பொன்னியின் செல்வன் நாவல்
கல்கி
சிவகாமியின் சபதம்
மோகனாங்கி
அன்புள்ள ஜெ
பொன்னியின் செல்வன் பற்றி வந்துகொண்டிருக்கும் வசைகளை கவனிக்கிறீர்களா? எவ்வளவு வசைகள்! பெரும்பாலும் உங்களை மட்டுமே குறிவைத்துச் சொல்லப்படுபவை. மணிரத்னமோ, அதில் வேலைபார்ப்பவர்களோ நடிப்பவர்களோ யாருமே குறிவைக்கப்படவில்லை. அதில் எல்லாமே நீங்கள்தான் என்று இவர்களே சொல்லிச் சொல்லி நிலைநாட்டுகிறார்கள்.
சைவர்களை மணிரத்னம் அவமரியாதை செய்துவிட்டார், சரித்திரம் மன்னிக்காது என்று ஒருவர் பொங்கியிருந்தார். நான் பலபேரிடம் அது போருக்குப்போகும்போது வைக்கும் ரத்ததிலகம், சோழர்கள் போருக்குப் போகும்போது காளி , பிரத்யங்காரா போன்ற போர்த்தெய்வங்களைக் கும்பிட்டுவிட்டே சென்றார்கள், ஊர்த்துவமாக சிவப்புத்தீற்றல் என்பது காளிவழிபாட்டின் அடையாளம் என்றெல்லாம் பலவாறாக விளக்கினேன். இருந்தாலும் அதே வசை. வசைபாடிய பலரின் புரஃபைல் சென்று பார்த்தால் பெரியார் படம் வைத்து ‘இந்துமதம் அழியவேண்டும்’ என்று எழுதியிருந்தார்கள். சைவம் உட்பட எல்லா தெய்வங்களையும் வசைபாடியிருந்தனர். பலர் இந்துக்கள் அல்லாத மாற்றுமதத்தவர். இவர்களின் நோக்கம் என்ன?
இன்னொரு பக்கம் ஆழ்வார்க்கடியான் அய்யய்யோ சொல்லிவிட்டான், மற்றமொழிகளில் நாராயணா என்று இருக்கிறது என்று ஒரு பிராமணச்சாதி வெறியர் கிளப்பிவிட, அதை இந்துத்துவர்கள் பிடித்துக்கொண்டு வசைபாடுகிறார்கள். இலங்கை என்ற வார்த்தையே அன்று இல்லை, அன்று இருந்தது ஈழம் என்ற வார்த்தைதான் என்றும் அதை மாற்றியவர் நீங்கள் என்றும் ஒரு வசை. கொஞ்சநாள் முன்னாடி அருள்மொழித் தேவன்தான் சரி, அருண்மொழி என்பது சம்ஸ்கிருதம், அதை எழுதியது நீங்கள் என்று ஒருவசை. அருண்மொழி என்பதுதான் தமிழின் சரியான புணர்ச்சிவிதிப்படி அமைந்தது, எல்லா கல்வெட்டும் அப்படித்தான் உள்ளது என்று சொன்னால் புரிவதில்லை.
சோழர்களை அவமதித்தார் ஜெயமோகன், மணிரத்னம் என்று கூப்பாடு. சோழர்களை பிராமண அடிவருடிகள் என்று அரசியல்வாதிகள் அப்பட்டமாக வசைபாடினால் அதைப்பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை. இந்த சூழலே பிரமிக்கவைக்கிறது. மனச்சிக்கல்கொண்டவர்கள் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அறிவுஜீவிகள். நீங்கள் பொசெ பழைய பதிவுகளை நீக்கிவிட்டீர்கள் என ஒரு பக்கம். பொசெவை சு.ரா மட்டம் தட்டியபோது கூட நின்ற நீங்கள் இப்போது அதற்கு வசனம் எழுதும் நிலை என இன்னொரு பக்கம். இந்த கிறுக்கு சமூகவலைத்தளங்களை ஆட்டிவைக்கிறது.
அர்விந்த்
(மலையாள மனோரமா தொலைக்காட்சி உரையாடல்.
