வசைகள், கடிதம்

பொன்னியின் செல்வன், விடைகளின் தனிமை.

திருமா, கடிதம்

அன்புள்ள  ஆசிரியர்  ஜெயமோகன் அவர்களுக்கு ,

இன்றய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல்  சிலர்  தங்கள் சுய லாபத்திற்காக  யூடுபியில்  பதிவு செய்யும் காணொளிகளை  பார்த்தால் ஒரு வகையில் கோபமும் எரிச்சலும்  வருகிறது.

நீங்களும்  கமல் ஹாசனும் அறம்  தொகுதி  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை பற்றி பேசிய காணொளியை தேடும் பொது ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. வெண்முரசு, விஷ்ணுபுரம் நாவலின்  ஒரு வரி கூட வாசிக்காமல் அதைப் பற்றி மிகவும் கொச்சையாக விளக்கி இருந்தார். என்னால் 5 நிமிடத்திற்கு மேல் கேட்க முடியவில்லை ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ் (பெரியாரின் படங்களுடன் சில காணொளிகள் அவர் youtube channel இல் வெளியிட்டு இருந்தார்). பணத்திற்காகவோ, ஆணவத்திற்காகவோ இவ்வாறு  பதிவிடுவது பாவச்செயலே.

உங்கள் காணொளி  மற்றும் பதிவுகளை பார்த்த  பிறகே சதாசிவ பண்டாரத்தார் மற்றும் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் புத்தகங்களை படித்தேன். சோழர்களின் வரலாறை புரிந்து கொள்ள முடிந்தது. வெறும் சில கல்வெட்டுகளைக் கொண்டு சோழர்களின் வரலாற்றை அவர்கள் எழுதியது  பெரும் சாதனை. ஆனால் இதை முழுதும் படிக்காமல் உங்கள் காணொளியின்  சில பகுதிகளை பார்த்து உங்களை பற்றி அவதூறு செய்பவர்கள் நிச்சயமாக குரு  நிந்தனை  செய்பவர்களே.

உங்களை இதைப்போன்ற  காணொளிகளோ, கட்டுரைகளோ பாதிக்காது  எனினும் என்  ஆதங்கத்தால் இதை  எழுதுகிறேன். நீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து  தயக்கத்தால்  எழுதவில்லை.

அன்புடன்
அருண்

***

அன்புள்ள அருண்,

என்னை இவை பாதிக்காது. நான் கல்பற்றா நாராயணன் சொன்னதுபோல நரகத்தில் இருந்து வந்தவன். என்னை காலத்தின் குழந்தை என நினைப்பவன். எழுத்தாளன் வாழ்வது அவன் செத்தபிறகுதான். தான் எழுதியவற்றின் தரம் என்ன என உள்ளூர அறியாத நல்ல எழுத்தாளன் இருக்க மாட்டான். ஏனென்றால் அவன் தன்னை கடந்து சென்று அவற்றை எழுதியிருப்பான். அந்தக் கணங்களால்தான் அவன் தன்னை மதிப்பிடுவான். எனக்கு இங்கு இன்றுள்ளவர்களின் எந்தச் சொல்லும் ஒரு பொருட்டல்ல. அவ்வாறு கடந்துசெல்வதனால்தான் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

ஆனால் இந்த வசைகளும் பழிகளும் என் பொருட்டு பிறர்மேல் வரும்போது சலிப்பும் வருத்தமும் அடைகிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெ

நான் பொன்னியின் செல்வன் படத்தை ஒட்டி சிலர் வெளியிடும் காணொளிகளை பார்க்கிறேன். அறிவியக்கத்தில் எந்த இடமும் இல்லாதவர்கள் அவர்கள். ஒரு நல்ல நூலை வாழ்நாளில் எப்போதாவது படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவர்களின் பேச்சும் மொழிநடையும் அவ்வளவு முச்சந்தித்தனமானவை. முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என எதுவுமே தெரியாது. அதையும் அவர்களே வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் இலக்கியம், வரலாறு, தத்துவம் எதிலும் உங்களுக்கு அடிப்படையே தெரியாது என பேசுகிறார்கள். உங்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அறிவுரைகளை வழங்குகிறார்கள்.

அந்த அபத்தங்களை பார்க்கையில் என்னைப்போன்ற ஒருவருக்கே சலிப்பும் கோபமும் வருகிறது. நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அதைவிட அந்த அபத்தங்களை பார்த்துவிட்டு ஜெயமோகனுக்கு ஒன்றும் தெரியாது, ஜெயமோகன் டவுசர் அவுந்துபோச்சு என்றெல்லாம் கும்மாளியிடும் அரைவேக்காடுகளை ஒவ்வொரு நாளும் பார்க்கமுடிகிறது. அவர்களுக்கும் எழுத்து ,வாசிப்பு எதைப்பற்றியும் எதுவும் தெரியாது. ஒரு விக்கிப்பீடியா பதிவளவில்கூட உங்களை தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கொஞ்சம் வாசிக்கும் பழக்கத்துடன் இருப்பதே ஒரு பெரிய சித்திரவதையாக தெரிகிறது.

சிவக்குமார் ராமசாமி

அன்புள்ள சிவகுமார்,

நான் பலமுறை சொன்னதுதான். பொன்னியின் செல்வனின் விளம்பரச் செலவு முப்பது கோடி. அந்த விளம்பரத்தில் ஒரு பகுதியை தன்மேல் திருப்பிக்கொள்ளும் முயற்சிகள் என்பதற்கு அப்பால் இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இன்னும் பத்துநாளில் வேறு களம்நாடிச் செல்வார்கள். இந்த குபீர் வரலாற்றறிஞர்கள், திடீர் இலக்கிய ஆய்வாளர்கள் எல்லாரும் பொன்னியின்செல்வன், சோழர் வரலாறு எல்லாவற்றையுமே மறந்துவிடுவார்கள். இவர்களை ஒன்றும் செய்யமுடியாது. 

இவர்களை நான் எதிர்கொள்ளும் முறை ஒன்றே. கவனிப்பதே இல்லை. என் வேலையில் முழுக்கவே ஆழ்ந்திருப்பேன். இந்த நாட்களில் நீங்கள் நினைக்கவே முடியாத அளவுக்குப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அதுதான் ஒரே வழி.

இந்தவகை கூச்சல்களும் ஒருவகையில் நல்லதே. அவற்றை கவனிப்பவர்களில் ஒரு சிறுபகுதியினர் என்னைப்பற்றி கேள்விப்பட்டு, என் இணையப்பக்கத்துக்கு வருவார்கள். நான் எழுதியிருக்கும் கட்டுரைகளை, கதைகளை வாசிப்பார்கள். அறிவியக்கம் என்பது எவ்வளவு பிரம்மாண்டமானது என உணர்வார்கள். அவர்கள் என் வாசகர்களாவார்கள். இதுவரை இங்கே வந்தவர்களில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கினர் இப்படி வந்தவர்கள்தான்

ஜெ 

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்
அடுத்த கட்டுரைஇலட்சுமண பிள்ளையும் எமர்சனும்