இலங்கையின் பிரபல தமிழ் நடிகரும், ஓவியரும், நண்பருமான தர்ஷன் தர்மராஜ் திடீர் மாரடைப்பினால் தனது 41 ஆவது வயதில் காலமாகியிருக்கும் தகவலோடு மிகுந்த கவலையைத் தோற்றுவிக்கும்விதமாக இன்றைய காலை விடிந்திருக்கிறது. பல சர்வதேச திரைப்பட விருதுகளை வென்று, இலங்கைத் திரைப்படத் துறையில் மிக முக்கியமான தடத்தினைப் பதித்திருக்கும் தர்ஷனின் கலைத்துறைப் பயணம் பலருக்கும் மிகவும் முன்மாதிரியாக அமையக் கூடியது.
நீங்கள் முன்னுரை எழுதிய எனது ‘ஆழங்களினூடு…’ நூலில் அவருடனான விரிவான நேர்காணல் இடம்பெற்றிருந்தது. அந்த நேர்காணலை இத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை விடவும் சிறந்த அஞ்சலிப் பதிவொன்றை என்னால் இன்று எழுத முடியுமென்று நினைக்கவில்லை. அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
***
சர்வதேச திரைவானில் பிரகாசிக்கும்இலங்கை நட்சத்திரம்
எம்.ரிஷான் ஷெரீப்
சர்வதேச திரைப்பட விழாக்களில் இலங்கையிலிருந்து வெளியாகும் சிங்கள மொழித் திரைப்படங்களுக்கென தனித்துவமான ஒரு இடம் உருவாகியிருக்கிறது. எந்தவொரு நாட்டுத் திரைப்படத்தினதும் சாயலில்லாது, திரைப்பட இயக்குனர்கள் தாம் வாழும் பிராந்தியத்தினையும், தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களது வாழ்வியலையும் அசலான தோற்றத்தோடு படம் பிடித்துக் காட்டும்போது, உலக சினிமா ரசிகர்கள் அவற்றைக் காண பெரிதும் ஆர்வம் கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள திரைக்கதையிலும், ஒளிப்பதிவிலும், தொழில்நுட்பத்திலும், இசையிலும், நடிகர்களது நடிப்பிலும் பூரணத்துவத்தைக் காணும்போது அத் திரைப்படமானது சர்வதேச விருதுகளுக்காக முன்வைக்கப்படுகின்றன. விருதுகளையும் வென்று விடுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் உலக சினிமா ரசிகர்களிடத்தில், இலங்கை சினிமாவைக் குறித்து உரையாடும்போது அனைவர் மனதிலும் நினைவுக்கு வரும் ஒரு முகமும், உருவமும் இருக்கிறது. அந்த நடிகரைப் பற்றி, அவரது சிறப்பான நடிப்பைப் பற்றி தவறாது குறிப்பிடுகிறார்கள். இலங்கையிலிருந்து வெளியாகும் அநேகமான சிங்கள மொழித் திரைப்படங்களிலும் பிரதான கதாபாத்திரத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த முகம் ஒரு தமிழ் முகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு திரையரங்கோ, நாடகப் பயிலரங்கோ, நடிப்பின் வாசனையோ சிறிதுமற்ற மலையகத் தேயிலைத் தோட்டக் கிராமமொன்றில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்ச் சிறுவன், பிழைப்பு தேடி கொழும்புக்கு வந்து, சிங்கள மொழியறியாமல் தடுமாறி, தெருவில் படுத்துறங்கி, சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக இருந்து போராடி இன்று சர்வதேசமே அறிந்த ஒரு நடிகனாக தலைநிமிர்ந்து நிற்பது அவரது தன்னம்பிக்கையையும், ‘திறமையிருந்தால் எவரும் சாதிக்கலாம்’ என்பதையுமே சமூகத்துக்கு பலமாக எடுத்துச் சொல்கிறது.
சிங்கள மொழிக் கலைஞர்களே அதிகமாக பணிபுரிந்து வந்த சிங்கள மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் தமிழ்மொழிக் கலைஞர்களுக்கான கதாபாத்திரங்களைக் கூட சிங்கள மொழிக் கலைஞர்களே ஏற்று நடித்த காலமொன்று இருந்தது. அவை கூட உதிரிக் கதாபாத்திரங்களாக, திரைப்படத்துக்கோ, நாடகத்துக்கோ முக்கியமற்ற தோட்டக்காரனாகவோ, வீட்டு வேலைக்காரியாகவோதான் இருந்தன. அந்த நிலைமை மாறி, ஒரு தமிழ் நடிகனுக்காகவே பிரதான கதாபாத்திரம் அமைத்து திரைக்கதை எழுதி, திரைப்படம் எடுத்து சர்வதேச விழாக்களுக்கு அனுப்பும் நிலைமைதான் இன்று காணப்படுகிறது. அந்த நிலைமையை தனது நடிப்புத் திறமையின் மூலம் இன்றைய சிங்களத் திரையுலகில் உருவாக்கியிருப்பவர் நடிகர் தர்ஷன் தர்மராஜ்.
இலங்கையில் திரைப்பட விருது விழாக்களில் அனுபவமும், திறமையும் வாய்ந்த சிங்கள நடிகர்களைப் புறந்தள்ளி, ‘சிறந்த நடிகருக்கான விருதை’ அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து வென்றுள்ள ஒரே தமிழ் நடிகர் இவர்தான். திரைத்துறையில் நேர்மையான விருதுகளை வென்றெடுக்க செல்வாக்கோ, பணமோ, பாரம்பரியப் புகழோ, இனமோ, சாதியோ முக்கியமானதல்ல, திறமையே பிரதானமானது என்பதையே இது நிரூபிக்கிறது.
