அரசியலடிமைகள்

தமிழ்ச் சூழலில் வாசகர்களில் ஒரு சாரார் வாசிப்பின் தொடக்கக் காலத்திலேயே அரசியல் சார்ந்த பார்வைக்குள் சென்றுவிடுகிறார்கள். இங்கே வாசிப்புக்குள் நுழைய வகுக்கப்பட்ட வாசல் ஏதுமில்லை. நம் கல்விமுறை வாசிப்புக்கு எதிரானது. நம் குடும்பச்சூழல் வாசிப்பையே அறியாதது. ஆகவே தற்செயலாகவே வாசிப்பு நமக்கு அறிமுகமாகிறது. வாசிப்புக்குள் நம்மை இழுக்கும் மிகப்பெரிய வலை என்பது அரசியல்தான்.

ஏனென்றால் அரசியல் பூஞ்சைக்காளான் விதைகள் போல எங்கும் நிரம்பியிருப்பது. நம் மூச்சுக்காற்றே அதுதான். அரசியல் நேரடியாக பொருளியல்சார் அதிகாரம், மற்றும் சமூகம்சார் அதிகாரம் சார்ந்தது. அதன்மூலம் மிகப்பெரிய அதிகாரத்தையும் செல்வத்தையும் பெறும் பல்லாயிரம் பேர் உள்ளனர். ஆகவே அவர்கள் தங்கள் லாபத்துக்காக அரசியலை மாபெரும் வலையாக மாற்றி நம்மைச்சுற்றி பரப்பி வைத்திருக்கிறார்கள். அனைத்து ஊடகங்களும் அரசியல்தரப்பினருக்கு உரிமையானவையே. அனைத்துச் சமூக ஊடகங்களிலும் அவர்கள்தான் பெருந்திரளாக நிறைந்துள்ளனர். நாள்தோறும் கோடிக்கணக்கான எளிய பூச்சிகள் அதில் சிக்கிக்கொள்கின்றன.

வணிக விளம்பரங்களை விட அரசியல் விளம்பரங்கள் பலமடங்கு பெரியவை. பல மடங்கு ஆவேசமானவை. ஏனென்றால் பல்லாயிரம்பேரால் ஒரு கருத்து நம்பப்படுமென்றால் அதற்கு மிகப்பெரிய ஆற்றல் அமைகிறது. அந்த கூட்டு ஆற்றல் தனிமனிதர்களை மலைவெள்ளம் போல அடித்துச் செல்லும் தன்மை கொண்டது. அதற்கு எதிராக நின்றிருக்க மிகுந்த அறிவாற்றலும், ஆன்மிகத்திடமும் தேவை. இளமையில் அவை இருப்பதில்லை.

அரசியல் சார்பு இளம்வாசகனுக்கு ஒருவகை தன்னம்பிக்கையை அளிக்கிறது. ‘உலகை’ அவன் புரிந்துகொண்டுவிட்டதாக நம்ப ஆரம்பிக்கிறான். ‘சரியான’ தரப்பில் இருப்பதாக உறுதிகொள்கிறான். விளைவாக  ‘அறியாத‘ பெருவாரியானவர்களை அறிவுறுத்தி, திருத்தி, தன் வழிக்கு கொண்டுவருவதற்கு முயல்கிறான். அது அளிக்கும் நம்பிக்கையில் திளைக்கிறான். ‘மாற்று’த்தரப்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபடுகிறான். ‘எதிர்’தரப்பை வசைபாடவும், எள்ளிநகையாடவும் தனக்கு தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்கிறான். தான் தனியனல்ல, ஓர் இயக்கம் என கனவு காண்கிறான். இந்த மாயை அவனை முழுமையாக மூழ்கடித்து வைத்துக்கொள்கிறது.

