அருண்மொழி உரை -கடிதம்

அன்புள்ள ஜெ

அருண்மொழி நங்கை அவர்களின் சினிமா பற்றிய உரை கேட்டேன். மிகச்சிறப்பான உரை. சினிமா பற்றி இவ்வளவு தெரிந்தவர் என நினைக்கவில்லை. சரியாக மூன்றாகப் பகுத்து அசோகமித்திரனின் அழகியல், அந்தச் சிறுகதை, அதை வசந்த் படமாக்கிய விதம் ஆகியவற்றை விளக்குகிறார். அருமையான ஸ்பாண்டேனிட்டி. கைகளையும் கண்களையும் அசைத்து, யோசித்து பேசுகிறார். தனக்குத்தானே யோசிக்கிறார். தன்னிச்சையான பேச்சு. ஆனால் மிகுந்த தயாரிப்புடன் பேசுவதுபோல ஒரு வார்த்தைகூட ஜாஸ்தியாக இல்லாமல் இருந்தது. வாழ்த்துக்கள்.

ஜெய்குமார்

அன்புள்ள ஜெய்குமார்

அருண்மொழிக்கு கலைப்பட இயக்கத்தில் இருபதாண்டுக்கால பழக்கம் உண்டு. திருவனந்தபுரம் படவிழாவில் பத்துநாளில் முப்பத்தைந்து படம் பார்ப்பவள். கல்லூரிநாட்களிலேயே சத்யஜித்ரே முதல் இந்தியாவின் கலைப்பட இயக்கத்தை கவனித்து வருபவள். அவள் பார்க்கும் மெல்லப்போ வகை படங்களை எல்லாம் என்னால் உட்கார்ந்து பார்க்கமுடியாது.

ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாது என ஒரு முன்ஜாமீன் எதற்கும் வாங்கிக்கொள்வாள். அது அவள் வழக்கம். அத்துடன் அவள் இருபதாண்டுக்காலம் தபால் அலுவலக வேலைச்சுமையால் விலகியிருந்துவிட மற்றவர்கள் மிகவும் முன்னால் சென்றுவிட்டார்கள் என்னும் எண்ணமும் உண்டு.

உண்மையிலேயே மிக நல்ல உரை. தேர்ந்த சொற்பொழிவாளர் ஆகிவிட்டாள். எனக்கு மேடையில் கொஞ்சம் நடுக்கம் இன்னமும் உண்டு, அவள் மேடையிலேயே இயல்பாக நிகழ்கிறாள். ஆச்சரியமாகவே உள்ளது

ஜெ

அன்புள்ள ஜெமோ

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பெண்களைப் பற்றிய சினிமா. அதைப்பற்றிய விவாதக்கூட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் பேசியதுபோல் இருந்தது. பெண்கள் பெரும்பான்மையாக தங்கள் கருத்தைச் சொல்லியிருந்திருக்கலாம்.

கவிதா சம்பத்

அன்புள்ள கவிதா,

அதில் பேசிய ஒரு பெண்மணி நூறு பெண்களுக்குச் சமம். Believe me.

ஜெ

 

முந்தைய கட்டுரைதிருமா 60- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமோகனாங்கி, பொன்னியின் செல்வன் யுகத்தில்…