எழுத்தாளர்கள் அனைவருக்குமே சராசரிக்கும் பல மடங்கு மேலான நினைவுத்திறனுண்டு. அதுதான் அவனை எழுத்தாளன் ஆக்குகிறது. அவனுடைய வரமும் சாபமும் அதுதான். சாமானிய வாசகர்கள் இதெல்லாம் எப்படி நினைவில் இருக்கும் என்று திரும்பத்திரும்ப கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். நினைவில் நிற்காததனால் தான் நீ வாசகன் அவர் எழுத்தாளர் என்பதுதான் அதற்கான பதில். நினைவும் கற்பனையும் பிரித்தறியமுடியாதபடி கலக்கும் ஒரு களமே படைப்புகளை உருவாக்குகிறது.
சுராவின் நினைவோடைக் கட்டுரைகள் அனைத்திலுமே மிகத்துல்லியமான சிறுசெய்திகள் பதிவாகியிருப்பதை பார்க்கலாம். சிறு புள்ளிகள் வழியாக அவர் உருவாக்கும் ஒட்டுமொத்த ஆளுமைச்சித்திரம் அந்த ஆளுமைகளைப்பற்றி பிறர் எழுதிய எந்தக் குறிப்பிலும் இல்லாமல் இருப்பதையும் காணலாம். ஜீவாவைப்பற்றி அவருடனேயே இருந்த பல்வேறு ஆளுமைகள் அவர்களில் சிலர் எழுத்தாளர்களும் கூட வாழ்க்கை வரலாறுகளை நினைவுக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜீவா என்னும் மானுடனை, அரசியல்வாதியை, இலக்கிய ஆர்வலரை பொதுவுடைமைவாதியை வாசகனிடம் துல்லியமாக நிறுவுவது இந்த மீச்சிறு நூல்தான்.
ஜீவாவின் ஆளுமையை சிறுவனாக தன் மாமா பரந்தாமனுடன் சென்று சந்தித்ததை சுரா இந்நூலில் சொல்கிறார். பரந்தாமன் எனக்கும் நன்கு அறிமுகமானவர். அவரைப்பற்றிய ஒரு சிறு ஆளுமைச்சித்திரம் இந்நூலில் உள்ளது. லச்சம் என்ற பேரில் அவரேதான் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் நாவலிலும் வருகிறார். தன் எல்லைகளை தொடர்ந்து மீறிக்கொண்டே இருந்த விந்தையான மனிதர். மீறல் தவிர தனிப்பட்ட திறன் என்று எதையும் வளர்த்துக்கொள்ளாதவர். ஆகவே அம்மீறல் அதில் சந்தித்த ஆளுமைகள் தவிர வேறேதுவும் இல்லாதவர். ஆயினும் நான் பேசிய எல்லாத்தருணங்களிலும் உற்சாகமான நினைவுக்கொப்பளிப்பாகவே அவருடனான உரையாடல்கள் இருந்திருக்கின்றன. எம்.என்.கோவிந்தன் நாயர் பற்றி தொடக்க கால கம்யூனிஸ்ட் கட்சிகளைப்பற்றி அவர் கூறிய பல செய்திகளை ஒட்டியே பின் தொடரும் நிழலின் குரலில் நான் எழுதிய சித்திரங்கள் அமைந்துள்ளன.
ஜீவா சிறுவனாக தன்னைப்பார்க்க வந்த சுந்தர ராமசாமியை ஓர் ஆளுமையாக, கட்சிக்கு ஒரு புதிய வரவாக நினைத்து பழகுகிறார். இறுதி வரை அந்த இயல்புத்தன்மையும் இணையான தன்மையும் இருந்துகொண்டே இருந்தது இந்நூலில் வெளிப்படுகிறது. மேடையில் பேசும் ஜீவாவின் அழகிய சித்திரத்தை சுரா நாவலில் உருவாக்குகிறார். பேசியபடியே பெண்கள் பக்கம் திரும்புபவர், சட்டென்று குரலைத் தாழ்த்திக்கொண்டு வேடிக்கை பேசத்தொடங்குபவர், உணர்ச்சிக் கொந்தளிப்புடன் முழக்கமிடுபவர், ஆவேசமாக அரசியலை சுட்டிக்காட்டி பேசுபவர்.
