மணிவிழா கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

ஜெ 60  மணிவிழா மிக சிறப்பாக நடந்தது.வெள்ளிக்கிழமை முத்துலிங்கம் ஐயாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் உங்களை பார்த்தேன். பின்பு சனிக்கிழமை காலை நீங்கள் கோவை வந்தது முதல் திங்கள் மாலை ரயிலில் ஏறி அமர்ந்து வண்ணதாசன் ஐயாவின் கைகளை பிடித்து கொண்டது வரை புகைப்படங்களை நண்பர்கள் அனுப்பிக்கொண்டே இருந்ததால். மானசீகமாக நானும் மூன்று தினங்கள் அங்குதானிருந்தேன்.

விழாவில் கலந்துகொண்ட நண்பர்கள் பலரிடமும் விழா குறித்து போனில் கேட்டறிந்தேன். பின்னர் உரைகள் அனைத்தையும் கேட்டேன். கவிதை மொழியில் கல்பற்றா அவர்களின் உரை  உச்சம். உங்களது எனெர்ஜியை உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு கடத்துபவர் நீங்கள். பாதை இல்லாத இடத்தில் ஜெயமோகன் பயணம் செய்ய ஆரம்பிக்கும் முன் அங்கே தானே பாதை உருவாகிக்கொள்கிறது. ஜெயமோகனுக்கு நண்பனாக இருப்பது பாக்கியம் என்றார்.

பாரதி பாஸ்கர் அவர்கள் உங்களின் ஆயிரக்கணக்கான வாசகிகளின் குரலாக நான் இந்த மேடையில் உங்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு நிற்கிறேன் என்றார். சனிக்கிழமை அலுவலகம் முடிந்து நள்ளிரவு எழுந்து தயாராகி அதிகாலை நான்கு மணிக்கு தனியாக பேருந்தில் ஐந்து மணிநேரத்திற்கு மேல் பயணித்து கோவைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டு இரவில் பதினோரு மணி பேருந்து பிடித்து அதிகாலை இல்லம் சென்று சேர்ந்து கணவருக்கும், பிள்ளைகளுக்கும் வேண்டியவற்றை செய்து கொடுத்துவிட்டு  திங்கள்கிழமை காலை அலுவலகம் சென்றார். உங்கள் வாசகி ஒருவர்.

சென்னையில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கும் உங்கள் வாசகி ஒருவர் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்புகையில். ஞாயிறு மாலை கோவை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் மூன்று மணிநேரத்தில் சக ஆசிரியர்களிடம் மாணவர்களை ஒப்படைத்துவிட்டு டாக்ஸியில் விழா அரங்குக்கு வந்து விழாவில் கலந்துகொண்டு சென்றுள்ளார்.

நண்பர்கள் பெரும்பாலானோர் சொந்த செலவில் விடுதிகளில் தங்கி விழாவில் கலந்துள்ளனர்.  நீங்கள் அளித்தது இலக்கியம் மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நீங்கள் வழிகாட்டியுள்ளீர்கள். யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சொந்த வாழ்க்கை சிக்கல்கள், தொழில், பொருளாதார சிக்கல்களுக்கு நண்பனாக, சகோதரனாக, ஆசிரியராக ஆலோசனை வழங்கி வாழ்வு மேம்பட உதவியுள்ளீர்கள். கல்பற்றா அவர்கள் சொன்னது போல் நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களை சுற்றியிருப்பவர்களையும் பிரகாசிக்க செய்பவர்.

அந்த நன்றி உணர்வால்தான் இளையவர்கள் வணங்கி, உங்களிடம் ஆசி பெறவும், மூத்தோர்கள் பயணம் செய்ய இயலா உடல் சிக்கல் இருந்தபோதும் வெகு தூரத்திலிருந்து வந்து உங்களை வாழ்த்துவதற்கும் வந்தார்கள்.

யுவன் அவர்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அவரது இல்லம் சென்று சந்தித்தபோது அவர் மேடையில் சொன்ன அதே வரிகளை நானும் கூறியிருக்கிறேன். ஜெயமோகனின் தளம் மூலம் உங்களை நன்கு அறிவேன் உங்கள் கதைகளை வாசித்துள்ளேன் என.

சில தினங்களுக்கு முன் பவா அவர்கள்  சொல்லும்  மாயப்பொன் கதையை கேட்டபின் மீண்டும் அந்த கதையை வாசித்துவிட்டு என்னை நான் நேசையனாக உணர்ந்த தருணத்தில் உங்களுக்கு எழுதிய கடிதத்தை பவாவிடம் பகிர்ந்துகொண்டேன். அவரது உரையிலும் மாயப்பொன் குறித்து பேசியது மகிழ்ச்சியை தந்தது.

