ஈராறு கால்கொண்டெழும் புரவி வாங்க
நான் எழுதிய படைப்புகளில் ஒவ்வொரு வரியிலும் புன்னகைத்துக்கொண்டு எழுதிய படைப்பு ஈராறுகால் கொண்டெழும் புரவி. அதன் பகடிகள் பெரும்பாலானவை பொதுவாசகர்களுக்கு மட்டுமல்ல தீவிர இலக்கிய வாசகர்களுக்கும் பிடிகிடைக்காமல் போக வாய்ப்புள்ளவை.
சென்ற முப்பதாண்டுகளாக நான் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஊழ்க மரபைச்சார்ந்த நூல்கள் அவற்றில் ஒப்பிடப்பட்டு அங்கதமாக மறுபுனைவு செய்யப்பட்டு பயின்று வருகின்றன. சைவ ஆகமங்கள், திருமந்திரம், சித்தர் பாடல்கள் ஆகியவை தங்களை சற்று திரித்துக்கொண்டு நகைப்பை ஏந்தி நின்றிருக்கும் ஒரு களம் அது.
ஆனால் அது பகடிக்கதை அல்ல. ஆழ்ந்த அகக்கண்டடைவு ஒன்றை சென்றடையும் படைப்புதான். என் கதைகளில் சற்றும் வாசிக்கப்படாத படைப்பென்று ஈராறுகால் கொண்டெழும் புரவியையே சொல்வேன். சென்ற பத்தாண்டுகளில் அதை மறுவாசிப்பு செய்து ஏதேனும் வாசகர் கடிதம் வந்ததாக நினைவில்லை. அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களும் அதை கண்டடையவில்லை
அதனால் பாதகமில்லை. எழுதும்போது அதை எங்கோ எவரோ வாசிப்பார்கள் என்று எண்ணுவோமே ஒழிய, எவரும் வாசிக்காவிடினும் அதனால் நமக்கு இழப்பேதுமில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த நூல் மறுபிரசுரமாகிறது. அடுத்த தலைமுறை வாசகர்களில் சிலருக்கு இக்கதை சென்றடைந்தால் நன்று இல்லையெனினும் குறையொன்றுமில்லை.
ஜெயமோகன்
நாகர்கோவில்
14.06.2022
*
ஈராறு கால்கொண்டெழும் புரவி -கடிதங்கள்
ஈராறு கால்கொண்டெழும் புரவி -சுயாந்தன்
ஈராறு கால்கொண்டெழும் புரவி – பாலாஜி
ஈராறு கால்கொண்டெழும் புரவி – ஜினுராஜ்
===================================================