சோழர்காலம் ஏன் பொற்காலம்? சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் ஏன் சமயசார்பற்றவர்கள்? பொன்னியின்செல்வன் ஏன் தேவை? அதன் அழகியல் என்ன? )
அன்புள்ள அர்விந்த்,
இங்கே எதுவுமே ‘தெரியாமல்’ பேசப்படுவன அல்ல. இன்று யூடியூப் ஒரு பெரிய வணிகப்பரப்பு. ஒரு பதிவுக்கு ஐம்பதாயிரம் ஹிட் வந்தால் ஏறத்தாழ எட்டாயிரம் ரூபாய் வரை உங்கள் கணக்குக்கு யூடியூப் பணம் கொடுக்கும். பல பதிவுகள் லட்சக்கணக்கான ஹிட் வருபவை. அது ஒரு பெருந்தொழில்.
இங்கே சினிமா பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே கூட்டம் வரும். வேறு எதை எழுதினாலும் எவரும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். ஆகவே அத்தனைபேரும் சினிமாப்பக்கம் வந்து நின்றிருக்கிறார்கள். எல்லா அரசியலையும் சினிமா சார்ந்தே பேசுகிறார்கள்.
சினிமா பற்றியே ரசனையுடனும், அறிவுடனும் பதிவிட்டால் எவ்வளவு நல்ல பதிவானாலும் ஐம்பதாயிரம் தாண்டாது. வசைபாடினால் லட்சக்கணக்காக ஹிட் வரும். அபத்தமாக, மடத்தனமாக சொன்னால் மேலும் ஹிட் வரும்.
ஏனென்றால் வசைபாடினால் அதை ஏராளமானவர்கள் பகிர்வார்கள். அபத்தமானது என்றால் அதைச்சுட்டிக்காட்டுவதற்காக மேலும் பகிர்வார்கள். நீங்கள் ஒரு யூடியூபரை திட்டினால், கேலி செய்தால் அவர் மகிழ்வார். அவருக்கு பணம் கொட்டும். அவர் ஒரு நடிகரை அல்லது இயக்குநரை ஆபாசமாகத் திட்டினால் அந்நடிகருடைய எதிரிகள் அதை பகிர்ந்து பரப்புவார்கள். அந்நடிகரின் ஆதரவாளர்களும் அதை வந்து பார்ப்பார்கள். எல்லாமே பணம். இவ்வளவுதான்.
*
பொன்னியின்செல்வன் பற்றி சுந்தர ராமசாமி கருத்து அல்ல என் கருத்து. அதை 1991 முதல் தொடர்ச்சியாக, சீராகப் பதிவுசெய்து வருகிறேன். நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் முதலிய எல்லா நூல்களிலும் அக்கருத்து பேசப்பட்டுள்ளது. அது ஒரு பாப்புலர் கிளாஸிக். பொதுவாசிப்புக்கான எழுத்து. அந்த வகைமைக்குள் அதன் இடம் முக்கியமானது என்பதே என் எண்ணம். ஏன், இன்று எவரும் அதிகம் பேசாத கோபுரகலசம் (எஸ்.எஸ்.தென்னரசு) ஆலவாயழகன் (ஜெகசிற்பியன்) போன்றவற்றைக்கூட நான் முக்கியமாக கவனப்படுத்தியிருக்கிறேன்.
(ஆலவாய் அழகன், நாவல் ஜெகசிற்பியன்.தமிழ் விக்கி)
நான் எழுதிய எந்தக் கட்டுரையும், இங்கே நீக்கப்படவில்லை. எல்லாமே நூல்களாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன. இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எல்லாருக்கும் அது தெரியும். அவதூறு சொன்னால் அதை விரும்பி வாசிப்பவர்கள் உண்மையை நாடுவதில்லை என அறிந்து அதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
*
சினிமா பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர்களுக்காக சிலவற்றைச் சொல்லவேண்டும். ஒரு சினிமாவின் வசனம் வேறு, எஃபக்ட் என்பது வேறு. ஒருவர் தடுக்கிவிழும்போது சொல்லவேண்டியது வசனம் அல்ல, இயல்பாக வரவேண்டிய எஃபக்ட். அது அந்த நடிகரே அப்போது சொல்வது. சினிமாவில் மையமான வசனங்களையே அப்படியே பேசுவார்கள்.
