அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.
‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்
இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
உங்கள் தகவலுக்காக.
ராஜாராம்
*
அன்புள்ள ராஜாராம்
நான் இருபதாண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் விஷயம் இது. இந்துக்கள் மீதான இந்த காழ்ப்புக்கு மிகப்பெரும்பாலும் மதவெறி, மதப்பரப்பு நோக்கம் ஆகிய இரண்டுமே காரணம். ஆனால் மனிதாபிமான, நீதியுணர்வுசார்ந்த, முற்போக்கான ஒரு நிலைபாடாக இது நடிக்கப்படுகிறது. நான் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் செல்வதற்கு முன்பு அதை செய்திகள் வழியாக அறிந்திருந்தேன். சென்றபின் நேரிலும் கண்டேன். நேரடியான இந்துவெறுப்புப் பிரச்சாரத்தை சந்திக்காமல் எங்கும் செல்லமுடியாது அங்கெல்லாம்.
இங்கேயே கவனியுங்கள். இந்து வெறுப்பு கக்கப்படுவதிலுள்ள அடிவயிற்று ஆவேசம், கட்டுக்கடங்காத வெறி. எங்கிருந்து வருகிறது இது? உலகில் வேறெந்த மதத்தின் மீதாவது இந்த அளவுக்கு நஞ்சு கொட்டப்படுகிறதா? கேட்டால் சாதியை எதிர்க்கிறோம், அதனால் இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்பார்கள். இங்கே அந்த அளவுக்குச் சாதியமைப்பை வெறுப்பவர்கள், சாதியை விட்டு வெளியேறியவர்கள் இருக்கிறார்களா? அப்படி நம்பினால் அவரைப்போல பேதை எவரேனும் உண்டா? அந்த அளவுக்கா இவர்கள் ஒவ்வொரு கணமும் அரசியல் கொள்கைப் பற்றுடன் இருக்கிறார்கள்? நமக்கு தெரியாதா யதார்த்தம்?மிகப்பெரிய மூளைச்சலவை ஒன்றின் வெளிப்பாடு அது. திட்டமிட்டமுறையில் நூறாண்டுக்காலம் நடைபெற்ற மூளைச்சலவை. அத்துடன் முக்காடு போட்டுக் கொண்டு வெவ்வேறு அரசியல்பாவனைகளுடன் வரும் மதவெறி.
இந்துக்கள் சென்று குடியேறிய எந்நாட்டிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அல்ல. அந்நாட்டின் பண்பாடுகளை மறுத்தவர்களோ, அங்கே பண்பாட்டு ஊடுருவல் நிகழ்த்த முயன்றவர்களோ அல்ல. சென்ற நாடுகள் அனைத்திலும் அவற்றின் பொருளியல்வெற்றிக்கு காரணமாகியிருக்கிறார்கள். அங்குள்ள பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். இயல்பாகவே ஒத்திசைந்துபோவது அவர்களின் இயல்புகளில் உள்ளது.
இந்துக்கள் எந்த மதத்தின்மீதும், எந்த தேசத்தின் மீதும் படையெடுக்கவில்லை. இந்துக்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை. இந்துக்கள் மீது இன்று இந்த ‘முகமூடி முற்போக்கு’களால் சொல்லப்படும் எல்லா குற்றச்சாட்டுகளும் அதன் நிலப்பிரபுத்துவகாலத்தை சேர்ந்தவை. அவற்றை இந்துமதம் தன் மையக்கொள்கையாக முன்வைக்கவில்லை. அவற்றை கடக்க அது தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் ஞானியரும் அறிஞர்களும் அவற்றுக்கு எதிராக போரிட்டபடியே இருக்கின்றனர்.
