கணக்கும் காதலும்

அன்புள்ள ஜெ

ஒரு கேள்வி. இதற்கு கோபப்படாமல் பதில் சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மணிவிழா கொண்டாட்டச் செய்திகளைப் பார்த்தேன். அதென்ன, ஆண்களுக்கு மட்டும் மணிவிழா? பெண்களுக்கு மணிவிழா நடத்துவதில்லை? அந்த வழக்கமே கேடுகெட்ட ஆணாதிக்க வழக்கம் தானே? ஆண்களுக்கு அறுபது வயதானால் பெண்கள் எதற்கு அதை கொண்டாடவேண்டும்? அவர்களே கொண்டாடட்டும் என்று விட்டுத்தொலையவேண்டியதுதானே?

நீங்கள் உங்கள் மனைவியை அவள் இவள் என மரியாதையில்லாமல் எழுதுவதையும் பார்க்கிறேன். அதுவும் ஒரு கீழ்மையான வழக்கம்தான். இந்தக் குடும்பம் என்ற அமைப்பே ஆணாதிக்கச் சிந்தனை. ஆண்கள் பெண்களுக்கு உருவாக்கிய ஜெயில்.

எஸ்.

*

அன்புள்ள எஸ்,

மணிவிழா எனக்கு உவப்பானது அல்ல. அதை கொண்டாடவேண்டாம் என்பதே என் எண்ணம். என்னுடைய எந்தப் பிறந்தநாளையும் கொண்டாடியதில்லை. பிறந்தநாளில் ஊரிலிருப்பதே அரிது. பிறந்தநாள் ஞாபகமும் இருக்காது. கூப்பிட்டுச் சொன்னால் சரி என ஒரு வார்த்தையுடன் நின்றுவிடுவேன். வயதை கொண்டாடுவது எனக்கு உவப்பல்ல. நான் பொதுவாக பிறந்தநாள் வாழ்த்துக்களும் சொல்வதில்லை.

இந்தவிழா நண்பர்கள் மிகமிக விரும்பியமையால். அவர்கள் அதை பின்னாளில் வருத்தமாக உணரக்கூடும் என்று சொன்னார்கள். ஆகவே ஒப்புக்கொண்டேன். விழாவில் அதை அருண்மொழி எத்தனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறாள் என்று பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதை தவிர்க்கப்பார்த்தோமே என்று எண்ணினேன்.

மணிவிழா ஒருவருக்கு அறுபது ஆனதனால் எடுக்கப்படுவது அல்ல. அது ஒருவர் ஏதேனும் துறையில் சாதனை செய்தவர் என்று எவருக்கேனும் தோன்றுவதனாலும் அது எடுக்கப்படுகிறது. சாதனை புரிந்தவர் என கருதப்பட்ட பெண்களுக்கு அப்படி அகவைநிறைவு விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஹெப்சிபா ஜேசுதாசன், சுகதகுமாரி போன்றவர்களின் விழாக்களில் நானும் கலந்துகொண்டதுண்டு.

குடும்பத்தைப் பொறுத்தவரை முதலில் அறுபது ஆவது கணவனுக்குத்தான். ஆகவே அதையொட்டி விழா நடைபெறுகிறது. அதன்பின் மனைவிக்கு அறுபதாகும்போது விழா எடுப்பதென்றால் எடுக்கலாம். சென்றகாலங்களில் இந்த அறுபது, எண்பது விழாக்கள் பெற்றோருக்குப் பிள்ளைகளால் நடத்தப்படுவனவாக இருந்தன. உறவினர்கள் கூடும் ஒரு நிகழ்வு. அன்று ஆணைச் சார்ந்து பெண் இருந்தமையால் ஆணின் வயது கருத்தில்கொள்ளப்பட்டது என்பது ஓர் உண்மை. இனி மாற்றிக்கொள்ளலாம். பிழையில்லை.