அரசியல்சார் வாசிப்புக்குள் நுழையும் வாசகர்களில் ஒரு சிறுசாரார் மட்டுமே உள்ளே நுழைந்ததுமே அது உள்ளீடற்றது, வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை மட்டுமே கருத்தில்கொள்வது என்று கண்டுகொள்கிறார்கள். இன்னொரு சாரார் அதில் ஈடுபட்டு சற்று காலம் கடந்ததும் அரசியலில் பேசப்படும் கொள்கைகள், இலட்சியங்கள், தத்துவங்கள் எல்லாமே எளிய அதிகார நோக்கம் கொண்டவை என்றும்; தங்களை கருவியாக்கி வேறுசிலர் லாபம் அடைகிறார்கள் என்றும் கண்டடைகிறார்கள். அவ்விரு சாரார் மட்டுமே விடுபட வாய்ப்புள்ளவர்கள்.

அரசியல் சார்ந்து வாசிப்பவர்களில் அதிகபட்சம் ஒரு சதவீதம் பேர் அரசியலென்பது அதை ஆடுகளமாகக் கொண்ட சிலரால் சமூக ஆதிக்கத்தையும் பொருளியல் ஆதிக்கத்தையும் அடையும்பொருட்டு உருவாக்கி நிலைநிறுத்தப்படுவது என அறிகிறார்கள். அந்த அதிகார விளையாட்டின் வெறும் கருவிகளாக தாங்கள் ஆக்கப்பட்டுவிட்டதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்பவர்களில் ஆயிரத்தில் ஒருவர் அவ்விளையாட்டை தாங்களும் ஆடி அதிகாரம் நோக்கிச் செல்கிறார்கள். எஞ்சியோர் சலித்து விலகிக்கொள்கிறார்கள்.

எம்.கோவிந்தன்

ஆனால் அரசியல் வழியாக வாசிப்புக்குள் நுழைபவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அதிலிருந்து கடைசிவரை மீள்வதில்லை என்பதே நடைமுறை உண்மை. மிக இளமையில் அதில் நுழைவதனால் அவர்களின் சிந்தனைகளின் அடிப்படைக் கட்டமைப்பே அரசியல் தரப்புகள் சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதன் காழ்ப்புகளும் சார்புகளும் ஆழமாக ஆளுமையில் பதிந்துவிடுகின்றன. சிந்தனையின் ‘டெம்ப்ளேட்’ உருவாகிவிடுகிறது. அதை பின்னர் கடக்கமுடிவதில்லை. அவர்களுக்கு அழகியல், ஆன்மிகம் சார்ந்த நுண்தளங்கள் கடைசிவரை பிடிபடுவதில்லை. அவர்கள் அவ்வகையில் ஊனமுற்றவர்கள். ஆனால் அவர்கள் தாங்கள் ஏதோ பிறர் உணர முடியா அரசியல் நுட்பங்களை அறிபவர்கள் என்று நம்பி, அப்படியே வாழ்ந்து மடிகிறார்கள்

அவ்வாறு சிந்தனையின் அரசியல் டெம்ப்ளேட்டை கடக்கவேண்டுமென்றால் மிகப்பெரிய அடிகள் தனிவாழ்க்கையின் அனுபவ மண்டலத்தில் இருந்து விழவேண்டும். பொறிகலங்கும்படி வாழ்க்கை சுழற்றி அடிக்கவேண்டும். சுய அனுபவங்கள் வழியாக அறிந்து, தெளிந்து, அதுவரை தான் பேசிக்கொண்டிருந்த எளிய அரசியல் தரப்பு என்பது எவ்வளவு மேலோட்டமானது என அறிந்து, விடுபட்டவர்கள் சிலரை நான் கண்டதுண்டு. ஆனால் அவர்கள் மிகமிகச்சிலரே.

எஞ்சியோர் அதிலேயே உழன்று, திளைத்து வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கையே அவர்களை அங்கே மகிழ்ந்து இருக்கச் செய்கிறது. ஓர் அரசியல்நிலைபாட்டை எடுத்துவிட்டால் மேற்கொண்டு எதையும் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. தன் தரப்பு தெளிவானது. மாற்றுத்தரப்பு எல்லாமே எதிர்த்தரப்புதான், அது எள்ளி நகையாடுவதற்கும் வசைபாடுவதற்கும் உரியது. அவ்வளவுதான் அதன்பின் கற்பதற்கு ஏதுமில்லை அவர்களுக்கு.