உலக சினிமாக்களைப் பார்க்கும் திரைப்பட ரசிகர்கள் பலரும் திரையினூடு இன்று தர்ஷன் எனும் நடிகரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே தர்ஷன் என்பவர் யார்? பல வித கஷ்டங்களையும் தாங்கி, போராட்டங்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு இன்று இலங்கை திரைத்துறையினை வென்று நிற்கும் இந்த நடிகனைக் குறித்து அவருடனான கீழ் வரும் நேர்காணல் பல விடயங்களைத் தெளிவுபடுத்தும். தனது நடிப்புத் திறமை மூலம் திரையில் சாதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த நேர்காணல் நிச்சயமாக தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு நடிகனாக ஆக வேண்டுமென்ற ஆசை தர்ஷனிடம் சிறுபராயத்திலும் இருந்ததா?
சிறுபராயத்திலிருந்தே அந்த ஆசை உள்ளுக்குள் இருந்து வந்திருக்கிறது. சிறு வயதில் நான் கண்ணாடி முன்பிருந்து அகலாமல் வித விதமான கதாபாத்திரங்களை நடித்துப் பார்த்த காலம் நினைவுக்கு வருகிறது. அக் காலகட்டத்தில் ஒரு தபாலக ஊழியர் எனது வீட்டில் தங்கியிருந்தார். நான் செய்வதையெல்லாம் பார்த்து ‘நீ எப்போதாவது ஒரு நாள் பெரிய நடிகனாக ஆகப் போகிறாய்’ என என்னிடம் கிண்டலாகச் சொல்வார். அவர் என்னிடம் கிண்டலாகக் கூறிய போதும், எனது பெற்றோரிடம் ‘மகனுக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்கிறது. ஊக்குவித்தால் முன்னுக்கு வந்துவிடுவான்’ எனக் கூறியிருந்தார்.
அன்று அந்த வார்த்தைகள் தந்த ஊக்கம் நெஞ்சில் நிறைந்து ஒரு நடிகனாகவே என்னை எண்ணிக் கொண்டு வாழ்ந்த காலங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. இறக்குவானை அரசாங்கப் பாடசாலையான சென்ட்.ஜோன் தமிழ் வித்தியாலத்திலேயே நான் கல்வி கற்றேன். பாடசாலைக் காலங்களில் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். அவை அக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கின. எனவே நானும் ஊரில் ஒரு பிரபலமாகத் திகழ்ந்தேன்.
சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சியில் போடப்படும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களை ஒரு படம் விடாமல் பார்ப்பேன். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகிய நடிகர்கள் மீது பைத்தியமாக இருந்த காலகட்டம் அது. அவர்களது திரைப்படங்களைப் பார்க்கும்போது அவர்களைப் போல என்னாலும் நடிக்க முடியுமென உணர்ந்தேன். உசுப்பேற்றி விட நண்பர்களும் கூடவே இருந்தார்கள். நடிப்பைத் தவிர எனக்கு வேறெந்தத் தொழிலும் சரியாக வராது என்று அன்றே தோன்றியது. நான் ஒரு நல்ல ஓவியன். என்றபோதும் நடிப்பின் மீதே பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன்.
திரைப்படங்கள் மீதும், நடிப்பின் மீதும் பெருமளவு ஈடுபாடு காட்டுவதை இலங்கையிலுள்ள அநேகமான குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தம் பிள்ளைகளுக்கு அவற்றின் மீது ஈர்ப்பு உண்டு என்பதை அறிந்தாலே கண்டிக்க முற்படுவார்கள். உங்களுக்கு அவ்வாறு நேரவில்லை எனில், உங்கள் குடும்பத்தினரும் கலையோடு சம்பந்தப்பட்டவர்களா?
எனது தந்தை ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். அக் காலத்தில் ஊரிலும், அயல்கிராமங்களிலும் திருமண மேடைகளை அமைப்பதில் திறமைகளைக் காட்டியவர். நானும் சிறுவயதிலிருந்தே அவற்றுக்கு உதவியிருக்கிறேன். அவர் பயிற்சியளித்தே நானும் ஓவியங்களை வரையக் கற்றுக் கொண்டேன். இன்று சிறந்த ஓவியனாக நான் அறியப்பட்டிருப்பதற்கு அவரே காரணம். திருமண மேடைகளை அமைத்துக் கொடுப்பதோடு மேலதிகமாக இறக்குவானை கோயில் கலாசார நிகழ்ச்சிகளையும் எனது தந்தை நடத்திக் கொடுத்தார். அக் காலகட்டத்தில் நாம் மிகவும் வறிய குடும்பத்தவர்களாக இருந்தபோதும் கலை சம்பந்தப்பட்ட விடயங்களில் செல்வந்தர்களாகவே இருந்தோம்.
அப்பாவும், அம்மாவும் எம்மை வளர்த்தெடுக்க மிகவும் பாடுபட்டார்கள். அக் காலத்தில் என்னிடம் ஒரே ஒரு மேற்சட்டை மாத்திரமே இருந்தது. கழுவித் தோய்த்தெடுத்துக் காயவைத்து எங்கு போனாலும் அதையே அணிந்து சென்றேன். அப்பா காலமானதற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. எம்மை வளர்த்தெடுக்க அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து விற்றார். அந்தக் கஷ்டமான காலகட்டத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
இறக்குவானை எனும் மலையகப் பிரதேசத்திலிருந்து இளம் வயதிலேயே கொழும்பு நகரத்துக்கு ஏன் வந்தீர்கள்? ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்றேதான் தலைநகரத்துக்கு வந்தீர்களா?
