இரவெல்லாம் பொசெ கனவுகள். ஏனென்றால் ஏகப்பட்ட வன்மக் கமெண்டுகளை படித்து, வன்மக் காணொளிகளை கேட்டு, வன்மக்கேள்விகளுக்குப் பதில் சொல்லி…
”அனிருத்த பிரம்மராயரை தூக்கிப்பிடித்து பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்துகிறதா பொசெ?”
திடுக்கிட்டு, இதென்ன கேள்வி என்றேன். “இன்னொரு முறை கேளுங்க”
பேட்டியாளர் காகிதத்தைப் பார்த்துவிட்டு “பார்ப்பன அனிருத்த பிரம்மராயரை மையக்கதாபாத்திரமாக வைத்து பார்ப்பன மணிரத்னம் எடுத்த பொன்னியின் செல்வன் என்பது கிரிப்டோ கிறிஸ்தவ கம்யூனிஸ்டுக்காரரான மணிரத்னம் பிராமண சமூகத்தை அவமதிக்கும் கேடுகெட்ட சினிமா தானே?”
”எனக்கு ஏற்கனவே கொஞ்சம் உடம்பு சரியில்லை… கேள்வியை கொஞ்சம் தெளிவா கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
“சார் நாங்க இப்ப ரெண்டு வெவ்வேறு யூடியுப் சானலை மிக்ஸ் பண்ணியிருக்கோம். அதனாலே ரெண்டுபக்கக் கேள்விகளையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணியிருக்கோம்”
“இதுக்கு எப்டி பதில் சொல்றது?”
“தனித்தனியா பதிலை யோசிங்க… அப்றம் ரெண்டையும் எங்கள மாதிரி ஒண்ணாக்கிக்குங்க… இல்லேன்னா நாங்களேகூட ஒண்ணாக்கி போட்டுடறோம்”
“யோசிக்கணுமே”
“நல்லா யோசிங்க… அதுக்குள்ள நாங்க அடுத்த கேள்விய கேட்டுடறோம். சிவனடியார்களான சோழர்களின் நெற்றியிலே காளிகோயில் குங்குமத்தைப் போட்டு அவர்களை வைணவர்களாக ஆக்குகிறதா பொன்னியின் செல்வன்?”
“அய்யய்யோ… என்னது?”
“அய்யய்யோதான் அடுத்த கேள்வி. வைணவரான ஆழ்வார்க்கடியானை நாராயணா என்பதற்குப் பதிலாக அய்யய்யோ சொல்லவைத்து சைவத்தை மறைத்துவைக்கிறது பொன்னியின் செல்வன் என்றால் அதை மறுக்கமுடியுமா?”
“எனக்கு சத்தியமா புரியலை”
“அடித்தளமக்களின் நிலத்தைப் பிடுங்கி, தாசிமுறையைக் கொண்டுவந்த ராஜராஜசோழனை தெலுங்கன் என்று சொல்லி பொற்காலத் தமிழர் பெருமையைச் சீண்டிப்பார்க்கிறீர்களா? இதான் நெக்ஸ்ட் கேள்வி”
”எனக்கு ரொம்ப முடியலை… ஏற்கனவே எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை…அதாவது…”
”தெளிவாக் கேக்கிறோம் சார். புலிக்கொடி, ஈழம் என்றெல்லாம் பாடலை வைத்து ஈழம் என்ற பெயரை மக்களிடமிருந்து மறைக்கிறீர்கள். வரலாற்றைத் திரிபு செய்வதுதானே உங்கள் நோக்கம்?”
“ஈழம்னுதானே பாட்டே இருக்கு?”
“குழப்பாதீங்க, இலங்கைன்னு வசனம் இருக்கு”
“இலங்கையும் ஈழமும் ஒண்ணுதானே?”
“மழுப்பறீங்க… அடுத்த கேள்வி. கல்கிக்கு மணியம் வரைஞ்ச படங்களிலே அவங்களுக்கு கழுத்துக்கு கீழே லைன் டிராயிங்தான்… நீங்க வேணும்னே ரியலா காட்டுறீங்க. இது ஆபாசம் தானே?”
“அது மொத்தமா லைன் டிராயிங் சார்… பிளாக் ஆண்ட் வைட் வேற”
“பாத்தீங்களா நீங்களே ஒப்புத்துக்கிட்டீங்க. அடுத்த கேள்வி, அருள்மொழிதானே சரி? அருண்மொழின்னு சம்ஸ்கிருதத்துக்கு மாத்துறீங்களா?”
“அருண்மொழிதான் தூயதமிழ் சார். கல்வெட்டிலே அப்டித்தான் இருக்கு. ள்ளும் ம்மும் புணர்ந்தா ண் வரும்…”
“ஆபாசமா பேசாதீங்க… சம்ஸ்கிருதக் கலப்பு மொழியிலே சோழர்களைப் பேசவைக்கிறது தமிழ்த்துரோகம்தானே?”
“சம்ஸ்கிருதமா? எங்க வசனத்தக் கேட்டீங்க?”
“மும்பை வெர்ஷன்லே”
“அது இந்தி சார்… இங்க தூயதமிழ்தான்”
“தமிழனுக்கு புரியாத வசனம் வைத்து படத்தை தமிழன் பார்க்கமுடியாதபடி செய்வதுதான் உங்க சதியா?”
”எனக்கு கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?”
“குடிச்சுகிட்டே பதில் சொல்லுங்க… கல்கியின் நாவலை மணிரத்னம் தன் இஷ்டத்துக்கு மாற்றி படம் எடுப்பது என்பது பொன்னியின் செல்வனில் கல்கி செய்த வரலாற்று மோசடிகளை அப்படியே மக்களிடம் கொண்டுபோய் பரப்பத்தானே?”
“அது எப்டி?”
“சரி, மாத்திக் கேக்கறேன். பொன்னியின் செல்வன் வரலாறு இல்லை, ஃபிக்ஷன். ஆகவே பொன்னியின் செல்வன் கதையை மாற்றி எடுப்பது வரலாற்றை மாற்றிக்காட்டும் பித்தலாட்டம்தானே?”
”நான் வெறும் டைலாக் ரைட்டர் சார்… அதுவும்…”
“அதிலே வசனம் சொதப்பல்…”
“அதிலே வசனமே இல்லை சார். இருக்கிற நாலஞ்சு வசனம்கூட ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவிலே மட்டும்தான் தனியா கேக்கும். ஆனா அவரு வசனத்த கேக்கமாட்டார். கேட்டா அதுக்கு உடனே மெட்டு போட்டிருவார்…”
அவர் பரிதாபமாக என்னைப் பார்த்து “சரி பொழைச்சுப்போங்க” என்றார்.
”போதும், இதுதான் கடைசி… முடியலை.”
“மறுபடி செகண்ட் பார்ட் வர்ரப்ப புதூ கேள்விகளோட வரோம் சார்”