அன்புள்ள அஜிதனுக்கு
“இசைக்குள் நுழைவதென்பது காதலில் நுழைவது போல தான், முதல் முறை அது உண்டாக்கும் பரவசத்தை நழுவ விட்டால் மீண்டும் அந்த இசையை தேடி செல்ல மாட்டீர்கள்” என உரையாடலின் போது நீங்கள் சொன்னது நினைவில் ஓடிக்கொண்டே இருக்கிறது. பெரும் காதலோடு நான் பீத்தோவனின் இசையில் மூழ்கியிருந்த காலம் ஒன்று உண்டு.
மூன்றாண்டுகள் முன் ஒரு விஷ்ணுபுரம் விழாவிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்த போது பக்கத்தில் அமர்ந்திருந்த என் வயதை ஒத்த இளைஞர் “மொபைல் பியானோவில்” எதையோ tune செய்து கொண்டிருந்தார். tune செய்ததை ஒலிக்க விட்டு எப்படி இருக்கிறது என்றார். rowdy baby என்ற அன்றைய பிரபலமான பாடலின் இசை. திரைப்பட பாடல்கள் அறவே தவிர்த்து, இசை என்றாலே அது பீத்தோவனும் மொஸார்டும் தான் என அடிப்படைவாதியை போல் சுற்றிக் கொண்டிருந்த காலம். சரி அவர் மனம் புண்பட கூடாதென்று தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். காரில் இருந்து இறங்கியதும் ஒருவர் சொன்னார் ‘இவர் தான் ஜெ sir பையன்’ என்று. நான் சற்றே வருத்தத்துடன் நினைத்துக் கொண்டேன் ‘ஜெயமோகன் sir பையனா இருக்காரு பீீத்தோவனாச்சும் தெரிஞ்சு வெச்சிக்க வேணாமா, இப்படி சினிமா பாட்டெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காரு’ என்று. உங்களை முதல்முறையாக சந்தித்த அந்த நிகழ்வை நினைத்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
வாக்னரின் ஓப்ராவில் வரும் ஒரு கதை, பறவைகளின் ஒலியை இசையாக மட்டுமே ரசித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஒரு டிராகனை கொன்று அதன் இரத்தத்தை சுவைத்த மறுகணம் பறவைகளின் மொழியை புரிந்து கொள்ளும் சக்தியைப் பெறுவான். ஒரு பறவை தரும் தகவல் வழியே தன் காதலியை தேடி கண்டடைவான். எனக்கு இந்த பீத்தோவன் இசைகேட்கும் பயிற்சி முகாம் அப்படியான மாயத்தை நிகழ்த்திய ஒன்று. இதற்கு முன்பு வரை பீத்தோவனின் இசையை வெறும் இசையாக மட்டும்தான் ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த இசை ஒரு மலையை குறிக்கிறது, இது பறவையின் குரல், நதியின் சலசலப்பு, இளம் பெண்ணின் குரல், ஆணின் தவிப்பு என குறிப்புகள் கொடுத்து ஒட்டுமொத்தமாக அந்த சிம்பொனி என்ன கதையை கூறுகின்றது என நீங்கள் விளக்கி முடித்ததும் எனக்கு பெரிய ஆச்சரியம். இத்தனை காலமும் அந்த இசை என்னுடன் பேச முயன்றிருக்கிறதா? ஒரு கதை சொல்ல அதுவும் சாதாரண கதைகள் அல்ல. இசை வழியே இயேசுவையும் காந்தியையும் போல மகத்தான நாயகர்களை கட்டி எழுப்ப முயன்றிருக்கிறது, இயற்கையின் பல முகங்களை காட்டுகிறது, மகத்தான இன்பத்தில் திளைத்திட வா என்று அழைக்கிறது.
இந்த இசையின் கட்டமைப்பு சற்றே பிடிபட்டதும் எனக்குள் ஒரு எண்ணம். இந்த வடிவில் தானே உங்கள் “மைத்ரி” நாவலை எழுதினீர்கள் என்று கேட்டேன். ஆம் என்றீர்கள். என்னவென்று சொல்வது உங்களை :). மொழியில் நிகழ்த்தி பார்த்த ஒரு இசை மைத்ரி.
பல நண்பர்கள் ode to joy சிம்பொனி தான் பிடித்திருந்ததாக சொன்னார்கள். பீத்தோவன் தன் ஒலி கேட்கும் திறனை இழந்த பின்பும் இன்பத்தை நாடுங்கள் என ஒரு இசையை உருவாக்குகிறார் என்றால் அவர் எத்தனை மகத்தான மனிதராக இருந்திருக்க வேண்டும். இருப்பினும் அவரின் மூன்றாவது சிம்பொனியான Eroica தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. பீத்தோவனின் மகத்தான கனவு அல்லவா அது.
இரவில் நட்சத்திரங்கள் மிளிரும் வானுக்கு கீழ், ஒரு பாறை முகட்டில் ஆதி மனிதர்கள் போல் நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இசை கேட்டுக் கொண்டிருந்தோம். தூரத்தில் ஒரு ஓடையில் மென்மையாக ஒழுகிக் கொண்டிருந்த நீரின் சத்தம் அறுபடாத நாதமென ஒலித்தது கொண்டிருந்தது. சற்றென்று ஒரு நட்சத்திரம் உதிர்ந்து பறப்பது போல் ஒரு மின்மினி நம் அருகே பறந்தது. அந்த மின்மினி கையில் வந்தது அமரவேண்டும் என நினைத்தேன். அப்படி மட்டும் நடந்திருந்தால் எத்தனை அழகாக இருந்திருக்கும்.
இது போல பல இனிய நினைவுகள், புதிய நண்பர்கள், காலை நடை, அரட்டைகள் என மிக மகிழ்ச்சியான மூன்று நாட்கள். என் இன்பங்கள் எல்லாம் அந்த மலையில் தான் குவிந்திருக்கிறது போலும். அவ்வப்போது கொஞ்சம் எடுத்துக் கொண்டு இங்கு மீண்டு விடுகிறேன். நன்றி அஜிதன். மேற்கத்திய இசையை புரிந்து கொள்ள நல்ல ஆசிரியராக அமைந்தீர்கள்.
– கிருஷ்ணமூர்த்தி