நடிகனாக ஆகும் ஆசை உள்ளுக்குள் இருந்தபோதிலும் அதை விடவும் உயிர் வாழும் ஆசைதான் அக் காலத்தில் மிகைத்திருந்தது. எனது தந்தை மரணித்ததும் நாங்கள் இருந்ததை விடவும் கஷ்டமான நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். குடும்பத்தில் மூத்தவன் என்பதால் நிறைய பொறுப்புக்கள் என் மீது வீழ்ந்தன. தங்கையை வலிப்பு நோய் தாக்கி மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். அக்காலத்தில் அதற்கான மருந்துச் செலவுக்கு மாத்திரம் மாதாந்தம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தேவையாக இருந்தது. அவளைக் குணப்படுத்துவதற்காகவாவது கொழும்புக்குச் சென்று ஏதாவது தொழிலொன்றைத் தேடிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். அதற்காகத்தான் கொழும்புக்கு வந்தேன். அந்தப் பயணம் மிகுந்த இடர் நிறைந்த பயணமாக அமைந்தது.
அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நிறையப் பிரச்சினைகள் இருந்தன. சிங்கள மொழி தெரியாத என்னைப் போன்ற தமிழ் இளைஞனுடைய ஜீவிதம் மிகுந்த அபாயத்துக்குள்ளாகும் சாத்தியம் ஒவ்வொரு கணத்திலும் இருந்தது. நாட்டில் எங்கு பார்த்தாலும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. முக்கியமாக கொழும்பில் அந் நிலைமை பரவலாக இருந்தது. அன்று இறக்குவானையிலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் பன்னிரண்டு இராணுவக் காவலரண்களைக் கடந்து வர வேண்டும். அந்த ஒவ்வொரு காவலரணிலும் மிகவும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டேன். காரணம் நான் ஒரு தமிழன்.
அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. நாட்டில் அவ்வாறான நிலைமைதான் அன்று காணப்பட்டது. எவ்வாறோ அத் தடைகளைத் தாண்டி கொழும்பு நகரத்துக்கு வந்து சேர்ந்த பிறகு பார்த்தால் எனது பணப்பை காணாமல் போயிருந்தது. தொலைத்து விட்டோமே என்று கவலைப்படும் அளவுக்கு அந்தப் பணப்பையில் பணமிருக்கவில்லை. எனினும் அன்று கொழும்பில் வசிக்கத் தேவையான முக்கியமான ஆவணமும் அதனோடு தொலைந்து போயிருந்தது. அது எனது ஆள் அடையாள அட்டை. அது இல்லாததால் எக் கணமும் காவல்துறையால் கைது செய்யப்படக் கூடிய நிலைமையில் நான் இருந்தேன்.
நான் எந்தளவு கையறு நிலைக்கு ஆளானேன்றால் மொழி தெரியாத ஊரில் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆள் அடையாள அட்டையைத் தொலைத்து விட்டேனென போலிஸில் முறைப்பாடு செய்யப் போனால் எனக்கு மீட்சியில்லை எனத் தோன்றியது. அக் காலத்தில் நிலைமை மோசமாக இருந்ததால் அடையாள அட்டையில்லாமல் எவரிடமும் வேலை கேட்டுப் போகவும் முடியாது. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு யாரும் தொழிலொன்றைக் கொடுக்கவும் மாட்டார்கள்.
நான் கொழும்பு மாநகரத்தில் தனித்துப் போனேன். கதியற்று நின்றேன். எனினும் என்னிடம் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும், உத்வேகமும் இருந்தது. தங்கைக்கு மருத்துவம் பார்க்கத் தேவையான பணத்தைத் தேட வேண்டும். அடையாள அட்டையில்லாது செய்ய முடிந்த ஒரேயொரு தொழில் கொழும்பில் இருந்தது. யாரிடமும் அடிமைப்படவும் தேவையில்லை. மிகவும் சுதந்திரமான தொழில் அது. நான் அதைச் செய்தேன்.
மூடை சுமக்கும் கூலித் தொழிலாளி என்பவன் வெறுமனே ஒரு சுமை தூக்கி மாத்திரமல்ல, வாழ்க்கையையே சுமப்பவன் என்றே இன்று எனக்குத் தோன்றுகிறது. அன்றைய அந்த அனுபவத்தைக் கொண்டு நான் வாழ்க்கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். அதுதான் எனது நடிப்பின் பள்ளிக்கூடம். கோபமும், சந்தோஷமும், நெருக்குதல்களும், இழப்புக்களும் மிக்க மனித உடல்களின் நிஜ வாடையை அங்கு நான் அறிந்தேன். நெருக்கடி மிக்க வாழ்க்கை அங்குமிங்குமாக அசைவதையும், அந்த வாழ்க்கை எம்மை விடவும் அதிக பாரத்தைத் தனது தலையில் சுமந்துகொண்டு செல்வதையும் நான் அவதானித்தேன்.
நாள் முழுவதும் எவ்வளவுதான் சுமை தூக்கிச் சோர்ந்திருந்தாலும், மாலையாகி தெருவோரத்தில் படுத்துக் கிடக்கும்போது எம்மை விடவும் நிம்மதியாக இருப்பவர்கள் வேறெவருமில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆறு ரூபாய்க்கு காகித அட்டைப் பெட்டி வாங்கி தெருவோரத்தில் தரையில் விரித்துப் படுத்துக் கொள்வேன். ஒரு சிறிய பிஸ்கெட் பாக்கெட் வாங்கி ஒரு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு பசியாறி, தங்கையின் மருத்துவத்துக்காக பணத்தினை சேமித்தேன்.