அதிலும்கூட வசனம் பல இடங்களில் பலரால் மாறிக்கொண்டிருக்கும். சிலசமயம் அந்நடிகரால் அதை அப்படியே சொல்லமுடியாமலாகும். சிலசமயம் நீளம் காரணமாக வசனம் மாறுபடும். சிலசமயம் நடிப்புக்காக மாறும். அதன்பின் படத்தொகுப்புக்காக சில வசனங்களை சேர்ப்பார்கள், வெட்டுவார்கள். அறுதியாக டப்பிங்கில் அது மாறும். ஒரு சினிமா எத்தனை பேர் வழியாகச் செல்கிறது என்று நினைத்தே பார்க்கமுடியாது.
பொன்னியின்செல்வன் போன்ற ’பான் இந்தியன்’ படங்களில் டப்பிங் வசதிக்காக சொற்கள் மாறும். உதாரணமாக ஒரு வசனம் குளோஸப்பில் இருந்தால் இந்தியா முழுக்க அது எப்படி டப் செய்யப்படுமோ அந்த உச்சரிப்பும் உதட்டசைவும் அதற்கு அளிக்கப்படும். இப்படி எவ்வளவோ.
பொன்னியின் செல்வன் படம் முழுக்க அழ்வார்க்கடியான் நாராயணா என்றுதான் கூவுகிறார். ஒரு கிளிப்பிங்கில் பார்த்துவிட்டு இந்தப்படம் அய்யய்யோ வைணவத்துக்கு எதிரானது என்கிறார்கள். காளிகோயில் ரத்ததிலகத்தை பார்த்துவிட்டு ஐய்யய்யோ சைவத்துக்கு எதிரானது என்கிறார்கள். தமிழுக்கு எதிரானது என்கிறார்கள். சோழர்களை இழிவுசெய்கிறது என்கிறார்கள். சோழர்களை பொய்யாக புகழ்கிறது, சோழர்கள் இழிவானவர்கள் என்கிறார்கள் இன்னொரு சாரார். இற்கெல்லாம் எவர் பதில் சொல்லமுடியும்? சொல்லி மாளுமா?
பாட்டிலேயே புலிக்கொடி என்றும் ஈழம் என்றும் வருகிறது. அப்படி வைப்பவர்கள் படத்துக்குள் ஈழம் என்ற சொல்லை ஏன் தவிர்க்கவேண்டும்? அடிப்படைச் சிந்தனை உடையவர்களுக்கு இதுகூட தெரியாதா என்ன?
சோழர்காலத்திற்கு முன்பு, புறநாநூற்றுக் காலம் முதலே இலங்கை என்ற பெயர் உண்டு. ஈழம் என்ற பெயரும் உண்டு. இலங்கை என்ற சொல் சிங்களநிலத்தையும், ஈழம் என்ற சொல் சங்ககாலம் முதல் இருந்த பூர்விகத் தமிழ் நிலத்தையும் சுட்டுகிறது என ஒரு ஆய்வாளர் தரப்பு உண்டு. சோழர்கள் தமிழர்பகுதியை நேரடியாக ஆட்சி செய்தனர், சிங்களர் பகுதியை அவர்களே ஆளவிட்டு கப்பம் பெற்றனர் என்பார்கள். அது அக்கால ஆட்சிமுறை. எவரும் இன்னொரு நிலத்திற்குச் சென்று நேரடியாக அரசமைக்க முடியாது. அந்த உள்ளூர் ஆட்சியாளர்களை ஆளவிட்டு கப்பம் பெற மட்டுமே முடியும். இதெல்லாம் அடிப்படை வரலாறு.
இது ’பான் இந்தியன்’ படம். இளைய தலைமுறையினருக்கான படம். அவர்களுக்கான இசை, அவர்களுக்கான வசனம்தான் இருக்க முடியும். இது நவீனகால சினிமா. ஆகவே அனேகமாக வசனமே கிடையாது.
இந்தப் படத்தை இந்தியரசிகர்கள் முழுமையாகப் பார்த்தால்தான் இதன் முதலீடு திரும்பக் கிடைக்கும். அப்படி முதலீடு திரும்பவந்தால்தான் இதைப்போன்ற பெரிய படங்கள் வரமுடியும். இதைப்போன்ற பெரிய படங்கள் வந்தால் மட்டும்தான் தமிழர் வரலாறும், மரபும் உலகமெங்கும் செல்லமுடியும். குறுகியமனப்பான்மையால், சுயலாபவெறியால் இத்தகைய பெருமுயற்சிகளை அழிக்க முயல்பவர்கள் அனைவரும் அப்பட்டமாகவே தமிழ்வெறுப்பாளர்கள், தமிழ் எதிரிகள். சந்தேகமே வேண்டாம்.