முழுக்க முழுக்க லட்சியவாதியாகவும் மறுபக்கம் பழுத்த யதார்த்தவாதியாகவும் ஜீவா இருக்கிறார். அன்றாட யதார்த்தங்களை ஒருபோதும் மிகையான கற்பனாவாதத்தால் அவர் மதிப்பிடுவதில்லை. மனிதர்கள் அப்படித்தான், நாம்தான் கொஞ்சம் பரிவுடன் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் தெளிவு எப்போதும் அவரிடம் இருக்கிறது. அந்த தெளிவு அவர் தொடர்ந்து சாமானிய மக்களிடம் உரையாடி வந்ததனால் உருவானது என்று இந்நூலில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் நூல்களைப் படித்தவர்கள். நூல்களிலிருந்தே ஞானத்தை அடைந்துவிட முடியும் என்று நம்பியவர்கள். ஜீவா அவர்கள் அளவுக்கு படித்தவர் அல்ல. ஆனால் தொடர்ந்து சாதாரண மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு சாதாரண மனிதரிடமும் அவர் தன் உரையாடலைத் தொடங்கும் விதம், அவர்களுக்கு அவர் அணுக்கமாக ஆகும் விதம் இந்த நூலில் வந்துகொண்டே இருக்கிறது.
ஜீவா சாதாரண மக்களிடம் தான் அறியாத ஞானம் உள்ளது என்று நம்பினார். அதிலிருந்து கம்யூனிஸத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். அன்று அதை மாவோ தான் சொல்லிக் கொண்டிருந்தார். மக்களிடம் கற்றுக்கொள் என்று. ஆனால் அன்றும் இன்றும் மாவோயிஸ்டுகள் அதைச் செய்தவர்கள் அல்ல. மக்களை கருவிகளாக மட்டும் கருதுபவர்கள். சொன்னாரே ஒழிய, மாவோவே மக்களிடமிருந்து கற்றுக்கொண்டவர் அல்ல. மக்களிடமிருந்து எழுந்தவர். ஒருகட்டத்தில் மக்களை அடக்கி அழிக்கும் சக்தியாக மாறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு அன்று மாவோ அறிமுகமானவரல்ல . ஜீவாவுக்கு மாவோ அறிமுகமாகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஜீவாவின் முகத்திலேயே மாவோவின் சாயல் இருப்பதாக இந்த நூலைப் படிக்கும்போது தோன்றியது. அவர் கம்யூனிஸ்ட் என்பதை விடவும் மனித நேயர் என்ற எண்ணமே உருவாகியது. அவருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கிறது. அவர்களின் வறுமை ஒழிந்து வாழ்க்கை இன்னும் சற்று மேம்படலாமே என்று எண்ணுகிறார். அதன்பொருட்டு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டுமென்று முயற்சி எடுக்கிறார்.
சு.ரா காட்டும் ஜீவா திரும்பத்திரும்ப எளிய மனிதாபிமான அரசியலாளராகவே தோன்றுகிறார். புரட்சியாளராக அல்ல. அவரால் உறுதியாக ஒற்றைப்படையாக ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. ஆகவே வன்முறையில் அவரால் ஈடுபடமுடியுமென்பது எண்ணிப் பார்க்கத் தக்கதாக இல்லை. அவர் ஜனநாயகவாதியாகவே செயல்படமுடியும். தன் தரப்புக்கு இணையாகவே மறுதரப்புக்கும் ஏதேனும் நியாயம் இருக்கக்கூடும் என்ற எண்ணம் ஜனநாயகத்தின் அடிப்படை. ஜீவா அத்தகையவர். ஆகவே அவர் ஸ்டாலினிஸ்டோ மாவோயிஸ்டோ அல்ல. ஈ.எம்.எஸ்ஸைப்போல இந்திய ஜனநாயகத்தின் மறுக்கமுடியாத ஓர் உறுப்பாகவே அவரால் திகழ்ந்திருக்க முடியும். அவரும் சட்டசபையில் பணியாற்றியிருக்கிறார். அதுவே இயல்பானது. மார்க்சிய ஜனநாயகத்தலைவர் என்று அவரை மதிப்பிட முடியும் என்று தோன்றுகிறது.