அன்று வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடம் இன்றும் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. வாழ்க்கையை வாழத் தேவையான அதிகபட்ச ஊக்கம் எனக்கு அதன் மூலம் இன்றும் கிடைக்கிறது. நான் இறந்த காலத்தை நேசிக்கும், அதைக் குறித்து பெருமைப்படும் ஒருவன். காரணம் இன்றைய நான், அவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததன் தொகுப்புதான்.
பரம்பரையாக வந்தவர்களாகவோ, நடிப்பு பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெற்று வந்தவர்களாகவோ, விளம்பரத் துறையிலிருந்து வந்தவர்களாகவோதான் அநேகமான சிங்கள நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த எல்லைகளைக் கடந்து, அவர்களுக்கு மத்தியில், சுமை தூக்கி ஜீவிக்கும் ஒரு கூலித் தொழிலாளி, ஒரு நடிகனாக ஆகியது எப்போது?
கொழும்பு நகரத்தில் தினந்தோறும் வாழ்க்கை ஓரோர் வடிவங்களில் மிதந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள், தெருவோரக் கடையொன்றில் காட்சிக்கு வைத்திருந்த தொலைக்காட்சியொன்றில் ஒரு விளம்பரத்தை தற்செயலாக காணக் கிடைத்தது. தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் அது. பிரபல இயக்குனர் Sydney Chandrasekara வின் நாடகம் அது. நாடகத்தின் பெயர் A9.
நடிப்பின் மீதுள்ள ஆசையில் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியைக் குறித்துக் கொண்டு, அந்த நாடகத்தின் நேர்முகத் தேர்வுக்காகச் சென்றேன். மூடை சுமந்துவிட்டு அழுக்கான உடையுடன், காலில் போட்டிருந்த இறப்பர் செருப்போடுதான் நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தேன். என்னுடன் சேர்த்து நூற்றியெட்டுப் பேர் நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தார்கள். அன்று, கூட வந்திருந்த நூற்றியெட்டுப் பேரிலிருந்தும் நான் மாத்திரமே தேர்வு செய்யப்பட்டேன். அந்த நேர்காணலின் போது, நான் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை பின்னொரு நாளில் இயக்குனர் சிட்னி சந்திரசேகரவே என்னிடம் கூறினார்.
வந்திருந்த அனைவரிடமும் ‘இருபது அடி உயரமான இடத்திலிருந்து குதிக்க முடியுமா?’ என்ற ஒரே கேள்வியைத்தான் கேட்டாராம். ஒவ்வொருவரும் ‘கீழே மெத்தை வைப்பீர்களா?’, ‘இருபது அடி உயரத்துக்கு எப்படி ஏறுவது?’, ‘காயப்பட்டால் அருகிலேயே ஆம்ப்யூலன்ஸ் வைத்திருப்பீர்களா?’ போன்ற கேள்விகளை பதிலுக்குக் கேட்டார்களாம். நான் மாத்திரம்தான் ‘இடத்தைக் காட்டுங்கள், குதிக்கிறேன்’ என்றேனாம். அந்த தைரியத்துக்காகவே என்னைத் தெரிவு செய்ததாகச் சொன்னார். அந்தக் காலகட்டத்தில் எனது தோற்றம் கூட மிகவும் மோசமாக இருந்தது. தாடி வளர்ந்து, ஒல்லியாக, அழகற்ற தோற்றத்திலிருந்தேன். எனினும் என்னை அன்று அவர் தேர்ந்தெடுத்தார். அவரது தொலைக்காட்சி தொடர் நாடகத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.
அந்தக் காலத்தில் எனக்கு கொழும்பில் தங்கியிருக்க ஒரு பாதுகாப்பான இடம் இருக்கவில்லை. இஷான் எனும் சக நடிகனின் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சென்று தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து நேராகச் செல்வது அவரது வீட்டுக்குத்தான். அவரது அம்மா சமைத்து பரிமாறும் உணவுகளைக் கொண்டு எத்தனையோ நாட்கள் பசியாறியிருக்கிறேன். படப்பிடிப்புக் களத்தில் சாப்பிடவும் சோற்றுப் பார்சல்களை அவர் எனக்குக் கட்டித் தருவார். தனது மகனைப் போலவே என்னையும் கவனித்துக் கொண்டார்.
அந்த நாடகத்தின் படப்பிடிப்பு முடிந்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக் காத்திருந்த காலகட்டத்தில் வேறு வாய்ப்புகள் எவையும் கிடைக்காத காரணத்தால் துணிக்கடையொன்றுக்கு வேலைக்குச் சென்றேன். பிறகு பத்திக் ஆடையலங்கார வடிவமைப்பாளராக வேலை செய்தேன். அங்கிருக்கும்போது நடிப்பு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்ல நான் அழைக்கப்பட்டதால் அந்த வேலையையும் நான் இழக்க நேரிட்டது.
அந்த தொலைக்காட்சி நாடகம் உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது இல்லையா? அக் காலத்தில் நாடு முழுவதும் பிரபலமாக இருந்த நாடகம் அது. அதன்பிறகு சிறந்த புதுமுக நடிகர் விருது உங்களுக்குக் கிடைத்தது. பின்னர் இலங்கையின் சிறந்த நடிகர் விருது பல தடவைகள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, இல்லையா?
முதல் நாடகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியதும் Prasanna Vithanage, Ashoka Handagama, Boodi Keerthisena, Jackson Anthony, Uberto Pasolini போன்ற சர்வதேச புகழ்பெற்ற சிறந்த இயக்குனர்களின் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்தன. அவர்கள் எனக்குத் தந்த கதாபாத்திரங்களினூடாகவே இன்று சிறந்த நடிகனாக ஆகியிருக்கிறேன்.
