சோழர், ஓர் உரை

அன்புள்ள ஜெ

என்னிடம் நாலைந்துபேர் நீங்கள் ராஜராஜ சோழனின் அரண்மனை நம் வீடுகளை விட சிறியது, அப்படித்தான் சினிமாவிலே காட்டப்போகிறீர்கள் என்று சொன்னதாகவும் தமிழர் வரலாற்றை இழிவுசெய்வதாகவும் சொல்லி கொதித்தார்கள். மலையாளி நாய் என்றெல்லாம் பயங்கரமான வசைகள். எங்கே சொன்னார் என்றால் யூடியூபிலே பார்த்தோம் என்றார்கள். லிங்க் கேட்டால் அப்படி வெவ்வேறு வாயர்கள் உளறியிருப்பதன் வீடியோக்களை அனுப்பினார்கள். ஜெயமோகன் சொன்ன வீடியோ எங்கே என்று கேட்டால் தெரியவில்லை. சோழர்களை இழிவு செய்கிறார் ஜெமோ என்று வசை.

சரி, ஜெயமோகன் சொன்னதைவிடக் கடுமையாக ஆ.ராசா சொன்னாரே என்று நான் கேட்டேன். அதற்கு ‘அது வேற விஷயம்’ என்றார்கள். அதன்மேல் ஒரு கண்டனமும் கிடையாது. ஆ.ராசா சொன்னால் அது தப்பு என்றுகூட சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ஆ.ராசா தமிழக ஆளும்கட்சி. ஆ.ராசாவிடம் ‘அப்படிப்பட்ட கேடுகெட்ட ராஜராஜ சோழனுக்குத்தானே உங்கள் தலைவர் கலைஞர் விழா எடுத்தார்’ என்று கேட்கலாமே. ராஜராஜசோழன் புகழ் பாடியவரே அவர்தானே. ராஜராஜசோழனுக்கு சிலைவைத்தார். அவரையே ராஜராஜசோழன் என்றும் அவர் மகனை ராஜேந்திர சோழன் என்றும் கட்டவுட் வைத்தார்கள். அவர்களை ஆ.ராசா கண்டிக்கிறாரா? மாட்டார். பிரச்சினை எல்லாம் நீங்கள் சொன்னதுபோல சினிமாவுடன்தான்.

உங்கள் வீடியோவை நானே கண்டெடுத்தேன். மிகமிக முக்கியமான உரை. வரலாற்றுவாதம் (Historicism ) தேவையில்லை, வரலாற்றுணர்வு (Historicity)தேவை என்று சொல்லி இரண்டையும் விளக்குகிறீர்கள். வரலாற்றுவாதம் வீண் வெறியை உருவாக்கும். வரலாற்றுணர்வு கலாச்சாரத்தை புரிந்துகொள்ள உதவும். வரலாற்றுவாதம்தான் வெறும் பற்றாக வெளிப்படுகிறது. வரலாற்றுணர்வு கொண்டவர்களுக்கு எதிலும் தவறும் சரியும் கண்டுசொல்லும் தெளிவு இருக்குமே ஒழிய மிகையான உணர்ச்சிகள் இருக்காது.

நீங்கள் அந்த உரையில் சொன்ன வரலாற்றுவாத வெறி என்றால் என்ன என்றுதான் அந்த வீடியோவைவைத்தே நம்மாட்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே அந்த வீடியோவை பார்க்கவில்லை. அந்த தலைப்பை மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வசையை கேட்டு அடுத்த கூட்டம் வசைபாடுகிறது. அப்படியே ஒரு சங்கிலித் தொடர். எவருக்கும் நீங்கள் என்ன சொன்னீர்கள் என அக்கறை இல்லை. நீங்கள் இன்னார் என அவர்களே ஒரு கணிப்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாதிவெறியர்கள், ஆகவே உலகிலுள்ள அத்தனைபேரும் சாதிவெறியை கொண்டுதான் பேசுவார்கள் என நம்புகிறார்கள்.

அந்த வீடியோவில் பொன்னியின்செல்வனில் ராஜராஜசோழனின் அரண்மனையை பெரிதாகக் காட்டுவதாகச் சொல்கிறீர்கள். தமிழகத்தில் நாயக்கர் காலகட்டத்துக்கு முந்தைய எந்த அரண்மனையும் கிடைக்கவில்லை. கிடைத்த அடித்தளங்கள் சிறியவை. மன்னர்கள் ஆலயங்களை பெரிதாக கட்டினாலும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் கல்லால் பெரிதாக கட்டிக்கொள்ளவில்லை.

