அன்பு ஜெ,
சனிக்கிழமை காலை கோவை வந்து இறங்கியதிலிருந்தே எனக்கு விழா ஆரம்பித்துவிட்டது. கவிஞர் ஆனந்த் அண்ணா அழைக்க வந்திருந்தார். காலை ஐந்து மணிக்கு ஆளில்லாத கோவை சாலையில் “வெண்ணிலா சந்தன கிண்ணம். புன்னமடக் காயலில் வீணே. குஞ்சிளம் கையில் மெல்ல.. கோரியெடுக்கான் வா…” என்ற வரிகளின் வழியாக அந்தப் பாடலை சிலாகித்துக் கொண்டே வந்தார். முழுவதுமாக அறிந்துவிடாத ஒரு மொழி தானே திறந்து கொள்ளும்போது கிடைக்கும் அறிதலைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் மலையாளக்காரர்களை விட அது தமிழ் ஆட்களுக்கு தான் அதிகம் திறப்பைக் கொடுக்கும் என்றார். குறிப்பாக தமிழும் அரைகுறையாக தெரியும் ஆளுக்கு என்று சொல்லி சிரித்தார். அந்தப் பாடலில் “காணாத்த கதைகளில் வந்த ராஜாவும், ராணியும்” என்ற வரி வந்தபோது ”எப்டி பாத்தியா ராஜா, ராணியே கதை தான், அதிலும் காணாத கதைகளில் உள்ள ராஜா, ராணியாம்” என்று சொல்லிக் கொண்டே மேலும் சிரித்தார். ”உண்மையில் காதல் கொண்ட ஆணும் பெண்ணும் தன்னை யார் கண்களிலும் படாமல் ஒளித்துக் கொள்ளவே விருப்பப்படுவாங்க. ராஜா ராணி என்று சொல்லிவிட்டால் கூட ஏதோ ஒரு காலம் வந்துடுது. காணாத்த கதைகளிலுள்ள ராஜா ராணி எனும்போது இங்க காலமே இல்லாம ஆகிடுது. காலமின்மையின்மைல எங்கையோ கொண்டு போய் அந்த காதலை ஒளிச்சு வைக்கறதுல உள்ள இன்பம் இல்லயா” என்றேன். “எக்ஸாக்ட்லி” என்றார். பின் ஜி. குமாரப்பிள்ளை எழுதி ஆனந்த் மொழிபெயர்த்திருந்த ஒரு மலையாளக்கவிதையை மிகவும் ரசித்ததை சொல்லிக் கொண்டிருந்தேன்.
“பூவின்
பூவிலே தாமரைப்பூவின்
தாமரைப்பூவிலே நீலப்பூவின்
நீலத்தாமரைப்பூவிலே
நீ சூடும் பூவின்
நீ இன்று சூடும்
இந்தப் பூவின்
நீ மட்டும்
நீ இன்றைக்கு மட்டும்
சூடும் இந்த
நீலப்பூவின்
பெயர் என்ன தோழி ?”
”நீ இன்றைக்கு மட்டும்.. சூடும் இந்த நீலப்பூ” என்பதை அழுத்திச் சொல்லி சிரித்துக் கொண்டோம். “என்ன பத்தரமா மாமி வீட்ல சேத்துடுவீங்கள்ல” என்று கேட்டேன். “ஏன் அதுல என்ன ஒனக்கு சந்தேகம்” என்றார். இல்ல போன வாரம் இப்டி தான் மாமிய பைக்ல இருந்து விழுகடிச்சுட்டீங்க. இன்னைக்கு வேற புன்னமரக்காயல், சந்தனக்கிண்ணம்னு காரை கரப்பான்பூச்சி மாதிரி கவுத்திவிட்டீங்கண்ணா” என்று சொன்னேன். “வாய்ப்பிருக்கு.” என்று சொல்லிக் கொண்டே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். கோவையில் மாமா, மாமி இருப்பது திருக்குறுங்குடிக்கு நேர் மாறான வீடு. ஆனாலும் வீட்டைச் சுற்றி மரங்களும், பட்டாம்பூச்சிகளும் நிறைந்திருந்தது. வீடு வந்து சேர்ந்தபின் நான்கு பேரும் சேர்ந்து நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தோம். என் வாழ்க்கையிலேயே எனக்கு நன்கு தெரிந்த மூன்று நடசத்திரத்தை தேடி அதைக் கண்டேன். அதை தொட்டு மாமி கோலம் போட்டு ஒவ்வொரு கான்ஸ்டலேஷனாக விளக்கிக் கொண்டிருந்தார். விடிவெள்ளியைக் கண்டோம். விடிந்த பின் மாமா தோட்டத்தில் பூத்திருந்த ரோஜாவையும், பிற மலர்களையும் ஒரு சுற்று சுற்றி வந்து காண்பித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாள் காலையும் அவரின் மெல்லிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் இனிமையான வீட்டில் இருந்தது மகிழ்வாக இருந்தது.