‘மச்சான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ‘தர்ஷன் இந்தக் கதாபாத்திரம் உனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு. உனது நடிப்புப் பயணத்துக்கு இது மிகவும் பயனளிக்கும்’ என இயக்குனர் பிரசன்ன விதானகே கூறினார். ‘கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தினால் விருதுகளும் உனக்குக் கிடைக்கக் கூடும்’ என்றும் கூறி ஊக்கமளித்தார். எனவே திரைப்படத்தில் நடித்த அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்தோம்.
இலங்கையின் சிறந்த இயக்குனர்கள், சர்வதேச திரைப்பட இயக்குனர், சர்வதேச திரைப்பட ஒளிப்பதிவாளர்கள், சர்வதேசக் கலைஞர்கள் ஆகியோர் திரையுலகில் மிகுந்த அனுபவங்களைக் கொண்டவர்கள். இவர்களுடன் பணியாற்றும்போது நடிப்பு மாத்திரமல்ல, சினிமாவைக் குறித்து கற்றுக் கொள்ளக் கூட புதிதாக ஒரு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற பாடத்தை அந்த அனுபவங்கள் எனக்குக் கற்றுத் தந்தன.
சிறந்த நடிகருக்கான விருதுகள் என்பவை நடிப்புத் திறமைக்காக ஒரு நடிகருக்குக் கிடைக்கக் கூடிய உயரிய விருதுகள். எனது நடிப்பாற்றலுக்கு நான் பெற்றுக் கொண்ட மிகப் பெரிய வெற்றிகளாக எப்போதும் அவற்றைக் கருதுகிறேன்.
நடிப்புக்காக உங்கள் முதல் விருதினைப் பெற்றுக் கொண்ட போது அந்தத் தருணத்தை எவ்வாறு உணர்ந்தீர்கள்?
திரைப்பட விழாவில் விருதுக்காக எனது பெயர் அறிவிக்கப்பட்டபோது ‘இன்று வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்துவிட்டேன் அல்லவா?’ என்று மனதில் தோன்றியது. சிறு வயதில் ஓடையில் குளிக்கும்போதும், பாடசாலைக்குச் செல்லும்போதும், வரும்போதும், விளையாடும்போதும் நான் எப்போதும் கேமராவின் முன்புதான் நின்று கொண்டிருக்கிறேன் என எண்ணிக் கொள்வேன். சிறு வயது முதல் கண்டு வந்த கனவு அன்று நனவானது. வருடக்கணக்காகத் தொடர்ந்த கனவொன்று அம் மேடை மீது நனவானது. அந்த விருது எனது தொடர்ச்சியான பயணத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.
2008 முதல் 2010 வரை சர்வதேச திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரையிடப்பட்ட ஒரு திரைப்படம் ‘மச்சான்’. Venice, São Paulo, Kerala, Transilvania, Palm Beach, Durban, Brussels, Trenčín, Sarasaviya போன்ற சர்வதேசமே கொண்டாடும் முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படம் அது. இத்தாலியின் சிறந்த தயாரிப்பாளரும், இயக்குனருமான Uberto Pasolini யின் அத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?
நேர்முகத் தேர்வுக்குப் பிறகே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. திரு.ராஜா கணேசன் மற்றும் சில நண்பர்கள், இப்படி ஒரு திரைப்படம் இலங்கையில் எடுக்கப்படப் போவதையும் அதற்கு நடிகர் தேர்வு நடைபெறுவதையும் பற்றிக் கூறி என்னிடம் அதில் கலந்து கொள்ளும்படி கூறினார்கள்.
நான் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டேன். நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பயிற்சி வகுப்புக்களை நடத்தினார்கள். படிமுறை படிமுறையாக பல வகுப்புக்கள் நடத்தப்பட்டன. வகுப்புக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு விட்டு, இறுதி நேர்முகத் தேர்வுக்காக உள்ளே நுழையும்போதே ‘நீ ஏற்கெனவே தேர்வாகி விட்டாய்’ என அங்கிருந்த இயக்குனர் பெஸோலினி கூறினார். இனி அதற்கு மேல் வேறேதாவது இருக்கிறதா என்ன?
‘நீ சற்று பருமனாக இருக்கிறாய். கதாபாத்திரத்துக்காக உன்னால் ஒல்லியாக முடியுமா?’ எனக் கேட்டார். பிறகு எனது கதாபாத்திரத்தைக் குறித்து விவரித்தார். ‘வெளிநாட்டுக்குப் போன அனுபவம் ஏதாவது இருக்கிறதா?’ எனக் கேட்டார். அப்போது எனக்கு அந்த அனுபவம் இருக்கவில்லை. எனினும் நண்பர்களது அனுபவங்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறினேன். ‘இந்தத் திரைப்படத்தின் கதை, இலங்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?’ எனக் கேட்டார். அதைக் குறித்தும் நான் அறிந்திருக்கவில்லை. உடனே அவர் அந்தக் கதையையும் என்னிடம் விவரித்தார்.
அந்தக் காலத்தில் நான் தங்கியிருந்த இடத்துடன் ஒப்பிடும்போது திரைப்படத்தில் எனக்குத் தரப்பட்ட சுரேஷின் கதாபாத்திரம் எனக்கு புதிதாக இருக்கவில்லை. காரணம், கிராமத்திலிருந்து கொழும்புக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்த நான் சேரிப்புற வாழ்க்கை எவ்வாறிருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தேன். எனவே ‘மச்சான்’ திரைப்படத்தில் நடிக்கும்போது எவ்வித சிக்கலும் எனக்கிருக்கவில்லை.