சென்ற காலகட்டத்தில் உலகமெங்கும் அத்தனை சமூகங்களும் அடிமைமுறையை கொண்டிருந்தன. பல மதங்கள் கொடூரமான படையெடுப்புகளையும் மத ஒடுக்குமுறைகளை நிகழ்த்தின. மதமாற்றத்தின் பொருட்டு பல தேசங்களின் மொத்த மக்கள்தொகையையே கொன்றழித்தன. ஐரோப்பாவில் கைவினைஞர்கள் அடிமையாக பலநூற்றண்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றனர். பெண்கள் விலங்குகளாக வாழும்படிச் செய்யப்பட்டிருக்கின்றனர். சுதந்திர சிந்தனையே பெருந்தண்டனைக்குரியதாக ஆக்கப்பட்டிருந்தது.
உலக வரலாறு கண்ட மாபெரும் இனப்படுகொலைகள் எல்லாமே தென்னமேரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மதமாற்றநோக்குடன் செய்யப்பட்டவை. எத்தனை பெரும்போர்கள். எத்தனை செயற்கைப் பஞ்சங்கள். பலநூற்றாண்டுக்காலம் மதத்தலைமையின் ஆசியுடன் அடிமைவணிகம் செய்யப்பட்டது. மதவிசாரணை (Inquisition) என்ற பெயரில் பெரும் சித்திரவதைகளும் கூட்டப்படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன.
அவற்றின் பொறுப்பை எல்லாம் அந்த மதங்கள் மேல் ஏற்றலாகாது, அவற்றுக்கு சாம்ராஜ்யங்களும் அரசர்களும் மட்டுமே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்கள் ஐரோப்பியரும் இங்குள்ள போலிமுற்போக்கினரும். நேரடியாக மதநிறுவனங்களும், மதகுருக்களும் நிகழ்த்திய பேரழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும்கூட அத்தனிமனிதர்களும் அந்தக் காலகட்டமும் மட்டுமே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்கள்.
ஆனால் அதே வாயால், எந்த தயக்கமும் இல்லாமல், இந்தியாவில் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நடந்த எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் தீயஆசாரங்களுக்கும் இந்துமதம் மட்டுமே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்கள். இந்துமதம் என்பது அதன் ஞானமோ தத்துவமோ கலையோ ஒன்றுமல்ல, அந்த அடக்குமுறைகளும் ஆசாரங்களும் மட்டுமே என கூறுகிறார்கள்.
இந்த அப்பட்டமான மோசடியை திரும்பத்திரும்பச் சொல்லி நம்மிலேயே பெரும்பாலானவர்கள் அதை நம்பி, இந்து என சொல்லிக்கொள்ள அஞ்சக்கூடிய நிலைமையை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே முற்போக்கு என இங்கே நிறுவப்பட்டுவிட்டிருக்கிறது. முற்போக்காக தோற்றமளித்தாகவேண்டும் என்பது ஒரு சமூக நிர்ப்பந்தம். ஆகவே அனைத்து அசடுகளும் அதை ஏற்றுக் கூச்சலிடுகின்றன. சூழலின் அழுத்தத்தை மீறி உளமறிந்த ஒன்றைச் சொல்லி நிலைகொள்ள அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது தொடர் கல்வியால்தான் அமையும். இல்லையேல் மந்தைக்கூச்சல்தான்.
நான் ஐரோப்பியப் பண்பாட்டின் வெற்றிகளை அதன் நடுக்காலகட்டத்து மதவெறிக் கொடுமைகளில் இருந்து பிரித்தே பார்ப்பேன். கிறிஸ்தவ மதத்தின் ஆன்மிக- தத்துவ சாதனைகளை, அதன் அதிகாரபூர்வ முகங்களான செயிண்ட் அகஸ்டின், செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் போன்றவர்களைக்கூட மதவெறியும் ஒடுக்குமுறையும் நிறைந்த நடுக்காலகட்டத்தில் இருந்து வேறுபடுத்தியே அணுகுவேன். அவர்கள் இல்லையேல் மானுடசிந்தனை இல்லை. ஸ்பானிஷ் மதவிசாரணைகளை சுட்டிக்காட்டி மிக எளிதாக கத்தோலிக்க ஞானிகளை நிராகரிக்க முடியும்.கோவா மதவிசாரணையை ஆதாரம் காட்டி செயிண்ட் சேவியரை நிந்திக்க முடியும். நான் அதைச் செய்யமாட்டேன், ஏனென்றல் நான் இந்து.
