வெண்முரசு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

வெண்முரசு அனைத்து நூல்களும் ஒரே லைப்ரரியாக கிடைக்க வாய்ப்புண்டா? இப்போது தனித்தனியாகத் தேடித்தேடி வாங்கவேண்டியிருக்கிறது. பலநூல்கள் கிடைக்கவில்லை. நீண்டநாட்கள் தேடி முதற்கனல் இப்போதுதான் வாங்கினேன். சீரான ஒரே தொகுப்பாக எல்லா நூல்களும் வெளிவராமல் போனால் நூல்கள் கிடைக்காமலாக வாய்ப்புள்ளது.

ஆனந்தி சங்கர்

அன்புள்ள ஆனந்தி,

இன்னும் பத்து அல்லது இருபதாண்டுகள் அச்சுநூல் இருக்கும். அதுவரைக்கும் இவற்றை புத்தகவடிவில் கொண்டுவரலாமென்பது எண்ணம். அதற்காகவே விஷ்ணுபுரம் பதிப்பகம் தொடங்கியிருக்கிறோம். மின்னூலாக எல்லாமே இப்போதும் கிடைக்கின்றன.

கிழக்கு வெளியிட்ட நூல்கள் சில உள்ளன. விஷ்ணுபுரம் பதிப்பகம் இப்போதுதான் வெண்முரசின் கடைசிநூலை வெளியிட்டு முடித்துள்ளது. இனி என்னென்ன கிடைக்கவில்லையோ அவற்றை அச்சிட்டுச் சேர்த்து எல்லாவற்றையும்  ஒரே வரிசையாகச் சந்தைக்குக் கொண்டுவர முயல்வோம். அனேகமாக சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

வெண்முரசு நூல்களை முழுமையாக நான் இன்னும் வாங்கவில்லை 12 நாவல்கள் கைவசம் உள்ளன. அவற்றை நூலகத்தில் பார்ப்பது ஓர் அழகு. அத்துடன் கைபோன போக்கில் எடுத்து ஏதேனும் ஒரு பக்கத்தை வாசிப்பதும் அப்படியே மூழ்கிப்போய் அமர்ந்திருப்பதும் மகத்தான அனுபவம்.

ஆனால் இன்னொன்றும் சொல்லவேண்டும். எப்போதெல்லாம் மனம் கலங்கியிருக்கிறேனோ அல்லது சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் வெண்முரசை எடுத்து படிப்பேன். கைபோன ஒரு பக்கத்தைப்பிரித்து நாலைந்து பக்கம் செல்வதற்குள் எனக்காகவே சொல்லப்பட்டதுபோல கனகச்சிதமான ஒரு வரியில் பதில் இருக்கும். ஐம்பது முறையாவது இது நடந்துள்ளது.

செல்வி முருகேஷ்

***

அன்புள்ள செல்வி

கிளாஸிக் என அடையாளப்படுத்தப்படும் நூலின் முதன்மை இயல்பே அதுதான். அதன் எல்லா பக்கங்களிலும் எல்லாமே இருக்கும்

ஜெ

வெண்முரசு – கல்பொருசிறுநுரை (25) வாங்க

வெண்முரசு – முதலாவிண் (26) வாங்க

முந்தைய கட்டுரைதர்ஷன் தர்மராஜ்- அஞ்சலி
அடுத்த கட்டுரைஇசைரசனை வகுப்பு – கடிதம்