அரசியல்தரப்புகள் மிகமிகப் பிரம்மாண்டமானவை. ஏனென்றால் அவற்றின் உள்ளடக்கமாக அதிகாரம் உள்ளது. ஆகவே அந்த அதிகாரத்தைக் கையாள்பவர்கள் பெரும்பணத்தை செலவிட்டு, அதிகாரத்தைச் செலவிட்டு அந்த அரசியல்தரப்பை திரும்பத் திரும்ப நிலைநாட்டிக்கொண்டிருப்பார்கள். அதன்பொருட்டு அறிஞர்களையும், ஓயாது பேசும் ஊடகவாயாடிகளையும், தொழில்முறைப் பிரச்சார நிபுணர்களையும் நியமித்திருப்பார்கள். அவர்கள் அத்தரப்பைச் சேர்ந்தவர்களை சிந்திக்கவே விடுவதில்லை. எல்லா கேள்விகளுக்கும் உறுதியான முன்பதில்கள் அங்கே சமைக்கப்பட்டு காத்திருக்கும். தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். சிந்திப்பதே அங்கே குற்றம். கொஞ்சம் தனிச்சிந்தனை தென்படுவதும் மீறல். அதன் விளைவு கடுமையானது.

இளமையில் இந்த அரசியல்சார்ந்த வாசிப்புக்குள் சென்றவர்கள் அது அளிக்கும் எளிய விடைகள், மிகமிக எளிமையான சிந்தனை ’டெம்ப்ளேட்டுகள்’ ஆகியவற்றுக்குள் சிக்கிவிடுவதனால் அவர்கள் சிக்கலான, ஊடும்பாவுமான, நுட்பமான, அருவமான எதையுமே அறியமுடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். எந்த நூலில் இருந்தும் அவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே எடுப்பார்கள். எந்த ஆளுமையையும் தங்களுக்கு தோதான படி சித்தரித்துக் கொள்வார்கள். எவரையும் நட்பு அல்லது பகை என இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடுவார்கள். எந்தச் சிந்தனையையும் தாங்கள் ஏற்கனவே அறிந்தவற்றின் ஒரு பகுதியாக திரித்துக்கொள்வார்கள், அவற்றில் உடன்பாடானவை மறுக்கவேண்டியவை என இரண்டே வகைமைதான் அவர்களுக்கு.

உண்மையில் அவர்கள் அங்கிருந்து விடுவித்துக்கொண்டாலொழிய அவர்களுக்கு இலக்கியம், தத்துவம் இரண்டும் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு விடுவித்துக் கொள்வது எளிதல்ல. ரத்தம் கசிய தன்னை துண்டித்துக்கொள்ள வேண்டும். நண்பர்களை இழக்கவேண்டும். அணுக்கமானவர்கள் பகைவர்களாக ஆவதை தாங்கிக் கொள்ள வேண்டும். அந்த அனுபவம் என்னவென்று எல்லா அரசியல்தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் ஏற்கனவே விலகிச்சென்ற சிலரை அவர்களே அவ்வாறு வசைபாடி, அவதூறுசெய்து, அவமதித்திருப்பார்கள். அரசியலமைப்பு முதலில் அளிக்கும் எச்சரிக்கையே அதுதான் ‘துரோகிகளுக்கு என்ன ஆகும் தெரியுமல்லவா?’

அரசியல் தரப்புகள் எல்லாமே அவற்றை ஏற்பவர்களிடம் தங்கள் விசுவாசத்தை உரக்க அறிக்கையிடும்படிச் கோருகின்றன. அந்த தரப்பு சுட்டிக்காட்டும் எதிரிகள்மேல் கல்வீசும்படி ஆணையிடுகின்றன. அதைச்செய்யாவிட்டால் அங்கே நீடிக்க முடியாது. அதை கொஞ்சநாள் செய்தவர்கள் அச்செயல்களால் பொதுவெளியில் ஓர் அடையாளம் அடைந்திருப்பார்கள். மனம் மாறிவிட்டாலும்கூட பொதுவெளியிலுள்ள அந்த அடையாளத்தைத் துறப்பது எளிதல்ல. அதன் வலியும் கசப்பும் ஒரு தனிநபருக்கு மிகமிக கொடிய அனுபவங்கள். அதற்குத் துணிந்தவர்களுக்கே விடுதலை கிடைக்கிறது.

