பொன்னியின் செல்வன் – ஒரு பெருங்கனவின் நனவுரு

பொன்னியின் செல்வன் இன்று வெளியாகிறது. உலகமெங்கும். உலகமெங்கும் என்பது வெறும் சொல் அல்ல.  உலகமெங்கும் என பல தமிழ் சினிமாக்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை உலகமெங்குமுள்ள தமிழ் ரசிகர்களுக்காக வெளியானவை. பொன்னியின் செல்வன் மெய்யாகவே உலக சினிமாப்பார்வையாளர்களைச் சென்றடைகிறது. அவ்வாறு சென்றடையும் முதல் தமிழ் சினிமா இது.

பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான உலகமொழிகளில் வசன எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு வெளியாகிறது. இதுவரை தமிழ் சினிமா வெளியாகியிருக்காத நாடுகளில் வெளியாகிறது. இதுவரை மையத்திரையரங்குகளில் தமிழ் சினிமா வெளியாகியிருக்காத நாடுகளில் முதன்மை திரைப்படவெளியீடாகவே நிகழவிருக்கிறது.

இப்படிச் சுருக்கலாம். இன்று இப்படத்தைப் பார்க்கப் போகிறவர்களில் கால்வாசிப்பேர் தமிழ், தமிழகம் என்னும் சொல்லையே முதன்முறையாகக் கேள்விப்படுபவர்களாக இருப்பார்கள்.  நேர்பாதிப் பேர் சோழர் என்னும் சொல்லை முதல் முறையாகக் கேள்விப்படுபவர்களாக இருப்பார்கள்.

இது ஒரு பெருங்கனவு. தமிழரின் கூட்டுக்கனவாகவே ஆகிவிட்ட ஒன்று. அதை இளைய தலைமுறைக்கு முன் வைக்கிறோம். உலகின் முன் வைக்கிறோம். அதற்கு ஈழத்தமிழர்களுக்கு முதன்மை நன்றிகூறவேண்டும். அவர்கள் சந்தித்த மிகப்பெரிய வரலாற்று அவலத்தில் இருந்து பீனிக்ஸ் போல மீண்டெழுந்தனர். உழைப்பால், அறிவால் உலகை வென்றனர். அவ்வெற்றியே பொன்னியின்செல்வன் போன்ற ஒரு படத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு, அவர்கள் பகிர்ந்துகொண்ட கனவுக்கு வணக்கம்.

உலகமெங்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படத்தை அவ்வண்ணம் கொண்டுசென்றபோது கண்ட வியப்புக்குரிய விஷயம், எங்குமே ஒரு துளி எதிர்மறை எண்ணம்கூட இல்லை என்பது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அத்தனை பகுதிகளிலும் வரவேற்புதான் உள்ளது. கேரளத்தில் சோழர்களின் பாசனப் பணிகளைப் பற்றிச் சொன்னபோது அதுதான் ‘வைரல்’ ஆகியது. தெலுங்கு மக்கள், ராஜமௌலி உட்பட, பாகுபலியை விஞ்சட்டும் என்றே வாழ்த்துகின்றனர். தமிழகத்தில் இயல்பாகவே எதிர்மறையானவர்களாகிய மிகச்சிலர் தவிர ஒட்டுமொத்தச் சூழலே எதிர்பார்த்திருக்கிறது இக்கனவை.

ஓர் உதாரணம், ஆனந்த் மகிந்திரா தனக்கு இதுவரை சோழர்களைப் பற்றித் தெரியாது, இப்படமே தொடக்கம் என்று ஒரு டிவிட் செய்திருக்கிறார். அதுதான் இந்தப்படத்தின் நோக்கமே. எங்கும் கொண்டுசெல்வது. இது உலகளாவிய படம். இன்றைய சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட இன்றைய சினிமா.

(பொன்னியின்செல்வன் பற்றி நிறையவே பேசவேண்டியிருந்தது. இன்றுடன் நிறைவு. இனி அடுத்தது. வெந்து தணிந்தது காடு-2 எழுத்துக்குள் சென்றுவிட்டேன். நன்றி)

முந்தைய கட்டுரைபொ.செ…ஸ்ஸப்பாடா!
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பு-கடிதங்கள்