திருமா, கடிதம்

திருமா 60

திருமா 60, கடிதம்

அன்புள்ள ஜெமோ

இது யமுனா ராஜேந்திரன் பதிவில் அவருடைய ஒரு தோழர் எழுச்சித்தமிழர் பற்றி போட்ட பதிவு

இது..முன்னேறிய தலித்துகளின் உளவியல் குறைபாடு…மேலே வந்ததும்..மேல் தட்டுக்காரரோடு தோளோடு தோள் சேர்த்துப் புளகாங்கிதம் அடையும் inferiority complex. Even Ambedkar wasn’t exception. Classic example was Ram vilas Paswan…

யோசித்துப் பாருங்கள், தமிழகத்தின் ஓர் அரசியல்தலைவர் பற்றிய பதிவு இது. எவ்வளவு ஏகத்தாளம், எவ்வளவு அற்பத்தனம். இவர்கள் சாதாரண தலித் மக்களைப் பற்றி என்னதான் நினைப்பார்கள்? ஒரு மகத்தான தலைவனைப்பற்றிய இவர்களின் உள்ளக்கிடக்கை என்ன என்று பாருங்கள்.

அதாவது நீங்கள் உயர்சாதியாம், எழுச்சித்தலைவர் உங்கள் நட்புக்கு அலைகிறாராம். திருமாவை எந்த  இடத்தில் வைத்து நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று பார்த்தால் இவர்களின் மனநிலை குமட்டலெடுக்கிறது. மதக்கலவரத்தில் முஸ்லீம்களை தலித்துக்கள் கொன்றார்கள் என பொய்வரலாறு எழுதவைப்பது இந்த மனநிலைதான்.

இவர்களுடைய அரசியலுக்கு  உடன்பட்டு கூட நிற்கும்வரை எல்லா முற்போக்கும் பேசுவார்கள். இவர்கள் சொல்லும் இடத்தில் சொல்வதுபோல செய்யவேண்டும். இல்லாவிட்டால் இதுதான்.

இங்கே நடப்பது இதுதான். இளையராஜா எம்பி ஆனால் அத்தனை சாதிய இழிவும் அவர்மேல் கொட்டப்படும். சாதிப்புத்தி என்று ஐம்பது பதிவாவது பார்த்திருப்பேன். இனிமேல் இளையராஜா பாட்டே கேட்கமாட்டேன் என்று எழுதினார்கள். ஆனால் வைரமுத்து மோடி கவிதையை மொழியாக்கம் செய்தால் ஒரு புகார் கிடையாது. அத்தனைபேரும் அவரை கும்பிடுவார்கள்.

இந்த யமுனா ராஜேந்திரன் கோவையிலே நாயக்கர் பெண்ணைத்தான் கட்டுவேன் என பெண் தேடி அலைந்து கட்டிய கதையை அண்மையில் ஒருவர் சொன்னார். இவர்களின் இந்த ஆணவம்தான் முற்போக்கு என்றால் அதுதான் தலித் மக்களை கசப்படையச் செய்வது

எஸ்.ரவி

***

அன்புள்ள ரவி,

உண்மையில் மிக வருத்தமாக உள்ளது. கசப்பும். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு வாழ்த்து சொன்னேன். அகவைநிறைவுக்காக. அதை வைத்துக்கொண்டு அவரை மறைமுகமாக இழிவு செய்துகொண்டே இருக்கிறார்கள். இனி ஒருபோதும் இப்படி எதுவும் சொல்லப்போவதில்லை. என்னால் அவருக்கு இந்த இழிவுகள் இனி அமையவேண்டாம்.

அவருக்கு அத்தனை எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் மேலும் பெருமதிப்புண்டு. முற்றிலும் சாதியப்பார்வை கொண்ட ஒருவரைப் பற்றிப் பேசும்போது ‘அவரோட தமிழ்ப்பணிய விட்டுட்டு பேசக்கூடாது’ என ஒருமுறை சொன்னார். அறிஞர்கள், எழுத்தாளர்களின் அரசியலை அவர் எப்போதும் கவனித்ததில்லை. அதை இதுவரை அவர் செலுத்திய அஞ்சலிகளின் வழியாகவே எவரும் காணமுடியும்.

அவர் கடுமையாக எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அமைப்பொன்று பழங்குடிகளுக்காக நடத்தும் கல்விநிலையம் ஒன்றை பயணம்செல்லும் வழியில் கண்டபோது உள்ளே சென்று பார்த்து அது நன்றாக நடைபெறுவதைக் கண்டு வாழ்த்தி, பதிவேட்டில் எழுதிவிட்டுச் சென்றார் என வாசித்ததுண்டு.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பண்பாட்டை யோசிப்பவரே உண்மையான அரசியல்வாதி. நேருவாக இருந்தாலும் திருமாவாக இருந்தாலும். எளிய தொண்டர்களின் சில்லறைக் காழ்ப்புகளுக்கு அப்பாற்பட்டு தலைதூக்கி நின்றிருப்பரே மெய்யான தலைவர். அவர் அத்தகையவர்.

என்னால் இந்த கீழ்மக்களின் வாயிலிருந்து அவர் இழிசொல் பெறவேண்டாம். அவ்வளவுதான் நான் சொல்லக்கூடியது. மற்றபடி 2000 முதல் இருபதாண்டுகளாக அவர்மேல் பெருமதிப்புடன் மட்டுமே இருந்துவருகிறேன். எந்த மேடையிலும் அதைச் சொல்லியும் வருகிறேன். என் எண்ணங்கள் என்னுடன் இருக்கட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைசியமந்தகம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்து கவிதை இயக்கம் – மாத்திரையாக…