பி.கே.பாலகிருஷ்ணன்

உண்மையில் அது விடுதலையா என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது. அரசியல்தரப்புகளின் எளிய உறுப்பாக, வெற்றுக்கோஷங்களை எழுப்பும் இயந்திரமாக ஒருவன் இருக்கையில் அவன் சிந்தனையும், உணர்ச்சிகளும் எவருக்கோ அடிமையாக உள்ளன. ஆனால் அவனுக்கு சிந்திக்கும் பொறுப்பில்லை, முடிவெடுக்கும் சுமை இல்லை. அவனைப்போன்ற பல நண்பர்கள் உடனுள்ளனர். ஆகவே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அத்தரப்பில் இருந்து விலகியதுமே அவன் தனித்தவன் ஆகிவிடுகிறான். அவனே சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டியிருக்கிறது. அது பெரும் சுமை.

ஆனாலும் அச்சுமையை ஏற்பவர்கள் சிலர் உள்ளனர். ’எனக்காகச் சிந்திப்பது என் பொறுப்பு மட்டுமே’ என உணர்பவர்கள். மூளையை, உணர்வுகளை, ஆன்மாவை வாடகைக்குவிட பிடிவாதமாக மறுப்பவர்கள். அவர்களுக்குரியதே கலையும் இலக்கியமும். மிகமிகக்குறைவானவர்கள் அவர்கள். தமிழ்ச்சூழலில் சில ஆயிரம் பேரைக்கூட அவ்வாறு கணக்கிட்டு எடுக்கமுடியாது.

ஆனால் அந்தச் சிறுபான்மையினரே கலையை, இலக்கியத்தை, தத்துவத்தை முன்னெடுப்பவர்கள். அவர்களின் செவிகள் நம் கண்முன் உள்ள பெருந்திரளில் எங்கோ மறைந்துள்ளன. அவற்றை நோக்கியே பேசிக்கொண்டிருக்கிறோம். புதுமைப்பித்தனும், க.நா.சுப்ரமணியமும், சுந்தர ராமசாமியும், ஜெயகாந்தனும், எல்லாம் பேசியது அவர்களுடன்தான். எம்.கோவிந்தனும், பி.கே.பாலகிருஷ்ணனும். ஆற்றூர் ரவிவர்மாவும், ஓ.வி.விஜயனும் பேசியது அவர்களுடன்தான்.

அதன் பொருட்டே அந்த முன்னோடிகள் நச்சிலக்கியவாதிகள் என்றும், சி.ஐ.ஏ கூலிகள் என்றும், சாதியவாதிகள் என்றும், மதவெறியர்கள் என்றும் அரசியல் தரப்பினரால் வசைபாடப்பட்டனர். வலதோ இடதோ, எல்லா அரசியல் தரப்பும் அவர்களை வசைபாடின, இன்றும் வசைபாடுகின்றன. ஆனால் அக்குரல் இங்கே என்றுமிருக்கும். அவர்களை நோக்கிச் செலுத்தப்படும் வசைகளும் அவதூறுகளும் என்றுமிருக்கும். சொல்லப்போனால் அரசியல்தரப்பினரின் கூட்டான வசையே அவர்களை அடையாளம் காண்பதற்குச் சிறந்த வழி.

எம். கோவிந்தன்

சுந்தர ராமசாமி

க.நா.சுப்ரமணியம்

ஜெயகாந்தன்

முந்தைய கட்டுரைவிளாத்திக்குளம் சுவாமிகள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி, ஒரு கடிதம்