திருமா 60, கடிதம்

திருமா 60

அன்புள்ள ஜெ,

நீங்கள் திருமாவளவன் அவர்களை வாழ்த்தி சொன்ன ஒரு கட்டுரைக்கு ஏகப்பட்ட வசைகள். அதை விரும்பியபடி திரிக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் உள்ளடக்கம் என்பது அவரை நீங்கள் தமிழகத் தலைவராக முன்வைப்பது. இவர்கள் அவருக்கு தலித் தலைவர் என்னும் இட ஒதுக்கீட்டை மட்டும் அளிக்க ரெடியாக இருக்கிறார்கள்.

நீங்கள் இடதுசாரிகளை கோத்துவிடுகிறீர்கள் என்று ஒரு தரப்பு. குஜராத்திலும் மற்ற இடங்களிலும் இஸ்லாமியர் மீது வன்முறையை நடத்தியவர்கள் தலித்துக்கள்தான் என யமுனா ராஜேந்திரன் என்பவர் எழுதியிருந்தார். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

இந்துத்துவ தரப்பு திருமாவளவன் வன்முறையாளர் என்று வசைபாடி உங்களையும் வசைபாடியது.

நீங்கள் சொன்னது ஓர் அகவை வாழ்த்து. அதற்கு இத்தனை கொந்தளிப்பா என ஆச்சரியமாக இருக்கிறது.

செ. ஸ்டாலின்

***

அன்புள்ள ஸ்டாலின்,

நான் வாழ்த்தியமையால் அவருக்கு ஒரு அரசியல் லாபமும் இல்லை. சிலசமயம் சங்கடங்களும் உருவாகலாம். வாழ்த்தவேண்டுமென தோன்றியது. நான் எப்போதுமே சரித்திர ஆளுமைகளை சொல்லில் நிறுத்துவது எழுத்தாளன் பணி என நினைப்பவன் என்பதனால்.

நான் சொன்னது திருமா உருவாகிவந்த பின்னணியை. எது அவருடைய உருவாக்கத்தின் தேவையாக இருந்தது என்பதை. இடதுசாரிகளும் திராவிட இயக்கமும் தலித்துக்களுக்குரியவையாக இருந்தன என்றால் அவருடைய தேவையே இல்லையே.

நடைமுறையில் இடதுசாரி அரசியல், திராவிட அரசியல் எப்போதும் இடைநிலைச் சாதியின் கையிலேயே இருந்தது. இது தெரியாத கைக்குழந்தைகள் அல்ல எவரும். கொள்கைக்குரல் எல்லாம் சரி, நடைமுறை என வரும்போது கணக்குகள் வேறு. ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே இடைநிலைச்சாதி எம்.எல். தோழர் வேறு தலித் எம்.எல்.தோழர் வேறு. அதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்த யதார்த்தத்தில் இருந்தே தலித்துக்களுக்கு தனித்தலைமை தேவை என்னும் நிலை உருவானது.

திருமா உருவாகி வந்த பின்னரே தர்மபுரியில் தலித்துக்களுக்கு உண்மையான பாதுகாப்பும் நம்பிக்கையும் உருவாகியது. இது உண்மை. சொல்லிச் சொல்லி எல்லாம் எவரும் அதை மாற்றிவிட முடியாது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக தலித்துக்கள் கலவரம் செய்தார்கள், இஸ்லாமியரைக் கூட்டக் கொலை செய்தார்கள் என்பது யமுனா ராஜேந்திரன் மட்டுமல்ல, ஏராளமான இடதுசாரிகள் தொடர்ச்சியாகச் சொல்லிவரும் அப்பட்டமான அவதூறு. அவர்களின் தலித் காழ்ப்பையே அது காட்டுகிறது. உண்மையில் அதுதான் பிளவுபடுத்தும் உத்தி. அவர்களின் அரசியல் கணக்குகள் வேறு. குறிப்பாக யமுனா ராஜேந்திரனின் அரசியலென்பது ஒரு தெலுங்கு ஆதிக்கவாதம் மட்டும்தான். மார்க்ஸியம் எல்லாம் அவருடைய பொதுவெளிப் பாவனை மட்டுமே.

இந்துத்துவர் மிக எளிதாக திருமாவளவனை பொருள் இழக்கச் செய்யலாம். ஒட்டுமொத்தமாக அவர்கள் தலித் மக்களுடன் நிற்கலாம். அத்தனை கிராமக்கோயில் விழாக்களிலும் தலித்துக்கள் பங்கெடுக்குமபடிச் செய்யலாம். எல்லா இடத்திலும் தலித்துக்களுடன் நிற்கலாம். திருமாவளவனின் தேவையே இல்லாமல் செய்துவிடலாம். அதன்பின் பேசலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைநான் எனும் பாரதீயன்
அடுத்த கட்டுரைஅறுபது, கடிதங்கள்