ஜீவாவின் ஆளுமைக் குறைபாடுகளை மிக மென்மையாக சொல்லிச் செல்கிறார் சுந்தர ராமசாமி. ஜீவாவுக்கு உணவின் மீது இருந்த மிதமிஞ்சிய விருப்பம், பெண்கள் சார்ந்து (திருமணத்துக்கு முந்தைய காலகட்டத்தில்) இருந்த பலவீனம் ஆகியவற்றை பூடகமாக சுட்டிக்காட்டிச் செல்கிறார். ஜீவா அவருடைய அனைத்து குறைபாடுகளிலிருந்தும் மேலெழுந்து குன்றாத மனிதாபிமானம் வழியாக, ஒவ்வொருமுறையும் மறுதரப்புக்குச் செவி கொடுக்கும் ஜனநாயகப்பண்பு வழியாக ஆளுமையாக நிலைகொள்வதை சுரா அடையாளப்படுத்துகிறார்.
இத்தகைய நேரிய அடையாளப்படுத்தல், தெளிவான வரையறை பிற நூல்களில் ஜீவாவைப்பற்றி இல்லை. அந்நூல்களில் இருக்கும் கண்ணீர் மல்கும் புகழ்மொழிகள் வாசகர்களிடம் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன. சட்டென்று இந்த சித்திரம்தான் ஏறத்தாழ எல்லா அரசியல்வாதிகளைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் தொண்டர்களால் சொல்லப்படுகிறது என்கிற எண்ணம் வரும்போது அது ஓர் ஆளுமைச்சித்திரமாக அன்றி ஒரு பொதுச் சித்திரவார்ப்பாகவே நம் மனதில் தங்கிவிடுகிறது. எவரும் எவரைப்பற்றியும் அவற்றைச் சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட், அவ்வளவுதான்.
சுராவின் சொற்களினூடாக ஜீவாவின் உடற்பயிற்சி ஆர்வம், வாலிபால் விளையாட்டில் இருக்கும் தேர்ச்சி, அவருடைய புடைத்த தசைகள், பின்னாளில் சர்க்கரைநோய் வந்து உடற்தசைகள் தொய்ந்து நோயாளியாக அவரைப் பார்த்தது என ஜீவா தெளிவடைந்தபடியே செல்கிறார் . காக்கி கால்சட்டை அணிந்திருப்பவர் .வீட்டுக்கு வந்தால் கொல்லைப்பக்கத்தில் சென்று துவைக்கும் கல்லில் அமர்ந்து பாத்திரம் கழுவும் பெண்மணியிடம் பேச்சுக் கொடுப்பவர். அவருடன் ஒரு ரத்த உறவுத்தொடர்பை உருவாக்கிக் கொள்பவர் .மேடைப்பேச்சில் கையில் கிடைக்கும் ஒரு எளிமையான கருத்தில் இருந்து மிக விரிந்த ஒரு சித்திரத்தை உருவாக்கும் திறன் காண்டேகர் பாரதி கம்பன் என்று அவருடைய ஆர்வம் விரிவடையும் விதம்.
