திருமா 60

இன்று (26 செப்டெம்பர் 2022) திருமாவளவன் அவர்களின் மணிவிழா கொண்டாட்டம் சென்னையில் நிகழ்கிறது. நான் அதில் கலந்துகொண்டாகவேண்டும். அண்மையில் நான் பெருவிருப்புடன் கலந்துகொள்ள நினைத்த நிகழ்வுகளில் ஒன்று. நான் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லிவருவதுபோல திருமாவளவன் நம் காலகட்டத்தின் பேராளுமைகளில் ஒருவர் என நினைக்கிறேன். இக்காலகட்டத்தின் வரலாற்று நாயகன். அவரை வாழ்த்துவது எனக்கு பெருமை, எதிர்காலத்தில் என் வரலாற்றிலும் முதன்மை நிகழ்வுகளில் ஒன்றாக அது குறிக்கப்படும்.

ஆனால் திருவனந்தபுரத்தில் நான் திரைப்படவேலைகளில் சிக்கிக் கொண்டேன். ஊடகங்களிடம் சிக்குவதென்பது நம்மை ஒப்படைப்பதுதான். அவர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட பெரிய வலை. விமானத்தை தவறவிட்டுவிட்டேன், ஆகவே விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. பெரிதும் வருத்தம் அளிக்கும் ஒரு பிழை இது. அதன்பொருட்டு திருமாவளவன் மற்றும் கலாட்டா மீடியாவிடம் என் மன்னிப்புகளை கோருகிறேன்.

திருமாவளவனை ஏன் ஒரு அரசியல்பெருநிகழ்வு என நினைக்கிறேன்? முதன்மையாக இதுதான். பொருளுள்ள எதிர்ப்பு என்பது ஒரு புனிதமான செயல்பாடு. புரட்சி என சொல்லப்படுவது அதையே. ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, தன்னம்பிக்கை இழந்து சுருண்டிருந்த ஒரு சமூகத்தின் எதிர்ப்பின் முகம் திருமாவளவன். ஒரு பெரும் படிமம். எதிர்ப்பினூடாகவே அச்சமூகம் தன்னுடைய அடையாளத்தை திரட்டிக்கொள்கிறது, தன்னை தீவிரப்படுத்திக்கொள்கிறது, சமூகவாழ்க்கையில் வெற்றிநோக்கிச் செல்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிகையில் அங்கே சாதிய அடக்குமுறை அரசாலும் பொதுச்சமூகத்தாலும் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இங்குள்ள எந்த அரசியலியக்கமும் அம்மக்களுக்கு துணைநிற்கவில்லை. அவர்களை ஒருங்கிணைத்த இடதுசாரித் தீவிர இயக்கங்கள் தங்கள் தேவைகளுக்கு அவர்களை கருவிகளாக்கிக் கொண்டார்களே ஒழிய அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களை சிறைக்கனுப்பி தங்களை காத்துக்கொண்டனர்.

திருமாவளவன் எழுந்து வந்தபின்னரே அவர்களின் தரப்பு ஒலிக்கலாயிற்று. அவர்களின் அரசியல் துலக்கம் அடைந்தது. அவர்களின் எதிர்ப்பு கூர்கொண்டது. அவர்களின் அதிகாரம் உருவானது. அதை நான் கண்கூடாக கண்டேன். ஆகவே ஏந்த ஏட்டுக்கொள்கையாளரும் எனக்கு மறுவிளக்கங்கள் அளிக்க ஒப்பமாட்டேன்.

அவர் ஒரு மாபெரும் அரசியல் தலைவர் என நான் சொல்வது என் கள அனுபவங்களில் இருந்து. செயலற்றவனாக, அறச்சீற்றமும் கண்ணீரும் கொண்டு நான் பார்த்துநின்ற பல அநீதிகள் உண்டு. அரசூழியனாக, சிறுகுடும்பத்தின் தலைவனாக, அனைத்துக்கும் மேலாக தர்மபுரி மாவட்டத்திற்கு அன்னியனாக இருந்தமையால் நான் வீணே சாட்சியாகவே நின்றிருந்தேன்.

என் இயல்பான கோழைத்தனமும் காரணமாக இருக்கலாம். நான் வீரன் அல்ல. தியாகியும் அல்ல. ஆனால் இன்றும் நான் எண்ணிக்கொதிக்கும், கூசும் நிகழ்வுகள் பல உண்டு. அந்த மலினங்களை எரித்தழிக்கும் கதிரவன் போல அவர் உருவாகி வருவதைக் கண்டு ஓர் எளிய எழுத்தாளனாக ’வாழ்க நீ எம்மான்!’ என வணங்கியிருக்கிறேன். நேரில் பார்த்தும் வணங்கியிருக்கிறேன். அவ்வளவுதான் என் அரசியல்.

அவர் ஓர் எதிர்ப்பியக்கம். அந்த எதிர்ப்புக்கு உதவுபவர்களை ஆதரவாளர்களாகக் கொள்கிறார். அதற்கான அரசியலை பேசுகிறார். அதில் அரசியல் ஒவ்வாமை கொண்டவர்கள் இருக்கலாம். நாளும் ஒரு கடிதம் எனக்கு வருகிறது, திருமாவளவன் இப்படிச் சொல்கிறாரே நீ என்ன சொல்கிறாய் என்று. அதை அவரிடம் கேளுங்கள், நான் அன்றாட அரசியலில் இல்லை என்பதே என் பதில்.