ஆனந்த வரும் வழியில் சிலாகித்த இன்னொரு வார்த்தை “கண்ணு முட்டாம்” என்பது. இரு கண்கள் சந்தித்துக் கொள்ளுதல் என்ற பொருளில் வரும் இந்த வார்த்தை மலையாளிகள் சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தை. அது எவ்வாறு நமக்கு ஒரு காட்சியைத்தருகிறது என்று கூறிக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக அன்று மாலை நீங்கள் எப்படி ஒரு மொழியைப் பயின்ற ஒரு தமிழ் ஆசிரியருக்கு கவிதையாக மொழி திறக்காதிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அதனால் தான் ஒரு பேராசிரியர் எழுதும் கவிதையோ மொழியோ நம்மை கிளர்ச்சியடையச் செய்வதில்லை. மாறாக கவிஞன் மொழியை குழந்தை கண்டடைவது போல கண்டடைகிறான் என்றீர்கள். மேலும் மேலும் பல தமிழ்ச் சொற்களை எங்களுக்கு திறந்து காண்பித்தீர்கள். குற்றாலம் எஃபக்ட் என்று சொல்லக்கூடிய மலையாளக்கவிதையிலுள்ள மரபார்ந்த ஒரு வகை பாட்டுத்தன்மைக்கு எதிராக நீங்கள் எழுதிய கட்டுரையை நினைவு கூர்ந்தீர்கள். ஆனாலும் மலையாளக்கவிஞர்கள் ஏன் மரபுக்கவிதையை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு பி. ராமன் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியானது என்று கூறியது அறிதலாக இருந்தது. மலையாளத்தில் சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இன்றைக்கு இருக்கக் கூடிய மலையாளத்தில் கவிதையை எழுதும் போது அது கவிதையாக இயலாத தன்மை இருப்பதால் மரபார்ந்த கவிதைகளையே தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகச பி.ராமன் சொன்னதாகச் சொன்னீர்கள். தமிழில் அந்த வகையில் இயல்பு வழக்கிலுள்ள மொழியே நவீனக் கவிதைகளில் கவிதைத் தன்மையோடிருப்பதற்கு மொழியின் தன்மை காரணமாகிறது என்பது புரிந்தது.
கம்பராமாயணம் வாசிக்கையில் நிலாவை “இந்து” என்று சொல்வது என்னை சற்றே பிரமிக்கவைத்ததைப் பகிர்ந்தேன். இந்து என்ற சொல் எனக்கு ”சொட்டு” என்ற சொல்லை அருகில் வைத்தது என்று சொன்னபோது அதை மேலும் விரித்தீர்கள். வானில் நிலவை ஒரு சொட்டு என்று சொல்லும் போது கிடைக்கும் சித்திரம் அளப்பறியது. முழு நிலவை பார்க்கும் நாட்களிலெல்லாம் இவ்விரு சொற்களும் என்னை எப்போதும் வந்து முட்டிவிடுகின்றன. அதை உங்களிடம் சொன்னபோது “சந்திரகலா” என்ற வார்த்தையையும், மலையாளத்தில் ஒரு சொல்லுக்கு உபயோகிக்கும் வார்த்தைகள் கூட நாம் கவிதையாக உணர முடியும்., ஆனால் அவர்கள் அதை எளிதாகக் கடந்து விடுவார்கள் தமிழிலும் இது நடக்கும் என்றீர்கள். இரு மொழிக்கு இடைப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இரு மொழியும் திறந்து கொள்வது இத்தன்மையால் தான் என்றீர்கள். நீங்கள் எழுதும் மலையாளம் அங்கே தமிழர்கள் எழுதும் மலையாளமான நாட்டான் மலையாளம் என்ற வகைமையைச் சார்ந்தது என்பதும் அறிதல்.