இன்று ராஜராஜ சோழன் பெயர் இந்தியாவெங்கும் ஒலிக்கிறது. தமிழ்நாட்டில் இத்தனைபெரிய பேரரசுகள் இருந்ததே உலகுக்கு தெரிகிறது. பொன்னியின்செல்வன் நாவலே இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இப்போதுதான் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது. ஞாபகம் வையுங்கள் இதேபோல குஜராத், வங்காளம், கர்நாடகம், ஆந்திரம் அனைத்துக்கும் பேரரசுகள் உண்டு. அவர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களின் நிலத்துக்கு வெளியே எவருக்கும் இன்னும் தெரியாது. இதேபோன்ற மாபெரும் படங்களை அவர்கள் எடுத்தால் மட்டுமே தெரியவரும்.
இந்தப்படத்தை பார்ப்பவர்களில் 99 சதவீதத்தவர் கல்கி, சோழர், தமிழகம் பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். மாபெரும் காட்சியமைப்பை ரசிக்க அரங்குக்கு வருபவர்கள். அவர்களிடம் உற்சாகமான, பிரம்மாண்டமான ஒரு சினிமாவை கொண்டு செல்கிறோம். அவர்கள் ரசிக்கையில் சோழர் வரலாறும், தமிழர் தொன்மையும் அவர்களிடம் சென்று சேர்கிறது.
இந்தப்படத்தைப் பற்றிப் பேசும்போது வடக்கே சோழப்பேரரசு இந்தியாவின் பேரரசுகளில் ஒன்று, கடல்கடந்து வென்ற புகழ்கொண்டது என்றே சொல்லமுடியும். கர்நாடகத்தில் சோழர்கள் கர்நாடக ஆலயங்களுக்கு அளித்த கொடைகளையே சொல்லமுடியும். கேரளத்தில் அவர்கள் வெட்டிய ஏரிகளைப் பற்றியே சொல்லமுடியும். ஏனென்றால் அனைவரும் இதைப் பார்த்தாகவேண்டும்.
இது சோழர்கள் பற்றிய ஆவணப்படம் அல்ல. கல்கியின் நாவலின் நேரடியான காட்சிவடிவம் அல்ல. அந்நாவலை உண்மையாகவே வாசித்தவர்கள் அதில் காட்சிப்பிரம்மாண்டம் இல்லை, அது கதைசொல்லிச் செல்லும் தன்மைகொண்டது என்பதை அறிவார்கள். இந்தப்படம் காட்சிப்பெருக்கை கற்பனையால் உருவாக்கியிருக்கிறது. அதற்குத்தான் சினிமா ரசிகர்கள் வருவார்கள். கதாபாத்திரங்கள் கதைசொல்லிக்கொண்டிருந்தால் வரமாட்டார்கள்.
*
ராஜராஜ சோழன் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது சினிமாவுக்கு வெளியே இவர்கள் படிப்பார்கள் என்றால் நல்லது (பார்க்க பெருவழிகள், இராஜகேசரிப் பெருவழி, கோடிவனமுடையாள் பெருவழி )
இந்த சந்தர்ப்பத்தில் ஏராளமான வரலாற்றாசிரியர்களை பொதுவெளிக்கு அறிமுகம் செய்துகொண்டிருக்கிறோம் அவர்களைப் பற்றியும் இந்தக் கூட்டம் கவனம் கொண்டால் நல்லது. குடவாயில் பாலசுப்ரமணியன், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டெயின், சி.தேசிகாச்சாரியார். மா.இராசமாணிக்கனார்.
அப்பாடா, விளக்கமளித்தே வாய் ஓய்ந்துவிடுகிறது. வசைபாடுபவர்களுக்கு யூடியூப் பணம் வருகிறது. விளக்கங்களை எவரும் கண்டுகொள்வதே இல்லை. எல்லாருக்கும் ஏதோ ஒருவகை எதிர்ப்புப் பரபரப்பு. எதிர்ப்பும் குறையும் சொன்னால் தங்களை அறிவுஜீவிகள் என நாலுபேர் நினைப்பார்கள் என்னும் துடிப்பு. அதற்காக அலையலையாகக் கேள்விகள்.
விடைகள் மிக எளியவை, அப்பட்டமானவை. ஆனால் அவை மிகமிகத் தனிமையாக நின்றுள்ளன.
ஜெ