அரசியல் எனக்கு தெரியாமலிருக்கலாம். நான் உணர்வுச்சமநிலை இல்லாதவனாகவும் இருக்கலாம். ஆனால் அறம் பற்றி எனக்கு கற்பிக்கும் நிலையில் இங்கே எவருமில்லை. என் ஆசிரியர்களை நான் முன்னரே அடைந்துவிட்டேன். என் ஆன்மிகநிலையை ஒவ்வொரு கணமும் கண்காணிப்பவன் என்பதனால் எனக்கு உங்கள் ஆலோசனைகளை எவரும் அளிக்கவேண்டியதில்லை.கண்முன் சகமானுடர் மேல் சாதியக்கொடுமைகள் நிகழ்கையில் காணாமல் அரசியல் செய்தவர்கள், அறம்பேசியவர்கள் எவருக்கும் அவரை விமர்சிக்கும் உரிமை இல்லை.

இன்று நட்புக்கட்சியாக இருப்பதனால் போற்றுபவர்கள் ஒருவேளை கட்சியரசியலில் அவர் மறுதரப்புக்குச் சென்றால் வசைபாடுவார்கள், அவர் முன்வைக்கும் ஒரு சிறு விமர்சனத்துக்கே அந்த வசை எழுந்து வருவதை காண்கிறோம். இன்று வசைபாடுபவர்கள் அரசியல்கூட்டணி அமைந்தால் போற்றவும்கூடும். நான் எழுத்தாளனின் தரப்பை பேசுகிறேன், எந்நிலையிலும் அவர் ஓர் அறவிசை என்றே சொல்வேன். அவர் நம் மரபின் மிகமிகக் கீழான ஒரு முகத்தை நமக்குச் சுட்டிக்காட்டும் வெளிச்சம் என்பதனால். நம் அறவுணர்வுடன் ஓயாமல் பேசும் ஒரு குரல் என்பதனால்.

நூற்றாண்டுகளுக்குப் பின் பெருங்கருணையால் சீற்றம்கொண்டு களம் நின்ற தலைவன் என்று அவர் அடையாளப்படுத்தப்படுவார். நூற்றாண்டுகளைக் கடந்துசெல்லும் விசைகொண்ட சொல் கொண்டவனாக, இக்காலகட்டத்தின் ஒவ்வொன்றும் அழிந்தபின்னரும் எஞ்சும் தமிழின் பெருங்கலைஞனாக நின்று இதைச் சொல்கிறேன்.ஆம், அவ்வாறே ஆகுக!

அனைத்துக்கும் அப்பால் அவர் ஒரு பொதுத்தலைவர்.தன்னுடைய சூழல் உருவாக்கும் விசைகளால் ஆளுமைகள் உருவாகி வருகின்றன. பின்னர் அச்சூழலை கடந்து அவை பேராளுமைகளாக விரிகின்றன. அத்தகையவர் அவர். அவர் இன்று தலித் தலைவர் அல்ல, தமிழ்த்தலைவர். தமிழகத்தின் பொருளியலுரிமை, சூழல்பாதுகாப்பு என அனைத்துக்கும் முன்நிற்பவர்.

இன்று தமிழகத்தில் தன் சமூகம் மீது ஒரு வன்முறை நிகழும்போதுகூட தற்கட்டுப்பாட்டுடன் பேசும் எதிர்ப்பின் குரல் அவர்.  சீற்றம்கொண்ட குரலாக எழுந்து வந்தவர்  இன்று மெல்லமெல்லக் கனிந்து நம் மனசாட்சியுடன் உரையாடுபவராக ஆகியிருக்கிறார். அவருடைய சமநிலையை, ஆழ்ந்த அறிவை, அறிஞர்கள் மீதான பெருமதிப்பை காண்கிறேன். சமகால அரசியல்வாதிகள் எவரிடமும் இல்லாத பண்புகள அவை.

என்றேனும் தமிழகத்தின் முதல்வர் என அவர் ஆகக்கூடும் என்றால் அது நம் வரலாற்றின் பொன்னாள் என்றே சொல்வேன். அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா, அதற்கு நம் சாதிய உள்ளம் அனுமதிக்குமா என்பது ஐயமே. ஆனால் அது நம் அறவுணர்வுக்கு முன் நின்றிருக்கும் ஒரு வரலாற்றுவினா.

நான் என் முழு எழுத்தாற்றலாலும் இன்று எவருடைய வாழ்க்கை வரலாற்றையேனும் எழுத விழைகிறேன் என்றால் அது தலைவர் திருமாவளவன் பற்றித்தான். ஒவ்வொரு நாளும் என்னை நானே மீட்டெடுக்க, என் முன்னோரின் இழிவுகள் பலவற்றில் இருந்து என்னை விடுவிக்க உதவும் குரல் அவருடையது என்பதனால் அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடன் என் அணுக்கம் தமிழகக்குடிமகன், எழுத்தாளன் என்ற நிலையில் மட்டுமே.

அவருக்கு அறுபதாம் அகவை வாழ்த்துக்கள். வரலாறு உங்களுடன் உள்ளது.

முந்தைய கட்டுரைகுன்றக்குடி அடிகளார்
அடுத்த கட்டுரைஎழுத்தறிவித்தல் நிறைவு