ஆனால் வீட்டில் நிகழும் பெரும்பாலான விழாக்கள் பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவை. திருமணத்துக்குப் பிந்தைய சடங்குகள், கர்ப்பம். பிரசவம், குழந்தைகளின் விழாக்கள் எல்லாமே. ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு அடுத்த விழா அறுபதில்தான். (பெண்களுக்கு மட்டும் வயசுக்குவரும் கொண்டாட்டம் கூடாது, ஆண்களுக்கும் வேண்டும் என எவராவது ஆரம்பிப்பார்களா என்ன என்று தெரியவில்லை).

தமிழகத்தில் இன்று புதிதாகச் செய்யவேண்டியது, அன்னையரின் அகவைநிறைவை கொண்டாடுவது. அவர்கள் கணவரை இழந்து இருந்தாலும் அதை வேறுவகையில் கொண்டாடலாம். ஆலயங்களுக்குச் செல்லலாம். சேவை நிறுவனங்களுக்குச் செல்லலாம். குடும்பச் சந்திப்புக்கூடுகைகளாகக் கொண்டாடலாம். கேரளத்தில் தொன்றுதொட்டே நிகழ்வதுதான்.

ஆனால் ஒன்று உண்டு. உறவு எதுவானாலும் கொடுக்கும் மனநிலை, தன்னை பொருட்டாக்காமல் பிறரை கவனிக்கும் மனநிலையில் இருந்தே அது இனிதாக நீடிக்கமுடியும். எனக்கென்ன கிடைக்கிறது என கணக்கிடத் தொடங்கினால், சரிசமம் என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கினால் அங்கே உறவு கசக்கத் தொடங்கும். நட்புகள்கூட.

இங்கே பொதுவாக பெண்களின் உரிமை என்னும் கணக்கு இன்று நிறையவே பேசப்படுகிறது. பேசவே படாத ஒன்று தந்தை எனும் ஆணின் உரிமை. தன் வாழ்க்கை முழுக்க அவன் கொடுப்பவன் மட்டுமே. உழைப்பை முழுக்க, சேமிப்பை முழுக்க. அவனுக்கு தன்னலக் கணக்கு சிறிது வந்தாலும் குடும்பம் என்னும் அமைப்பு சிதையத் தொடங்கும். அதன் முதற்பலி பிள்ளைகள்தான்.

என் தந்தை அவருக்காக எதையாவது எண்ணினாரா, கணக்குபோட்டுப் பார்த்தாரா என எண்ணிப்பார்க்கிறேன். நான் என் பிள்ளைகளிடம் ஏதேனும் கணக்கு பார்க்கிறேனா? கொடுப்பது மட்டுமாகவே நீடிக்கும் உறவு இது. இதில் இருக்கும் நிகரற்ற இன்பம் ஒரு இம்மைப்பேறு.

தாய்க்கு குழந்தையுடனான உறவென்பது உயிரியல் சார்ந்தது. எல்லா உயிர்களிலும் உள்ளது. மனிதனைப் பொறுத்தவரை தந்தை எனும் உறவு ஒரு கலாச்சாரக் கட்டுமானம். உருவாக்கி உருவாக்கி நிலைநிறுத்திக்கொள்ளும் ஓர் உணர்வு நிலை.

விந்தையான ஒன்று இது. ஒரு மனிதன் தன் மொத்தவாழ்நாளையும் வேறுசில மனிதர்களுக்காகச் செலவிடுகிறான், எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அதை தன் கடமை என்றும், அதில் தன் வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது என்றும் நம்புகிறான் அதில் இன்பம் கொள்கிறான்.

அதை சுரண்டல் எனக் கொண்டால், இந்த மொத்த உலகமானுட நாகரீகமே கட்டி எழுப்பப்பட்டுள்ளது தந்தை என்பவனைச் சுரண்டுவதன் வழியாகவே. இந்த மானுடகுலத்துக்கான பலிவிலங்கு தந்தைதான். அடுத்தடுத்த தலைமுறைகள் அவனை தின்றுதான் உருவாகி வருகின்றன.

பி.கே.பாலகிருஷ்ணன் ஒருமுறை அவருக்கே உரிய குரூரவேடிக்கையுடன் சொன்னார், ”வரலாற்றில் ஏதோ ஒரு கட்டத்தில் பெண் அவள் பெறும் குழந்தைகளின் பொறுப்பை முழுக்க ஆணுக்கு அளித்தாள். குரங்கில் அவ்வழக்கம் இல்லை. ஆகவே தொல்மனிதர்களிடம் இருக்க நியாயமில்லை. தொல்குடிகள் பெண்வழிச் சமூகக்குழுக்கள்.