இலங்கைத் திரைப்படங்களில் விடுதலைப் புலிகள் இயக்க போராளியின் கதாபாத்திரம் என்றால் அதை உங்களுக்குத்தான் தந்திருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளேயே நீங்கள் சிக்கிக் கொண்டு விட்டீர்களா?
அதற்குக் காரணம் நான் ஒரு தமிழன் என்பதனாலாக இருக்கும் என நான் நினைக்கிறேன். எனக்கும் வித விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசை உள்ளூர இருக்கிறது. சிலர் எனது முகத்தில் விடுதலைப் புலி உறுப்பினரைக் காணக் கூடும். அனைத்து தமிழர்களினது முகத்திலும் சிங்களவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்களை பொருத்திப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவ்வாறான கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடும்.
அவ்வாறான கதாபாத்திரங்களில் நடிக்க நடிகனைத் தேடும்போது எனது பெயர் மாத்திரம்தான் பலராலும் தொடர்ந்து சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு போராளி கதாபாத்திரத்தில் நடிக்க அடர்த்தியாக மீசை வைத்திருக்கும், கருமையான தோல் நிறம் கொண்ட, தமிழ் மொழியை நன்றாகப் பேசக் கூடிய வேறு நடிகர்கள் அக் காலத்தில் இருக்கவில்லை. எனக்கும் திரைப்படத் துறையில் நீண்ட பயணம் செல்லும் தேவையிருந்தது. அதனால் அந்தக் கதாபாத்திரங்களில் நடித்தேன்.
நான் ஒரு நடிகன். அதைத் தாண்டி வேறேதும் என்னிடம் இல்லை. எனது நடிகன் ஆகும் ஆசை, நான் தமிழனாக இருந்திருக்காவிட்டால் நிறைவேறியிருக்காது என இன்று எனக்குத் தோன்றுகிறது. நான் ஒரு தமிழன் என்பதால், எனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களை என்னால் சிறப்பாகச் செய்ய முடிந்திருக்கிறது.
இதனை விடுதலைப் புலிகள் இயக்கம் எவ்வாறு எடுத்துக் கொண்டது? சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு தமிழன் எனும்போது உங்களையும் அவர்கள் ஒரு எதிரியாகப் பார்க்கும் அபாயம் உருவாகும் அல்லவா?
‘பிரபாகரன்’ எனும் நான் நடித்த சிங்களத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நாடகம் ஒன்றை எடுக்கவிருக்கிறோம். உங்களால் நடிக்க முடியுமா தர்ஷன்?’ என என்னிடம் கேட்கப்பட்டது. வழமை போல நான் ‘முடியும், எனக்கு இவ்வளவு சம்பளம் தர வேண்டும்’ என ஒரு தொகையைக் கூறியதும், அவர்கள் ‘நாங்கள் இந்த இடத்திலிருந்து கதைக்கிறோம், எம்மிடமே பணம் கேட்கிறாயா? இனி நீ எப்படி நடிக்கப் போகிறாய் எனப் பார்’ என மிரட்டினார்கள். பின்னர் ‘சிங்களப் படங்களில் நீ ஏன் போராளியாக நடிக்கிறாய்?’ எனக் கேட்டார்கள். ‘ஒரு கலைஞனாக எனக்கு தரப்படும் கதாபாத்திரங்களை, இயக்குனர் கூறும் விதத்தில் நடித்துக் கொடுப்பதே எனது வேலை’ என்றேன். பிறகு அவர்கள் ‘இனி அவ்வாறு நடக்கக் கூடாது’ என எனக்கு கடைசி உத்தரவினை (Final Warning) இட்டார்கள்.
அது விடுதலைப் புலிகள் இயக்கத்தால் எனக்குத் தரப்படும் இறுதிக் கட்டளை என்பதனை நான் உணர்ந்ததால் நிஜமாகவே பயந்துபோனேன். அவ்வாறு மிரட்டப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு நாள் கொழும்பு, கிரான்ட்பாஸ் சந்தியில், நடுத்தெருவில் வைத்து ஒரு குழுவினர் என்னைச் சுற்றிவளைத்து மிகவும் மோசமாகத் தாக்கினார்கள். கொலை முயற்சி தாக்குதலாக அது இருந்தது. அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. முகங்களை மறைத்திருந்தார்கள். அன்று காயங்களோடு தப்பித்த நான் அந்த நிகழ்வின் பின்னர் இலங்கையிலிருக்காது சில காலம் இந்தியாவுக்கு சென்றிருந்தேன்.
இன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைக் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அவர்களும் மனிதர்கள்தான். அவ்வாறுதான் நான் எண்ணுகிறேன். இராணுவத்தில் ஒருவர் போரின் போது மரணித்து விட்டால் ஏற்படும் இழப்பையும், கவலையையும், போராளிகள் மரணிக்கும்போது அவர்களுக்கு நெருங்கியவர்களும் உணர்கிறார்கள். அந்த மரணம் அநியாயமானது, இந்த மரணம் கொண்டாடத்தக்கது என்று எதையும் பிரித்துக் கூற முடியாது. மரணம், மரணம்தான். வாழ்க்கையும் அவ்வாறுதான். அனைவருமே மனிதர்கள்.
இன்று வரை நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டீர்கள். எப்போதாவது, ஒரு கதாபாத்திரத்தில் மனம் ஒன்றி நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்களா?
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற உடனேயே யாழ்ப்பாணத்தில் புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, நந்திக்கடல் போன்ற பிரதேசங்களில் நான் நடித்த ‘மாதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் பிரதேசங்களில் பரவலாகப் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் எவையும் அப்போது அகற்றப்பட்டிருக்கவில்லை. எனவே கால் வைக்கும் இடத்தில் எப்போது எங்கு மிதிவெடி வெடிக்குமோ என்ற மிகுந்த அச்சத்துடனேயே நானும் திரைப்படக் குழுவினர் அனைவருமே அக் காடுகளில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தோம்.
