சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்
அன்புள்ள ஜெ
தமிழ்ச்சூழலில் ஒரு வழக்கம் உண்டு. பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு பெரிய அளவில் பேசப்படும் பெரிய சினிமாக்களை வைத்துக்கொண்டு கலை, அரசியல் எல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். கலையும் அரசியலும் முன்வைக்கப்படும் தரமான சினிமாக்கள் பற்றி பேச்சே இருக்காது. அதையெல்லாம் பார்க்கமாட்டார்கள். பார்த்தாலும் புரியாது. சினிமா பற்றிய பேச்சு என்பது இவர்களுக்கு சினிமாவின் வெளிச்சத்தை நாடி செல்வது மட்டும்தான்.
இச்சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பணியாற்றிய நீங்கள் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ நாவலுக்கான விழா பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நண்பர்கள் ஒருங்கிணைத்த விழா அது என்று அறிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சந்தானகிருஷ்ணன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
விமோசனம் கதையின் வாசிப்பனுபவம் எனக்கு அந்தரங்கமாக வெகு பிரியத்துக்குரியது என்பதால் சிவரஞ்சனியும் சில பெண்களும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத வருத்தத்தில் இருந்தேன். எனவே விழாவின் அனைத்து உரைகளையும் வரிசையாக கேட்டேன். உரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அந்த கதைகளையும் திரையனுபவத்தையும் இதுவரை வாசித்திருக்காதவர்களுக்கும் திரைப்படத்தை பார்த்திருக்காதவர்களுக்குமாக நிச்சயம் நிறைவை அளித்திருக்கும். .அருணாவின் உரை பிரமாதம்.
’பேய்ச்சி’ அருணாவிற்கும் ’சிவரஞ்சனி’ அருணாவுக்கும் வேறுபாடு என்றால் அருணாவின் நிமிர்வுதான் முன்பை விட இயல்பாக, இன்னும் நிமிர்வுடன் கூடுதல் ஆரவமுடன் பேசுகிறார்கள்.
வழக்கம் போல கண்களின் பங்களிப்பும் கையசைவுகளும் உரைக்கு நிகராக இதிலும் இருந்தது. முதலில் கதை வாசிப்பனுபவத்தை அழகாக முன்வைக்கும் அருணா பின்னர் அந்த திரைக்காட்சியனுபவத்தை, காமிராக்கோணங்களைக்கூட கைகளாலேயே காண்பித்து ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு கதாபாத்திரங்களாக, ஒவ்வொரு முக்கிய தருணங்களாக காட்டிக்கொண்டே செல்லுகிறார்கள். இடையிடையே அந்த கதைவாசிப்பும் காட்சியனுபவமும் அருணாவுக்கு என்னவாக இருக்கிறது என்பதை அவரது மனவெளியில் இருந்து ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து எடுத்து நம் முன் வைத்து குதூகலத்துடன் சொல்கிறார்கள்.
அருணா பேராசிரியர் ஆகி இருந்தால் உற்காகம் கொஞ்சமும் குறைந்துவிடாமல் மணிக்கணக்காக கற்றுக்கொடுத்து, அவரின் உற்சாகம் மாணவர்களுக்கும் தொற்றிக்கொண்டிருக்கும் வகையில் தான் வகுப்புக்கள் இருந்திருக்கும்.
அந்த தொண்டு நிறுவனம் கிணற்றை தூர்வார முன்வந்த அனுபவத்தையும் கதையுடன் இணைத்து சொல்லுகையில் கதை இன்னும் கேட்பவர்களுக்கு நெருக்கமாகிவிட்டது.
விமோசனம் கதையை அத்தனை அசலாக விவரித்தார். கதைநாயகி கணவனை எதிர்க்கும் அந்த தருணத்தை உள்ளார்ந்த மகிழ்வுடனே அருணா சொன்னார். ஒரு பெண்ணாக அந்த நாயகியின் துயரில் அருணா பங்குகொண்டிருந்தை அப்போது கேட்பவர்களும் உணரமுடியும். இறுதியாக அந்த பீங்கான் கோப்பையில் அவளது வாழ்வின் ஒவ்வொரு இனிய நொடியையும் துளித்துளியாக உறிஞ்சிக்குடிப்பதாக சொன்னதும் மானசீகமாக அருணாவை அணைத்துக்கொண்டேன்.
வழக்கம்போல அருணாவின் நினைவாற்றலை வியந்தேன் அடுக்கிக்கொண்டே போகிறார் சம்பவங்களையும். பெயர்களையும். காட்சிகளையும். பேச்சோடு பேச்சாக ’இசை யாரு இளையராஜாவா?’ என மேடையில் இருப்பவர்களிடன் கேட்டுவிட்டு ’நல்லா இருக்கு’ என்று இளையராஜவுக்கும் ஒரு மனமார்ந்த பாராட்டை அளிக்கிறார். மேடைப்பேச்சுக்களை வீட்டு கூடத்தில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை போலவே அவ்வப்போது திரும்பி திரும்பி பேசி கலந்துரையாடல் போல கொண்டுசெல்வது அருணாவின் தனி பாணியாகவே ஆகிவிட்டிருக்கிறது..
இனிமேல்தான் திரைப்படத்தை பார்க்கவிருக்கிறேன். இத்தனை அழகிய உரைக்கு பின்னர் திரைக்காட்சிகளை பார்க்கையில் சொல் சொல்லாக அருணாவின் உரை பின்னணியில் வந்து கொண்டிருக்கும்.
அன்புடன்
லோகமாதேவி