சனிக்கிழமை மதியம் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் நண்பர்களுடன் உங்களை சந்தித்தததிலிருந்து மணிவிழா எங்கள் அனைவருக்கும் ஆரம்பித்திருந்தது. இம்முறை பொன்னியின் செல்வன், வி.டி.கே பற்றிய பேச்சு அதிகமிருந்தது. பேச்சின் நடு நாயகமாக அருணாம்மா நீங்கள் “ச்சிம்பு” என்று சொல்வதை கலாய்த்துக் கொண்டிருந்தார். நீங்கள் அதை “ச்சிலம்பு”, “ச்சிலம்பரசன்”, “ச்சிம்பு” என்று நிறுவியபோது சரியெனவே பட்டது எனக்கு. ஆனால் ஒருபடி மேலே போய் தமிழில் ”ச்ச” மட்டுமே உள்ளது என்று கூறி பல விளக்கங்களை, எடுத்துக்காட்டுக்களை கூறினீர்கள். செந்தில் அண்ணா “ஆசான் சொன்னா சரியாகத்தான் இருக்கும்” என்று முடித்துவிட்டார். அஜிதனும், அருணாம்மாவும் “இருக்கவே இருக்காது” என்று கடந்து விட்டார்கள். சைதன்யா நீங்கள் சொன்ன சிவாஜி டயலாக்கை யூட்டியூபில் தேடி அவர் “ச” வை எவ்வாறு உச்சரிக்கிறார் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நானும் நண்பர்களும் ”ச” வரும் ஆனைத்துச் சொல்லிலும் “ச்ச” எப்படி வருகிறது என்று போட்டு பார்த்து உச்சரித்துக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் நாங்கள் “ச்சோறு” என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டோம் ஜெ. தமிழில் ஒருவேளை ஸ/ஷ வரும் சொற்கள் அனைத்தும் வடமொழி கலப்பு என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அப்படியல்லாத சொல்லைக்(ச்சொல்லைக்) கண்டையும்போது சொற்போர் புரியலாம் என்று திட்டம். மிக மகிழ்ச்சியான நாளாக இனிமையாகத் துவங்கியது. உங்கள் திரைக்கதை அனுபவங்கள், மனிதர்கள், பகடிகள் என பேசிக் கொண்டே இருந்தீர்கள். மிகப்பெரும் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை சுருக்கி எவ்வாறு ஒருவரியாக ஆக்குகிறீர்கள் என்பதையும். ஐந்து நெருப்பு என்ற சிறுகதையை எவ்வாறு இரண்டு மணி நேர திரைக்கதையாக மாற்றுகிறீர்கள் என்பதுமே ஒரு கிரியேட்டிவ் ப்ராஸஸ் தான்.
இரவு ஸ்ரீநி மாமா, சுதா மாமியின் வீட்டில் தங்கியிருந்தேன். கோவை வருகிறேன் என்றதும் இங்கு தங்க வேண்டும் என்ற அன்புக்கட்டளையின் நிமித்தம். பின்னும் அவர்களுடன் நாளைக் கழிப்பதன் மகிழ்வுக்காகவும். இரவு முழுவதும் கம்பராமாயணம், தத்துவம், கீதை, வெண்முரசு என பலதும் பேசிக்கொண்டிருந்தோம். மாமாவும், மாமியும் படைப்பின் வழி மட்டுமே உங்களை ஆசிரியராக அணுகும் விதம் எனக்கு எப்போதுமே உவப்பது. தொடர்ந்து எனக்கான தமிழ்விக்கிபணி, புனைவுஎழுத்துக்கான அறிவுரை, வாழ்க்கைக்கான அறிவுரை என பலதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் வாழ்க்கையில் அப்படி சொல்ல எனக்கு தாத்தா ஒருவர் இருந்தார். இன்று அவர் இல்லை. அவருக்குப் பின் ஆசிரியராக நீங்கள். இன்று உங்கள் வழி ஸ்ரீநி மாமாவும், சுதா மாமியும். பின் எப்போதும் என் நலனையே விரும்பும் ஆனந்த அண்ணா, சுஷில். யாவருக்காகவும் உங்களுக்கு நன்றி.