பெரும்பாலும் நீங்கள் சிங்கள மொழித் திரைப்படங்கள், நாடகங்களில் நடிப்பதால் நாடு முழுவதும் நிறைய சிங்கள ரசிகர்களை கொண்டிருக்கிறீர்கள். தமிழர்களிடையே குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு படப்பிடிப்புக்காகச் செல்லும்போது அங்கு உங்களுக்கான வரவேற்பு எவ்வாறிருக்கிறது? யுத்தமற்ற யாழ்ப்பாணம் எப்படியிருக்கிறது? இலங்கை சினிமாவை அவர்கள் எப்படி நோக்குகிறார்கள்?
தற்போது சிங்களத் திரைப்படங்கள் யாழ்ப்பாணத்திலும் பரவலாகத் திரையிடப்படுவதால் யாழ்ப்பாணத்திலும் எனக்கு நல்ல வரவேற்பு இருப்பதனை உணர்கிறேன். எங்கு கண்டாலும் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை அம் மக்கள் வரவேற்கிறார்கள். தெருவில் நடக்கும்போது சிலர் தூர இருந்து ‘இது அந்த நடிகன்தானே?’ என நின்று உற்று நோக்குகிறார்கள். சிலர் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னைத் தெரிந்திருக்கிறது.
இந்தக் காலத்தில் யுத்தமற்ற யாழ்ப்பாணத்தைக் காண வரும் சிங்களவர்களையும் யாழ்ப்பாண மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். கடைகளுக்குச் சென்றால், ‘இருபது, முப்பது வருடங்களுக்குப் பிறகு இன்று ஒரு சிங்களவர் எனது கடைக்கு வந்து தேநீர் குடித்து விட்டுச் சென்றார்’ என மகிழ்ச்சியோடு அவர்கள் கதைத்துக் கொள்வதைக் கேட்க முடிகிறது.
அவ்வாறே தற்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கையின் தமிழ் சினிமா துளிர்த்து சிறப்பாக வளர்ந்து வரும் அடையாளங்களையும் நான் காண்கிறேன். இலங்கையின் சிறந்த தமிழ் சினிமாவை யாழ்ப்பாண மக்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம் வடக்கின் மக்கள் அந்தளவு தைரியத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக எழுந்து நிற்பார்கள். சாதிப்பார்கள்.
யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு நான் ஒரு படப்பிடிப்புக்காகப் போயிருந்த போது, ஒரு தந்தை தனது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்து வேகமாக மிதித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். கூர்ந்து கவனித்த போதுதான் தெரிந்தது. அப்பா சைக்கிளை மிதிக்கும்போது டைனமோ வேலை செய்து சைக்கிளின் மின்குமிழ் ஒளிர, அந்த வெளிச்சத்தில் ஒரு பிள்ளை படித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும், இந்த மக்கள் மிகுந்த மன திடமும் தன்னம்பிக்கையும் உடையவர்கள் என்று அன்று எனக்குத் தோன்றியது.
உங்கள் நிஜப் பெயரே தர்ஷன் தர்மராஜ் தானா?
இல்லை. எனது நிஜப் பெயர் லிங்கநாதன் தர்மராஜ். அந்தப் பெயருடன்தான் நடிக்க வந்தேன். இயக்குனர் சிட்னி சந்திரசேகர எனக்கு தர்ஷன் தர்மராஜ் எனப் பெயர் சூட்டினார். அந்தப் பெயரே நிலைத்து இன்று நான் தர்ஷன் தர்மராஜாக உங்கள் முன் நிற்கிறேன்.
கொழும்புக்கு வேலை தேடி வந்த நீங்கள், ஒரு புகழ்பெற்ற நடிகனாகப் போய் நின்றபோது ஊரில், வீட்டில் அதனை எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
வீட்டில் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் நடிகனாக இருப்பதை அவர்கள் விரும்பவுமில்லை. ‘ஒரு நடிகன் என்பவன் ஒழுக்கமானவனல்ல. ஊரில் உனக்கிருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடும்’ போன்ற சமூகத்திலிருக்கும் பொதுவான கருத்துக்களையெல்லாம் வைத்து எனக்கு அறிவுரை கூறினார்கள். அந்தக் கருத்துக்களையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.
அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஒருபோதுமில்லை. பெயரைக் கெடுத்துக் கொள்ள ஒரு நடிகனாகவே இருக்க வேண்டுமா என்ன? கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்பவர்களும், ஒழுக்கமற்றவர்களும் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஒரு நடிகனாக இருப்பவர் செய்யும் செயல், அவர் ஒரு பிரபலம் என்பதனால் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். எனக்கும் சினேகிதிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையுமே ஒரு எல்லைக்குள்தான் வைத்திருக்கிறேன். காரணம் என் மனதுக்கு நெருங்கிய தோழி எனது வீட்டிலேயே இருக்கிறார். அவர்தான் என் மனைவி.
அவரும் திரைத்துறையில் இருப்பவரா?
இல்லை. அவரும் எனது ஊரைச் சேர்ந்தவர்தான். ஒரு ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். ஒருநாள் எனது பாடசாலையில் ஓவியம் வரையும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அங்கு சென்றபோது புதிதாகச் சேர்ந்த ஆசிரியைகள் ஐவர் அங்கிருந்தனர். அவர்களுடன்தான் அன்று மதிய உணவருந்தினேன். அவர்களிடையே அவரும் இருந்தார். அழகாக இருந்தார். உரையாடிப் பார்த்த போது சினிமா குறித்தும் அவர் நன்கு அறிந்திருப்பது தெளிவானது. ‘நான் இவரைத் திருமணம் செய்து கொண்டாலென்ன?’ என அன்றே எனக்குத் தோன்றியது. எனினும் ‘ஐ லவ் யூ’ போன்ற எதையும் ஒருபோதும் அவரிடம் சொல்லவில்லை.
