தமிழ்ச் சிறுகதையுலகின் யதார்த்தவாத இலக்கிய ஆளுமையான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு தொடங்குகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா உள்ளிட்ட சிறுகதையாளர்களின் நிறைவரிசையில் கு.அழகிரிசாமி அவர்களும் தன்னுடைய புனைவுப் படைப்புகளால் முன்னோடியாகக் கொள்ளத்தக்கவர். இலக்கியம், இதழியல், நாடகம், மொழிபெயர்ப்பு, இசையியல் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். மானுடம் கொண்ட தீராப்பசியையும், விளிம்புநிலை எளிய வாழ்வினையும் தன் படைப்புகளில் மூலக்கருவாக்கியவர் இவர்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் இவரைப் பற்றிய தனது நினைவோடையில் “மனித இயல்பை ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின் மீது அதிகக் குறைகளைக் கண்டவர். ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. எளிமையான சாயல்களும் மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்” என்றுரைக்கிறார்.
ஆகவே, தமிழின் தலைசிறந்த சிறுகதைப் படைப்பாளுமையான கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு தொடக்கத்தை மனமேந்திக் கொண்டாடும்விதமாக, ஒருவருட செயற்திட்டத்தை தன்னறம் நூல்வெளி முன்னெடுக்கிறது.
இச்செயற்திட்டத்தின் முக்கிய செயலசைவுகளாக,
1. கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி, அவைகளை விலையில்லாப் பிரதிகளாக 1000 வாசிப்புமனங்களுக்கு வழங்குதல்
2. நவீன ஒவியர்களைக் கொண்டு அவருடைய சிறுகதைகளின் சாராம்சங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்துதல்
3. ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை நாடக வடிவில் நிகழ்த்துவது
4. கு.அழகிரிசாமியின் மார்பளவு உருவச்சிலையை நிறுவுதல்
ஆகியவைகளை கு.அழகிரிசாமி நூறாண்டு நிறைவடையும் இந்த ஒருவருடத்திற்குள் படிப்படியாக நிகழ்த்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நம் மொழியின் ஓர் முன்னோடிப் படைப்பாளியை சமகால இளம் மனங்களில் நிலைநிறுத்தும் பெருவிருப்பமே இத்திட்டத்தின் பிரதானக் காரணம்.
ஓர் தமிழெழுத்தாளராக தலைசிறந்த படைப்புகளைத் தந்து இம்மொழியின் இலக்கியச் சாத்தியங்களைப் பெருமளவு உயர்த்தியமைக்காக நன்றிசெலுத்தும் பொருட்டு இந்தச் செயற்திட்டத்தை மனதிலேற்று செயலாற்றத் துவங்குகிறோம். தோழமைகளின் கரமிணைவு இக்கனவினை இன்னும் உயிர்ப்போடு நிறைவேற்றும்.
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in