காலை பட்டீஷ்வரம் கோவிலில் நிறைவாக லிங்க ரூப சிவனை தரிசித்தோம். சிவனின் லிங்க வடிவம் எப்போதும் என்னை ஆட்கொள்ளும் ஒன்று. மனக்கவலைகளும், கஷ்டங்களும் இருக்கிறது தான். ஆனால் சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனை இல்லை. “இன்னும் என்ன காட்டனுமோ காட்டு” என்று சொல்லிக் கொண்டேன். இந்த வருட ஆரம்பத்திலிருந்தே தமிழ்விக்கிப்பணியும், அதன் வழியாக நீங்களும் அவ்வளவு அறிதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ”இன்னும் முழுமையாக… எதுவும் எஞ்ச வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டேன். ஒரு துளியும் எஞ்சாமல் முழுமையாக தீர்ந்து எரிந்து கரைவது மட்டுமே நிறைவையளிக்கும் என்று நம்புகிறேன்.
ஞாயிறு அன்று நீங்களும் அருணாம்மாவும் மாலை மாற்றிக் கொண்டதை பல முறை பார்த்தேன். ரத்தச் சிவப்பான ரோஜா மாலை இருவரும் அணிந்திருந்தது அவ்வளவு அழகாக இருந்தது. கருமையான அந்த கல் கருவறைக்கும் அவற்றை மாற்றிக் கொண்டபோதும், உங்கள் இருவர் முன் அந்த ஆரத்தி விளக்குகளும் என அந்தச் சித்திரத்தை மனதில் பதித்துக் கொண்டேன். அருணாம்மா உங்களுக்கு ஒரு அம்மாவைபோல உங்களுக்கு “இப்படிச் செய்..” என்று வழிகாட்டிக் கொண்டே இருந்தார்கள். வெட்கமும், ஒன்றும் புரியாத திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல நீங்கள் முழித்துக் கொண்டிருந்தது சிரிப்பாக இருந்தது. நண்பர்களை சந்தித்தது மிக மகிழ்ச்சி. அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கருவறையில் அம்மன் சன்னிதிக்குள் சிவப்பு பட்டுடுத்தி அவள் அமர்ந்திருந்தபோது தான் சிவப்பு மாலை கொடுத்த அந்த உணர்வை ஊகிக்க முடிந்தது.
அதன்பின் அரட்டைகள், வெடிப்பேச்சுகள் என சாய் வில்லாவில் நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டே இருந்தீர்கள். தேவதேவனும் அதே மகிழ்வான மன நிலையில் இருந்தார். முகத்தை சீரியஸாக வைத்து அவர் சொன்ன இரு ஜோக்குகளை நானும் ஜாஜாவும் மட்டுமே கண்டறிந்து சிரித்தோம். உங்கள் எழுத்துக்கள் வழி மட்டுமே நான் அறிந்த கல்பற்றா நாராயணனை மிக அருகில் சந்தித்தேன். அங்கு வசந்தகுமார் ஐயாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி எனக்கு. இதற்கு முன் புத்தகத்திருவிழாவில் அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் தான் வசந்தகுமார் என்று தெரியாது. ஒரு மாதகாலமாக தொண்ணூறுகளில் வந்த எழுத்தாளர்கள் சார்ந்து நண்பர்கள் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறோம். மிக முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், கவிஞர்களைப் பற்றிய தகவல் தேடலின் போது மறக்காமல் அவர்கள் குறிப்பிடுவது வசந்தகுமார் ஐயாவைத்தான். யாவரின் தொடக்க காலத்திலும் அவர் தான் துணையாக இருந்திருக்கிறார். பலரும் எழுதுவற்கான ஊக்கியாக இருந்து அவர்களின் புத்தகங்களைப் பதிப்பிக்க உதவியிருக்கிறார். ஆனால் அவரின் புகைப்படங்களோ அவரைப்பற்றிய தனியான தகவல்களோ எங்கும் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி எப்படியாவது ஒரு தமிழ்விக்கி பக்கம் உருவாக்க வேண்டும் என்று சொன்னபோது நண்பர்கள் ”வாய்ப்பில்லை” என்று பகடி செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை உங்கள் பேச்சுகளில் முழுவதுமாக தமிழ்விக்கியே ஆக்கிரமித்திருந்தது. தமிழ்விக்கி ஜோக்குகள் என ஒன்று தனியாக இந்த ஆறுமாத காலங்களில் உருவாகியிருப்பது புரிந்தது. பின்னும் அதிலிருந்து கொட்டிக் கிடக்கும் புனைவுகளைப் பற்றி விரித்துக் கொண்டிருந்தீர்கள். ஒவ்வோர் ஆளுமைகளுக்கிடையே இருக்கும் ஒரு சரடின் வழி எழும் கேள்விகள் வழியான புனைவு, ஒரு ஆளுமையின் வாழ்க்கையில் ஒரு தருணத்தில் கிடைக்கும் புனைவு. ஒரு பதிவின் ஒரு முடிச்சிலுள்ள புனைவு, ஒரு முடிச்சிலிருந்து சென்று தொடும் இன்னொரு முடிச்சிலுள்ள புனைவு என பலவற்றை சொல்லிக் கொண்டிருந்தீர்கள். “ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை, அதிலிருந்து கிடைத்த அனுபவத்தின் வழி, தன் நிலத்தில், தான் சந்தித்த மனிதர்களைப் பற்றிய புனைவுகளை சிறப்பாக எழுதிய பின் நின்று விடும் தருணத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். நான் தமிழ் விக்கி பதிவு இடும்போது குறித்து வைத்துக் கொண்ட பல புனைவுத் தருணங்களை மீட்டிக் கொண்டிருந்தேன். சொல்லப்படாதவைகள் எத்தனை மிச்சமுள்ளன. ஆனால் இங்குள்ள கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஐரோப்பிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள். அதைப் போலச் செய்யவே முயற்சிக்கிறார்கள். ஆனால் இங்கு நம்மிடம் புனைவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்றீர்கள். இதையே திரைத்துறையில் டைரக்டர்களுக்கும் ஒப்பிட்டீர்கள். தான் வாழ்ந்த சூழ் நிலை, தன் சார்ந்த விஷயங்களை படமாக எடுத்து தீர்ந்துவிட்டபின் நல்ல இயக்குனர்கள் பலர் கதையில்லாமல் தவிக்கிறார்கள். அங்கு தான் இலக்கியம் முக்கியத்துவம் பெருகிறது என்றீர்கள். தெரியாத நிலத்தை நோக்கி எழுதும்போது தன்னை திறந்து கொள்ளும் புனைவு தரும் அனுபவம் அலாதியாக உள்ளது ஜெ. சமீபத்தில் வஞ்சி என்ற சிறுகதை எழுதினேன். சூர்ப்பனகை வதை என்ற கூத்தை உள் நுழைத்து எழுதிய கதை. அதற்கு ஒரு வார காலத்திற்குப்பின் தான் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்” புத்தகம் கையில் கிடைத்தது. அங்கு நான் கண்ட அண்ணாவியார்களின் வாழ்க்கையும் புனைவில் நான் உருவாக்கிக் கொண்ட அண்ணாவியாரின் பிம்பமும் ஒன்றாகவே இருந்தது. அதன் பின தமிழச்சி தங்கபாண்டியனின் பதிவிடும் போது கு.ப.ரா எழுதி அரங்காற்றுகை செய்த சூர்ப்பனகை நாடகத்தில் அவர் சூர்ப்பனகையாக நடித்தார் என்ற செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஏதோவொரு சரடு எழுதும்போது தன்னை நெய்துகொள்ளும் அனுபவம் நாம் தெரியாத ஒரு களத்தை எழுதும் போது கிடைக்கிறது.
