இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் மின்னூல் வாங்க
இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்னும் இந்நூல் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் ஒரு வரி கடிதத்திலிருந்து தொடங்கியது. ஒரு காலத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்ந்து கடிதப்போக்குவரத்து இருந்தது.
இந்திய ஆன்மீகத்தை புரிந்துகொள்வதற்கு ஆறு தரிசனங்கள் எந்த வகையில் முக்கியமானவை என்றும், ஆறு தரிசனங்களின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் சைவம், வைணவம், வேதாந்தம் மூன்றையுமே ஒருவரால் தெளிவுற வகுத்துக்கொள்ள முடியாது என்றும் நான் எழுதியிருந்தேன்.
அந்த ஆறு தரிசனங்களைப்புரிந்து கொள்வதற்கு தமிழில் எந்தெந்த நூல்கள் உள்ளன என்று அவர் கேட்க, ஒரே ஒரு நூல் மட்டுமே தமிழில் பரிந்துரைக்கத் தகுதியாக உள்ளது என்று நான் மறுகடிதம் எழுதினேன். வித்வான் கி.லக்ஷ்மணன் எழுதிய இந்திய தத்துவ ஞானம். அது ஓரு நல்ல அறிமுகநூல். ஆனால் ஐம்பதாண்டு பழையது. பாடப்புத்தகத்தன்மை கொண்டது.
‘நீங்கள் ஏன் ஒன்றை எழுதக்கூடாது, நவீன மொழியில் இன்றைய வாசகர்களுக்காக?’ என்று அவர் கேட்டார். அது ஒரு விதையாக விழுந்தது. எனக்கே தெளிவுறுத்திக் கொள்ளும்பொருட்டு எழுத ஆரம்பித்தேன். பின்னர் அது நூலாகியது. இந்நூலில் இந்திய சிந்தனை முறையின் அடிப்படையாக இருக்கும் ஆறு தரிசனங்களையும் முன்வைத்திருக்கிறேன்.
இந்து மதம் என்றால் என்ன, அதனுடைய பாடத்திட்டம் ,என்ன என்ற வினாவுக்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள் ,ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் என்று சுருக்கமாக பதிலளிக்கப்படுவது வழக்கம். நான்கு வேதங்களும் தொல்பிரதிகளாக அடித்தளத்தை அமைக்கின்றன. அவற்றின் மேல் ஒரு விவாதத்தை உருவாக்கி முன்னெழுந்தவை ஆறு தரிசனங்கள். ஒருவகையில் அவை வேதத்திற்கும் முந்தியவையாக கூட இருக்கலாம்.
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்னும் ஆறுதரிசனங்களும் இன்று வரைக்கும் இந்து மெய்யியல் பற்றிய அனைத்து விவாதங்களுக்குமான அடிப்படைக் கேள்விகளை எழுப்பி நிலைகொள்பவை. அந்த கேள்விகளின் அடிப்படையில் உருவான மேலதிகப் பெருவிவாதங்களில் உபநிஷத்துகள் எழுந்தன. உபநிஷத்துகள், கீதை, பிரம்மசூத்திரம் மூன்றும் அடங்கியது மூன்று தத்துவம் என்று சொல்லப்படும் பிரஸ்தானத் திரயம்.
பின்னர் ஆறு மதங்கள் எழுந்து இந்து மதத்தை விரிவடையச்செய்தன. அவற்றின் வழிபாட்டு வேர்கள் வேதங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். ஆனால் மூன்று தத்துவங்கள் உருவாக்கிய தத்துவ விவாதங்களின் பெயராக ஆறு மதங்களும் தத்துவ அடிப்படை பெற்றன, பெருமதங்களாக தங்களைக் கட்டமைத்துக்கொண்டன.
காலப்போக்கில் காணபத்தியம், கௌமாரம் இரண்டும் சைவத்துடன் இணைந்தன. சௌரம் பெரும்பாலும் வைணவத்துடன் இணைந்தது. சாக்தம் சில பகுதிகளில் தனியாக நீடிக்கிறது. தமிழகம் போன்ற பகுதிகளில் அதுவும் சைவத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
இவ்வாறு இந்து ஞானமரபின் அனைத்து பகுதிகளையும் தொட்டு விரியக்கூடிய அடிப்படை சிந்தனைக் கட்டமைப்பாகிய ஆறுதரிசனங்களைப் பற்றிய விவாதம் இந்நூலில் உள்ளது. அவற்றை ஒரு பொதுவாசகனுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் நோக்கம் கொண்டது இந்நூல்.
ஏற்கனவே இந்நூலின் முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளது போல ஏன் இது இந்திய தரிசனம் என்று சொல்லப்படவில்லை என்றால் இந்த ஆறு தரிசனங்களும் இந்து ஞான மரபுக்கே முக்கியமானவை. இவற்றில் சாங்கியம் பௌத்த தரப்புக்கு மிக நெருக்கமானது. வைசேஷிகம் ஓரளவுக்கு ஜைன மதத்திற்கு முக்கியமானது. ஆயினும் ஜைன மதமோ பௌத்த மதமோ ஆறு தரிசனங்களை தங்கள் சிந்தனையின் அடிக்கட்டுமானமாகக் கொண்டிருக்கவில்லை. ஆகவேதான் இவை இந்து தரிசனங்கள் எனப்பட்டன.
இந்து மதத்தை ஒருவர் மூன்று வகைகளில் இன்று அறியலாம். சடங்குகள் ,வேள்விகள் போன்றவற்றினூடாக இந்து மதத்தை ஒருவர் அறிய முடியும். அது பூர்வ மீமாம்ச மரபு என்று முன்பு சொல்லப்பட்டது. ஆலயங்கள் வழிபாடுகள் மற்றும் பக்தி வழியாக ஒருவர் இன்று இந்து மதத்தை அறியமுடியாது. பக்தி இயக்கம் பொ.யு.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் ஐநூறு ஆண்டுகளில் உருவாக்கிய ஒரு பெருமரபு.
மூன்றாவதாக, இந்து மெய்யியல் அல்லது இந்து தத்துவ ஞானம். தத்துவார்த்தமாக இந்து மதத்தை அறியமுயலும் ஒருவர் ஆறு தரிசனங்களிலிருந்தும் மூன்று தத்துவங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும். அவ்வாறு அறிய விரும்பும் வாசகர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இது ஒரு அறிமுகநூல் என்றவகையில் பயனுள்ளதாக இருந்தது என்று இது எழுதப்பட்டபின் சென்ற இருபதாண்டுகளில் சில நூறு வாசகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவ்வகையில் இந்நூலின் இலக்கு நிறைவேறிவிட்டதென்றே கருதுகிறேன். இதை எழுதுவதற்கு காரணமாக அமைந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களை நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.
ஜெ
14.07.2022