திருமா 60- கடிதங்கள்

திருமா 60

மணிவிழா வாழ்த்து தெரிவித்து கட்டுரை வெளியிட்டுள்ள எழுத்தாளர் தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

தொல்.திருமாவளவன் (டிவிட்டர் செய்தி)

அன்புள்ள ஜெ

எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு நீங்கள் அளித்த வாழ்த்து மிக முக்கியமானது. அவர் தலைமையில் ஓர் அரசியல் எழுச்சி உருவாகும்போது அந்த வாழ்த்து அர்த்தமுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அதைச் சொன்னீர்கள். ஆனால் அதைவைத்தே அவரைச் சாதிய இழிவு செய்ய யமுனா ராஜேந்திரன் முதலியவர்கள் முயல்வதை மனவருத்ததுடன் எழுதியிருந்தீர்கள்.( திருமா, கடிதம் ). அவர்களின் நோக்கமே திருமாவுக்கு உருவாகும் அந்த பொதுவான ஏற்பு இல்லாமலாகவேண்டும் என்பதுதான். அதற்கு நீங்கள் பலியாகிவிடக்கூடாது.

ம.லெனின்

அன்புள்ள ஜெ

அவ்வப்போது நீங்கள் சொல்லும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் உருவாக்கும் ‘புயல்’ கண்ணுக்குப் படுகிறது. சிறப்பு. அண்மையில் திருமா பற்றிச் சொல்லியிருந்தீர்கள். திருமா பற்றிய உங்கள் பார்வையில் நேரடி அனுபவத்துக்குச் சமானமாகவே உங்கள் அருமைநண்பர் அலெக்ஸ் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் என நம்புகிறேன். அவர் பெயரையும் அக்கட்டுரையில் சொல்லியிருக்கலாம். அவர் திருமாவின் இளமைக்காலம் முதல் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இருந்தவர். விடுதலைச் சிறுத்தைகள் நிகழ்ச்சியில் நீங்கள் அலெக்ஸுடன் கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது.

புவியரசன்

அன்புள்ள ஜெ,

திருமா பற்றி நீங்கள் சொன்னதை வாசித்தேன். என் ஆச்சரியம் என்னவென்றால் அதற்கு எங்கெல்லாம் எதிர்ப்பு என்றுதான். திமுகவினர் நீங்கள் நஞ்சு கக்குவதாக எழுதினார்கள். கம்யூனிஸ்டுகள் வசைபாடினர்கள். இந்துத்துவர் சொல்லவே வேண்டாம். சாக்கடை அது இதுவென ஒரே வசை. உங்கள் வாசகர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரே ஆசானுக்கு மண்டை கழண்டுபோச்சு என்று சொன்னார். பாவம்தான். ஆனால் யாருக்காக இதைச் சொல்கிறீர்கள்? இதனால் என்ன லாபம் உங்களுக்கு? இத்தனை பேரும் வசைபாட இதை ஏன் சொல்லவேண்டும்? புரியவில்லை. உங்களுக்கும் புரியாது என்று நினைக்கிறேன். நல்லது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருவர் அடையும் மதிப்புதான் அவருடைய தனிப்பட்ட பர்சனாலிட்டிக்கான மதிப்பு. அரசியல் கொள்கைகள், நிலைபாடுகள் சார்ந்து உருவாகும் ஆதரவும் மதிப்பும் அவருக்கானது இல்லை. நேருவுக்கோ அண்ணாவுக்கோ மதிப்பு அப்படி உருவானதுதான். எல்லா எதிர்க்கட்சியினரும் நேருவுக்கும் அண்ணாவுக்கும் நெருக்கமானவர்களாகவே இருந்தனர். வாஜ்பாய் கடைசிவரை அண்ணாவை புகழ்ந்துகொண்டுதான் இருந்தார். இங்கே வசைபாடுபவர்கள் தங்கள் தலைவர்கள் இதேபோல அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டப்பட்டால் புளகாங்கிதம் அடைவார்கள்.

இதேபோல நீங்கள் அண்மையில் பிணராய் விஜயனை மலையாள டிவியில் புகழ்ந்து சொல்வதை கேட்டேன். ஆனால் அங்கே எவரும் வசைபாடவில்லை. சந்திரசேகர ராவையும் புகழ்ந்தீர்கள். அது அவர் காதுக்கே சென்றிருக்காது.

உங்கள் கருத்துக்கள் வசைபாடப்படுவதுகூட நல்லதுதான். ஓர் எழுத்தாளனின் வார்த்தைகளுக்கு அந்த அளவுக்கு மதிப்பு இருக்கிறதே. அதிலும் நேரடியாக அரசியலில் சம்பந்தப்படாத ஒருவரின் கருத்துக்கு. நீங்கள் பாராட்டியது திருமாவுக்கு பெருமைதான். அவருடைய அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர் என்னும் தனிமனிதருக்கு கிடைக்கும் பாராட்டு இது.

ராம்குமார் மாணிக்கம்

*

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

ஒவ்வொரு நாளும் என்னை நானே மீட்டெடுக்க, என் முன்னோரின் இழிவுகள் பலவற்றில் இருந்து என்னை விடுவிக்க உதவும் குரல் அவருடையது என்பதனால் அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

தங்களது இந்த சிந்தனையுடன் நான் உடன் படுகிறேன். என்னைப்போலவே பிற பொது சமூகத்தை சேர்ந்த நண்பர்களும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு எழுத்தாளர் பொது சமூகத்தின் மனசாட்சி என்பதை உங்கள் எழுத்து நிரூபிக்கிறது.

ஜனநாயக மைய நீரோட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போம்.

வாழ்த்துக்களும் நன்றியும்

மிக்க நன்றி.

இப்படிக்கு

அன்புடன்

சந்தானம்

*

ஆசான் அவர்களுக்கு

உங்களுக்கு மிகப்பெரிய Good Bye. என்றும் எனக்கு நீங்கள் தலை சிறந்த குருநாதர் தான். நீங்கள் புகட்டிய ஞானத்திற்கு நன்றி. இனி உங்கள் பக்கத்தை பின் தொடர மாட்டேன். Very tough decision for me. Very Sorry. Once again Thank you.

சாய் சரஸ்வதி

முந்தைய கட்டுரைமொழி, ஒரு போட்டி
அடுத்த கட்டுரைஅருண்மொழி உரை -கடிதம்