மணிவிழாவிற்கு வந்த கூட்டம் குறைவுதான் (1200 பேர்) தவிர்க்கவே முடியாத காரணங்களினால் விழாவுக்கு வர முடியாமல் போன எண்ணிக்கையே அதிகம். மேகாலயாவில் பணிபுரியும் நமது விஷ்ணுபுர தூண்களில் ஒருவரான கலெக்டர் ராமின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரிடம் கேட்டபோது “தற்செயலாக கோவை வந்தேன். விழாவில் கலந்துகொள்ளாவிட்டால் வருந்தியிருப்பேன்” என்றார்.

நரேன் “ஷாகுல் செம கூட்டம் சார்ட்ட யாருக்கும் பேசவே முடியல, சும்ம ஒரு ஹாய் சொல்லி கை குலுக்க தான் முடிஞ்சுது” என்றார்.

விழாவில் வெகு தூரத்திலிருந்து சொந்த செலவில் வந்தவர்கள் எல்லாம் உங்கள் மீதுள்ள தூய அன்பினால் மட்டுமே. என்னை போன்ற இளையவர்களுக்கு உங்கள் ஆசியும் மூத்தோர்களின்  வாழ்த்துக்கள் உங்களுக்கு என்றுமிருக்கட்டும். மேலும், மேலும் பெருவிசையுடன், பெருஞ்செயல்கள் நீங்கள் புரிவதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

உலக உருண்டையில் இந்தியாவின் மறுபுறத்தில் ஜமைக்கா நாட்டு கடல் பகுதியில் இருந்து இதை எழுதுகிறேன். மறக்காமல் டைனமிக் நடராஜன் அண்ணாவை அழைத்து பார்ட்டினேன். “ஷாகுல் இது டீம் வொர்க், உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்” என்றார்.

மூன்று தினங்கள் மிக நிறைவாக, மகிழ்வாக நீங்கள் இருந்ததை கண்டு பெரு மகிழ்ச்சி.

ஷாகுல் ஹமீது .

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

மிக நீண்ட நாட்கள் பிறகு உங்களுக்கு ஈமெயில் அனுப்புகிறேன். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி,  உங்களை நாகர்கோவில் இல்லத்தில் சந்தித்ததில் மற்றும் உங்கள் நேரத்தை என்னோடசெலவிட்டதில்  மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.

முன்னறிவிப்பு இல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும். ஒவ்வொரு முறையும்  நான்  நாகர்கோவில் வழியாக கேரளா போகும் பொழுது, நான்  உங்களை காண வேண்டும் என்று நினைப்பேன், ஒரு சிறு தயக்கம், நீங்கள் வீட்டில் இல்லாமல்  வெளி வூரிலிருந்தால்  என்றும் மற்றும் என்னுடன் வரும் என்  கன்னட மனஜேர்க்கு உங்களை அறியாது என்பதால் நான் தவிர்த்துவிட்டேன். இம்முறை பெங்களூருவிலிருந்து தனியாக பயணம் ,பார்வதிபுரம் கடக்கும் போது தான் நினைத்தேன் முயன்று பார்ப்போம் என்று திடீர் திட்டம், உங்கள் வீடும் தெரியாது 30 நிமிட விசாரிப்பில் வந்துவிட்டேன்.  உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

திருவனந்தபுரம் சென்ற பிறகுதான் நினைத்தேன், உங்களை சந்தித்த போது நான் உங்களுக்கு எதுவும் வாங்கி வரவில்லையே என்று எண்ணி மிகவும் வருந்தினேன். என்னை மன்னிக்கவும். உங்கள் சந்தித்த மகிழிச்சில் மற்றும் என்  பயண அவசரத்தில், உங்களோடு ஒரு புகைப்படம் கூட எடுக்க மறந்துவிட்டேன். அந்த தருணத்தை தவறவிட்டேன்.

உங்கள் 60 வது மணிவிழா நிகழ்ச்சிகளின் முழு தொகுப்பை  இன்று “ஸ்ருதி டிவி” யில் கண்டேன் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

உங்கள் அடுத்த பெங்களூரு பயண திட்டம் எப்போது இருந்தாலும் தெரிவிக்கவும்.

நன்றி

R .A.பாலாஜி

பெங்களுரு

சியமந்தகம் தொகைநூல் வாங்க

*

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்
நன்றிகளும் வணக்கங்களும் 
முந்தைய கட்டுரைதனிமையும் இருட்டும்
அடுத்த கட்டுரைவல்லுறவை வெல்ல!