அதேபோலவே இந்துமதத்தையும் அணுகுவேன். எல்லா மதங்களையும்போலவே இந்துமதமும் வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்கள் வழியாக கடந்துவந்த ஒன்று. அதில் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் ஒடுக்குமுறைகளும் தீய ஆசாரங்களும் உண்டு. கல்வியும் நவீனவாழ்க்கைப்பார்வையும் இன்னும் வலுப்படாத சூழல்களில் அவை பலவகைகளில் நீடிப்பதும் உண்மை.
ஆனால் அவற்றுக்கு எதிராக பேசிய ஞானிகள் இங்குள்ளனர். விவேகானந்தர், வள்ளலார், நாராயண குரு. இந்து மதம் தன்னை தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டு, ஆசாரவாதத்தில் இருந்து மீண்டபடியேதான் உள்ளது. கண்கூடாகவே அந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன் ஞானமும் தத்துவமும் வேறு, அதன் ஆசாரவாதமும் பழமைநோக்கும் வேறு.
இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிரானது. நீண்டகால அடிப்படையில் இந்தியப்பொருளியலையேகூட அது அழிக்கக்கூடும். நாம் உலகமெங்கும் சென்று உழைப்பதை தடுக்கும் கருவியாக இனவெறியர்களால் பயன்படுத்தப்படக்கூடும். இன்றே அதை அடையாளம் கண்டே ஆகவேண்டும். இங்குள்ள சிலரை வாடகைக்கு எடுத்து அங்கே அதை பரப்புகிறார்கள். நாம் அனைவருக்குமே அது பேரிழப்பாக ஆகலாம்.
ஆனால் அதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. அதையும் சுட்டிக்காட்டி வருகிறேன். இந்துமதம் மதவாத அரசியலாக, மதவெறியாக மாறும்போது இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு அது ஊக்கம் அளிக்கிறது. இந்துமதத்தை அழிக்கும் முயற்சிகளுக்கு ஆக்கம் கூட்டுகிறது. இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் அளவுக்கே இந்து மதத்திற்கு ஆபத்தானது இந்துவெறி அரசியல். அதாவது இன்றைய இந்து அடிப்படைவாத அரசியலின் செயல்களுக்கான பொறுப்பை இந்து மரபு ஏற்கமுடியாது. இந்துக்கள் சுமக்க முடியாது. மதவாத அரசியல் வேறு, மதம் வேறு. அந்தத் தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.
இந்த அப்பட்டமான உண்மையைச் சொல்லும்போது இருபக்கமும் வசைகளும் அவதூறுகளும் எழுகின்றன. ஒருபக்கம் இந்துமதத்தின்மேல் பற்றுகொண்ட, இந்துமெய்மை மேல் நாட்டம் கொண்ட அத்தனைபேரையும் சங்கி என வசைபாடும் ரகசிய மதவெறியும் -அரசியல்வெறியும் கொண்ட கூட்டம். மறுபக்கம் இந்துவெறி அரசியல்வாதிகளின் வசைபாடல். ஆனால் உண்மையை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
இந்துமதவெறுப்பு பொதுவெளியில் வளரவளர அது இங்குள்ள இந்துத்துவ அரசியலுக்கே லாபகரமானது. இந்துக்கள் அனைவரையும் சங்கிகள் என முத்திரை குத்துவது, இந்துமதம் அழியவேண்டும் என பேசுவது, குறிப்பாக மாற்றுமதத்தவர் அதைப் பேசுவது என்பது இந்துத்துவ அரசியல்வாதிகள் விரும்பி வரவேற்கும் செயல். அவர்களை வளர்க்கும் வேர்நீர் அது.