பிறகொரு நாள் அவர் என்னிடம் ஒரு வெற்றுத்தாளைத் தந்து என் மனதில் அவரைக் குறித்து என்ன இருக்கிறதென எழுதித் தரச் சொன்னார். தானும் அவ்வாறு எழுதித் தருவதாகக் கூறினார். எனக்கு எதுவுமே எழுதத் தோன்றவில்லை. வெற்றுத் தாளை எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன். அவரும் வெற்றுத் தாளோடே வந்திருந்தார். ‘ஏன் எதுவுமே எழுதவில்லை?’ என என்னிடம் கேட்டார். ‘எழுத எதுவுமில்லை… அந்த அளவுக்கு மனதில் உன்னை உள்வாங்கி விட்டேன்’ என்றேன். அவர் என்னை ஏற்றுக் கொண்டார். காதலித்தோம். அவரது வீட்டில் நான் ஒரு நடிகன் என்பதால் எதிர்ப்பிருந்தது. பின்னர் ‘மச்சான்’ திரைப்படத்துக்கு சர்வதேச விருதுகள் கிடைத்ததும், எனக்கு சிறந்த நடிகன் விருது கிடைத்ததும் ‘இவனிடம் ஏதோ திறமை இருக்கிறது’ என நம்பி திருமணம் செய்து கொடுத்தார்கள்.
மிகவும் பிடித்த நடிகர் யார்? யாரை இப்போதும் நடிப்பில் முன்னுதாரணமாகக் கொள்கிறீர்கள்?
கமல்ஹாசன். அவர்தான் எப்போதும் எனக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்.
இலங்கையில் ஒரு முன்னணி நடிகராக ஆகி விட்டீர்கள். கலைப் படைப்பில் உங்களது பங்களிப்புக்காக வாங்கும் சம்பளமும் அதிகரித்திருக்கும் இல்லையா?
அவ்வாறில்லை. எனக்குக் கிடைக்கும் கதாபாத்திரத்துக்கேற்ப, எனக்கு மிகவும் பொருத்தமானதாகவும், அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னால் உயிரூட்டக் கூடியதாகவும் இருப்பின் சம்பளத்தை எவ்வளவு குறைவாகக் கொடுத்தாலும் நான் அதனை வாங்கிக் கொள்வேன். அவ்வாறே நண்பர்கள் அவர்களது கலைப் படைப்புக்களில் நடிக்கக் கேட்டுக் கொண்டால், அவர்களுக்காக சம்பளத்தைக் குறைத்துக் கொள்வேன். இன்னும், நான் கஷ்டப்பட்டுப் போராடிய காலத்தில் எனக்கு உதவிய அனைவரிடமும், மிகுந்த விருப்பத்தோடு எப்போதும் மிகக் குறைந்த சம்பளத்திலேயே பணியாற்றுகிறேன். மொத்தமாகப் பார்க்கும்போது குறைந்த சம்பளத்துக்காகவே இன்னும் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இலங்கையில் ஒரு நடிகன் என்பதால் குறைந்தளவு ஊதியத்தோடு வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கஷ்டமாக இருக்கும் இல்லையா?
சற்று சிரமம்தான். ஆனால் என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது எதிர்காலத்துக்கென என்னிடம் எவ்வித சேமிப்பும் இல்லை. இன்று பணம் கிடைத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு குடும்பத்தோடு நன்றாகச் சாப்பிட்டு இன்று சந்தோஷமாக இருப்பேன். காரணம் நான் இன்றைய தினத்தை, இந்தக் கணத்தை மட்டுமே நம்புகிறேன். நாளை இருப்பேனோ இல்லையோ யார் கண்டது? யாரால் கூற முடியும்? நான் இன்று மட்டுமே வாழும் ஒரு மனிதன்.
1980 களில் இந்தியத் திரைப்படங்களில் இலங்கைக் கலைஞர்கள் பங்குபெறும்போது அந்தத் திரைப்படங்கள் திரையிடப்படும் காலத்தில் இலங்கைத் திரையரங்குகளில் கூட்டம் மிகைத்துக் காணப்பட்டதைக் குறித்து அறிந்திருக்கிறோம். இப்போதும் அந்த நிலைமையை இலங்கையிலும், இலங்கையர் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் காணக் கூடியதாக இருக்கிறது. இந்தியத் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது. இந்தியாவில், கேரளாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நான் நடித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை வழங்க என்னை பலரும் அணுகிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு இந்தியத் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக எவ்விதத் தயக்கமுமற்று ஏற்றுக் கொள்வேன். காரணம் தமிழ்மொழி எனும்போது தமிழ்நாட்டில் ஓரோர் பகுதியிலும் பாவனையிலுள்ள எவ்வாறான தமிழ்மொழி நடையையும் ஏற்றுப் பேசி நடிக்க என்னால் முடியும். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றில்லை. நல்ல கதாபாத்திரம் என்றால் நிச்சயமாக நடித்துக் கொடுப்பேன். பின்னணிக் குரலையும் என்னாலேயே கொடுக்க முடியும். அந்தத் திறமையும், நம்பிக்கையும், திரையுலகில் பதினைந்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமும் என்னிடம் இருக்கிறது. இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் வாய்ப்பு கொடுக்க விரும்புபவர்கள் தயங்காது என்னைத் தொடர்பு கொள்ளலாம்.