சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பு, அதாவது மே மாதம் தமிழ் விக்கி பற்றி எழுதப்பட்ட பல பதிவுகளை என் முகநூல் காட்டியது. ஒரு சுற்று பார்த்துவந்தேன். என்னென்ன எக்காளங்கள், என்னென்ன அவதூறுகள், எவ்வளவு திரிப்புகள், குற்றச்சாட்டுகள். தமிழ்விக்கி என்பது வெறும் காப்பி பேஸ்ட் மட்டுமே என ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ் விக்கிக்கு கோடிக்கணக்கில் பணம் வருவதாக எழுதியிருக்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு நகல் இது என்று எழுதியிருக்கிறார். உச்சகட்ட நகைச்சுவை ‘தலைமறைவாக’ அரசாங்கத்துடன் போரில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுக்க இந்த தமிழ் விக்கி என ஒருவர் எழுதியிருக்கிறார். (தமிழ் விக்கிபீடியாவில் அந்த தகவல்கள் இருந்தால் அரசாங்கம் ஒன்றும் செய்யாதாம். காப்பி பேஸ்ட் செய்தால்தான் கண்டுகொள்ளுமாம்) எவ்வளவு பெரிய அறிவுத்திருக்கூட்டம்! இந்த லட்சணத்தில் உங்கள் வாசகர்களை மந்தைகள் என்று வசை.
இப்போது தமிழ் விக்கியின் தரம் என்ன, அதன் தேவை என்ன என்று அதில் வரும் பதிவுகளை கொஞ்சம் ஓட்டிப்பார்ப்பவர்களுக்கே சந்தேகமிருக்காது. எவ்வளவு நீண்ட பதிவுகள். குன்றக்குடி அடிகளார் பற்றிய பதிவையோ மலேயா கணபதி பற்றிய பதிவையோ வேறு எங்கே தேடமுடியும்? இதெல்லாமே இங்கே நூல்களில் உள்ளன. எடுத்து எழுதத்தான் ஆளில்லை. எழுதினாலும் இவ்வளவு சரியான ஒரு ஃபார்மேட்டில் எழுத ஆளில்லை. மேலே நக்கல் நையாண்டி செய்யும் கும்பலுக்கு அதைப்பற்றியெல்லாம் ஒரு புரிதலும் கிடையாது. தமிழ்விக்கி வரும்வரை தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல்கள் இல்லை, ஃபார்மாட் இல்லை என்றே தெரியாது அந்தக்கும்பலுக்கு. இன்று தமிழ்விக்கி வந்தாலும் அதை தெரிந்துகொள்ளும் அடிப்படை அறிவுத்திறன் இருக்குமா என்பதும் சந்தேகமே.
நானும் நண்பர்களும் பேசிக்கொண்டோம். இந்த நக்கல் நையாண்டி அவதூறுக் கூட்டத்துக்கு இப்போதாவது கொஞ்சமாவது மனசாட்சி உறுத்துமா, கொஞ்சமாவது வெட்கம் வருமா என்று. வரவே வராது, இன்னும் கொஞ்சம் மூர்க்கம்தான் வரும் என்று நான் சொன்னேன். ஏனென்றால் அந்த அவதூறையும் நையாண்டியையும் அவர்கள் தெரியாமல் செய்யவில்லை. தமிழ்விக்கி என்ன தரத்தில் வெளிவரும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்துதான், அந்தப் பயத்தில்தான் அதை சொல்லிவந்தார்கள். அவர்களைச் சூழ்ந்துள்ள கூட்டத்துக்கும் தெரியும். அவர்களும் ஒரு வார்த்தை ‘இப்ப சொல்லுங்க, தமிழ் விக்கி எப்படி இருக்கு?” என்று இவர்களிடம் கேட்கமாட்டார்கள்.
தமிழ்விக்கியில் வரும் பதிவுகள் ஒவ்வொன்றையும் திகைப்புடன் பார்க்கிறேன். வட்டுக்கோட்டை குருமடம், டேனியல் பூர் (நானும் அமெரிக்கன் கல்லூரி மாணவன் தான்) போன்ற பதிவுகள் எல்லாமே மலைப்பளிப்பவை. எவ்வளவு பெரிய ஆளுமைகள். இவர்களைப் பற்றி ஒரு நாலைந்து வரிகூட இங்கே எழுதப்படவில்லையே. இவர்கள் இல்லாமல் தமிழ் வரலாறு உண்டா? ஆனால் தமிழ் தமிழ் என பிலாக்காணம் வைப்பவர்களுக்கு அவர்கள் அறிமுகம்கூட இல்லை. வள்ளலார் பற்றிய பதிவும் சரி, ஞானியார் அடிகள் பற்றிய பதிவும் சரி எவ்வளவு பெரிய வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கின்றன. கே.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை போன்ற அறியப்பட்ட ஆளுமைகள் ஒருபக்கம் என்றால் சுவாமி ராமதாசர் போன்றவர்கள் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.
வாழ்க தமிழ்ப்பணி. இப்படித்தான் எல்லா காலத்திலும் வசைகளை மட்டுமே வாங்கிக்கொண்டு நம் முன்னோர் தமிழ்ப்பணி செய்திருக்கிறார்கள். வசைபாடும் கும்பலுக்கு வேறேதும் தெரியாது. அவர்கள் அன்றும் இருப்பார்கள், என்றும் இருப்பார்கள்.
இல.திருக்குமரன்