அன்று ஆற்றல்கொண்டவளாக இருந்த அன்னை அவளுக்குச் சாதகமான ஒரு சமூகத்தை உருவாக்கினாள். அதுவே குடும்பம். ஆண் அதன் அடிமை. ஆனால் அவன் அரசன் என நம்பச்செய்யப்படுகிறான். அவன் அத்தனை பொறுப்புகளையும் சுமக்கச்செய்யப்படுகிறான். ஆனால் அதை அவன் ஆட்சிசெய்வதாக எண்ணிக்கொள்கிறான். அவன் சுரண்டப்படுகிறான், அவன் அதை தியாகம் என எண்ணிக்கொள்கிறான்.

குடும்பம் என்பது ஆணுக்கு பெண் உருவாக்கிய மாபெரும் பொறி. பெண்ணியம்பேசும் பெண்கள் அவசரப்பட்டு ஐரோப்பாவில் அவனை திறந்துவிட்டுவிட்டார்கள். சுவை கண்டுவிட்டால் அவனை பின்னர் அச்சிறைக்குள் கொண்டுவரவே முடியாது. இன்று ஐரோப்பாவில் குடும்பம் தேவை என உணர்பவர்கள் அன்னையர். குழந்தைகளின் பொறுப்பை தனியாகச் சுமக்கிறார்கள். குறைந்தது பத்தாயிரமாண்டுகளாக உழைத்த அடிமை நழுவிச்சென்றுவிட்டான்.” பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னது இது.

இது உண்மையா என்று நான் விவாதிக்க வரவில்லை. இப்படியும் வரலாற்றைப் பார்க்கலாம். நம் வசதிக்காக, நம் உணர்ச்சிகளின்பொருட்டு நாம் மானுட வரலாற்றையும் பரிணாமத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

என் இல்லத்தில் ‘ஆணாதிக்கவாதி’யாக இருக்கிறேனா? தெரியவில்லை. ஆனால் என் மனைவியின் ஒவ்வொரு சிறுவசதியையும் கவனித்துக் கொள்கிறேன். இப்புறவுலகின் ஒரு சிக்கலும் சீண்டலும் அவளை அணுகாமல் கவனிக்கிறேன். அவளுடைய ஒரு சிறு உளக்கோணலைக்கூட உடனே கவனித்து சரிசெய்கிறேன்.

என் வாழ்க்கையின் எல்லாவற்றையும் அவள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறேன். என் முழுவாழ்க்கையிலும் ஈட்டும் பொருளில் என் அடிப்படைத்தேவை தவிர அனைத்தையும் அவள் குழந்தைகளுக்காக அளிக்கிறேன். அப்படியே ஆணாதிக்கவெறியன் என்னும் முத்திரையையும் சூடிக்கொள்ளவேண்டும் என்றால் அதையும் செய்யவேண்டியதுதான்.

என் வீட்டில் என் மனைவி என்னை ஒருமையில்தான் அழைக்கிறாள். என் மகனும் மகளும் ஒருமையில்தான் அழைக்கிறார்கள். மரியாதை என்பது விலக்கம். வீட்டுக்குள் அதை நான் விரும்புவதில்லை.

கடைசியாக மீண்டும் சொல்கிறேன். கணக்கு பார்க்குமிடத்தில் உறவுகள் அமைவதில்லை. உறவுகள் என்பவை எச்சமில்லாமல் அளிப்பதனூடாக உருவாக்கிப் பேணப்படவேண்டியவை. எல்லா உறவுகளையும் காதல் என்றே பழைய நூல்கள் சொல்கின்றன. இறைவனுடனான உறவைக்கூட. காதல் என்பது கணக்குகள் இல்லா இடத்திலேயே உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைஉ.வே.சாமிநாதையர்
அடுத்த கட்டுரைதத்துவக்கல்வி, ஒரு கடிதம்