பின் மதியத்திற்குமேல் நண்பர்கள் சகிதம் பேசிக் கொண்டிருந்தோம். சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு நடுவில் உட்கார்ந்திருந்தேன். கிருஷ்ணன் அனல் பறக்க பல கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார். நண்பர்கள் ஏற்பும், மறுப்புமென விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். சாருவின் ஆக்கங்கள் வழி அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டுமென இறுதியாகச் சொல்லி முடிக்கும் வரை உட்கார்ந்திருந்தேன்.
மாலை கவிஞர் போகன் அவர்களுடன் நடந்து ஆடிட்டோரியம் வந்தடைந்தேன். வரும் வழியில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் எப்படி குழுவாகச் செயல்பட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். முன் தினம் இரவு அப்படியான பல குழுக்களைப் பற்றி நீங்கள் சொல்லியது நினைவிற்கு வந்தது. நாகர்கோவில், கோவை, சென்னை என எழுத்தாளர்கள் சந்திக்கும் ஸ்பாட்டுகளைப் பற்றிச் சொன்னீர்கள். ஒரு பேசுவதற்கான இடம் ஒன்று இலக்கியச் செயல்பாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இதழ் ஆரம்பிப்பது, இலக்கியச் செயல்பாடு, ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளல் என பலவற்றுக்கும் இக்குழுக்கள் உதவியிருக்கின்றன. தமிழ்விக்கி பதிவுகளின் வழி அவ்வாறான குழுக்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கையை ஒரு புனைவாக ஓட்டிப்பார்த்திருக்கிறேன்.
தொடர்ந்து போகனிடம் நவீன பெண் கவிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை நீலிக்காக கேட்டேன். அவர் கலா சுப்ரம்ணியம் அவர்களை அறிமுகப்படுத்தி அவரிடமிருந்து பெற்றுத் தருவதாகச் சொன்னார். அவருக்குப் பிடித்த பெண் கவிஞர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
மாலை வெண்முரசு ஆவணப்படம் உணர்வுப்பெருக்கு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ நினைவுகள். வெண்முரசு ஆரம்பித்து ஒரு வருடத்திற்குமேலாகிறது. அதன் பயணம் அதை முடித்தவர்கள் பார்வையிலிருந்து நெகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ”கண்ணானாய் பாடல்” மிகப்பெரிய திரையில் அத்தனை பேர்களுக்கு நடுவில் நின்று பார்த்தது மேலும் நெகிழ்ச்சியைக் கூட்டியது. ஷண்முகவேலின் படங்கள் வழி உருவாகும் ஒரு வெண்முரசு சித்திரம் ஒன்றுள்ளது. அதை இசையின் வழி பட ஓட்டமாகக் காண்பித்தது அருமையாக இருந்தது. வரும் காலங்களில் மேலும் படங்கள் வரையப்பட்டு தொடர் கதையோட்டமாக ஆக்கினால் இன்னும் செறிவாக அமையும். வின்செண்ட் வான்காவின் ஓவியங்களை வைத்து அதில் விடுபட்டவைகளை வரைந்து அதைக் கொண்டே அவரின் வாழ்க்கை சித்திரத்தை உருவாக்கி 2017-ல் ஒரு படம் வெளியானது ஞாபகம் வந்தது.
தேனீர் இடை வேளையில் கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால் ஐயாவின் புத்தகங்கள் வாங்கி “இதை இப்பொழுது தான் வாங்குகிறாயா?” என்ற செல்லமான திட்டோடு அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டேன். நண்பர்களை முடிந்த மட்டிலும் சந்தித்து அலவளாவ முடிந்தது.