இந்நூல் ஜீவாவை மட்டுமல்ல ஜீவா புழங்கிய மொத்த அறிவுத்தளத்தையே விவாதத்திற்கு கொண்டு வருகிறது. ஜீவா இரண்டு எல்லைகளுக்கு நடுவே செயல்பட்டவர். ஓர் எல்லை கம்யூனிஸ்டுகள். பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள். அவர்களின் அறிவியல்நோக்கும் நூல்கல்வியும் கொண்டவர்கள் அறிஞர்களின் தோரணையும், அதற்கான விலகலும் கொண்டவர்கள். தர்க்கபூர்வமாகவும் வரலாற்று பிரக்ஞையுடனும் பேசுபவர்கள்.
மறுபக்கம் ஈ.வெ.ரா. ஈ.வெ.ராவுடையது மூர்க்கமான தனிநபர் தாக்குதல் .அவருடைய நோக்கம் எதுவாக இருந்தாலும் அவர் சமூகப்பிரச்னைகளை தனிநபர் பூசல்களாக மாற்றிக்கொண்டு வசைபாடும் மொழியில் பேசினார்.
இவ்விரண்டுக்கும் அப்பால் ஒரு நடுப்பாதை ஜீவாவுடையது. அவர் நூலறிவோரின் மொழியில் பேசியவர் அல்ல. அதே சமயம் மக்களைக் கவரும்பொருட்டு எளிய வசைபாடல்கள் ,வம்புகள், காழ்ப்புகள் ஆகியவற்றில் திளைத்தவரும் அல்ல. பெரும் லட்சியத்தை நோக்கி மக்கள் மொழியில் பேசியவர். மக்களிடமிருந்து ஒருவரென கம்யூனிஸத்தை உயர் லட்சியத்தை நோக்கி எழுந்த ஒரு முனை என்று ஜீவாவைச் சொல்லலாம்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து சுந்தர ராமசாமி விலகும்போது ஜீவா அவரைப் பார்க்கிறார். அன்று சுரா கம்யூனிஸத்தை ஒழிக்க புறப்பட்ட கோடாரிக்காம்பென்று அடையாளப்படுத்தப்பட்டு உச்சகட்ட வசைகளுக்கு ஆளாகிக்கொண்டிருந்தார். அதைப்பற்றிய கொந்தளிப்பும் வருத்தமும் அவருக்கு இருக்கிறது. ஜீவா “எவ்வகையிலேனும் நீ கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிரு. எழுத்தாளருக்கு தனிப்பார்வை இருக்கலாம் என்று இன்று கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த இடத்திற்கு அது வந்து சேரும்” என்று சொல்கிறார். “உன் மனசாட்சிக்கு நீ எழுதுவது முற்போக்கு எழுத்து என்று தோன்றினால் அதை எழுது” என்கிறார்.
சுந்தர ராமசாமி தன்னை முழுக்க முழுக்க முற்போக்கு எழுத்தாளர் என்றே ஜீவாவிடம் அடையாளப்படுத்திக் கொள்கிறார். எந்தவகையிலும் முற்போக்குக்கு எதிரான ஒன்றை தான் எழுதவில்லை என்றும் ,எழுதப்போவதில்லை என்றும், இயல்பாகவே தான் முற்போக்கானவர் என்பதனால் எவருடைய சான்றிதழும் தனக்கு தேவையில்லை என்றும் சொல்கிறார் அதை ஜீவா ஏற்றுக்கொள்கிறார். ஏறத்தாழ அவர்களின் இறுதிச் சந்திப்பு அது
ஒருவகையில் ஜீவா கம்யூனிஸம் என்ற மரத்தின் கனி. அந்த மரத்தின் உறுதியும் துவர்ப்பும் இனிமையாக மாறியது அவரிடம்தான். அந்தக்கனியை சுவைக்க தருணங்கள் வாய்த்தது சுராவுடைய நல்லூழ். இன்று கம்யூனிஸ்ட் கட்சி தன்னை திமுக வைநோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. ஓர் அரசியலியக்கமாக அது நலிந்து, தனக்கான பார்வையையும் பாதையையும் இழந்து வேறு அரசியலியக்கத்தின் ஒட்டுண்ணி அமைப்பாக மாறி, அதன் குரலில் பேசுவது அதன் வீழ்ச்சியின் சித்திரமே. திராவிட இயக்கத்தின் மேடைப்பேச்சாளர்களின் மிகைநடிப்பும், வசைபாடலும் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர்களுக்கும் வந்துவிட்டிருக்கிறது. அனைத்துக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி இன்று தமிழகத்தில் பண்பாட்டு அடிப்படைவாதத்தை மிகத்தீவிரமாக முன்வைக்கும் தரப்பாக மாற்றம் கொண்டிருக்கிறது.