மறுபக்கம் இந்துத்துவ வெறி, மதக் காழ்ப்புப்பேச்சுக்கள் இந்துஎதிர்ப்புக்கே ஆக்கம் அளிப்பவை. இந்துத்துவர் இங்கே பேசும் உதிரிப்பேச்சுக்கள்கூட உலகின் கண்முன் பெரிதாக்கப்படுகின்றன
எனில் இரு சாராரும் இதை ஏன் செய்கிறார்கள்? ஏன் ஒருவரை ஒருவர் வளர்க்கிறார்கள்? இருசாராரும் நடுவே இந்துக்கள் என திரண்டிருக்கும் ஒரு பெரும் மக்கள் திரளை கொன்று தின்ன முனைகிறார்கள். உலகின் மாபெரும் பண்பாடு ஒன்றை, உலகஞானத்தின் சிகரங்களை தொட்ட மரபை அழித்து தாங்கள் வாழமுயல்கிறார்கள்.
இந்து வெறுப்பு என்பதொன்றும் புதியது அல்ல. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்தபோது, அதிகாரம் அவர்கள் கையில் இருந்தபோது, அது உச்சகட்டத்தில் இருந்தது. கல்விக்கூடங்களில் நேரடியான இந்து எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பாரதி முதல் அத்தனை முன்னோடிகளும் அதை பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த உச்சகட்ட பிரச்சாரத்திற்கு இந்தியா தன் ஞானத்தால் பதிலளித்தது. விவேகானந்தர் முதல் அத்தனை இந்து மறுமலர்ச்சிக்கால மெய்ஞானிகளும் அதன் விளைவுகள்.
இன்று வரை இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் ஓயாமல் நிகழ்கிறது. ஆங்கிலத்தில் இந்திய மெய்ஞானிகள், இந்திய மறுமலர்ச்சித்தலைவர்களை இழிவுசெய்யும் ‘ஆய்வுகள்’ ஆண்டுதோறும் வந்து குவிகின்றன. விவேகானந்தர் முதல் ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை ஒருவர்கூட விதிவிலக்கு அல்ல. ஆனால் அது நம்மை பாதிக்கவில்லை.ஏனென்றால் நாம் அப்போது ஞானிகளை, தத்துவ ஆசிரியர்களை முன்வைத்தோம். நம் எதிர்மறைக் கூறுகளில் இருந்து வெளிவர முயன்றோம். நாம் வளர்ந்துகொண்டிருந்தோம்.இன்று ஏன் இப்பிரச்சாரம் வலுக்கொள்கிறது, ஏன் வெற்றி அடைகிறது. ஏனென்றால் நாம் ஞானிகளை விட்டுவிட்டோம், அரசியலை முன்வைக்கிறோம்.
ஒருவன் இந்து என்றாலே அவனை சங்கி என்பவர்கள், அத்தனை பேரிலும் சங்கிகளைக் கண்டுபிடிப்பவர்கள் அறியாமையால் அதைச் செய்யவில்லை., அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு பெருந்திட்டத்தின் பகுதியாக இருக்கிறார்கள். எந்த இந்துவெறுப்புப் பிரச்சாரமும் தன்னிச்சையாக எழவில்லை. எவையும் தனிமனிதர் சர்ந்தவை மட்டும் அல்ல. அவை அனைத்திலும் ஒரே போக்குதான் உள்ளது. அவை கடந்தகால வரலாற்றுப்பிழைகள், சமூக ஆசாரப்பிழைகள் அனைத்துக்கும் இந்துமதத்தை, அதன் ஞானியரை பொறுப்பாக்குபவை.
இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் செய்வதற்கொன்றே உள்ளது. நாம் நம் பெருமரபின் ஞானத்தை, தத்துவத்தை, கலையை பற்றிக்கொள்வோம். அதை அரசியல்படுத்தாமலிருப்போம். அந்த மெய்ஞானமே இந்துமதம் என உலகுக்குச் சொல்வோம். திரும்பத்திரும்ப நமக்கும் சொல்லிக்கொள்வோம்.
ஜெ