விழாவில் நீங்களும் அருணாம்மாவும் மீண்டும் பெருந்திரளின் மத்தியில் மாலை மாற்றிக் கொண்டது மகிழ்வாக இருந்தது. கல்பற்றா நாராயணின் உரை கவிதையாக அமைந்தது. அணுக்கமான, வேற்று மொழி என்று சொல்லிவிட முடியாத மொழியின் நேர்த்தி கவிதைத் தருணம் போலவே அமைந்தது. ஒரு இலக்கியவாதி இன்னொரு இலக்கியவாதியை பெருமிதப்படுத்தியது போன்ற கச்சிதமான உரை கல்பற்றா நாராயணனுடையது. யுவன் எழுத்தாளராக அல்லாமல் முழுக்கவே நண்பனாகப் பேசினார். சியமந்தகக் கட்டுரையில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய கட்டுரையை எழுதியிருந்தார். நேரில் அவ்வாறு அவர் உணர்ச்சிவசப்பட்டு இன்னும் அணுக்கமாகிவிட்டார். அன்பு, உணர்வுகள், சிறு கேவல்கள், ஏக்கங்கள், சிறு அணைப்புகள், ஆறுதல்கள் இவை தானே நம்மை பிணைக்கின்றன. இறுதியாக உங்களின் உரை உணர்வுப்பூர்வமாகவும், மயிற்கூச்செரியும்படியும் இருந்தது. உரையாகப் பேசிய ஒவ்வொருவரும் உங்கள் ஆசிரியர் நிரையில் எங்ஙகனம் பொருள்படுகிறார்கள் என்று சொன்ன போது தான் அவர்களின் உரை எனக்கு மேலும் பொருள் பொதிந்ததாகியது. நீங்கள் இறுதிச் சொல்லை உதிர்த்துவிட்டு அமர்ந்தபோது “செயல்தீவிரம்” என்பது மட்டுமே என் எண்ணத்தில் நிறைந்தது. அதற்குப்பின் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து பேருந்துக்காக நகர்ந்துவிட்டேன். நிறைவாக இருந்தது ஜெ. என் வாழ் நாளில் நான் தவறவிடக்கூடாத ஒன்றை அமைத்துத்தந்த இயற்கைக்கு நன்றி. வர இயலாத வாசகர்கள், மாணவர்களின் தவிப்பு விழா முடிந்த இரவன்று “முடிந்ததா? என்ன ஆயிற்று? என்ன நடந்தது?” என்று சிறு துளி தகவலுக்காக காத்திருந்ததிலிருந்ததை உணர முடிந்தது. இது மாதிரியான விழாக்களின் நினைவுகளை எழுதுவதன் முக்கியத்துவத்தை அவை உணர்த்தின. அந்த வகையில் உரையை உடனயே பதிவிடும் ஸ்ருதி டி.வி யுடியூப் சேனலுக்கு நன்றி. மிக நேர்த்தியாக விழாவை ஒருங்கிணைத்த நன்னெறிக்குழுமம், டைனமிக் நடராஜன் அண்ணாவுக்கு நன்றியும் அன்பும்.
ஜெ.. உங்கள் செயல்கள் வழியாக, பேச்சுக்கள் வழியாக என ஒவ்வொரு கணமும் எங்களுக்கு தீவிர செயலையே வலியுறுத்துகிறீர்கள். உங்களை நோக்கி ஆவலுடன் வந்த எங்களுக்கு அதற்கு மேலாக இலக்கியத்தை முன் நிறுத்தி மடை மாற்றிவிடுகிறீர்கள். தமிழ்விக்கி பணியின் வழி மிகப்பரந்த இலக்கியத்தின் பெருவெளியைக் காண்பித்து வருகிறீர்கள். சாருவுக்கு விருது பற்றிய எதிர்வினைகளை வாசித்தேன். தூரன் விழாவில் நண்பர்கள் அனைவரும் குழுமியிருக்கும் போது அதைச் சொன்னீர்கள். நான் அப்போது சாருவை வாசித்தது கிடையாது. முயற்சித்திருக்கிறேன். எனக்கான எழுத்தல்லாததை நான் வலிந்து வாசிக்க வேண்டியதில்லை என்பதால் முயற்சியை கைவிட்டிருந்தேன். இன்று தமிழ்விக்கி பணிக்குப்பின் இந்த விருதுத்தேர்வின் மீதான கண்ணோட்டம் மாறியிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் எழுத