அன்று பெரியாரின் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர் ஜீவா. அவர்தான் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவர். மற்ற மார்க்சியர் அவரை ஒரு வசைபாடி முதியவர் என்று மட்டுமே பார்த்தார்கள். இந்நூலில் சுரா தன்னுடைய கூற்றாக ஒன்று சொல்கிறார். “ஜரிகை துப்பட்டா போட்டுக்கொண்டு சில அரசியல் வாதிகள் வருகிறார்களே பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பின்னால் இவை எல்லாம் மாறிவிட்டன. இவை எல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மதிப்பீடுகள் தான் எளிமையை அழித்து அடியோடு ஒழித்துக்கட்டியது. பெரியாருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்று தான் நான் சொல்வேன்.
ஒருவிதத்தில் பெரியாரியத்தை நசிக்கச்செய்து வீரியமிழக்கச் செய்தவர்கள் தான் பின்னால் வந்த திராவிட கட்சியினர். பெரியாருக்கும் ஜீவாவுக்கும் இடையில் சம்மந்தம் இருக்கிறது. பெரியாருக்கும் காந்திக்கும் இடையில் சம்மந்தம் இருக்கிறது. பெரியாருக்கும் காமராசருக்கும் இடையில் சம்மந்தம் இருக்கிறது. அவர்களுக்கிடையே கொள்கை அடிப்படையில் வேற்றுமைகள் இருந்தாலும் வாழ்க்கை சார்ந்த மதிப்பீடுகள் பல விஷயங்கள் ஒரே விதமான அபிப்ராயம் தான் இருக்கிறது.
பெரியாரின் மொழி தார்மீக கோபத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களிலும் தனிநபருக்குரிய வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சமூகத்தில் அவரது கருத்துகள் பரவ மிகப்பெரிய தடையாக இருப்பது அந்தக்கருத்துகளின் கூர்மை மட்டுமல்ல அந்தக்கருத்துகளை வெளிப்படுத்திய முறைமையும் தான் அதில் முரட்டுத்தனம் இருந்தது. ஜீவா பெரியாருடன் இருந்திருக்க வேண்டியவர்தான். அடிப்படைக் கொள்கைகளில் மிகுந்த ஒற்றுமை கொண்டவர்கள் அவர்கள். பெரியாரின் மொழியாலும் அணுகுமுறையாலும்தான் அவர் விலகிவந்தார்”
இன்று கம்யூனிஸ்டுக் கட்சி மார்க்ஸை விட்டுவிட்டு பெரியாரை நோக்கித் திரும்பியிருக்கும் சூழலில் ஜீவா எப்படி பொருள்படுகிறார்? எதையெல்லாம் ஏற்காமல் ஜீவா பெரியாரை விட்டு விலகினாரோ அதையெல்லாம் கம்யூனிஸ்டுக் கட்சியே ஏற்று தலைமேல் சூடிக்கொண்டிருக்கையில் ஜீவாவுக்கு கம்யூனிஸ்டுக் கட்சியில் என்ன இடமிருக்க முடியும்?
ஜீவாவைப் பற்றி சுந்தர ராமசாமியின் இந்த நினைவூட்டு பொதுவாசகர்களுக்கு மட்டுமல்ல மெய்யாகவே கம்யூனிசம் மேல் ஏதேனும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் பெருமளவுக்கு உதவக்கூடியது.