நீங்கள் சொல்வது ராஜராஜசோழன் அரண்மனை பற்றி அல்ல. கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளைப் பற்றி. அங்கே ஆய்வுசெய்த அகழ்வாய்வுத்துறை துணை இயக்குனர் சிவானந்தம் விரிவாக எழுதியதுதான். தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய அரண்மனைகள் இல்லை. சோழர்கால அரண்மனைகளுக்கு பெரிய அடித்தளங்கள் இல்லை என்றும் அகழாய்வில் கிடைத்த தகவல்களின்படி அரண்மனைகள் மரத்தாலானவையாகத்தான் இருக்க கூடும் என்றும் சொல்கிறார். அதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் அப்படி சினிமாவில் காட்டமுடியாது, பிரம்மாண்டமாகவே காட்டமுடியும் என்கிறீர்கள். ஆகவே சினிமா வரலாறு அல்ல, அது புனைவு, ஆனால் அந்த புனைவு வரலாற்றை உள்ளத்தில் நிறுத்த தேவையானது என்கிறீர்கள்.

அந்த உரையில் ராஜராஜன் காலகட்டத்தில் இருந்த நில அடிமை முறை, சாதிமுறை, குறுநிலமன்னர்கள் மீதான அடக்குமுறை அனைத்தையும் அக்கால வரலாற்றில் வைத்து பார்க்கவேண்டும் என்கிறீர்கள். அவ்வாறு பார்த்தால் அன்றைய காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே மிகமிகப் பெருந்தன்மையான, சமயப்பொறைகொண்ட, நலம்நாடும் அரசு சோழர் அரசுதான் என்கிறீர்கள். சோழர்கள் உங்கள் நாடான சேரநாட்டுக்கு ஆக்ரமிப்பாளர்கள். ஆனால் அவர்கள்தான் அங்கே நிலவளம் பெருக காரணம் என்கிறீர்கள். தவறுகளையும் குறைபாடுகளையும் கருத்தில்கொண்டு கூட்டிக்கழித்துப் பார்த்தால் சோழர் காலம் பொற்காலம் என்கிறீர்கள். அதுவே வரலாற்றுணர்வு என்பது.

எதையுமே புரிந்துகொள்ளாமல் வெறும் சாதிவெறியாலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வெறியைத்தான் அந்த உரையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இத்தனை வெறுப்பையும் அறியாமையையும் வெறியையும் எதிர்கொண்டு இதையெல்லாம் பேசமுடிவது பெருந்துணிவும் பொறுமையும் தேவையான ஒன்று

ஆர்.ராகவ்

அன்புள்ள ராகவ்

இந்த வம்புகளுக்குப் பதில் சொல்வதிலுள்ள பெரிய சிக்கல் இதுதான். இந்த வம்புகளைக் கிளப்புபவர்கள் இருக்கும் தளம் ஒன்று. அவர்களுக்கும் எழுத்து, வாசிப்புக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களைப்போன்ற அறிவுநிலை கொண்டவர்கள் போடும் யூடியூப் காணொளிகள், வாட்ஸப் வரிகளை மட்டுமே அவர்கள் அறிவார்கள். பிறவற்றை அந்த தலைப்பை மட்டுமே பார்ப்பார்கள். உள்ளே சென்று உரைகளை கேட்க பொறுமை இல்லை. கேட்டாலும் ஒன்றும் பிடிபடுவதில்லை. ஆகவே அவர்களுக்கு அவர்களைப் போன்றவர்கள் சொல்வதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். நாம் என்னதான் சொன்னாலும், மறுத்தாலும், விளக்கினாலும் அவர்களைச் சென்றடையாது. நாமிருக்கும் அறிவுத்தளம் வேறு. மிகமிகச் சலிப்பூட்டும் ஒரு சூழல் இது.

ஜெ


முந்தைய கட்டுரைசி.சு.செல்லப்பா
அடுத்த கட்டுரைசிப்பியும் நீர்ப்பூச்சியும் – கடிதம்