வந்த நவீன எழுத்தாளர்கள் நிரையை எழுதும்போது ஒன்று விளங்கியது. பல தனித்தனி தீவுகள் இலக்கியத்தில் உள்ளன. ஒன்று இன்னொன்றை மறுதளிக்கிறது. இலக்கியம் என்பது தன் சொந்த நிலத்தை, தான் பார்த்த வாழ்க்கையை மட்டுமே எழுதுவது எனும் ஒரு தரப்பு, இலக்கியம் என்பது ஆவணப்படுத்தல் தான், புனைவு என்பது ஒரு குப்பை எனும் தரப்பு, அன்றைய காலகட்டத்தை எழுத வேண்டுமென்ற தரப்பு, பெண்ணியம், தலித்தியம், உடலரசியல், முற்போக்குவாதம், சிறுபான்மை என ஒரு தரப்பு, தீவிர இலக்கியம் என்ற வரையறைக்குள் செயல்படும் க.நா.சு. மரபு ஒரு தரப்பு. அந்த மரபை மீறக்கூடாதா என கேள்வி கேட்கும் இன்னொரு தரப்பு, கலை அதுவாக நிகழ வேண்டுமென்ற தரப்பு, பின்னவீனத்துவம் என்ற பெயரில் அந்த நேரத்தைய மன்வோட்டத்தை எழுதும் தரப்பு. ஒரு தரப்பு இன்னொன்றை மறுதலிப்பதிலிருந்து எழுந்து வருகிறது. ஒன்று சில சமயம் இன்னொன்றுடன் முயங்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆவணப்படுத்தலை மட்டுமே இலக்கியம் என்றும், புனைவுகளை மறுதளிக்கும் ஒரு தரப்பை தெரிந்து கொண்ட போது மிக வியப்பாக இருந்தது. சிறுகதைகளுக்கான வரையறைகளை விமர்சனங்களைப் பற்றி பேசும்போது அதன் மீறலை ஒரு தரப்பு பேசிக் கொண்டிருந்தது.
எனக்கு வெண்முரசின் சொல்வளர்காடு பகுதி நினைவுக்கு வந்தது. எத்தனை தரப்புகள், எத்தனை கல்விக் கூடங்கள், மாணவ நிரைகள். ஒரு இலக்கிய வாசகனும் கூட சொல்வளர்காட்டில் பயணம் செய்பவன் தான். ஒவ்வொருவரும் தனக்கானதைத் தேர்வு செய்கிறார்கள். மறுத்து முன் செல்கிறார்கள். அதற்காக ஒருவன் மறுத்துச் சென்ற குருகுல மரபு அழிந்து விடுவதில்லை. பின் வருபவர்களுக்காக அது தொடர்ந்து இருக்கிறது. என் கல்லூரி காலத்தில் புனைவுகள் மீது வெறுப்போடு இருந்திருக்கிறேன். நிஜ மனிதர்களின் வாழ்க்கையை எழுதும் எழுத்தாளர்களே என் ஆதர்சங்கள். எங்கும் தகவலையே சேகரித்திருப்பேன். உணர்வுகளை விட அறிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்திருந்தேன். பல வகை இஸங்களுக்குள் மூழ்கியிருந்தேன். நான் இந்த உலகத்தை மீட்டுவிடுவேன் என்றும் ஒவ்வொரு நாளும் எனக்காகவே இந்த உலகம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடனும் படித்துக் கொண்டிருப்பேன். ஜெயமோகன் என்ற சொல்லைக் காதில் கேட்பது கூட வெறுப்பாயிருந்த ஒரு காலகட்டத்திலிருந்து ”என் ஆசிரியர்” என உங்கள் படைப்புகள் முன், செயல்களின் முன் அமர்ந்திருக்கிறேன். பலதரப்பட்ட இத்தகைய ஆசிரிய நிரைகளில் சாருவும் ஒரு மரபென்றே பார்க்கிறேன். அவரின் படைப்புகள் வழி அவற்றை விளங்கிக் கொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் விருதுக்காக சாரு நிவேதாவிற்கு வாழ்த்துக்கள்.
இந்த மணிவிழா ஆண்டில் ஒரு மாணவனாக நின்று உங்களை வணங்குகிறேன் ஜெ. வாழ்த்துக்களும், நன்றியும், பிரேமையும்.
ரம்யா.